பாடல்களுடனேயே ஒரு நாளின் பல மணிப் பொழுதுகளைக் கழிப்பவனாதலால்,பல பாடல்கள் மனதுக்குள் இலகுவாகக் குடியேறுவதும்,பல பாடல்கள் கொஞ்சக் காலமாவது உதடுகளில் முணுமுணுக்க ஏறி உட்காருவதும் என் ஒலிபரப்பு வாழ்க்கையில் சகஜம்.
இந்த இரண்டு மூன்று மாதங்களில் நான் அடிக்கடி முணுமுணுத்த,விரும்பி ரசித்த ஐந்து பாடல்களை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
அதற்காக இது தான் என் ரசனை என்று யாரும் முத்திரை குத்த முடியாது.
இவையும் என் ரசனை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
காரணம் வானொலியில் அதிகமாக மற்றவர்களால் விரும்பிக் கேட்கப்படும்,ஒலிபரப்பாகும் பாடல்களை விட வேறு இனிமையான(என்னைப் பொறுத்தவரை) பாடல்களைப் பிடிப்பது என் வழமை.
இவற்றுள் உங்களுக்குப் பிடித்த பாடல்களும் இருக்கலாம்..
1.இரும்பிலே ஒரு இருதயம் - எந்திரன்
மதன் கார்க்கியின் விஞ்ஞானமும் ஒரு தலைக் காதலும் கலந்த வரிகள் மனதைத் தொட்ட அளவு, A.R.ரஹ்மானின் மந்திர,எந்திர இசையும் பச்சென்று என் மனதில் கேட்ட முதல் தடவையே ஒட்டிக் கொண்டது.
இசைப் புயலின் குரலிலும் எனக்கு ஒரு தனியான ஈர்ப்பு.. எவர் போலவும் இல்லாத ஒரு குரல்.
இந்தப் பாடலிலும் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது.
இசையிலும் ஒரு நவீனம்,துடிப்பு.. ஒரு எந்திரனுக்கு காதல் வந்தால்,உணர்வுகள் வந்தால் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் குறியீட்டு இசைக் கருவிகளின் கையாள்கை என்று கலக்கி இருக்கிறார் ரஹ்மான்.
Kash and Krissy என்ற அந்த இரு துடிப்பான பெண் குரல்களும் பாடலுக்கு இன்னொரு கிக் FEELING கொடுக்கின்றன.
பாடலின் முக்கிய உயிரான வரிகளில் எதைப் பிடித்துள்ளது என சொல்வது???
பாடலின் ஆரம்பத்தில்..
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
என்று அறிவியலையும் காதலையும் இணைத்தது முதல்,
கூகிள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணாக் காதல்
பெண் பூவே உன்னோடு
என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் எஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
இப்படியான வரிகளில் ரசித்து சிலாகிக்க வைத்து,குறும்பாகவும் காதலின் விளையாட்டுக்களையும் எந்திரன் திரைப்படத்தின் ஒரு வரிக் கதையையும் இந்தப் பாடலின் வரிகளுக்கிடையில் ஊடு பாய விடுகிறார் மதன் கார்க்கி.
தொட்டுப் பேசும் போதும்
ஷோக் அடிக்கக் கூடும்.
காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் battery தான் தீரும்
என்று காதலியின் தேவை சொல்பவர்,
உன்னாலே தானே – என் |
விதிகளை மறந்தேன் |
ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போக சொல்வாயா?
என்று எந்திரக் காதலையும் கதையின் திருப்பத்தையும் தொடுகிறார்.
உயிரியியல் மொழிகளில் எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே
என்று எந்திரன் ரோபோ தன் பெருமைகளையும் தன்னைக் காதலிப்பதால் கிடைக்கும் அனுகூலங்களையும் பீற்றிக்கொள்ள,
காதலிக்கப்படும் பெண்ணோ வெகு சிம்பிளாக அதனையும் அதன் காதலையும் தட்டிவிட்டு நிராகரிக்கிறாள்..
அவள் சொல்லும் காரணங்கள் நிறைய ஆங்கிலம்+கொஞ்சம் கொஞ்சும் தமிழில் ரப்(RAP)பாக வருகிறது.
Hey… Robo… மயக்காதே …
you wanna come and get it boy
Oh are you just a robo toy
I don’t want to break you
even if it takes to
kind of like a break through
you don’t even need a clue
you be my man’s back up
i think you need a checkup
i can melt your heart down
may be if you got one
we doing that for ages
since in time of sages
முட்டாதே ஓரம்போ
நீ என் காலை சுற்றும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ
நீ தேவையில்லை போ போ
நீ வெறும் ரோபோ தான் எனக்கு வேண்டாம் என்று மறுக்கிறாள் நாயகி.
தந்தையின் இயல்புகள் தனயனுக்கும் ஜீன்களால் வந்து கலப்பது ஒருபக்கம், தந்தை இதே படத்தில் எழுதிய மற்றப் பாடல்களையும் தாண்டிப் பலரை ஈர்ப்பது என்பது எவ்வளவு பெரிய சாதனை?
வைரமுத்துவின் குட்டி முதல் படத்திலேயே பதினாறு என்ன பல நூறு அடி பாய்ந்துள்ளது.
ஏற்கெனவே இந்தப் பாடலைக் கேட்டுப் பார்த்திருப்பீர்கள்..
இந்த இடுகையை வாசித்த பிறகு மீண்டும் ஒரு தடவை கேட்டுப் பாருங்களேன்..
இன்னும் புதியதாகத் தெரியும்..
எந்திரனில் வைரமுத்துவின் வரிகளில் புதிய மனிதா,அரிமா அரிமா, காதல் அணுக்கள் பாடல்களும் மனதுக்குப் பிடித்தே இருந்தாலும் இரும்பிலே இருதயம் முளைக்க வைத்த மதன் கார்க்கியின் வரிகள் மனதின் மெல்லிய பரப்பில் ஏறி உட்கார்ந்து விட்டன.
கவிப் பேரரசும் இளைய கவி இளவரசும்
மதன் கார்க்கிக்கு செங்கம்பள வரவேற்பு எந்திரன் மூலம் கிடைத்துள்ளது.
இந்தப் பிரம்மாண்டப் புகழைப் பத்திரமாக தொடர்ந்து வரும்பாடல்களிலும் கொண்டு செல்வார் என்று அதீத நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
வைரமுத்து,நா.முத்துக்குமார் வரிசையில் மேலும் ஒரு அற்புத அறிவியல் பாடலாசிரியர்? காலம் சொல்லும்..
(எந்திரன் பாடல்கள் பற்றி எழுதச் சொல்லி அன்பு வேண்டுகோளை முன்வைத்த சில நண்பர்களை அப்போது ஏமாற்றிவிட்டேன்.. இப்போது கொஞ்சமாவது திருப்தி தானே? )
ஐந்து பாடல்கள் பற்றியும் இதே இடுகையில் சொல்லலாம் என்று ஆரம்பித்தால் இரும்பிலே பாடலில் கொஞ்சம் அதிகமாகவே ஊறி அதிகமாக பதிவில் ஊற்றிவிட்டேன் போல் தெரிகிறது..
மீதி நான்கு பாடல்களையும் அடுத்த பதிவில் சொல்லவா?
பி.கு - இன்னொரு பாடல் இடுகை இட்டுள்ளேன்.. கொஞ்சம் வித்தியாசமாக ..
கொஞ்சம் பாருங்களேன் - இதுவரை வாசித்திராவிட்டால்..