March 30, 2012

காத்திருந்த வெற்றி காலியில் கிடைத்தது


கொஞ்சக் காலமாக எந்த ஒரு இடுகையும் இடவில்லை; அதைவிட அதிக காலமாக கிரிக்கெட் இடுகைகள் இடவில்லை.
ஏன் என்று என்னையே நான் கேட்டுப் பார்த்தேன்.. பிசி? ம்ம் கொஞ்சம்... அலுப்பு.. ம்ம் அதுவும் தான்..
என்னத்தை எழுதி என்னத்தை.. அதான் ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் போட்டிகள் நடந்திட்டே இருக்கே..

சச்சினின் சதத்தில் சதங்கள்.. ராகுல் டிராவிடின் ஓய்வு.. விராட் கொஹ்லி, வெர்னம் பிலாண்டர் ஆகியோரின் அமோக ஆட்டங்கள், ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷின் எழுச்சி, உலக T20க்கு தெரிவாகியுள்ள ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளைப் பற்றியெல்லாம் எழுதலாம் என்று மனசு சொல்லும்.. ஆனால் நேரமும் இருக்காது.. அலுப்பும் விடாது....

இன்று காலி டெஸ்ட் போட்டியில் இலங்கையின் வெற்றி பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தே விட்டேன்.
தற்செயலாக ஜொனதன் ட்ரோட் நேற்று நின்று இங்கிலாந்துக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்தாலும் திட்டி எழுதி இருப்பேன் என்பது நிச்சயம்.



இலங்கையில் எந்த கிரிக்கெட் தொடர் நடந்தாலும் காலி டெஸ்ட் போட்டி இலங்கைக்கு ராசியானது என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முதல் இங்கே இடம்பெற்ற போட்டிகள் இரண்டு இலங்கை எதிர்பாராத, விரும்பாத முடிவுகளைத் தந்திருந்தது. கெய்லின் முச்சதம் & ஆஸ்திரேலியா கொடுத்த அதிர்ச்சி வைத்திய வெற்றி.

ஆனால் சுழல் பந்து வீச்சு என்றால் குளிர் காய்ச்சல் வந்து சுருண்டு போகும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெற்றிகரமாக ஆரம்பிக்க காலியை விட வேறு பொருத்தமான இடம் அமைந்திருக்க முடியாது. ஆனாலும் முத்தையா முரளிதரன் இல்லாமல் வெற்றிகளுக்காக தவம் கிடந்த இலங்கை அணிக்கு, ரங்கன ஹேரத் இப்படியொரு வெற்றியைப் பெற்றுக்கொடுப்பார் என்று நூறு வீதம் நம்பி இருந்திருக்க முடியாது தான். அதிலும் உலகின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ஸ்வான் இங்கிலாந்து அணியில் இருக்கிறார்.. இலங்கை அணி ஆஸ்திரேலியாவின் அறிமுகப் பந்துவீச்சாளர் நேதன் லயனுக்கு எதிராக இதே காலி மைதானத்தில் தடுமாறி இருந்ததை யாரும் மறந்துவிட முடியாது.

இங்கிலாந்து, உலகின் முதல் தர டெஸ்ட் அணியாக இருப்பதும் இன்னொரு முக்கிய விடயம். பாகிஸ்தானுடன் மத்திய கிழக்கில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மரண அடி வாங்கினாலும் இங்கிலாந்தின் துடுப்பாட்டவரிசையின் பலம் தெரிந்ததே..

இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் முதல் இடத்தில் இருந்தபோது இங்கிலாந்தில் வைத்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோற்று தனது மகுடத்தை இழந்தது. இப்போது இங்கிலாந்து முதலாம் இடத்தில் இருக்கும் நேரம் தொடர்ச்சியாக நான்காவது டெஸ்ட் போட்டியைத் தோற்றிருக்கிறது.
அடுத்த டெஸ்ட் போட்டியில் இலங்கையிடம் தோற்றாலோ, அல்லது சமநிலையில் அந்தப் போட்டி முடிந்து இலங்கை அணி தொடரை வென்றாலோ இங்கிலாந்து தனது டெஸ்ட் மகுடத்தைத் தென் ஆபிரிக்காவிடம் இழந்துவிடும்.

இலங்கை அணிக்கு நேற்றைய காலி வெற்றி நீண்ட நாள் காத்திருப்புக்குக் கிடைத்த பரிசு வெற்றி என்று தான் சொல்லவேண்டும். முரளியின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை மண்ணில் வைத்துக் கிடைத்த முதலாவது வெற்றி & இரண்டாவது டெஸ்ட் வெற்றி இது. இலங்கை அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தன நேற்றைய வெற்றிக்குப் பின் சொன்னது போல, நீண்ட காலத் தேடலுக்குப் பின் வெற்றிக்கான அணியை, வழியைக் கண்டறிந்துள்ளது இலங்கை அணி. இந்த வெற்றிக்காக இலங்கை தலைமையை மாற்றவேண்டி இருந்தது.. நிறைய மாற்றங்களை அடிக்கடி செய்ய வேண்டி இருந்தது. எனவே இந்த வெற்றி சுகமானது தான்.

அதிலும் இந்த வெற்றியை நான் அதிகமாக ரசிக்கக் காரணங்கள் சில இருக்கின்றன...

ஒரு முக்கிய சுவாரஸ்யம் கலந்த வரலாற்று தகவல்...
முரளியின் கடைசிப் போட்டி அவர் 800 விக்கெட் சாதனை படைத்த காலிப் போட்டி.. இந்தியாவை இலங்கை வெற்றிகொண்ட அந்தப் போட்டிக்குப் பிறகு (July 2010 )  17 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியைப் பெற்றிருந்த இலங்கை அணிக்கு அதே காலியில் வைத்து முதலாவது உள்நாட்டு வெற்றி கிடைத்திருக்கிறது.


முரளி 800 @ காலி




மஹேலவின் தலைமைத்துவத்துக்கு உதாரணமான துடுப்பாட்டம் இந்த வெற்றிக்கான அடித்தளத்தை இட்டது. அணியின் முதலாம் இன்னிங்க்ஸின் மொத்த ஓட்ட எண்ணிக்கையில் மஹேலவின் பங்களிப்பு கிட்டத்தட்ட 60 வீதம்.
அந்த முதல் இன்னிங்க்ஸ் ஓட்ட எண்ணிக்கை தான் இலங்கையின் உறுதியான வெற்றிக்கான முதலாவது படியாக அமைந்தது.

இலங்கை அணியின் கீழ்வரிசைத் துடுப்பாட்டத்தின் போராட்ட குணம்..
வழமையாக இலங்கை அணியின் கீழ்வரிசைத் துடுப்பாட்டம் ஏனைய அணிகளைப் போல நின்று ஓட்டங்களைப் பெரியளவில் குவிப்பதில்லை.
ஆனால் இந்த காலி டெஸ்ட்டில் முதலாம் இன்னிங்க்சில் இலங்கையின் கடைசி மூன்று விக்கெட்டுக்களும் 127 ஓட்டங்களையும், தீர்க்கமான இரண்டாம் இன்னிங்க்சில் கடைசி இரண்டு விக்கெட்டுக்களும் 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தன.
இந்த இரண்டிலும் இரண்டு ஜெயவர்த்தனக்கள் தான் பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தாலும், கடைசி வீரர்கள் உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சு வரிசைக்கு எதிராக நின்று பிடித்தது பெரிய ஒரு விடயமே.

ரங்கன ஹேரத் தன்னை முரளிக்கு அடுத்தவர் தானே என்று நிரூபித்தது.
முரளியின் ஓய்வுக்குப் பிறகு அஜந்தா மென்டிஸ், சுராஜ் ரண்டிவ் போன்றோரை எல்லாம் நம்பாமல், அவர்களைப் பழக்கிக் கொண்டே ஹேரத்தை இலங்கை அணி சில ஆண்டுகளுக்கு நம்பி இருக்கவேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வந்தவன் நான்.. அது டெஸ்ட்டாக இருந்தாலென்ன, ஒரு நாள் போட்டிகளாக இருந்தால் என்ன..
ஹேரத் இப்போது அதற்கான சான்றைத் தெளிவாக, உலகின் முதல் தர அணிக்கு எதிராகக் காட்டி இருக்கிறார்.

ஹேரத் பெற்ற 171 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்டுக்கள் முரளி இதே மைதானத்தில் பெற்ற விக்கெட்டுக்களுக்கு அடுத்ததாக சிறந்தது.
ஹேரத் தனது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் முதலாவது பத்து விக்கெட் பெறுதியையும் நேற்று பெற்றிருந்தார். இலங்கை சார்பாக போட்டியொன்றில் பத்து விக்கெட் பெறுதியைப் பெற்றுக்கொண்ட ஐந்தாவது பந்துவீச்சாளர் ஹேரத்.
இலங்கைப் பந்துவீச்சாளர்கள் பெற்ற 27 பத்து விக்கெட் பெறுதிகளில் 22 முரளியால் பெறப்பட்டவை.

ஹேரத்தின் இந்தப் போட்டிப் பெறுபேறு, அறுபது ஆண்டுகளில் ஒரு இடது கை பந்துவீச்சாளர் இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற சிறப்பான போட்டிப் பெறுபேறு என்பது மற்றொரு சாதனை.
ஹேரத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் சிறப்பாகவே பந்துவீசி வருகிறார் என்பது ஆரோக்கியமான விடயம். இலங்கிக்கு ஒரு கிடைத்துள்ளார் என்பது வெற்றிகள் தொடரும் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.


ரண்டீவ் தனக்குக் கிடைத்த டெஸ்ட் வாய்ப்பொன்றை இவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தி இருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.
ரண்டீவ் வீசிய சில பந்துகள் மிகசிறப்பானவை.. அவர் தன்னை இன்னும் கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொண்டால் இன்னொரு முரளி தயார்.

பிரசன்ன ஜெயவர்த்தனவின் மீள் வருகை..

காயம் காரணமாக தென் ஆபிரிக்கத் தொடரின் பின்னர் பிரசன்ன விளையாடிய முதல் போட்டியில் தனது துடுப்பாட்டத் திறனை மீண்டும் ஒரு தரம் நிரூபித்துள்ளார். தினேஷ் சந்திமாலின் துடுப்பாட்ட எழுச்சி கொடுத்து வந்த அழுத்தத்தை அவர் போக்கிய விதம் கலக்கல்.

இலங்கையின் அபாரமான களத்தடுப்பு.. குறிப்பாக டில்ஷானின் பிடிஎடுப்புக்களும், பிரசன்னா ஜெயவர்த்தனவின் விக்கெட் காப்பும் நிச்சயமாகப் பாராட்டப்படவே வேண்டியவை.. இவை இலங்கையின் வெற்றிக்கான வழியை அகலப்படுத்தியிருந்தன.

ஆனால் இலங்கை கவனிக்க வேண்டிய பல ஓட்டைகள் இருக்கின்றன...

சீரில்லாத துடுப்பாட்டம் + வேகப்பந்துவீச்சு...
துடுப்பாட்ட வரிசையை அவசரப்பட்டு இலங்கை மாற்றவேண்டிய தேவை கிடையாது. காரணம் லஹிரு திரிமன்னேயைத் தவிர (தினேஷ் சந்திமால் கூட ஒருநாள் போட்டிகளில் தன்னைத் தொடர்ச்சியாக அண்மைக்காலத்தில் நிரூபித்திருக்கிறார்) ஏனைய அனைத்து வீரர்களுமே தங்களை நிரூபித்தவர்கள் & எந்தவேளையிலும் மீண்டும் பெரியளவில் ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்கள். திரிமன்னேக்கும் இன்னொரு வாய்ப்பு அடுத்த டெஸ்ட்டில் கொடுத்துப் பார்க்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.


ஆனால் வேகப் பந்துவீச்சு?
மோசமாக ஒன்றும் செய்யவில்லை தான்.. இலங்கை வீழ்த்தியது இரண்டு வேகப்பந்து விக்கேட்டுக்களைத் தான்.. ஆனால் கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் இப்படியான வேகப்பந்துவீச்சை விட இன்னும் நேர்த்தியாக வேண்டும்..
இலங்கை தான் குலசெகரவை இப்போது ஒருநாள் ஸ்பெஷலிஸ்ட் ஆக்கிவிட்டதே.. ஆனாலும் சுரங்க லக்மலும், வெலகேதரவும் இன்னும் கொஞ்சம் Line & Length ஐக் கவனிக்க வேண்டி இருக்கிறது.

இங்கிலாந்து இந்தத் தோல்வியை மத்திய கிழக்கில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் எதிர்பார்த்தே இருந்திருக்கும்..
ஆனால் நேற்று ஓரளவு நல்ல நிலையிலிருந்து கடைசி ஐந்து விக்கெட்டுக்களையும் 12 ஓட்டங்களுக்கு இழந்து தோற்றது நிச்சயம் மனதை உளைவிக்கப் போகின்றது. (கடைசி ஆறு விக்கெட்டுக்களை இழந்தது 31 ஓட்டங்களுக்கு)

அன்டர்சன், ஸ்வான் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும், ஜொனதன் ட்ரோட்டின் சத்தமும் நம்பிக்கை கொடுத்தாலும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணிக்கட்டமைப்பு எப்படி அமையவேண்டும் என்று அவர்களுக்கு ஏற்பட இருக்கும் குழப்பம் சுவாரஸ்யமானது. ரவி போபரா குணமடையாவிட்டால் இங்கிலாந்தின் பாடு மீண்டும் திண்டாட்டம் தான்.

ஆனால் இலங்கை முன்னைய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தடுமாறியது போல, இந்தியாவுக்கு எதிராக காலியில் வெற்றி பெற்று, முரளி ஓய்வு பெற்ற பின் கொழும்பில் கோட்டை விட்டது போல சரவணமுத்து அரங்கில் சரணடையுமோ தெரியவில்லை.
மஹேல மீது நம்பிக்கை இருக்கிறது.. அவரை விட எனக்கு..

நேற்றைய போட்டி பற்றிப் பேசுகையில் ஜொனதன் ட்ரோட்டின் சதம் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் ஆடுகளத்தில் இருக்கும் வரை இங்கிலாந்துக்கு வெற்றி பெறக்கூடிய சாதகத் தன்மை இருந்தது குறிப்பிடத்தக்கது.

2001 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நாசெர் ஹுசெய்ன் ஆசியாவில் பெற்ற நான்காம் இன்னிங்க்ஸ் சதத்துக்குப் பின்னர் நேற்றைய சதம் இங்கிலாந்துக்குக் கிடைத்தது. ஆனால் அத்தனை அபாரமாக ஆடியும் தோல்வியிலிருந்து அணியைக் காப்பாற்ற முடியாமல் போனது அவருக்கு துரதிர்ஷ்டமே..

இங்கிலாந்து அணி தவறவிட்ட ஏராளமான பிடிகள் இலங்கைக்கு அதிர்ஷ்டமாக அமைந்து போயின. குறிப்பாக மஹேல போன்ற வீரர் ஒருவரின் நான்கு பிடிகளைத் தவறவிடுவதை யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா?
மஹேல தனிப்பட மொன்டி பனேசருக்கு நன்றி தெரிவித்திருப்பார் நிச்சயமாக..
(மொன்டியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் யார் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வருகிறது ;))

உலகின் முதல் தர அணியாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவை வீழ்த்தி மகுடம் சூடிய பிறகு கிரிக்கெட்டில் புதிய சக்தியாக தங்களை அறிவித்துக்கொண்ட அண்டி பிளவர் (இங்கிலாந்தின் பயிற்றிவிப்பாளர்) & அன்றூ ஸ்ட்ரோஸ் ஆகியோருக்கு இப்போது அடியின் மேல் அடி, அழுத்தத்தின் மேல் அழுத்தம்..

தங்கள் நாட்டின் சாதகமான ஆடுகளங்களிலும், தங்கள் நாட்டை ஒத்த ஆடுகளங்களிலும் தான் வென்று முதலாம் இடத்துக்கு வந்துள்ளார்கள் என்ற விமர்சனங்கள் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றன.

இங்கிலாந்து எப்படி இதற்குப் பதிலளிக்கப் போகிறது என்பதையும் காத்திருந்து அறிய ஆவல்....

அடுத்த போட்டியிலாவது 5000 ரூபா டிக்கெட் என்று இலங்கை ரசிகர்களை மைதானத்தை விட்டே விரட்டாமல் ( இங்கிலாந்து ரசிகர்களும் வெறுத்துப் போனது வேறு கதை) அதிக ரசிகர்களை டெஸ்ட் போட்டி பார்க்க வைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடவடிக்கை எடுக்குமா என்று பார்ப்போம்..

ஆனால் இந்தத் தொடரின் பெயர் தான் ஏதாவது ஒரு விஷயத்தை மறைமுகமாக சொல்கிறதோ என்று தோன்றுகிறது - JUSTRETIREMENT Test Series  :p

ஆனாலும் நேற்றைய டெஸ்ட் போட்டியின் பின்னதாக வெளியாகியுள்ள ICC டெஸ்ட் தரப்படுத்தலில் இவ்வளவு நாளும் முதலாம் இடத்தில் இருந்த குமார் சங்கக்கார இப்போது நான்காம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தலைவர் கிளார்க்கும், தென் ஆபிரிக்க வீரர் டீ வில்லியர்சும் சேர்ந்து முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளார்கள்.

ஏனைய இலங்கை துடுப்பாட்ட வீரர்களில் சமரவீர 7ஆம் இடத்திலும், மஹேல 19ஆம் இடத்திலும் இருக்கிறார்கள். ட்ரோட் ஒன்பதாம் இடத்தில்...

இலங்கைப் பந்துவீச்சாளர்களில் ஹேரத் கைப்பற்றிய 12  விக்கெட்டுக்களுடன் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஏனைய எந்தவொரு இலங்கைப் பந்துவீச்சாளரும் முதல் இருபது இடங்களில் இல்லை.
முதலாம் இடத்தில் தொடர்ந்தும் டேல் ஸ்டெய்ன், இரண்டாம் மூன்றாம் இடங்களில் அஜ்மல் & அண்டர்சன்..

ஆனால் நான் மிக ரசித்த ஒருவர் வேர்ணன் பிலாண்டர். அவரது தொடர்ச்சியான சிறப்பான பந்துவீச்சுக்கள் அவரை 11 ஸ்தானங்கள் உயர்த்தி ஐந்தாம் இடத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.
(இன்று இரவு வெற்றி FM வானொலியில் V For வெற்றி V For விளையாட்டு நிகழ்ச்சியில் பிலாண்டர் பற்றியும் சில விடயங்களைப் பகிர்கிறேன்.. முடிந்தால் கேளுங்கள்)

நண்பர்ஸ்.. இனி IPL 2012உம் தொடங்க இருப்பதால் தேங்கிக் கிடந்த கிரிக்கெட் பதிவுகளும் சேர்ந்தே வரும் :))



3 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

நீண்ட காலத்திற்கு பிறகு பதிவு, அதுவும் கிரிக்கட் பதிவு..

Nirosh said...

காத்திருந்து நானும் ரசித்தேன் சுவைத்தேன், அருமையான பதிவு..! இப்படி அடிக்கடி போடுங்க அண்ணே....:)

jaan said...

nice blog.. all points were spot on specially fast bowling, that is the weak link in sl.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner