இன்று வேலைப்பளு அதிகரித்த நாள்; எழுத்து வேலையும் தலைக்கு மேல் இருந்தாலும், மனதார ரசித்த விஷயத்தை நண்பர்களிடம் பகிரவேண்டும் என்பதற்காகவும், நிலாவுக்காக ஒரு மணிநேரம் எடுத்து வருகிறது இப்பதிவு.
தெய்வத் திருமகள் நேற்றுப் பார்த்து நெகிழ்ந்ததில் இருந்து 'நிலா' மனசெல்லாம்..
ஒரு நல்ல நோக்கத்திற்காக நிதி சேகரிக்க யாழ் இந்துவின் பழைய மாணவர்களின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்திருந்த விசேட முதல் காட்சியில் எம் வெற்றி FM வானொலி மூலமாக நாமும் சிறு பங்காக இணைந்திருந்தோம்..
ஓசி டிக்கெட் என்றாலும் அவர்கள் சேர்க்க வேண்டிய நிதி திருப்திகரமாக இருக்கவேண்டும் என்ற நினைப்புப் படம் ஆரம்பித்துப் பாதி நேரம் வரை மனதோடு பயணித்தது.
படம் பற்றி அறிந்ததில் இருந்து மிக எதிர்பார்த்திருந்த ஒரு படம்..
விக்ரம், பாடல்கள் தந்த எதிர்பார்ப்பை விட இயக்குனர் விஜய் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது..
தனது முதல் மூன்று படங்களிலுமே சிலாகிக்க வைத்து ரசிக்க வைத்தவர்.. கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசபட்டினம்..
(அனுஷ்கா, அமலா பால் ரசிகர்கள் ஓடிப் போங்க... )
ஆனால் இந்தத் திரைப்படம் ஆங்கிலப் படம் I am Samஇன் தழுவல் என்று தெரிந்த பிறகும், அந்த I am Sam ஐப் பார்த்த பிறகும் காத்திருந்த காரணம், அதில் உள்ள சில சிக்கலான பகுதிகளை எவ்வாறு தமிழ்ப்படுத்தப் போகிறார் விஜய் என்கிற ஆர்வம் தான்.
ஆனால் தழுவல் மட்டுமே.. ஆங்கிலப் படத்தின் முக்கியமான கதையோட்டத்தை மட்டுமே எடுத்துக்கையாண்ட விஜய் சிக்கலான, எங்களுக்குப் பொருந்தாத பகுதிகளைத் தமிழ் சினிமாவின் போக்கில் மாற்றிவிட்டார்.
ஆங்கிலப் படத்தில் சீன் பென் காட்டியிருந்த அற்புத நடிப்பை நம் விக்ரம் முந்துவார் என்று எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அனுஷ்காவும் மிஷேல் பீபரை நெருங்க முயற்சித்திருந்தார்.
ஆனால் ஆங்கிலப்படம் பார்க்காமல் தெய்வத் திருமகளைப் பார்ப்பது படத்தோடு ஒன்றவும் உணரவும் உங்களுக்கு உதவும்.
ஆனால் விஜயிடம் நான் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கவில்லை.
எழுத்து - இயக்கம் - விஜய்..
குறைந்த பட்சம் Inspired by I am Sam என்றாவது போட்டிருக்கலாமே..
மனவளர்ச்சி குன்றிய தந்தைக்கும், தாயில்லாமல் அவனுடன் வளரும் குழந்தைக்கும் இடையிலான பாசமும், குழந்தையின் எதிர்காலத்துக்காக அந்தப் பெண் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் குஹ்ழ்ந்தையின் தாய் வழி உறவுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வதுமே கதை....
பார்வைகள், இசை, வசனங்கள், உணர்ச்சிகள் மிகு காட்சிகள், அற்புதமான ஒளிப்பதிவு என்று எல்லாம் அளவான ஒரு நிறைவான திரைப்படம்..
விஜயின் மனம் உருவாக்கிய இந்தப் படத்தைக் காவிச் செல்லும் அறுவர் என நான் நினைப்பது..
விக்ரம் - இவர் நடிப்பைப் பற்றி புதுசாக சொல்லவேண்டுமா?
அனுஷ்கா - முன்பு உடலைக் காட்டிய இந்த ஆறடி அழகுப் பதுமை அமைதியாக, ஆவேசமாக, அன்பாக நடித்து அசர வைக்கிறது.
அமலா பால் - இவரை இப்படி மாங்கு மாங்கென்று எல்லாரும் வழிந்து தலையில் தூக்கி வைக்க என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தேன். (மைனா பார்த்திருந்தும்) நடிக்கிறார்.. கொஞ்சம் கறுப்பழகியாக இருந்தாலும் கண்களும், உதடுகளும் வாவ் சொல்ல வைக்கின்றன..
அந்த அழகான சின்னக் குழந்தை - சாராவா பெயர்? அள்ளி அனைத்து உச்சிமோந்திட வைக்கும் அழகும் துறுதுறுப்பும்.
இந்தச் சின்ன வயதிலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம்.. தந்தையின் மனவலர்ச்சியைத் தன வளர்ச்சி முந்துகிறது என்று காட்டும் காட்சிகள்.. வாவ்..
நிலா.. நேற்று படம் முடிந்து வானில் பௌர்ணமி நிலாவைப் பார்க்கும்போதும் இந்த நிலா தான் மனதிலே..
நீரவ் ஷா - மனதை ரம்மியப்படுத்தும் ஒளிப்பதிவு.. ஊட்டியில் குளிர்மையும். பின் வரும் காட்சிகளில் தெள்வும் என்று கலக்குகிறார். விழிகளில் பாடலில் மென் வேக ஒளிப்பதிவு, வெண்ணிலவே பாடலின் இருள் ஓவியம் என்பவை விசேடமாக உள்ளன.
close up காட்சிகளிலும் நீரவ் ஷா நிமிர்ந்து நிற்கிறார்.
G.V.பிரகாஷ் - படம் முழுக்க உணர்ச்சிகளைக் காட்டும் உயிர் இசை தான். பாடல்கள் எல்லாமே படத்தோடு ஒன்றைச் செய்வதும், தேவையான இடத்தில் தேவையான இசையைப் பேச வைப்பதும் என்று விஜயுடன் சேர்ந்தாலே G.V.பிரகாஷ் கலக்குவார் என்பதை மூன்றாவது தரமாக நிரூபிக்கிறார்.
ரசிக்க வைத்த பல காட்சிகளில் அதிகமாக ரசித்தவை..
நிலாவும், ஸ்வேதா(அமலா பால்)வும் சந்திக்கும் பள்ளிக் காட்சிகள்
நீதிமன்றக் காட்சிகளில் அனுஷ்காவும் நாசரும் மோதிக்கொள்ளும் இடங்களும் முகபாவமும்
நாசரின் நடிப்பு class..
நீதிமன்றத்தில் ஒரு பக்கம் உச்சக்கட்ட விவாதம் நடந்துகொண்டிருக்க, தங்களைப் பற்றியது தான் அது எனப் புரிந்துகொள்ளாத, விக்ரமும் நிலாவும் தங்களுக்குள் சைகையால் உணர்ச்சியுடன் பேசிக் கொள்ளும் இடம்..
கதை சொல்லப் போறேன் பாடல்.. என் வீட்டிலும் ஹர்ஷுவுடன் அடிக்கடி இதே போல கோக்குமாக்காகக் கதை சொல்லி நான் திணறுவதால் சேம் ப்ளட்..
ஜகடதோம் பாடலில் அனுஷ்காவின் தந்தையாக வரும் Y.G.மகேந்திரன் மனம் மாறும் காட்சிகள்..
M.S.பாஸ்கர் பாண்டியினால் மனம் மாற்றப்பட்டும் கொதிக்கும் இடங்கள். ஆரம்பத்தில் சிரிப்பாக மாறி பின் சீரியசாகும் இடமும் திருப்பம் வரும் இடமும்..
சந்தானம் - வழமையான ரெட்டை அர்த்தகடிகள் இல்லாமலேயே வெளுத்து வாங்குகிறார். அலுத்துக் கொள்வதும்,அலம்பல் செய்வதுமாக சிம்பிளான சிரிப்புவெடிகள்.
''ஒரு சம்பவம் நடக்குறதுக்கு ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தர் விவரமாய் இருந்தாலே போதும்'' இந்த வசனம் ஹைலைட்டாக மாறும் இடம் கலக்கல்..
தந்தை - மகள் பாசம் அபியும் நானும் திரைப்படத்தில் காட்டியது ஒரு பக்கம் என்றால் இது இன்னொரு அழுத்தமான பாசம்..
நாசரின் மன உணர்வுகள் மாறும் இடமும், அமலா பாலின் தந்தையாக வருபவரின் முகபாவங்களும், பாசத்தால் மனிதர்கள் எல்லோருமே உருகிவிடக் கூடியவர்கள் என்பதற்கான நிரூபணம்.
விக்ரம் - மனிதருக்கு வயது போகிறது என்பது தான் கவலையாக இருக்கிறது. அப்படியே நாம் காணும் விசேட தேவைக்குரியோரைக் காட்டுகிறார். வாழும் பாத்திரமாக..
கனவுக்காட்சியில் கூட அவரை ஹீரோவாகக் காட்டாமைக்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
ஆனால் Why DR சீயான் விக்ரம்? ரசிகர்கள் கேலியாக டாக்டர் விஜய் என்று கூவுகிறார்கள்.
சில சிறு பாத்திரங்களும் ரசனைக்குரியவர்கள்..
அனுஷ்காவின் நண்பி, அவரை வழிந்து வழிந்து காதலிக்கும் ஜூனியர் வக்கீல், விக்ரமை சீண்டும் குறும்பன் என்று இயக்குனர் செதுக்கியிருக்கிறார்.
கொஞ்சம் கண் கலங்கி, கொஞ்சம் ரசனையாக சிரித்து, மடியில் இருந்து படம் பார்த்த மகனை ஆசையுடன் தடவி,செல்லமாக முத்தமிட்டு அனுபவித்த தெய்வத் திருமகளை நீங்களும் அனுபவியுங்கள்..
விஜய் - வாழ்த்துக்கள்...
தெய்வத் திருமகள் - தேயாத நிலா
தெய்வத்திருமகள்
July 15, 2011
38