தீவுகளின் மோதலும் குழம்பியுள்ள கப்டன் கூலும் இந்திய - பாக் போரும் - #ICCWT20

ARV Loshan
6

இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இன்றைய ஆட்டம் உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஒரு விறுவிறு போட்டி...

ஒரு தீவுக்குள்ளே ஒரு தீவுடன், பல தீவுகள் சேர்ந்த கூட்டணியின் மோதல் இன்றைய இரவின் சுவாரஸ்ய மோதல்.



இரண்டு அணிகளுமே இம்முறை  ICC உலக Twenty 20 வெல்வதற்கான பெரிய வாய்ப்புடைய அணிகள்.
இரண்டுமே மந்திரவாதிகள் என்று சொல்லப்படும் சுழல்பந்துவீச்சாளர்களையும், அச்சுறுத்தும் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களையும் கொண்ட அணிகள்.
இரண்டு அணிகளுமே ஆச்சரியப்படும் விதமாக தத்தமது இலகுவாக வெல்ல வேண்டிய முதலாவது Super 8 போட்டிகளில் தட்டுத் தடுமாறி, இறுதி சந்தர்ப்பம் வரை சென்று வென்றுள்ளன.
இன்று வெல்கின்ற அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பைத் தம் வசப்படுத்தும்.

Favoritesஆ அல்லது Hostsஆ என்பதே இன்றைய கேள்வி.
மென்டிஸ் (இன்று அணியில் இடம் கிடைத்தால்) எமக்கு சொல்லியபடி கெய்லை அசத்துவாரா என்றும் பார்க்கவேண்டும்.

மகளிர் போட்டிகளில் அண்மைக்காலத்தில் சாதித்து, முன்னேறி வரும் மேற்கிந்திய மகளிரை இலங்கை மகளிர் நேற்று ஆச்சரியப்படுத்தி வென்ற உற்சாகத்தை இன்று இலங்கை ஆண்கள் அணி தனக்கு உத்வேகமாக மாற்றிக் கொள்கிறதா என்று பார்க்கலாம்.

இதுவரை இவ்விரு அணிகளும் சந்தித்துள்ள 3 T20 போட்டிகளிலும் இலங்கை அணியே வெற்றியீட்டியுள்ளது.

இதுவரை ஹம்பாந்தோட்டை, கொழும்பில் பெய்த மழை, பள்ளேக்கலையில் மட்டும் பெய்யவில்லை; ஆனாலும் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான மையம் சொல்லியிருக்கிறது.
இன்றும் மழை பள்ளேக்கலையில் விட்டுக்கொடுத்து மைதானம் நிறைந்த விறுவிறுப்பான போட்டியொன்றை நடத்த இடம் தரவேண்டும் என்று வருணபகவானிடம் கேட்போம்.

இன்றாவது கொழும்பை விட்டு வேறிடத்தில் இடம்பெறும் இம்முறை ICC உலக Twenty 20  போட்டி யொன்று பார்க்கலாம் என்று பார்த்தால் விதி சதி செய்துவிட்டது.
என் தலைவிதி அவ்வளவு தான்.
அவதாரத்தோடு பார்ப்போம்..  

------------------


இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் தோனியை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது.
எத்தனை தலைவலிகளைத் தான் தாங்கிக்கொள்வார்?

வென்றால் ஒரேயடியாக உச்சத்தில் ஏற்றுவதும் தோற்றால் அவரையே குறிவைத்துத் தாக்குவதும், அணித்தெரிவில் அவரையே முழுமுதல் காரணியாக மாற்றி யாராவது ஒரு வீரர் அணியில் சேர்க்கப்படாவிட்டால் தோனி அவரை வேண்டுமென்றே அணியில் சேர்க்கவில்லை என்று கொடும்பாவி கொழுத்துவதும், குறிவைத்து வெட்டுகிறார் என்பதும், ஜோகீந்தர் ஷர்மா, பாலாஜி, ரவீந்திர ஜடேஜா போன்றோர் அணிக்குள் வந்தால் தோனியின் 'ஆசி' பெற்றவர்கள் என்று (அஷ்வின், கோஹ்லி, ரோஹித் ஷர்மா போன்றோருக்கும் இவ்வாறே சொல்லப்பட்டது என்பதும் தனிக்கதை) பரபரப்பதும் சகஜமே.

நேற்றைய இந்தியா ஆஸ்திரேலியாவிடம் வாங்கிக்கட்டிய போட்டியில் (விக்கெட்டுக்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய வெற்றி) இந்தியா தோற்றதை விட, ஆஸ்திரேலியாவின் ஷேன் வோட்சனின் சகலதுறைப் பெறுபேறு, வொட்சன் - வோர்னரின் ஆரம்ப சாதனை இணைப்பாட்டத்தை (ஆஸ்திரேலியாவின் எந்த விக்கெட்டுக்குமான மிகச் சிறந்த இணைப்பாட்டம் & இம்முறை ICC உலக Twenty 20 போட்டிகளில் மிகச் சிறந்த ஆரம்ப இணைப்பாட்டம்) விட, இந்தியப் பந்துவீச்சாளர்கள்   தங்கள் வியூகங்களைத் தவறவிட்டு மிக மோசமாகப் பந்துவீசியதை விட (வோர்னர் & வொட்சன் விட்டால் தானே?) அதிகம் பேசப்பட்டு, அலசப்பட்டு, தோனி தாறுமாறாக விமர்சிக்கப்பட்ட விடயம் - விரேந்தர் சேவாக் அணியில் நேற்று சேர்க்கப்படாதது.

உலகிலேயே அதிகமாக அறிவுரை சொல்லப்படுகிற சில மனிதர்களில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருப்பதைப் போல, உலகில் அதிகமான கிரிக்கெட் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கிற இருவரில் ஒருவராக (மற்றவர் நிச்சயம் சச்சின் டெண்டுல்கர் தானே?) தோனி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய தொடரில் மூத்த வீரர்களுடன் தோனிக்கு இடம்பெற்ற நேரடி, மறைமுக மோதல்கள் இன்று வரை தொடர்ந்தவண்ணமே உள்ளன.
ஐந்து வயது கூடிய வீரர்களில், தோனியின் வார்த்தைகளில் "Those 5 senior people" டிராவிடும், லக்ஸ்மனும் ஓய்வை அண்மையில் அறிவித்தார்கள்.
(லக்ஸ்மன் ஓய்வு பெற்றதும், தோனியை விருந்துக்கு அழைக்காததும் தனியான சுவாரஸ்யக் கதைகள்)
சச்சின் T20 போட்டிகளில் விளையாடுவதில்லை. (அவரது ஓய்வு எப்போது என்று யாரும் கேட்கப்படாது.. உஸ்)

அடுத்தது சேவாக் .... இவர் தான் அண்மையில் தூக்கப்படுவதும் சேர்க்கப்படுவதுமாக இருக்கிறார்.
ஆனால் அண்மைக்காலத்தில் தான் அணியில் நிரந்தரமாக இருக்கப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் விரு, விறுவிறு ஆட்டம் ஏதும் ஆடியதாகவும் இல்லை.
அவரை அணியை விட்டுத் தூக்கி, ஐந்தாவது பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்துக்கு எதிராக சரியான முடிவாகவே இருந்தது.

ஆனால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இர்பான் பதான் சோபிக்கவில்லை.
நேற்று பந்துவீச்சாளர்களால் எதையும் செய்ய முடியவில்லை; (தோனியிடம் கேட்டபோது அவர் வழமையாகவே தோற்றவுடன் அடுக்கடுக்காக எடுத்துவிடும் காரணங்களில் சிலவற்றை நேற்றும் சொன்னார் - "மழை எங்கள் வேகத்தைத் தடுத்துவிட்டது;  மழை ஈரம் சுழல் பந்துவீச்சாளர்களின் கைகளை வழுக்கிவிட்டது") ஆனால் பதான் தான் இந்தியாவின் அதிகூடிய ஓட்டங்கள் பெற்றவர்.

ஆனால் தோனியின் துடுப்பாட்டத் தடுமாற்றம், இந்தியாவின் நேற்றைய படுதோல்வி ஆகியன ரசிகர்கள், விமர்சகர்கள், ஊடகங்களின் அழுத்தம் ஆகியன நாளைய முக்கிய கிரிக்கெட் யுத்தமான பாகிஸ்தானுடனான போட்டியில் சேவாக்கை அணிக்குள் உள் எடுக்கச் செய்யுமா என்ற வினாவை எழுப்புகிறது.

ஆஸ்திரேலியாவுடனோ, இங்கிலாந்துடனோ தோனி செய்ததைப் போல மூன்று/ இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களைப் பாகிஸ்தானுடன் ஈடுபடுத்துவது சிக்கலானது. சிலவேளை அஷ்வினையும், ஹர்பஜனையும் சேர்த்து விளையாடவிடலாம்..(பகுதி நேரப் பந்துவீச்சாளர்களே தமது பலம் என்று தோனி இந்த உலகக் கிண்ண ஆரம்பத்திலேயே சொல்லி இருப்பதால் பஜ்ஜி பாகிஸ்தானை சந்திப்பது சிலவேளை தான்)
எனவே செய்யப்படும் மாற்றங்களில் சேவாக் உள்ளே வரலாம்...

இங்கிலாந்தை வென்றபிறகு யாரை எடுப்பது, யாரை விடுவது என்ற ஆரோக்கியமான குழப்பம் இருப்பதாகப் பேட்டியளித்த தொனிக்குன் இப்போது இப்படியொரு தர்மசங்கடம்... Captain Cool ஆகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும் தோனியின் ஆழ்மனதில் எத்தனை குழப்பங்களோ?

ஆனால்  ICC உலக Twenty 20  ஆரம்பிக்க முதல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தோனியும் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிளெச்சரும் எம்மை சந்தித்த நேரம், அதற்கு முதல் நாள் தான் நியூ சீலாந்து அணிக்கெதிரான ஹைதராபாத் T20 போட்டியில் தோனியினால் இந்தியா தோற்றிருந்ததாக விமர்சனங்கள் எழுந்திருந்த நேரம், அணித் தெரிவுகள், முன்னைய தொடர் பற்றி பேச்சுக்கள் வந்தபோது தோனி சாமர்த்தியமாக அதேவளை கூலாக "இந்த  ICC உலக Twenty 20 பற்றியே கேள்விகள் இருக்கட்டும். வேறு விஷயங்கள் வேண்டாம்" என்று நழுவிக்கொண்டார்.

அப்படி இருந்தும் சேவாக், கம்பீர் இருவரது அணி இருப்பு பற்றியும், ஹர்பஜன், யுவராஜ் மீண்டும் பயிற்சிப் போட்டிகள் இல்லாமல் அணிக்குள் வந்தது பற்றிய கேள்விகள் சுற்றி சுற்றி வந்தபோது, தோனியின் முகம் கொஞ்ச மாற, இடையே குறுக்கிட்ட பிளெச்சர் கொஞ்சம் கடுகடுத்த தொனியில் "அதான் முதல்லையே சொன்னமில்ல,  ICC உலக Twenty 20 பற்றி மட்டுமே கேட்க சொல்லி?" என்றார்.

ஆனால் தோனி மீண்டும் கூலாக ஏனைய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
யுவராஜ்  தெரிவானது அனுதாபத்தினலா என்ற கேள்விக்கு மட்டும் " அது ஒரு தெரிவுக்குழு முடிவு; ஆகவே அது பற்றிக் கருத்து சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு சகலதுறை வீரராக அவரது வருகை, தலைவராக எனக்கு மகிழ்ச்சி தருகிறது" என்று பக்குவமான பதிலைத் தந்திருந்தார்.

தோனி அன்று சொன்ன ஒரு விடயம், நான்கு பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்குப் போதும்; ஐந்தாவது நான்கு ஓவர்த் தொகுதியை வீசத் தரமான பந்துவீசும் சகலதுறையாளர்கள் இந்தியாவிடம் இருக்கிறார்கள் என்று.
யுவராஜ் சிங், கோஹ்லி, ரெய்னா, ரோஹித் ஷர்மா என்று பட்டியல் நீள்கிறது. போதாக்குறைக்கு சர்ச்சை நாயகன் சேவாக்கும் இருக்கிறார்.
இவர்களில் யுவராஜுக்கு இன்னும் சரியான வாய்ப்பு பந்துவீசுவதில் வழங்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.
3 போட்டிகளில் 6.4 ஓவர்களே வழங்கப்பட்டுள்ளன. இதற்குள் நான்கு விக்கெட்டுக்கள்.
தோனி நாளை யோசிக்க வேண்டிய விடயத்துள் இதுவும் ஒன்று.

--------------

இந்தியா நேற்று ஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கியதற்கு சில மணிநேரம் முன்பாக, அதே மைதானத்தில் பாகிஸ்தான் தென் ஆபிரிக்கா என்ற பலமான அணியை நேற்று பலரும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் வீழ்த்தி அதீத மனோ தைரியத்தோடு இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது.

இதுவரை எந்தவொரு உலகக் கிண்ணக் கிரிக்கெட்டிலும் இந்தியாவை வென்றிராத பாகிஸ்தானுக்கு நாளை அரியதொரு வாய்ப்பு.

இதுவரை ஐந்து 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவை வெல்ல முடியாமல் தொற்றுள்ள பாகிஸ்தான், T20 போட்டிகள் இரண்டிலும் வெற்றிக்கு சமீபமாக வந்தும் இரண்டிலும் தோற்றுள்ளது.
ஒன்று சமநிலையில் முடிவுற்று Bowl out இல் இந்தியா வென்றது.
அடுத்தது எல்லோருக்கும் ஞாபம் இருக்கிற மிஸ்பா ஸ்ரீசாந்த்துக்கு கொடுத்த பரிசு மூலம் இந்தியா முதலாவது  ICC உலக Twenty 20 கிண்ணம் வென்ற இறுதிப் போட்டி.


பஞ்சாப், மொஹாலியில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட உலகக் கிண்ண அரையிறுதியை நேரடியாகப் பார்த்த பின்னர், நாளையும் நம்ம கொழும்பில் நேரடியாகப் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறேன்.

அதற்கு முதல் இடம்பெறும் ஆஸ்திரேலியா - தென் ஆபிரிக்க போட்டியும் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை முக்கியமானது & விறுவிறுப்பானது தான். ஆனால் ரசிகர்களுக்கு அதையெல்லாம் விட இந்திய - பாகிஸ்தான் யுத்தம் தானே பரவசம்?



Post a Comment

6Comments

Please Select Embedded Mode To show the Comment System.*