இது முதன் முதலாக நான் தருகிற புனைவு.
இந்தப் புனைவுக் கதையிலே வரும் பாத்திரங்கள்,சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே,யாரையும் குறிப்பிடுவன அல்ல என்று நான் அடித்து சொன்னாலும் நீங்கல்லாம் நம்பவா போறீங்க..
சரி சரி..
புனைவுக்குப் போகலாம் வாங்க..
மழை சிறு சிறு தூறல்களாக கொழும்பு நகரின் புழுதி வீதியை ரம்மியமாக நனைத்துக் கொண்டிருக்கும் ஒக்டோபர் மாத மாலைப் பொழுதைக் கையில் உள்ள சூடான கோப்பியுடன் ஜன்னல் தனது அறையின் வழியாக ரசித்துக் கொண்டிருந்தான் வயூ. அவனது கண்ணாடியின் மேலும் ஒரு சில துளிகள் பட லண்டன் ஸ்னோ ஞாபகத்துக்கு வந்தது. இப்போது அங்கேயும் பனி,குளிர் தொடங்கி இருக்கும் என நினைத்துக் கொண்டான்.
மாலை மயங்குவது வயூவுக்கு இப்போதெல்லாம் பிடிப்பதில்லை. கொழும்பிலே மாலை வேளைகள் எல்லாம் தனக்கு வேதனை தரவே வருவது போல வயூ நினைத்துக் கொள்வான்.
லண்டன் நகரத் தேம்ஸ் நதிக்கரையில் தன் கடைசியான காதலி மியூசிக்காவை அவளுக்குத் தெரியாமலே டாவடித்துத் திரிந்த மாலைகளும், இரவிரவாக அவளுக்காக ஏங்கி ஏங்கி வடித்த கவிதைகளுமாக மனது கனக்கும்.
ஆங்கிலப் பாடல்களில் மியூசிக் என ஆரம்பிக்கும் அத்தனை பாடல்களுமே தனக்கும் அவளுக்குமாக எழுதப்பட்டதாக உணர்வதில் தனியான இன்பம் வயூவுக்கு.
மியூசிக்கா திரும்பி ஒரு தடவை பார்த்தாலே அன்று நாள் முழுவதும் தூக்கம் வராது.. அவள் தன் பக்கம் திரும்பித் தும்மினால் கூட அது 'ஐ லவ் யூ' எனக் கேட்பதாக நினைத்துக் கொள்வான்.
மீதிக் கதையினுள் ஆழமாக செல்லுமுன் வயூ யார்? அவன் ஏன் கொழும்பில் இருந்து இப்போது வேதனையில் உழல்கிறான் என அறிய உங்களுக்கு இருக்கும் ஆவலைத் தீர்ப்பது என் கடமையல்லவா?
இந்தப் புனைவின் நாயகன் வயூவின் முழுப் பெயர் மந்தி வயூ.. உங்களில் பெரும்பாலானோருக்கு மந்தி வயூவைத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால் குற்றமும் இல்லை.
காரணம் லண்டனைப் பிறப்பிடமாகக் கொண்ட மந்தி வயூ ஒரு மிகப் பிரபல,மூத்த ஆங்கிலப் பதிவர்.ஆங்கிலப் பதிவுகள் வாசிக்கும் உங்களில் சிலருக்கு அவரைத் தெரிந்திருக்கலாம்.
தெரியாதோருக்கு - மூத்த பதிவர் என்றவுடன் இவர் வயதை எக்கச்சக்கமாகக் கூட்டிப் பார்த்துத் தப்புக் கணக்குப் போட்டிடாதீர்கள்.
பாலகனாக இருக்கும்போதே பதிவுலகத்துக்குள் நுழைந்தவராதலால் எப்போதுமே மனதில் இளைஞராகவே இருக்கிறான் வயூ.
அடிக்கடி வரும் இன்ஸ்டன்ட் காதல்கள் கன்னத்தோரம் வரும் நரைகளையும்,முன்னந்தலை முடி உதிர்தலையும் தாண்டி மனதை இளமையாக வைத்திருப்பதாக மனசுக்குள் சொல்லிக் கொள்வான்.
தானுண்டு, தன் ஆங்கிலப் பதிவுகள் உண்டு,தன்னையே அடிக்கடி கலாய்த்து சூப் வைக்கின்ற நண்பர் வட்டம் உண்டு,தனக்குத் தெரிந்த கொஞ்சம் IT உண்டு, இடையிடையே அடிக்கடி வந்து போகும் கல கல ஒரு தலைக் காதல்கள் உண்டு என வாழ்ந்து வந்த லண்டன் வயூவுக்கு அவன் கண்டிப்பான அப்பா ரூபத்தில் வந்த கட்டாய நாடுகடத்தல் தான் கொழும்புப் பயணம்.
ஆமாம் சக்கரவர்த்தியின் ஆட்சியில் செழிப்பான,அபிவிருத்தி கண்ட நாடாக இரு ஆண்டுகளில் மாறிப்போன இலங்கையின் உயர் கல்வித்தரத்தின் புகழும் பெருமையும் கேள்விப்பட்ட தந்தையார் லண்டனில் இருந்து வயூ உருப்படப் போவதில்லை என மேலதிக கல்விக்காக கொழும்புக்கு அனுப்பிவைத்துவிட்டார்.
வீட்டில் செல்லப் பிள்ளையான வயூக்கு இதில் துளியளவும் விருப்பமில்லாவிட்டாலும்,டாடி சொல் மிக்க மஜிக் இல்லை என்பதால் (உண்மையில் மாட்டேன் என்று சொன்னால் அவரது லெதர் பெல்ட் பேசும் என்ற பயமே முதல் காரணம்) உடனே ஓகே சொல்லிவிட்டான்.
இப்போது கொழும்பிலே பட்டப்படிப்பு படித்துக் கொண்டே இரவில் மேலதிக செலவுக்காக பிரபல சைவக்கடை ஒன்றில் (பந்து கபேயோ, பழ நாகமோ எதுவோ ஒன்று) பகுதி நேர வேலையும் பார்க்கிறான்.
லண்டனில் உள்ள நண்பர்களோடு மின்னஞ்சலியோ, ஸ்கைப்பியோ,இல்லாவிட்டால் நம்மைப் போல பேஸ் புக்கியோ தன் பிரிவுத் துயர்களைப் பெருமூச்சோடு போக்கிக் கொள்வான்.
இவனது தனிப்பட்ட வித்தியாசமான ரசனைகள் தெரியுமாதலால் நண்பர்கள் அடிக்கடி 'புதிய காதல் ஏதாவது இருக்கா?' என்று கேட்பது வழமையானது.
காரணம் வயூ லண்டனில் காதல் இளவரசனாக அறியப்பட்டவன்.
ஆனால் அவை அநேகமாக ஒரு தலைக் காதலாக அமைந்தது தன் விதி என்று சொல்லி தன்னை நொந்து கொள்வான் வயூ.
அவனது சில காதல்கள்..
அரச குடும்பப் பெண் ஒருத்தியைக் காதலித்தான்.. அவளுக்குமிவன் காதல் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் என்ன காரணமோ அவசரமாக அவள் யாரோ ஒருத்தனைக் கரம் பிடித்தாள்.
பிரபல இலக்கிய எழுத்தாளர் டோரோத்தியுடனான இவன் காதல் ரசனை+ரசிப்புக்களுடன் ஊமையாகவே முடிந்தது.
சாதாரண ஒருத்தியாக இருந்த கெனி ப்ளூ என்ற பெண் இவனின் ஒரு தலைக் காதலின் பின்னர் அதன் ராசியோ என்னவோ பிரபல மொடல் ஆக மாறிவிட்டாள்.
மியூசிக்காவுடனான இவனின் ஒருதலைக்காதல் செல்போன்கள் சிலவற்றின் சிக்னல்கள் போலவே சிக்கலாகிக் கிடக்கிறது.
கிடைக்குமா கிடைக்காதா என்பது வருங்காலம் சொல்லும் வரலாறு.
ஆனால் இந்த அப்பாவி வயூவையும் ஒருத்தி காதலித்தாள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
இன்னும் பலர் துள்ளி விழும் இவன் ஆங்கில எழுத்துக்களைக் காதலித்தாலும் ஆளைக் காதலித்தார்களா என்று யாருக்குமே தெரியாது. கூகிள் ஆண்டவருக்கு சில வேளை தெரிந்திருக்கலாம்.
வயூவை உயிருக்கு உயிராகக் காதலித்த பெண்
அழகான ஒரு பிரபலம்..
ஜூப்பா கான்.
வயூவின் வழமையான தெரிவுகளை விட இவள் கொஞ்சம் அழகு தான்.
தானாக முன் வந்த இவளை வயூ தள்ளி வைக்க என்ன காரணம்?
'விட்டுக் கொடுத்துவிட்டேன்' என்று இன்றும் சொல்கிறான் 'ரொம்ப நல்லவனான' வயூ.
ஜூப்பாவைக் காதலித்த சிலருக்காகவும்,ஜூப்பா காதலித்த பலருக்காகவும் வயூ செய்த தியாகமே அது என சிலருக்கே தெரியும்.
இப்போது மியூசிக்காவுக்காக தொலைவிலிருந்து மனதுள் இசை பாடிக் கொண்டிருந்தாலும் கிட்டுமோ கிட்டாதோ கதை தான்.
ஆனாலும் கொழும்பு நகரில் கற்கும்,வேலை செய்யும் இந்தக் கால கட்டத்திலும் காதல் மனம் கண்கள் கொண்டு நோட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறது.
லண்டனுக்குத் தான் கொண்டு செல்லும் தன்னுடைய தேவிக்காக..
பிந்திய தகவலின்படி நரேந்திர மோடியின் உறவுக்காரப் பெண்ணொருத்தியின் நட்புக்காக மோடி மஸ்தான் வேலைகளில் இறங்கியுள்ள வயூ,தன பெயரையும் மந்தி மோடி என்று மாற்றிக் கொள்வது பற்றி மலையாள ஜோசியர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டிருப்பதாக அவரது நட்புக்குரிய லண்டன் பதிவர்கள் கிசுகிசுக்கிறார்கள்.
தென்னந்தோப்புக்கள் பலவற்றின் உரிமையாளரின் மகளான அந்த குஜிளிக்கு முன்னால் லலித் மோடி தன் அப்பாவின் பிசினெஸ் பார்ட்னர் என்றும், ருசி மோடி தன் தூரத்து சொந்தம் என்றும் சில,பல பீலாக்கள் விட்டு,பிட்டுக்கள் இட்டு நோட்டம் விடுவது வயூவின் அண்மைக்கால பொழுதுபோக்காம்.
இப்போதெல்லாம் இரவுகளில் உணவகங்களில் பணத்தை எண்ணுகிறானோ இல்லையோ நம்ம ஹீரோ மனசுக்குள் மோடியின் தென்னந்தோப்பில் இருந்து வரப்போகும் தேங்காய்களையும்,சிரட்டைகளையும் கணக்குப் போட்டு சுகம் காணுகிறார்.
கொஞ்சம் அவதானித்துப் பாருங்கள்.. அவரின் காதுக்குள் இரையும் Head phoneஇல் ஒலிக்கும் பாடல்..
Picking coconuts from the coconut tree -eh
nah, nah, nah, nah-nah-nah-nah, nah nah nah
bIggest coconuts you ever seen'
nah nah nah nah nah nah
அடடா மறந்தே போனேனே..
இன்று நம் நண்பர்,பதிவுலகின் சிரேஷ்ட பதிவர்களில் ஒருவர் வந்தியத்தேவனுக்குப் பிறந்தநாள்.
சொ.செ.சூ சக்கரவர்த்தி வந்தியத்தேவனுக்கு எனதும்,எமதும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
மாமா என்று வாயார நாம் அழைக்கும்போதெல்லாம் மனமார தானாக ஆப்புக்களில் ஏறி மறந்து எம்மையெல்லாம் மனமகிழச் செய்கின்ற
எங்கள் மாமா,என்றும் இளமையுடன் இதே பச்சிளம் பாலகனாக மனதில் மகிழ்வுடன் இவ்வாண்டில் இனிக்கும் செய்திகள் எமக்கும் தந்து உயர்வு காண நட்புடன் வாழ்த்துகிறேன்.
பி.கு + மு.கு
(பிற்குறிப்பு+முக்கிய குறிப்பு)
புனைவு வேறு,வாழ்த்து வேறு..
நம்பவா போறீங்க.. ஆனால் நம்பித் தான் ஆகணும்.
மாமா வந்தி, நீங்க நம்பிறீங்க தானே? அது போதும் எனக்கு..