M Magicகும் என் Magicகும் - கிரிக்கெட் அலசல் தான் :)

ARV Loshan
13
என்ன ஒரு போட்டி..
மூன்றாவது தடவையாக இந்த வாரத்தில் ஒரு கிரிக்கெட் போட்டியின் முடிவில் நான் சிலிர்த்து சொன்ன வார்த்தை.
இந்த ஒரு வாரத்தினுள் மூன்றாவது தொடர்ச்சியான ஒரு நாள் போட்டி இறுதிக் கட்டம் வரை என்ன நடக்குமோ என்ற கிரிக்கெட்டுக்கேயான விறுவிறுப்பைத் தந்திருக்கிறது.

பாலைவனப் புயலாக பாகிஸ்தான் - தென் ஆபிரிக்க அணிகளின் இரு போட்டிகள் தந்த பரபரப்பு இரவுப் பொழுதில் தூங்க செல்ல முதல் டென்சன் ஆக்கின என்றால், இன்றைய மெல்பேர்ன் ஒரு நாள் போட்டி எங்கள் அலுவலகத்தின் அத்தனை கிரிக்கெட் பிரியர்களினதும் ஒரு மணி நேர வேலையையாவது ஸ்தம்பிக்க செய்திருந்தது.

அபுதாபியில் அப்துல் ரசாக்கின் அதிரடி, ஷார்ஜாவில் நேற்று அம்லாவின் அமைதியான ஆட்டம்.. இன்று மெல்பேர்னில் M நாள்.

                   Memorable Ms - Mathews & Malinga 

Melbourne - M
ஆமாம், இலங்கையின் இன்றைய விறு விறு மயிரிழை வெற்றியில் துடுப்பாட்டப் பங்களிப்பு செய்த மூவரின் பெயர்களுமே M .
Mathews
Malinga
Muralitharan
ஆஸ்திரேலியாவுக்காக அதிக ஓட்டங்கள் குவித்தவரும் மைக்கல் ஹசி :)

ஆஸ்திரேலிய அணியின் தோல்விகள் தொடர்ந்து துரத்துகின்றன.
மூன்று விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலுமே தொடர்ச்சியாகத் தோல்விகள்.இறுதியாக ஜூன் மாதம் இங்கிலாந்தில் வைத்துப் பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியொன்றில்  வென்றபின்னர் எல்லாமே தோல்விகள்.
வெற்றி பெறுவது எப்படி என்று மறந்துவிட்டார்களோ?
இன்றைய போட்டியில் தனது பாட்டியின் இறப்பால் வழமையான தலைவர் பொன்டிங் விளையாடவில்லை.கிளார்க்கின் தலை மீண்டும் உருட்டப்படுகிறது.
அடுத்த வெள்ளி சிட்னி போட்டிக்கு பொன்டிங் மீண்டும் வரும்வேளை இன்னும் அவருக்கு சவால் இருக்கிறது.

ஆஷஸ் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் இன்றைய தோல்வியும் மீண்டும் ஒரு அபாய மணி அடித்திருக்கிறது.

இன்று மத்தியூசும் மாலிங்கவும் ஒன்பதாவது விக்கெட்டுக்காக உலக சாதனை புரிந்து ஆஸ்திரேலியா அணியை நிலைகுலைய செய்தது, என்னைப் போலவே உங்களுக்கும் ஒரு மாதத்துக்கு முன்னர் மொஹாலியில் லக்ஸ்மனுடன் இஷாந்த் இணைந்து பெற்ற இந்திய வெற்றியை ஞாபகப்படுத்தியிருக்கலாம்.

மறுபக்கம் இலங்கை அணி இதற்கு முதல் T20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை மிக இலகுவாக வெற்றி கொண்டிருந்தாலும் இன்றைய வெற்றி கொஞ்சம் அல்ல நிறைய அதிர்ஷ்டத்தினாலுமே கிட்டியது என்பதை அணித்தலைவர் சங்கக்கார ஒத்துக்கொண்டது போல நாமும் உணரவேண்டும்.
ஆனால் ஒரு விக்கெட் வெற்றி என்ற போதிலும் உலகின் முதல் தர ஒரு நாள் அணிக்கேதிராகக் கிட்டியுள்ள வெற்றி என்பதனாலும்,இதுவரையில் ஆஸ்திரேலிய மண்ணில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கேதிராக விளையாடிய 40 போட்டிகளில் பெற்ற ஒன்பதாவது வெற்றி இது என்பதாலும் பரவசப்படக் கூடியதே.

சங்கா இந்த வெற்றியைத் தான் விளையாடிய 277 ஒரு நாள் போட்டிகளில் மறக்கமுடியாத இரண்டாவது வெற்றி எனப் பட்டியல் இட்டுள்ளார்.
முன்னையது 2009 ஜனவரியில் பங்களாதேஷ் அணிக்கெதிராக விளையாடிய ஒரு இறுதிப் போட்டி.
இதைப் பற்றிய என் பதிவு..



இலங்கை அணி இன்றைய தினம் மெல்பேர்னில் பந்துவீசிய விதம் அருமை.
மாலிங்,முரளி,ரண்டீவ் ஆகியோர் வழமை போலவே ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி எதிரணியை இருக்க,திசர பெரேரா ஐந்து விக்கெட் பெறுதியைப் பெற்று தான் வெறுமனே இந்திய ஸ்பெஷலிஸ்ட் இல்லை எனக் காட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக மட்டுமே கலக்கி வந்த இவர்,(வாய்ப்புக்கள் வழங்கப்பட்டதும் அவ்வாறே) இரண்டு போட்டிகளிலுமே ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனம் ஆகியுள்ளார்.
திசர - முன்னைய இந்திய வில்லன்,இப்போது ஆஸ்திரேலியாவுக்கு??

ஏராளமான இலங்கை ரசிகர்கள்,ஆடுகளத்தின் தன்மை,சீதோஷ்ணம் என்று அநேகமாக இலங்கையினை ஒத்த மெல்பேர்னில் விளையாடுவது இலங்கை வீரர்களுக்கு சௌகரியமாக இருந்திருக்கலாம்.

ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் சௌகரியமாக உணரவில்லை.
வரிசையாக அணிவகுப்புப் போல தலைவர் சங்காவைத் தனிமரமாக விட்டு விட்டு வித விதமாக ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
சங்கக்கார 49 ஓட்டங்கள் பெற்ற பின் ஆட்டமிழக்க,இலங்கையின் நிலை ததிங்கினத்தோம் ஆனது.  
அப்போது ஐந்து விக்கெட்டை இழந்து ஓட்டங்கள். அதன் பின் எட்டாவது விக்கெட்டும் 107 ஓட்டங்களில் இழக்கப்பட நிலைமை டண்டணக்கா ஆனது.

அதன்பின் தான் ஆரம்பமானது M Magic..
மத்தியூசின் மதியூகமான பொறுமையான ஆட்டமும்,லசித் மாலிங்கவின் பலத்துடன் சேர்ந்த அதிரடியும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டியை ஆஸ்திரேலியாவிடமிருந்து கை மாற்றுவதை கிளார்க்கும் ஆஸ்திரேலியாவும் ஏன் நாமும் உணர்ந்துகொள்ள கொஞ்ச நேரம் எடுத்தது.

இருவரும் தத்தமது அரைச் சதங்களை எடுத்ததுடன் தத்தமது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கைகளைப் பூர்த்தி செய்தனர்.
இதை விட மிக முக்கியமாக 27 வருடங்களாக முறியடிக்கப்பட முடியாமல் இருந்த ஒன்பதாவது விக்கெட்  இணைப்பாட்ட சாதனையையும் இவ்விருவரும் முறியடித்துப் பெருமை படைத்தனர்.
1983 உலகக் கிண்ணப் போட்டிகளில் சிம்பாப்வே அணிக்கெதிராக கபில் தேவும் கிர்மானியும் இணைந்து பெற்ற 126 ஓட்ட சாதனை இன்று தவிடுபொடியானது.

மத்தியூஸ் இலங்கை அணிக்கு அண்மைக் காலத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம்.மூன்று விதப் போட்டிகளிலும் அவற்றுக்கு ஏற்றாற்போல் பொருந்திப் போகிறார்.
பொறுமை,வேகம்,உறுதி,நிதானம்,ஊக்கம் என்று தேவையான விடயங்களைத் தேவையான நேரத்தில் தந்துகொண்டிருக்கிறார்.


மாலிங்கவின் துடுப்பாட்டமும் இன்று சரியான நேரத்தில் கை கொடுத்தது மிக முக்கியமானது.
இந்த இணைப்பாட்டதில் மிக முக்கியமானது மாலிங்கவை மத்தியூஸ் நிதானப்படுத்தியதும் சிக்கலான சில பந்துகளில் இருந்து பிற்பகுதியில் காப்பாற்றியதும்,பரஸ்பர நம்பிக்கையும்.
மத்தியூஸ் ஒரு நல்ல finisherஆக மாறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால்கடைசி நேரத்தில் இதோ வெற்றி வருகிறது என்று இருக்கும் நிலையில் மாலிங்கவின் ஆட்டமிழப்பும் முரளியின் வருகையும் தந்த டென்ஷன் இருக்கே..
அப்பப்பா.. 
அந்த 38 வயது இளைஞன் முரளி fine leg நோக்கித் திருப்பிவிட்ட பந்தைப் பார்த்த பிறகு தான் பலருக்கு மூச்சே வந்திருக்கும்.
இந்தப் போட்டி பல விஷயங்களை இரு அணிகளுக்கும் பாடமாகக் கொடுத்திருக்கிறது.

இலங்கைக்கு -
துடுப்பாட்ட வரிசை எவ்வளவு அனுபவமானதாக இருந்தாலும் சில நேரங்களில் தளர்ந்து,ஒரேயடியாக முறிந்துபோதல்.
உலகக் கிண்ணம் நெருங்கி வரும் வேளையில் இதை சீர்ப்படுத்தவேண்டும்.
எல்லா நாளும் இதே போல பத்தாம் இலக்கத் துடுப்பாட்டமும்,அதிர்ஷ்டமும் கை கொடுக்காது.


ஆஸ்திரேலியாவுக்கு- 
சில ஆறுதல்களும் நம்பிக்கையும்

மைக் ஹசியின் மீள் வருகை.
பொறுமையாக ஆடி அணியை ஓரளவு உறுதியான நிலைக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஆஷசுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.
பிரட் ஹடின் முழுக்கக் குணம் அடைந்திருப்பதும் கொஞ்சமும் தெரியாத அவரது முன்னைய உபாதையும்.
மிக முக்கியமாக சேவியர் டோஹெர்ட்டி என்ற புதிய சுழல் பந்து வீச்சாளரின் அதிரடிப் பிரவேசம்.
தனது முதல் போட்டியிலேயே இலங்கையின் துடுப்பாட்ட முதுகெலும்புகள் நான்கை உடைத்துப் போட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
சேவியர் டோஹெர்ட்டி - இன்று ஆஸ்திரேலியாவின் Saviour ஆகமுடியவில்லை 

அவரது துல்லியமும் சாதுரியமும் நல்ல ஒரு நாள் பந்துவீச்சாளராகக் காட்டினாலும் டெஸ்ட் போட்டிகளுக்குத் தயார் நிலையில் இருப்பாரா என்பது அனைத்தும் அறிந்த ஆஸ்திரேலியத் தேர்வாளருக்கே வெளிச்சம்.
ஆனால் நேதன் ஹோரித்ஸ் எதற்கும் கவனமாக இருக்க வேண்டும். 
சில எச்சரிக்கைகள்..

பலரினதும் துடுப்பாட்டப் பிரயோகங்கள்..
போட்டியிலும் இன்றைய ஒரு நாள் போட்டியிலும் பலர் ஆட்டமிழந்தது மோசமான அடிகளுக்கு சென்று.
பந்துவீச்சு தெரிவுகள்.
ஆஷசுக்கு போலின்ஜர்,ஹில்பென்ஹோஸ்,ஜோன்சன்,ஹோரித்ஸ் ஆகியோரே முதல் தெரிவுகளாக இருந்தாலும், உலகக் கிண்ண அணியை இன்னும் ஆறுமாதங்களில் யோசிக்கும்போது சுழற்சி முறை கேள்விக்குறியாகிறது.

அதுபோல முன்பிருந்த ஆஸ்திரேலிய அணிகளுடன் பார்க்கையில் இந்தத் தோல்விகளை மட்டுமே கண்டுவரும் ஆஸ்திரேலிய அணி,ஆஸ்திரேலிய சீருடையில் இன்னொரு அணியா என்ற சந்தேகத்தையும் தருகிறது.

டென்ஷன் ஆகின்ற ஆஸ்திரேலிய அணித் தலைவர்கள் இன்னொரு வேண்டாத பிமப்ங்கள்.

சிட்னியில் தீபாவளிப் பட்டாசுகள் யார் பக்கம் வெடிக்கின்றன பார்க்கலாம்.

ஆனால் ஒன்று ,

இன்றைய வெற்றிக்காக அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் சீக்கிரம் கிளம்பும் முடிவில் இருந்த நான் பதற்றத்துடன் தொலைக்காட்சிக்கு முன் இருந்து மனதுடன் போராடியதும்,முரளியின் கடைசி அடி+வெற்றித் துள்ளலுடன் சந்தோஷங்களை அலுவலக நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டதும் உற்சாகக் கணங்கள்.
                                   அந்த உற்சாகக் கணம் 
----------------

ஆனால் இன்றைய வெற்றியில் இலங்கை வீரர்கள் களிப்பு+களைப்பு அடைந்தது போல நானும் களைத்துப் போனேன்.

காரணம் -
அண்மைக்காலமாக நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் அநேகமாகக் கவிழ்ந்துபோவதால்,இன்று வாயையும் விரல்களையும் ரொம்ப சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
இலங்கை சிறப்பாகப் பந்துவீசிய நேரத்திலும் Facebook,Twitter இல் எந்தவொரு மகிழ்ச்சியையும் நான் வெளிப்படுத்தவில்லை.

'உங்கள் இலங்கை டண்டணக்கா' என்று கும்மி நண்பர் ஒருவர் சீண்டியபோது,
மின்னலாக ஒரு ஐடியா வந்தது .(அந்த நேரம் இலங்கை 90/6)
உடனே அவருக்கு நான் அனுப்பிய பதில்..

Go Aussies Go.. 
Aussies wil win :)

அதன் பின் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே..

இதை நீங்கள் மூட நம்பிக்கை என்றால்,
கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத ஒருவர்,கடவுள் என்ற ஒன்று இல்லை என அடியோடு மறுக்கும் ஒருவர் ஏன் ஆதரவு குறித்தும் அனுப்பிய கும்மி மடல் ஒன்றைப் பாருங்களேன்..

லோசன் அண்ணாவால் எனது மூடநம்பிக்கைகள், கடவுள்கள் மீதான கொள்கை ஆட்டம் காணுகிறது. :) :) :)

இதனால் தான் என்னை விக்கிரமாதித்தன் என்று அழைக்கிறேன்.. வேதாளங்கள் யார் எனக் கேட்கப்படாது..
பாவம் நண்பர்ஸ்.. ;)

அதன் பின்னும் இலங்கை 200/8 என்ற நிலையில் இருந்தபோதும் 

I m an Aussie supporter today :)

வந்தால் மலை.. போனால்.. 

என்று கும்மி இட்டேன்..
பலன் கிடைத்திருக்கு..

மீண்டும் விக்கிரமாதித்தன் ஜெயிச்சிட்டான் ;)

போகிறபோக்கில் ஆஷசில் இங்கிலாந்துக்கு ஏன் முழுமையான ஆதரவைத் தெரிவித்தால் தான் பொண்டிங்கின் கையில் கிண்ணம் கிடைக்கும்போல..

------------

நாளை இந்திய-நியூ சீலாந்து முதல் டெஸ்ட் ஆரம்பிக்கிறதாம்..
யார் அக்கறைப்பட்டார்?
 மூன்று,நான்கு நாட்களின் பின்னர் இந்தியா எத்தனை ஓட்டங்களால்/விக்கெட்டுக்களால் வென்றது என்று தெரிந்துகொண்டால் சரி..

சச்சின்/சேவாக்/லக்ஸ்மன் என்ன சாதனை வைத்தார்கள் என்பதையும் தேடித் தெரிந்து கொண்டால் சரி..
வெட்டோரி - இப்பவே இப்படியானால் எப்படி?

பாவம் வெட்டோரி..


பி.கு - பதிவை முழுக்கத் தட்டி முடிய நள்ளிரவு தாண்டிப் புதிய நாள் பிறந்துவிட்டது. எனவே இன்று,நேற்று,நாளை குழப்பம் வந்தால் சாரி :)

Post a Comment

13Comments

Please Select Embedded Mode To show the Comment System.*