July 27, 2011

கதை சொல்லப் போறேன்....


கடந்த வெள்ளி விடியல் நிகழ்ச்சியை கதை சொல்லும் பாடல்களுடன், நேயர்களுக்கு மனது மறக்காத கதைகளையும் கேட்டு நடத்தி இருந்தேன்..
சிறுவயதில் கேட்ட, ரசித்த கதைகளைப் பல நேயர்கள் பகிர்ந்திருந்தார்கள்..
அம்புலிமாமா கதைகள், தெனாலி ராமன், பாட்டி-வடை-காக்கா- நரி கதை, முயல் - ஆமை கதை, அக்பர் - பீர்பால், தெனாலி ராமன், மகாபாரதம் என்று சிறு வயதுக் கதைகள் தான் ஏகப்பட்டவரால் சந்தோஷமாக நினைவுகூரப்பட்டிருந்தன..

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நம்ம பதிவர் யோகா ஒரு நெகிழ்வான கதையை ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தார்....


ஒரு தந்தையும் மகளும் நடந்து செல்லும் வழியில் (தெய்வத்திருமகள் வந்த பிறகு - முன்பு அபியும் நானும் தந்த அதே Feeling, இந்த தந்தை-மகள் உறவு ஒரு trend ஆகி இருக்கிறது) ஒரு தொங்குபாலத்தைக் கடக்கவேண்டி வருகிறது. 


அதன் மீது நடக்கும்போது மகள் பயந்துவிடுவாள் என்றெண்ணி, "என் கையைப் பிடித்துக்கொள்" என்கிறார் தந்தை.
"இல்லை அப்பா.. நீங்கள் என் கையைப் பிடிச்சுக் கொள்ளுங்கோ" என்கிறாள் அந்த 'நிலா'.
"நீ என் கையைப் பிடிப்பதற்கும், நான் உன் கையைப் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?" கொஞ்சம் ஆச்சரியமாகக் கேட்டார் தந்தை.


"அப்பா, நாங்கள் பாலத்தில் நடக்கும்போது, தற்செயலாக விழுந்துவிட்டால், நான் உங்க கையைப் பிடித்திருந்தால் உங்க கையை நான் விட்டிட்டால் விழுந்திடுவேன்.. ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்திருந்தால் எப்பிடியும் விடமாட்டீங்க"
நம்பிக்கையோடு சொன்னாள் அந்த மகள்.

இந்த நம்பிக்கை தானே உறவுகளையும், நட்புகளையும் இணைத்து உலகை ஓட்டிக் கொண்டிருக்கிறது.
உறவுகள் ஒன்றையொன்று விடாது என்பதும், நாம் பிடிகளைத் தவறவிட்டாலும், அந்த உறவுகள் எம்மை விட்டு விலகாது என்ற நம்பிக்கை தானே வாழ்க்கை.

கதைகள் சொல்வதிலும் கேட்பதிலும் சிறுவயது முதலே அதீத ஈடுபாடு.. இதனால் தான் விடியலில் கதை சொல்லி சொல்லி காலத்தை ஓட்ட முடிகிறது. கஞ்சிபாயுடன் காலத்தை ரசிக்கவும் முடிகிறது.. பதிவுகளிலும் பொழைப்பைக் கட்ட முடிகிறது.

ஆனால் நல்ல கதை சொல்லியாக நான் இருப்பது இப்போது தான் அவசியப்படுகிறது..
(வானொலியில் நான் ஓரளவு நல்ல கதை சொல்லியாக நேயர்களால் ஏற்கப்பட்டிருக்கிறேன் என நம்புகிறேன்.. ஆனால் பதிவுகளில் எழுதும்போது அதே சுவாரஸ்யத்தைக் கொண்டுவருவது கொஞ்சம் கஷ்டம் என உணர்ந்தும் இருக்கிறேன். )
முன்பு பலருக்கும் கதை விட்ட, கதை சொல்லிக் கடத்திய காலம் மலையேறி, இப்போது சொல்லும் கதை செல்லுபடியாகவேண்டிய கட்டாய காலம்.
அதான்.. என் வீட்டுப் பெரியவர் ஹர்ஷுவுக்குக் கதை கதையாக சொல்லியாகவேண்டிய கட்டாயம்.

அந்தக் காலத்தில் எல்லாம் எங்கள் அப்பா,அம்மா சொல்கின்ற பாட்டி, வடை, நரி, முயல், பூனை, நாய் கதைகளை அப்படியே கேட்டுவிட்டு உம் போட்டு, தலையாட்டி பின் தூங்கி விடுவது தானே வழக்கம்..
ஆனால் இந்தக் காலம் அப்பப்பா.. நம்ம பாடு பெரும் கஷ்டம்..

ஹர்ஷு என்னிடம் சொல்லும் மிருகங்களை வைத்துத் தான் கதைகளை நான் உருவாக்க வேண்டி இருக்கும்..
அவன் கார்ட்டூன்களில் பார்த்த, படங்களில் கேள்விப்பட்ட மிருகங்களை எல்லாம் எங்கள் தூக்க நேரத்தில் கொண்டு வந்துவிடுவான்..

ஒரு நாள் டைனோசர் வரும்.. இன்னொருநாள் நீர் யானை வரும்.. இன்னொரு நாளோ அவனுக்கும் எனக்கும் பிடித்த Zebra - வரிக்குதிரை வரும்..
நானும் மனைவியும் நாங்கள் அறிந்த கதைகளில் இவற்றைப் பிரதியிட்டு கொஞ்சம் புதிய முலாம் பூசி ஒப்பேற்றிவிடுவோம்..

கோடரிக் கதை எல்லாம் கொஞ்சம் என்ன நிறையவே புதுசாக்க வேண்டி இருக்கும்..
அத்துடன் நவீன சாதனங்கள், Laptop, Mobiles, planes, etc.. நவீன விஷயங்கள் எல்லாம் சேர்த்து தாளிக்க வேண்டி இருக்கும்..
இடையிடையே "தெய்வத்திருமகளில்" நிலா கேட்டவை போன்ற குறுக்குக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்...

பத்து, பதினோரு மணிக்கு ஆரம்பிக்கும் கதை கேட்கும், சொல்லும் படலம் சில சமயம் நள்ளிரவு தாண்டியும் செல்லும்.. எனக்கோ அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு எழும்பவேண்டும்..
வேலை அலுப்பும் தூக்கக் கலக்கமும் கண்ணை சுழற்றினாலும் அவனை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக ஏதோ ஒரு கதையையாவது சொல்லிவிட்டே தூங்க செல்வது வழமை....

சிலவேளை சினிமாக் கதைகளை மிருகங்களை வைத்துப் பிரதியிட்டும் சமாளிப்பதுண்டு.. அதிலே குரங்கு தனுஷ் போல அரிவாள் எடுக்கும், சிங்கம் சூரியா போல பஞ்ச் பேசும்.. குதிரை விஜய் போல வில்லனுக்குப் பாய்ந்து பாய்ந்து அடிக்கும்..
ஹர்ஷுவுக்கு இப்படியான கதைகள் என்றால் பாகங்கள் பல போனாலும் கவலை இல்லை.
ஆனாலும் கடைசியாக ஒரு நீதி சொல்லி முடித்துவைப்போம்..

ஒரு நாள் திடீரென்று அதிகாலை 2 மணிபோல தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி "அப்பா முயல் கதை சொல்லுங்கோ" என்றான்..
கண்ணைத் திறக்க முடியாத அசதியுடன், ஏதோ ஒரு முயல் கதை சொல்லிக் கொண்டிருந்தேன்.. அந்தக் கதையில் முயல் ஒரேஞ் சாப்பிடுவதாக உளறிவிட்டேன்..
அந்த நேரத்திலும் அலெர்ட்டாக "அப்பா ரபிட் ஒரேஞ் சாப்பிடாது.. கரட் தான் சாப்பிடும்" என்றவன் குட் நைட் சொல்லிவிட்டான்..
அதுக்குப் பிறகு எனக்கு தூக்கம் போச்சு.
அட முயல் ஒரேஞ்சைத் தேடித் போகுதே... ஹர்ஷுவிடம் இதைக் காட்டத் தான் வேணும்..

இன்னொரு நாள் நல்ல அசதியாக மூவரும் தூங்கத் தயார்.. மனைவி காய்ச்சல் என்று படுத்தவுடன் தூங்கி விட்டார், எனக்கும் கண்கள் சொருகிக் கொண்டு வருகையில், "அப்பா எனக்கு டைனோசர், ஜிராப்(Giraffe - ஒட்டக சிவிங்கி) கதை சொல்லுங்கோ"
ஹர்ஷுவின் குரல்..
வாயசைக்கவே சோம்பலாக இருக்கும் நேரம் கதையா?
கடுப்பைக் காட்டிக் கொள்ளாமல்.. கண்ணை மூடிக்கொண்டே..
"ஒரு ஊரில ஒரு டைனோசரும் ஜிராபும் இருந்துதாம்.. ஒரு நாள் டைனோசருக்கு பயங்கரப் பசியாம்.. ஜிராபைப் பிடிச்சுத் திண்டுட்டுதாம்.. கதை முடிஞ்சுதாம்"



அவன் தன் மழலை மனதுக்குள் எப்படித் திட்டினானோ தெரியவில்லை.. "ஐயோ அப்பா எனக்குக் கதை வேணும்.. இது கதை இல்லை" என்று கொஞ்சம் முணுமுணுத்தான்.. தூங்கி விட்டான்..

இதுக்கு பதிலடி இவ்வளவு சீக்கிரம் விழும் என்று நான் நினைக்கவில்லை..

அண்மையில் ஒரு நாள் இரவு வழக்கம் போல அவன் என்னிடம் கதை கேட்க, "இண்டைக்கு ஹர்ஷு எனக்கொரு கதை சொன்னால் தான் நான் சொல்வேனாம்"  என்று சொன்னேன்.
வழமையாக முடியாது என்று சொல்பவன் " ஓகே அப்பா" என்று உற்சாகமாகத் தொடங்கும்போதே நான் நினைத்திருக்கவேண்டும்..

"ஒரு ஊரில் ஒரு சிங்கமும், குதிரையும் இருந்துச்சாம்.. சிங்கத்துக்குப் பசி வந்துதாம்... குதிரையைக் கடிச்சு சாப்பிட்டுதாம்.. கதை முடிஞ்சுது.. இப்ப நீங்க பெரீய கதை சொல்லுங்கோ"

ம்ம்ம்ம்.. இபோதும் இந்தக் கதைகள் இரவுகளில் எங்கள் வீடுகளில் நடந்துகொண்டு தானிருக்கு..
கதைகளின் ஸ்டொக் முடியாது என்ற நம்பிக்கையுடன்..
கொஞ்ச நாளில் கஞ்சிபாய் கதைகளையும் சொல்ல ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.

13 comments:

anuthinan said...

//அண்மையில் ஒரு நாள் இரவு வழக்கம் போல அவன் என்னிடம் கதை கேட்க, "இண்டைக்கு ஹர்ஷு எனக்கொரு கதை சொன்னால் தான் நான் சொல்வேனாம்" என்று சொன்னேன்.
வழமையாக முடியாது என்று சொல்பவன் " ஓகே அப்பா" என்று உற்சாகமாகத் தொடங்கும்போதே நான் நினைத்திருக்கவேண்டும்..

"ஒரு ஊரில் ஒரு சிங்கமும், குதிரையும் இருந்துச்சாம்.. சிங்கத்துக்குப் பசி வந்துதாம்... குதிரையைக் கடிச்சு சாப்பிட்டுதாம்.. கதை முடிஞ்சுது.. இப்ப நீங்க பெரீய கதை சொல்லுங்கோ//

தலைவர் ஹர்சு கலக்கல் !!

அண்ணே விடியலில் நீங்கள் சொல்லும் கதையை கேட்பதில் இப்போது என் அம்மாவும் சேர்ந்து கொண்டு உள்ளார்.!!!!

சின்ன வயதில் கதை கேட்பது பிடிக்கும்....! இப்போது எல்லாம் தேடி படிக்க பிடிக்கும். :)

Vathees Varunan said...

நல்ல பதிவு அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள் அண்ணே.. எங்கள் நண்பன் ஹர்சுவுக்கு கஞ்சிபாய் கதைகளை சொல்லி மகழ்ச்சிப்படுத்துகிறேன் என்று இப்பவே மனைவி கையால அடிபடவேணும் என்கின்ற உண்மைகளை மனசில பதியவைக்கவேணாம் :)

Mohamed Faaique said...

சின்ன பசங்க கிட்ட பல்பு வாங்காதவங்க ரொம்ப குறைவு....

நிரூபன் said...

பதிவர் யோகா அனுப்பிய கதை: நம்பிக்கையிற்குச் சான்றாக அமைந்துள்ள ஒரு தத்துவக் கதை.

இந்தக் காலச் சுட்டிகளைச் சமாளிக்கப்படும் அவஸ்தையினை, ரசித்துப் பதிவேற்றியிருக்கிறீங்க.
//"அப்பா ரபிட் ஒரேஞ் சாப்பிடாது.. கரட் தான் சாப்பிடும்" என்றவன் குட் நைட் சொல்லிவிட்டான்..
அதுக்குப் பிறகு எனக்கு தூக்கம் போச்சு.//
இதனை நினைத்து நானும் இப்போது சிரிக்கிறேன் பாஸ்.
சின்னப் பசங்களை இந்தக் காலத்தில் ஏமாற்ற எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது என்பதனை, காமெடியாகச் சொல்லியிருக்கிறீங்க.
ரசிக்க வைக்கும் மழலையின் உணர்வுகளைத் தாங்கி வந்த சுவையான பதிவு.

சமுத்ரா said...

நல்ல பதிவு

Sanjay said...

"ஒரு ஊரில் ஒரு சிங்கமும், குதிரையும் இருந்துச்சாம்.. சிங்கத்துக்குப் பசி வந்துதாம்... குதிரையைக் கடிச்சு சாப்பிட்டுதாம்.. கதை முடிஞ்சுது.. இப்ப நீங்க பெரீய கதை சொல்லுங்கோ"//

அட்ரா சக்கை, அட்ரா சக்கை..!! :D :D

Read this Very famous old article Bro, "Father Forgets"
http://eqi.org/father_forgets.htm

ஆகுலன் said...

முதலாவது கதை எனக்கு பிடித்தது...

கன்கொன் || Kangon said...

:-)

யோ வொய்ஸ் (யோகா) said...

எனது கதையை வானொலியில் சொல்லியதற்கும், இங்கு பிரசுரித்ததற்கும் நன்றி..

நம்ம பிரண்ட் ஹர்சு இன்னும் கொஞ்ச நாளில் விடியலில் சொல்லதக்க பல கதைகள் சொல்லலாம், காரணம் சிறுவர்களின் உலகில் ஏராளமான கதைகள் சஞ்சரிக்கின்றன..

யோ வொய்ஸ் (யோகா) said...

நீங்கள் லிங்க் கொடுத்திருக்கும் எனது பதிவுபக்கமானது முன்னர் நான் பதிவெழுதி பின்னர் ஹக் செய்யப்பட்டது, இப்போது நான் பாவிப்பது yovoicee.blogspot.com (இப்போ எங்கடா பதிவெழுதுற என கேட்க வேண்டாம்)

Unknown said...

சிறு குழந்தைகள்.எப்பவுமே சுட்டிதான்.

Ragavan said...

ஒரு பெரிய சிங்கமும் ,குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்துச்சாம். அந்த நேரம் ஒரு மான் ரொம்ப ஃபாஸ்ட்டா ஓடிப் போச்சுதாம்.
-
அதைப் பார்த்து குட்டி சிங்கம் பெரிய சிங்கத்துக்கிட்டே, என்னம்மாஇது,
இவ்ளோ ஃபாஸ்ட்டா போகுதுன்னு கேட்டுச்சாம்..!
-
அதுக்கு பெரிய சிங்கம் சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சாம்
‘இதுக்குப் பேருதான் ‘ஃபாஸ்ட் ஃபுட்

ஷஹன்ஷா said...

ஹர்சுவின் குறுக்கு கேள்வியும் பதிலடி கதையும் கலக்கல்...

கதைகள் கேட்கவும் படிக்கவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

கதைகளை மையப்படுத்திய விடியல் நிகழ்ச்சியை மீண்டும் எதிர்பார்க்கின்றேன்..

அப்படியே ஒரு குட்டிக்கதை..
ஒரு ஊரில ஒரு நரி.. அதோட கதை சரி...!!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner