தேர்தலில் த.தே.கூ வெற்றி.. சொல்பவை என்ன?

ARV Loshan
16


இலங்கையின் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று நேற்று முழுமையான முடிவுகளும் வெளிவந்துள்ளன.
மோசடிகள், வன்செயல்கள் கொஞ்சம் ஆங்காங்கே இடம்பெற்றாலும்(அதெல்லாம் கண்காணிப்பாளர்கள் + தேர்தல் ஆணையாளர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லையாம்)

நேற்று காலையில் நான் ட்வீட்டியதைப் போல தமிழர் வாழும் பகுதிகளில் அரசாங்கக் கட்சி இரண்டாம் இடத்தையே பெற்றாலும், ஏனைய இடங்கள் எல்லாம் அரசாங்கத்துக்கே எழுதி வைத்தார் போல இலகு வெற்றி..

தேர்தல் நடைபெற்ற 65 தொகுதிகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 45 சபைகளிலும், தமிழ் அரசுக் கட்சிக்கு 18 சபைகளிலும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 2 சபைகளிலும் வெற்றி கிடைத்துள்ளது.

முழுமையான விபரங்களை கீழ்க்காணும் சுட்டிகளில் காண்க..

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2011 - முழுமையான தொகுப்பு


முழுமையான மாவட்டரீதியிலான விபரங்கள்


இந்தத் தேர்தல் பற்றி முன்னதாக எழுந்த கருத்துக்கள், பயன்கள் அத்தனையும் காற்றிலே பறந்து காணாமல் போயுள்ளது எல்லோருக்குமே ஆச்சரியமாகியுள்ளது.
ஆளும் தரப்பு மேற்கொண்ட முன்னாயத்தங்கள், முஸ்தீபுகள், அந்தந்த தமிழ்ப் பகுதிகளிலேயே நாட்கணக்காக, மாதக்கணக்காக தங்கியிருந்து முன்னெடுத்த 'அபிவிருத்தி'ப் பணிகள் எல்லாம் என்னாச்சு?
எனக்கும் இது பெரிய ஆச்சரியம் தான்.

அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது நேரடியாகப் பார்த்தவை உட்பட, எல்லோருமே அவதானித்த செய்திகளைப் பார்த்தால் மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் மனதுக்குள் அடித்திருக்கும்..

ஆனால் சில வாக்காளர் அட்டைக் கொள்ளை, சில மிரட்டல்கள்+அச்சுறுத்தல்கள், சில பல வன்முறைகள் தவிர, பெரும்பான்மையான இடங்களில் முடிவுகள் வாக்காளர்களின் விருப்பப்படியே வந்திருப்பதில் திருப்தி.

ஆனாலும் எப்படி இவ்வளவு நேர்மையாக என்ற ஆச்சரியமும் வராமல் இல்லை.. இதற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ?

அரசாங்கத்துக்கு இந்தத் தேர்தலில் வெற்றியும் தமிழ் மக்களின் வாக்குகளும் அத்தியாவசியமாகத் தேவைப்பட்டன..
ஏற்படுத்திய தலைக்குனிவையும் அவமானத்தையும் உலகின் எதிர்ப்பையும் துடைக்க தமிழ் மக்கள் தம்முடன் தான் என்று காட்டுவதற்கு இந்த வட மாகாணத்தின் சபைகளின் வெற்றி அவசியப்பட்டது.

இதனால் தான் முதலில் அபிவிருத்தி+ உதவிகள், பின் அமைச்சர்கள், அதன் பின் படையினர், இறுதியாக ஜனாதிபதி என்று யாழ் குடாநாடே கதிகலங்கியது..
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் வாக்காளர்களின் வாக்குகளை விட முடிவுகள் வித்தியாசப்படும் என்றே எண்ணத் தோன்றியது..
ஆனால் வடக்கு + அம்பாறை முடிவுகள் ஆளும் கட்சியின் மூக்கை உடைத்துள்ளன.

எனினும் இன்னொரு பக்கமாக சிந்தித்தால்,இவ்வளவு முனைப்பாக ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் எம்மையெல்லாம் 'அசத்திய' அரசாங்கம் இந்த முறை இன்னொரு விதமாக எம்மை ஆச்சரியப்படுத்தியதற்கு தெளிவான பின்னோக்கிய காரணம் ஒன்று இருக்கும்.

இவ்வளவு சுதந்திரமாக மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளோமே, எங்களையா சந்தேகப்பட்டு, தடை செய்து ஒதுக்கிறீங்க என்று அமெரிக்கா உட்பட்ட நாடுகளிடம் கேள்வி எழுப்ப, அப்பாவியாகத் தம்மை வெளிப்படுத்த இதை ஒரு வாய்ப்பாக அரசு பயன்படுத்தி இருக்கலாம்.

Channel 4 காணொளிகள் தந்த அழுத்தங்களை எல்லாம் கழுவ அரசாங்கம் இதைப் பயன்படுத்தி இருக்குமா? அப்படியாக இருந்தால் உலகிலேயே மிகச் சோர்ந்த ராஜதந்திரிகள் இலங்கையில் தான் இருக்க முடியும்..

ஆனால் ஆளும் தரப்பு இறுதி நேரத்தில் தான் இப்படி 'நல்லவர்களாக' மாறும் முடிவை எடுத்ததா என்ற சந்தேகமும் வருகிறது..

அப்படியாக இந்த முடிவுகள் இவ்வாறு வெளியிடப்பட அரசாங்கத்தின் 'தூர நோக்கு' தான் காரணம் என்று வந்தாலும், மாடாக உழைத்த ஆளும் கட்சி உறுப்பினர்கள்,. கட்சி சார்ந்தோர், தமிழ் அமைச்சர்கள்? பாவம்..

இதை நண்பர் ரமணன் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்.


உள்ளுராட்சி மன்ன தேர்தல் வடக்கில் உண்மையில் வென்றது யார் ?




தமிழ் மக்கள் இன்னும் அரசாங்கத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை மட்டுமல்ல, மன்னிக்கவும் தயார் இல்லை என்பதைத் தான் மிகத் தெளிவாக இந்த முடிவுகள் காட்டுவதாய் நான் எண்ணுகிறேன்.

வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு, சில வீதிகள் திறந்துவிடப் பட்டு (இவற்றுள் ஒரு சில தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டதும் இனி மூடப்படலாம் என்று பேச்சு இருப்பதும் கவனிக்கத்தக்கது) மேலும் சில அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டும் மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் தேர்வு என்று வந்தபோது மிகத் தெளிவாக ஒருநிலைப் பட்டுள்ளார்கள்.

இன்னொரு பக்கம் வெட்டப்பட்ட நாய்களுக்கும், மிரட்டப்பட்ட நேரத்துக்கும், இலவசங்கள் வந்தாலும் இழிநிலைக்குட்படுத்தப்பட்டதற்கும் தகுந்த பதிலை மக்கள் புள்ளடிகள் மூலம் வழங்கியுள்ளார்கள்.

இதன் காரணம் இலகுவாக ஊகிக்கக் கூடியதொன்று..
ஆனால் இதிலும் 'ஏகப் பிரதிநிதிகள்' என்ற மாயையில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது...

காலையில் தம்பி ரேஷாங்கன் ட்விட்டியிருந்த விஷயம் தீர்க்கமானது...
"எதிர்ப்பை மட்டுமே மக்கள் காட்டியிருக்கிறார்கள்; தமக்கான சரியான அரசியலை யாழ்ப்பாண மக்கள் இன்னும் நாடியே நிற்கிறார்கள் #Politics #SL"

இது தான் அது.. அம் மக்களின் ஆளும் தரப்பு, அதை சார்ந்தோர் மீதான எதிர்ப்பை வெற்றி பெற்ற தமிழ்த் தரப்பு மீதான அபரிதமான ஆதரவாக யாரும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இதை முன்னாள் பதிவர் கன்கோன் நேற்று ட்வீட்டி இருந்தார் ..
சிலரை எதிர்ப்பதற்காக இன்னும் சிலருக்கு ஆதரவளிப்பதை, அந்த இன்னும் சிலர், தங்களுக்கான ஆதரவாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இதை நான் அழுத்தமாக சொல்லக் காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை (இந்த மூன்று ஆண்டுகளில்) முன்னெடுத்த காரண காரியங்களை அடிப்படியாக வைத்தே.
யாரொருவரும் மாற்றாக வராத காரணத்தால் யாழ் வாக்காளரின் தெரிவாக 'வீடு' இருந்திருக்கிறது.

த.தே.கூ மீது விமர்சனங்கள் இருந்தாலும் இம்முறை வாக்காளரின் தெரிவு வீடு ஆகவே இருக்கவேண்டும் என்றே நான் விரும்பி இருந்தேன்; எனக்குத் தெரிந்தவர்கள்,கேட்டவர்களிடம் வலியுறுத்தியும் இருந்தேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது இருக்கும் நிலையில் புது இரத்தம் பாய்ச்சினாலேயே எதிர்காலத்துக்கு போராடும் என்று சொல்வோரை நான் மறுதலிக்கிறேன். மாற்று ஒன்று உருவாகவே வேண்டும்.
இந்த த.தே.கூ எங்கள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மாதிரி.. ஆட்களை மாற்றினாலும் புதியவரிடமும் சில விஷயங்கள் தொற்றிக் கொள்ளும்.
எல்லாமே புதிதாக வேண்டும்.

எதிர்க்கும் நேரத்தில் எதிர்த்து, பெறவேண்டிய விஷயங்களை உரத்த ஒருமித்த குரலில் கோரவேண்டிய , மக்களுக்கு சொன்னதை சரியாக செய்யவேண்டிய ஒரு மாற்று காலத்தின் தேவை. அது அரைகுறையாக உருவாகாமல் முழுமையாக உருப்பெறும் வரை த.தே.கூவே இருக்கட்டும்.
ஆனால் ஏக பிரதிநிதிகள் என சொல்லும்போது உதைக்கிறதே..

காரணம் தமிழர் விடுதலைக் கூட்டணி தனது முக்கிய இடமான கிளிநொச்சியில் (அது வென்ற இரு இடங்களில் த.தே.கூ போட்டியிடவில்லை) வென்று தன் இருப்பையும், தீவகப் பகுதிகளில் வழமையாக நடப்பதைப் போல ஈ.பீ.டீ.பீ தன் வலிமையையும் காட்டியுள்ளன.
இனி வென்ற இந்த 18 சபைகளில் த.தே.கூ உறுப்பினர்கள் முன்னெடுக்க இருக்கும் நடவடிக்கைகள், மக்களுக்கான தங்கள் முன்னெடுப்புக்கள் குறித்து நாம் விமர்சனத்துடன் நோக்க வேண்டும். சும்மாவா யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் தமிழ் அரசுக் கட்சி சார்பாக 137 உறுப்பினர்கள்.

எனது சிங்கள நண்பர் ஒருவர் என்னிடம் நேற்றுக் கேட்டார் "உங்கள் ஆட்கள் இப்படி நன்றி இல்லாமல் நடந்தது சரியா?"
அவரிடம் நான் கேட்டேன் "இந்த அபிவிருத்தி, உதவிகளை எல்லாம் இப்போ தான் செய்திருக்கனுமா? இது அவர்களுக்கு வழங்கப்படிருக்க வேண்டிய உரிமைகள் தானே?"

"போரை நிறுத்தி, புலிகளுக்கு வழங்கிய ஆதரவையும் மறந்து ஜனாதிபதி உதவி செய்தும் ஏன் இவ்வாறு வாக்களிக்காமல் விட்டார்கள்?" அவரின் கேள்வி.

"இதற்காக விலை போவதாக இருந்தால் நம்மவர்கள் எப்போதோ புலிகளைத் தூக்கி எறிந்தும் இருப்பார்கள்;  இந்த தேவைகள் தான் முதன்மையாக இருந்திருந்தால் அடங்கியே போயிருந்திருப்பார்கள்." எனது பதில்.

ம்ம்ம்ம்.. எம்மவர்களை, எம்மவரின் உண்மையான தேவைகளைப் புரிந்துகொள்ள இவர்களில் பலருக்கு முடிவதில்லை..

இந்த முடிவுகள் மூலம் அவதானிக்கக் கூடிய மேலும் சில...

அரசாங்கம் சிங்கள மக்களால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது..
என்ன தான் விமர்சனங்கள் இருந்தாலும், ஊழல், அதிகாரம் என்று குற்றச்சாட்டுக்கள் குவிந்தாலும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கு ஆபத்து எந்த வடிவிலும் இலங்கையில் இல்லை என்பது மீண்டும் உறுதியாக நிரூபணம் ஆகியுள்ளது.

அடுத்த வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னதாக இதனால் வேறெங்காவது இன்னொரு சிறு தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி முனையலாம்.

ஐக்கிய தேசியக் கட்சி- UNP , JVP ஆகியன மக்களால் ஒரேயடியாக ஒதுக்கப்பட்ட கட்சிகளாக மாறியுள்ளன..
இப்படியே போனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (தமிழ்கரசுக் கட்சி) இரண்டாவது கூடிய ஆசனங்கள் பெற்ற தனிக்காட்சியாக மாறும் நாள் தொலைவில் இல்லை.
ரணில் இனியாவது சஜித்துக்கு வழிவிட்டு ஒதுங்குதல் இலங்கையின் வெகுஜன அரசியலுக்கே நல்லது..

இப்படி ஒரு தனிக்கட்சி முழு ஆதிக்கம் செலுத்தி வருவதானது ஜனநாயகத்துக்கே ஆபத்தானது..

அது எங்கே இருக்கு என்று யாரும் கேட்கப்படாது..

ஆனால் இந்தத் தேர்தலில், முடிவுகள் வெளிவந்து வெற்றியின் உற்சாகத்தைத் தமிழர் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் 83 இனக்கலவரம், கறுப்பு ஜூலை இன்று 28வது ஆண்டு நினைவுகளைத் தருகிறது.


83இல் தமிழர், 84இல் சீக்கியர்.. ஒரு ஒப்பீட்டுக் குமுறல்



பழசை மறக்கவேண்டும் என்று பலர் சொன்னாலும், இவையெல்லாம் மறக்கப்படக் கூடியவையா?
இழப்புக்கள் அப்படியானவை..
அன்று ஆரம்பித்த தீ தானே 25 வருடங்களின் பின் இறுதியாக எமக்கெல்லாம் கொள்ளி வைத்து?

Post a Comment

16Comments

Please Select Embedded Mode To show the Comment System.*