மு...

ARV Loshan
7

மு - முதலமைச்சர்

முஸ்லிம் காங்கிரசின் முடிவு என்ன என்ன என்று எதிர்பார்த்தே மூன்று நாட்கள் கசிந்துள்ள நிலையில்.. கடன்காரர்களை நேரடியாக சந்திக்காமல் வீட்டில் மனைவி, பிள்ளைகளை அனுப்பி "அவர் வீட்டில் இல்லை" என்று அனுப்பும் குடும்பத் தலைவர் போல இரவும் ஹக்கீமும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் நடந்து கொண்டிருக்கும் நிலையை இன்று மாலையில் எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

இதில் ஸ்ரீ.ல.மு.கா வை தமிழ்த் தரப்பு திட்டித் தீர்ப்பதோ, இல்லை ஏமாற்றிவிட்டார்கள் என்று வஞ்சம் வளர்ப்பதோ என்னைப் பொறுத்தவரை அர்த்தமற்றது என்றே தோன்றுகின்றது.

அரசாங்கம் வைக்கும் செக் மேட் எப்படியானவை என்றும் தன் பங்காளிக் கட்சிகளை எப்படியெல்லாம் தன்னுடன் வைத்திருக்க முயலும் என்றும், வெளியே இருக்கும் கட்சிகளையும், ஆளுமையுள்ள தலைவர்களையும் எப்படித் தன்னுடன் இணைத்துக்கொள்ள முயற்சிகளை எடுக்கும் என்பதும் அரசியலைத் தொடர்ந்து அவதானிப்போருக்குத் தெரியும்.

இப்போது ஸ்ரீ.ல.மு.காவின் நிலையும் அவ்வாறே. மத்திய அரசில் பங்காளிக் கட்சியாக இருக்கும் நிலையில் மாகாண அரசில் தனித்துப் போட்டியிட்டதே ஒரு இணைந்த ராஜதந்திர முடிவு என்று அரசியல் புரிந்த அனைவருக்குமே தெரியும்.
பள்ளிவாசல் உடைப்புக்களினால் மஹிந்த அரசாங்கம் மீது முஸ்லிம் மக்களுக்கு இருந்த அதிருப்தியை வேறு விதமாக மாற்றி வாக்குகளை மரம் பக்கம் இழுத்து இப்போது மீண்டும் சேரப் போகிறார்கள்.
அவ்வளவு தான்..



சரி, சிலவேளை வாக்களித்த முஸ்லிம் மக்களும், ஏன் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சியமைத்து முஸ்லிம் முதலமைச்சர் என்ற கனவை நனவாக்க விரும்பினாலும், ஏன் ரவூப் ஹக்கீமே விரும்பினாலும் கூட முடியாத அழுத்தம் ஒன்று கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது மிகத் தெளிவு.

கிழக்கு மாகாண சபையில் விருப்பு வாக்குத் தெரிவுகள், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆளும் கட்சியின் முதலாவது தெரிவாக வந்தமை, முடிவுகள் வெளிவந்த நாள் முதல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் ஜனாதிபதியும் ஆட்சி தாம் தான் என்று அடித்து அடித்து அறிவித்ததும் சொல்பவற்றை நாம் கவனிக்கவேண்டும்.


ஸ்ரீ.ல.மு.கா வைப் பொறுத்தவரை என்ன தான் ராஜதந்திர நாடகமாக இது இருந்தாலும் தன் பேரம்பேசும் பலத்தை அதிகரித்துக்கொள்ளவும் , இத்தனை உடைவுகள், பிளவுகளுக்குப் பிறகும் தமது கட்சியே முஸ்லிம்களின் பிரதானமான கட்சி என்பதைத் தன வாக்காளர்களுக்கும், அரசாங்கத்துக்கும் ஆணித்தரமாகக் காட்டியுள்ளது.

இன்று இரவு வரை கிடைத்த உறுதிப்படுத்திய ஆனால் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில் அரசாங்கம் இன்று மாலையில் உறுதியாக அறிவித்த கிழக்கு மாகாணக் கூட்டு பற்றிய முடிவின் பின்னரும், ஸ்ரீ.ல.மு.கா உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்கவிரும்பவில்லையாம்.

ஆளும் கட்சியுடன் சேர்வது என்று கிட்டத்தட்ட முடிவான பின்னரும் கூட அரசாங்கம் இப்படி பகிரங்க அறிவிப்பைத் தம்மை மீறி முதலில் அறிவித்தபின்னர் பேசிக்கொண்டிருக்கிற பேரங்கள்(இப்போது தானா என்று கேட்டு சிரிக்காதீர்கள்) அரசாங்கத்தால் பெயரளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு கொஞ்சமாவது முகத்தை மக்கள் மத்தியில் காட்டலாம் என்று நாளை வரை காத்திருக்கிறார்கள் போலும்.

முதலில் அரசாங்கப் பேச்சாளர்கள் முதலமைச்சரின் பெயரை ஜனாதிபதி அறிவிப்பார்கள் என்றார்கள்.  அரசாங்கம் முஸ்லிம் முதலமைச்சரை விடத் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதையே விரும்புகிறது என்று அநேகர் பேசியிருந்தநிலையில், கேட்டறிந்த தகவல்களின் படி ஜனாதிபதியின் நம்பிக்கையும் விருப்பும் பெற்ற இருவர் இடையில் சுழற்சி அடிப்படையில் முதலமைச்சர் பதவி பகிரப்படும் என்று தெரிகிறது.

(ஒருவர் தமிழர், அடுத்தவர் முஸ்லிம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரும் ஆட்சிப் பங்காளராக அரசாங்கத்துடன் சேர ஆசைப்பட்டாலும் (ஸ்ரீ.ல.மு.கா வுடன் சேர்வதற்கு முதலமைச்சர் பதவியையே விட்டுக்கொடுக்கத் தயாரானவர்கள் அல்லவா?) கூட அரசாங்கம் அதை அப்போது விரும்பியிருக்குமா என்று இப்போது கேட்பதை விட, சிறுபான்மை ஒற்றுமை என்ற கோஷங்களை விட சேர்ந்து எடுப்பதை எடுத்திருக்கலாமோ என்று இப்போது அங்கலாய்க்கலாம்.

எதிர்ப்பரசியலோடு தனித்திருக்காமல் த.தே.கூ அடுத்த கட்டம் பற்றியும் யாருமில்லாததால் கிடைக்கும் வாக்குகளை விட இவர்களை விட்டால் யாருமில்லை எனும் அளவுக்கு வாக்குகள் கிட்டவேண்டும் என்று ஆழமாக `மக்கள் மத்தியில் வேரூன்ற செயற்படவேண்டும்.
நாடகத்தின் நாளைய காட்சி வரை காத்திருப்போம்......



மு - முகமூடி


அறப்படிச்ச பல்லி கூழ்ப்பானையில் வீழ்ந்தது மாதிரி என்று ஒரு பழமொழி இருக்கிறது பாருங்கள். அது அச்சொட்டாக இயக்குனர் மிஷ்கினுக்குப் பொருந்துகிறது.

மற்றவர்களுக்கு அளவுக்கதிகமாகப் போதிப்பவர்கள் தாம் ஒன்றும் பெரிதாக சாதிப்பதில்லை என்று முகமூடி மூலம் காட்டிவிட்டார் இந்த 'உலக மகா' இயக்குனர்.

Batman - The Dark Knight Rises பாதிப்பில் அப்படியான ஒரு சூப்பர் ஹீரோ படத்தைத் தமிழில் தர நினைத்தது தப்பில்லை. ஆனால் தந்த விதமும் தடுமாறிய இடங்களும் தான் படத்தைப் பப்படம் ஆக்கிவிட்டன.
இடைவேளையுடன் படத்தை முடித்திருந்தால் .... இப்படி நினைக்கவே சந்தோஷமா இருக்கிறது.
ஜீவா, நாங்கள், மிஷ்கின், தயாரிப்பாளர் எல்லாரும் தப்பி இருக்கலாம்.
மிஷ்கினின் சில specialityகள், ஒளிப்பதிவு, ஜீவாவின் உழைப்பு, வாயை மூடி சும்மா இருடா பாடல் காட்சியமைப்பு, சில இயல்பான நகைச்சுவைக் காட்சிகள் ஆகியவை ஆறுதல்..
மிச்ச எல்லாமே மிஷ்கினுக்குப் பாடம்.
எங்களுக்குத் தலைவிதி...

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே ஆகியவை பார்த்தபிறகு , முகமூடி பற்றி படுமோசமாகப் பலர் பேசியபோதும்கூட இவ்வளவு ஏனைய படைப்பாளிகள், படங்கள் பற்றி வாய் கிழியப் பேசுறாரே ஏதாவது விஷயம் இருக்கும் என்று நம்பி திரையரங்கு போனேன் பாருங்கள்..

இதுவும் தேவை தான்.

முகமூடி - மொக்கை 


ICC World Twenty20 போட்டிகள் ஆரம்பமாவதால் இனி ஐயா கொஞ்சம் பிசி தான்..
அணிகளின் வீரர்கள், தலைவர்கள் ஆகியோரின் ஊடகவியலாளர் சந்திப்புக்கள் , போட்டி ஆயத்தங்கள், பயிற்சிப் போட்டிகளின் விபரங்களை சுருக்கமாக உடனுக்குடன் ட்விட்டர் மூலமாகத் தரவும், 18ஆம் திகதி முதல் போட்டி ஆரம்பமாக முதல் ஒரு முழுமையான கணிப்பு / முன்னோட்ட இடுகை ஒன்றைத் தரவும் எண்ணியிருக்கிறேன்....

சந்திக்கலாம்.

Post a Comment

7Comments

Please Select Embedded Mode To show the Comment System.*