வேங்கை

ARV Loshan
26

சூர்யா மட்டுமே ஹரியை நம்பலாம் என்று அறுதியாக சொல்லியுள்ள படம்.

ஹரியின் முன்னைய படங்கள் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஆங்காங்கே அப்பி, அண்மையில் தேசிய விருது பெற்ற தனுஷையும் சேர்த்தால் பின் சன் பிக்சர்சின் துணையோடு படத்தை வெற்றி பெற்றுவிடலாம் என்று குறுகியகால திட்டமாக இயக்குனர் ஹரி வைத்த குறி தவறிவிட்டது.

இறுதியாக சன் பிக்சர்சும் கை விட்டுவிட வேங்கை வெங்காயம் ஆகிவிட்டது.
பாவம் தனுஷ்..
ஆனால் இதே படத்தை சிலவேளை ஹரி தனது ஆஸ்தான நடிகர் சூரியாவை வைத்து இயக்கி இருந்தால் சிலவேளை சிங்கம் மாதிரி பிய்த்துக்கொண்டு ஓடியிருக்கும்.

ஹரியின் வழமையான படங்களில் இருக்கும் பல விஷயங்கள் வேங்கையிலும் இருக்கின்றன.

அரிவாள்
கிராமம்
தந்தை சென்டிமென்ட்
புத்தி சாதுரியத்தனமான ஹீரோ
மொக்கை + முரட்டு வில்லன்
பறக்கும் வெள்ளை சுமோக்கள்
ஆய் ஊய் ஏய் எனக் கத்தும் அடியாட்கள்
கூட்டுக் குடும்பம்
பிரகாஷ் ராஜ்


வேங்கையில் பிடித்த விஷயங்கள்...

பாடல்கள்.. முக்கியமாக "உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான் இந்தப் புள்ளை.." - அருமையான காட்சியமைப்பும் இசையும்.
அதுசரி இந்தப் பாடல் காட்சி இலங்கையில் எடுக்கப்பட்டதா என்று யாராவது சொல்ல முடியுமா?

காலங்காத்தால பாடல் கார்த்திக்கின் குரலில் கேட்க இனிமையாக இருந்தது போல பார்க்கவும் தமன்னாவால் கண்கொள்ளா விருந்து..
இந்தப் பாடல் காட்சியில் வரும் தமன்னா சூடு கிளப்புகிறார்.
கார்த்திக்கு நன்றி - தமன்னாவை எமக்கு விட்டு வைத்ததற்கு

சில சமயோசிதக் காட்சி அமைப்புக்கள்
ஹீரோ - வில்லனுக்கு ஆப்பு வைக்கும் இதே போன்ற காட்சிகளை ஹரியின் முன்னைய சாமி, ஆறு, சிங்கம் போன்ற படங்களில் பார்த்திருந்தாலும் சுவாரசியம் குன்றாமல் தந்திருப்பது


வேங்கையில் கடுப்பேற்றிய கருமங்கள்

பல படங்களில் பார்த்த அதே விதமான பாத்திரங்களில் ராஜ்கிரணும், பிரகாஷ் ராஜும்.
அற்புதமான இரு நடிகர்களை நாசமாக்குகிறார்களே..

தந்தை என்றவுடன் தெய்வமாக உருகும் மகன்.. தந்தைக்காக கொலையும் செய்யத் துணியும் மகன்.
ச்சப்ப்பா.. ரொம்ப ஓவருப்பா..

 கஞ்சா கருப்புவின் அசிங்கமான, ஆபாசமான சிரிப்பே வராத எரிச்சலூட்டும் காட்சிகள்.
ஹரியின் நகைச்சுவை ரசனை எங்கே போனது?

தனுஷ் அறைந்தது போல கையில் கிடைத்தால் நாலு அறை விடவேண்டும் போல இருந்தது அந்த பெண்டு எடுக்கும் காட்சிகள்.

லொஜிக்கே இல்லாத அரிவாள் வீச்சு, சண்டை, துரத்தல் காட்சிகள்.
ஹரியின் வழமையான திரைப்படங்களில் இதே மாதிரியான காட்சிகள் வந்தாலும் திரைக்கதையின் வேகம் அதை மறக்கடித்துவிடும். இங்கே துருத்திக்கொண்டு இருக்கின்றன.

சில காட்சிகளில் முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டத் தெரியாமல் விழிக்கும் தமன்னா.

அதே தமன்னாவை வைத்துத் திருப்பம் கொண்டுவர நினைத்த ஹரியின் பழைய ஐடியா..

ரிப்பீட்டுத் தனமாக பிரகாஷ் ராஜ் காட்டும் அக் ஷன்கள் சலிப்பு.. வில்லன் பக்கம் வெயிட் குறைவு.


கவனித்த சில விஷயங்கள்...
தமன்னாவுக்கு பாவாடை சட்டை பெரிதாகப் பொருந்தவில்லை.
தனுஷுக்கு தமன்னாவின் காதலன் பாத்திரம் பெரிதாக ஒட்டவில்லை.

அரிவாளும் ஆவேசமும் கூட தனுஷுடன் சில நேரம் நகைச்சுவையாக உள்ளது.
ஆடுகளத்துக்குப் பின் இப்படியொரு அதலபாதாளமா?

தனுஷின் தங்கையாக வருபவர்.. கவனிக்க வைத்தார்.
மெகா சீரியல்கள் எதிலேயோ பார்த்த ஞாபகம்.

அடிக்கடி திரையில் காண்பிக்கப்படும் தினகரன். சன் டிவிக்கு விற்க முனைப்பு எடுத்தும் பலிக்கவில்லையோ?

தன் பெயர் போடப்படும் இடத்திலிருந்து தொடர்ச்சியாக அடிக்கடி காண்பிக்கப்படும், சொல்லப்படும் கோவில்கள், கடவுள்களின் பெயர்கள்.. ஹரி கடவுளை நம்பியதை விடத் தன் கதையைக் கொஞ்சம் நம்பியிருக்கலாம்.

"கோவக்காரன் அரிவாள் எடுத்தா தான் தப்பு..காவக்காரன் அரிவாள் எடுத்த தப்பில்ல.." எங்கிருந்து தான் இப்படி வசனங்கள் வருதோ?

இந்தப் படத்துக்கு இவ்வளவு போதும் என்று நினைத்தாலும், இப்படியான படங்களுக்கேற்ற விதமாக விறுவிறுப்பைத் தந்துள்ள ஒளிப்பதிவாளர் வெற்றிக்கும், தொகுப்பாளர் V.T.விஜயனுக்கும் பாராட்டுக்களை வழங்கியே ஆகவேண்டும்.

தனது கதைகளை மேலும் தெளிவாகத் தெரிவு செய்ய தனுஷ் மீண்டும் சிரத்தை எடுக்கவேண்டும் என்பதற்கும், தாதாக் கதைகளை மட்டும் எடுப்பதில் இருந்து மாறவேண்டிய காலம் வந்தாச்சு என்பதை இயக்குனர் ஹரி உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்குப் பாடம் தான் வேங்கை படம்.

சிறுத்தையே சீறிய போது, வேங்கை படுத்தது எனக்குக் கவலையே...
வேங்கை என்ற பெயர் எனக்குப் பிடித்தது.

வேங்கை - வெத்து வேட்டு

Post a Comment

26Comments

Please Select Embedded Mode To show the Comment System.*