ஹர்ஷுக் குட்டி - என்(ம்) செல்லம்

ARV Loshan
48




நேற்று என் செல்ல மகன் ஹர்ஷஹாசனின் மூன்றாவது பிறந்த நாள்.


இந்த ஒரு வருடத்தில் அவனில் எத்தனை எத்தனை மாற்றங்கள்!!
 அழகான மாற்றங்கள்;
ஆச்சரியமான மாற்றங்கள்;
ரசிக்கக்கூடிய மாற்றங்கள்.




இவை பற்றிய பதிவொன்று இட வேண்டும் என மனைவியிடம் சொன்னபோது,நாவூறு/திருஷ்டி பட்டுவிடும் என்று அவர் வேண்டாம் என்றுவிட்டார்.
ஆனால் நான் இந்தப் பதிவு ஹர்ஷுவைப் பற்றி இட்டே ஆகுவேன் என்று உறுதிபட முடிவெடுத்தமைக்கு இரு காரணங்கள்..


1.எனக்கு இந்த நாவூறு/கண் திருஷ்டி மீது நம்பிக்கையின்மை
2.அவனுக்கு இப்போது இந்தப் பதிவு பற்றி எதுவும் தெரியாவிடினும்,ஒரு பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் இதை வாசிக்கும்போது,அவனது வளர்ச்சியை நான் எவ்வளவு ரசித்துள்ளேன் என்பதை அறிந்து புளகாங்கிதம் அடைவான். அவனுக்கு அவன் பற்றிய எனது காலப் பதிவாக இருக்கும்.




கடந்த பிறந்த நாளிலிருந்து நேற்று வரையிலான ஒரு வருட காலத்தில் ஹர்ஷுவில் எத்தனை எத்தனை தெளிவான,மகிழ்ச்சியான மாற்றங்கள்..(ஒரு மனிதனின்/குழந்தையின் வளர்ச்சியில் இவை நடந்தேயாகவேண்டும் என இருந்தாலும்,எனக்கு அது தெரிந்தாலும், என் கண் முன்னே என் மகன் நான் பார்க்க வளர்ந்துகொண்டிருக்கிறான் என்பது ஒரு பூரிப்பான ஆச்சரியம்.


நிறையப் பேசுகிறான்..
ஓயாமல் பேசுகிறான்..
தெளிவாகப் பேசுகிறான்..
நிறையக் கேள்விகள் கேட்கிறான்..
(என்ன சொன்னாலும் ஏன்,எங்கே,எப்போது,யார்.. நாமும் பொறுமையுடன் பதில்களை சொல்கிறோம்)


என் மீதும்,அவன் தாயார் மீதும் வைத்துள்ள அன்பு+அக்கறை ஒரு பெரிய பையனுக்குரிய முதிர்ச்சித்தன்மையோடு கூடியதாக இருப்பதாக உணர்கிறேன்.
உதாரணமாக, தாயாருக்கு சமையலில் தனது வயதுக்கேற்ற சிறு உதவிகள் செய்து கொடுப்பது,"அம்மா ஏதாவது ஹெல்ப் வேணுமா?" என்று மழலையில் கேட்பது,"அம்மா ஏன் கோவமா இருக்கிறீங்க?" என்ற கேள்விகள்,தாய்க்கு நான் பேசும்போது என்னைத் தடுத்து "அம்மா பாவம்;பேசாதீங்க"என்று சொல்வது....


"மழை அம்மா.. அப்பா நனைவாரா?"என்ற அக்கறை,வேலையால் நான் வந்ததும் ஆரத் தழுவி வரவேற்றல்,எனக்குத் தேவையான ஆடை தொடக்கம்,பொருட்கள் கொண்டு தருதல்.. இப்படிப் பல..
இவை எவையுமே நாம் சொல்லிக் கொடுத்தவையல்ல.
இந்தக் காலக் குழந்தைகள் தாமாக உணர்ந்து கற்றுக்கொள்பவையும்,சூழலில் இருந்து பார்த்துப் பெற்றுக்கொள்பவையும் அதிகம்.






அவனுக்கு சிறியதாக இருந்த உறவுகளின் வட்டம், அண்மையில் நடந்த என் தம்பியின் திருமணத்தின் பின்னரும்,மலேசிய-சிங்கப்பூர் பயணத்தின் பின்னரும் பெரிதாகி இருக்கிறது.
அத்தனை உறவுகளையும் ஞாபகம் வைத்துப் பெயர் சொல்லி அழைக்கிறான்.
இவர்களில் அவனது சித்தப்பாமாரும்,சின்ன மாமனாரும் நண்பர்கள் போல.. பெயர் சொல்லி அழைப்பது முதல் விளையாட அவர்களை உரிமையோடு உத்தரவிட்டு அழைப்பது என்று ரொம்பவே நெருக்கம்.
தொலைபேசியில் அவர்களுடன் பேசுவதிலும் அலாதி ஆர்வம். அப்பம்மா,அப்பப்பா ஆகியோருடன் தனி உரிமையும் தனியான பாசமும்.எங்கள் இருவரையும்(நான்,மனைவி) அதிக நேரம் அவர்களுடன் இருக்க அவனுக்குப் பிரச்சினையில்லை.
எம்மிடம் கேட்டுக் கிடைக்காத விஷயங்கள் அங்கே கிடைக்கும் என்றும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.


முன்பெல்லாம் யாருடைய செல்லம் என்று கேட்டால் அப்பப்பாவினுடைய செல்லம் என்றும் சொல்பவன், இப்போ கொஞ்சம் தெளிவாக,சாதுரியமாக என் அம்மாவின் வீட்டில் வைத்து மட்டும் அப்பப்பாவின் செல்லம் என்றும், மற்றும்படி 'அப்பா-அம்மா இருவரின் செல்லம்' என்றும் குறும்பாக சிரித்துக் கொண்டே சொல்கிறான்.


தனக்கான விருப்பத் தெரிவுகளை தெளிவாக சொல்கிறான்..
ஆடைகள்..(கடைகளுக்குப் போனாலும் இந்த நிறம் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காமல் அன்பாகக் கொஞ்சிக் கெஞ்சி எடுத்துக்கொள்வான்)
நான்.ஏன் மனைவி அணியும் ஆடைகளும் எங்கள் 'பெரியவருக்கு'ப் பிடிக்க வேண்டும் ;)


உணவு..(அவருக்குப் பிடிக்காத உணவு என்றாலும் நாம் கொடுத்தால் உண்பான் எனினும் தனக்குப் பிடித்த உணவுகளைக் கோரிப் பெற்றுக் கொள்வான்.)


செல்ல வேண்டிய இடங்கள்,தொலைகாட்சி அலைவரிசை.. தூங்கும் இடம்..
பிடிவாத குணம் வராதவரை எனக்கு அவனின் தெரிவுகளும்,ரசனையும் பிடித்திருக்கின்றன.மூன்று வயதிலேயே அவன் பக்குவப்படுகின்றான்..


தனக்குப் பிடித்த பாடல்களை நாம் பெரியவர்கள் முணுமுணுப்பதைப் போல தனியாக முணுமுணுப்பது எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்+பரவசம்.
நான் மகான் அல்ல,பானா காத்தாடி,இந்திரன்,சிங்கம் பாடல்கள் அவரது favorites .


வானொலி,தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு பாடலின் ஆரம்ப இசை ஒரு சில செக்கன்கள் ஒலிக்கின்றபோதே பாடல் என்னவென்று சொல்லிவிடுவான்.. பாடல் ஒன்றை சொன்னால் படப் பெயர்கள் சொல்கிறான்.
அப்பா வழியில் மகன் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்கிறார்கள்..(ராசா நீயுமா ஊடகத்தில் வந்து தூக்கம் தொலைக்கப் போகிறாய்?)


சினிமா என்று மட்டுமில்லாமல்,பொருட்கள்,நிறுவனங்களின் brandsஐயும் இலகுவாக இனம் கண்டுகொள்ளும் ஆற்றல் கண்டு வியக்கிறோம்..
வீதியில் பயணிக்கும்போது விளம்பரப் பலகைகள் பார்த்து சரியாக என்னவென்று சொல்வது ஹர்ஷுவின் பொழுதுபோக்கு.




வர்ணங்கள்,இலக்கங்கள்,எழுத்துக்கள்(குறிப்பாக ஆங்கிலம்) அடையாளம் காண்பதிலும்,அவற்றை வாசிப்பதிலும் தானாக அவனுக்கு வந்த ஆர்வம் எங்களுக்கு நிம்மதி.நாம் கஷ்டப்படுத்தி அவனைக் கற்பித்தலில் இறக்கக் கூடாது என்பதில் எம் குடும்பத்தவர் அத்தனைபேருமே மிக உறுதியாக இருக்கிறோம்.
தமிழ் எழுத்துக்களின் நெளிவு சுளிவுகள் அவனை இப்போதைக்கு ஆங்கிலப் பக்கமே இருக்கவைத்தாலும் எம் சூழலில் பழகிவிடுவான்.


இலகுவாக சொற்களைப் பிடித்துக்கொள்கிறான்.ஆங்கிலம்,தமிழ் மட்டுமல்ல, கடைகள் சென்றால் சிங்களமும் தான்.. இதனால் இவன் இருக்கும் இடத்தில் நாம் வார்த்தைகளை மிகப் பக்குவமாகப் பயன்படுத்தவேண்டி இருக்கிறது.






ப்ளீஸ் என்ற வார்த்தையை இவன் கெஞ்சலோடு சொல்லும்போது எதையும் இலேசில் மறுக்க முடியாது.
கண்டிப்பாக,உன்னை/உங்களை சும்மா விட மாட்டேன்,பயமா இருக்கு (இருள்,கரப்பான் தவிர வேறு எதற்கும் இவன் பயப்படுவதில்லை),எனக்கா,மீண்டும் சந்திப்போம்(எனது வானொலித் தாக்கம்??),பேச வேண்டாம், உடம்பு சரியில்லை,தப்பிட்டேன்,அப்பிடி சொல்லாதேங்கோ,பரவாயில்லை போன்றவை எங்கள் தங்கத்தின் Trade mark வார்த்தைகள்.




கதை கேட்பதில் அலாதி விருப்பம்.ஆனால் நவீன தலைமுறைக் குழந்தைகள் எல்லோரையும் போலவே,பாட்டி வடை சுட்ட கதை,நரி-திராட்சை கதையெல்லாம் பிடிக்காமல்,நவீன நடைமுறைக்கேற்ற கதைகளைக் கேட்கிறான்.
 கதையில் டொல்பின்,முன் வீட்டு பப்பி,சிங்கப்பூர் சென்று வந்த பிறகு Merlionஎல்லாம் வரவேண்டும்.
(சிங்கையின் சின்னம் Merlion எமது செந்தோசா விஜயத்தின் பின் இவன் மனதில் நீங்காத இடம்பிடித்துவிட்டது.


அங்கே வாங்கிய Merlion நினைவுச் சின்னங்களை மிகப் பத்திரமாக நேசித்து வைத்திருக்கிறான்.)


கம்பியூட்டர், ரோபோ,கார்கள்,விமானங்கள் எல்லாம் வரவேண்டுமாம்.
அவனுக்கேற்ற மாதிரியாக கதைகளை நாமே உருவாக்கி சொல்ல ஆரம்பித்தால் அதற்குள் ஆயிரம் கேள்விகள் கேட்டு மெகா சீரியல் மாதிரி ஆக்கிவிடுவான்.
ஒரு நாள் ஒரு முயல்-நாய் கதை ஆரம்பித்த நேரம் இரவு 11 .முடித்த நேரம் அதிகாலை இரண்டு மணி.


இன்னொரு நாள் அதிகாலை மூன்று மணி போல தூக்கத்தின் நடுவே விழித்தவன் கதை சொல்லுமாறு கேட்டான்..
சரி இவனுக்குப் பிடித்ததாக முயல் கதையை தூக்கக் கலக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தேன்.
ஏதோ உளறி முயல் ஒரேஞ் சாப்பிடுவதாகக் கதையில் சொல்லிவிட்டேன்.
அந்த நேரத்திலும் கவனம் சிதறாமல் "அப்பா, ரபிட் கரட் தான் சாப்பிடும்.." என்று அசரவைத்தான்.


தான் பிறந்த கதை,சிறு குழந்தையாக நாம் வளர்த்த கதை கேட்பதில் அதிக விருப்பம்.அதற்கிடையில் தன்னை 'ஹர்ஷுக் குட்டி' என்று தானே சொல்லிக் கொள்வான்.




ஹர்ஷுவில் நான் அவதானித்துப் பெருமைப் பட்ட விஷயங்களில் ஒன்று உண்மையே பேசுவது.
ஏதாவது பொருளை உடைத்தாலோ,தண்ணீர்,பால் போன்றவற்றைத் தவறுதலாக உடைத்தாலோ கேட்டவுடனே தான் தான் செய்தது என்று சொல்லிவிடுவான்.
நான் தாயாருக்காக சமாளித்து அதை ஒரு பூனைக்குட்டி தான் செய்தது என்று வேடிக்கையாக சொன்னாலும் ஹர்ஷு தான் பூனைக்குட்டி என்று சொல்லிவிடும் அப்பாவித்தனம் குழந்தைக்கே ஆனது.
வளரும் போதும் இப்படியே இருக்கவேண்டும்.


ஏதாவது நிலத்தில் தன்னால் சிந்தப்பட்டாலோ,உடைத்தாலோ தானே சுத்தப்படுத்த வேண்டும் என்று நிற்பான்.
தாய் பாவம் என்று அவன் மனதில் ஆழமாய்ப் பதிந்துள்ளது.
"அம்மா நான் மொப் பண்றேன்" என்று மழலையில் சொல்லி கிடைக்கும் துணி,டிஷ்யுவினால் சுத்தம்செய்து "ஓகேயா அம்மா?" என்று கேட்டு நிற்கையில் எங்களுக்குக் கண்கள் பனித்துவிடும்.






 இடது கைப் பழக்கவழக்கம். இதை நாம் எப்போது மாற்ற முயற்சிக்கப் போவதுமில்லை.
எழுதுவது,உண்பது,விளையாடப் பயன்படுத்துவது மட்டுமன்றி,கை கொடுக்கவும் இடது கையையே நீட்டுவான்.
கை கொடுப்பதை மட்டும் சொல்லி,மாறி இருக்கிறான்.


காலிலும் அவனது இடது காலே முந்துவதாக உள்ளது.
படி ஏறுகையில்,பந்தை உதைக்கையில் இப்படி...


கால்பந்து விளையாடுவதிலும்,கார்கள் வைத்து விளையாடுவதிலும் மட்டுமல்லாமல் இப்போது நீந்துவதிலும் தனி விருப்பம்.
"ஸ்விம்மிங் போவமா?" இப்போது எம் வீட்டில் அடிக்கடி கேட்கும் வாசகம்.


சில இடங்கள் வாரத்தில் ஒரு நாள் போயே ஆகவேண்டும்..நீச்சல் குளம்,சூப்பர் மார்க்கெட்,துணிக்கடை,அப்பம்மா வீடு(என் அம்மா வீடு),Majestic City, Pizza Hut, KFC,McDonalds.. Galle Face..etc.






நான் செய்வது போலவே சில வேலைகளை இமிடேட் செய்வது சுவாரஸ்யம்.
குறிப்பாக கணினியில் தட்டச்சு அடிப்பது.
ஹர்ஷுவுக்கு என் தம்பி செந்தூரன் கொண்டுவந்து கொடுத்த குழந்தைகளுக்கான lap topஇல் என்னைப் போலவே தானும் தட்டிக் கொண்டு வேலை செய்வதாக பந்தாவாக சொல்வான்.


நான் இரவில் அடுத்த நாளுக்கான வேலைகள்,மின்னஞ்சல்,வலைப்பதிவு,கும்மி,விளையாட்டுத் தகவல் தேடல் என்று செய்துமுடித்துத் தாமதமாகவே தூங்க செல்வதால் Good nightசொல்லி முத்தமிட்டுத் தான் தூங்க செல்வான்.
முன்பெல்லாம் இரு கன்னத்திலும் முத்தமிடுபவன்,இப்போது நான் அவனுக்கு அலுவலகம் அல்லது வெளியே செல்லும்முன் கொடுப்பது போல நெற்றியிலும் ஆசையாக முத்தமிடுகிறான்.


எங்கள் வீட்டிற்கு வேலைகள் செய்ய வரும் வயதான பெண்மணி மீது இரக்கம் கலந்த பாசம்.அவரைக் கண்டால் குசலம் விசாரிப்பதும் பெயர் சொல்லி நண்பி போல அழைப்பதும் அவருக்கு உணவு கொடுக்க சொல்லி என் மனைவியை நச்சரிப்பதும் ரசிக்கக் கூடிய சில விஷயங்கள்.






தனக்கான உணவுகள்,கார்ட்டூன்கள் போன்றவற்றில் காட்டும் ரசனைகள் வளர வளர மாறினாலும்,(முன்பு Dora,Bumba- இப்போது Winnie the Pooh, Casper, Pop eye,Tom and Jerry, Jackie Chan ) ரசனையில் ஒரு தனித்தன்மை தெரிகிறது.


வருகின்ற ஜனவரியில் தனது ஆரம்ப முன் பள்ளி வாழ்க்கையை ஆரம்பிக்கும்போழுதில் அவன் ரொம்பவே ரசிக்கிற தூக்கத்தின் சுகமான பொழுதுகளையும்,எங்கள் வீட்டிலும் அவன் அப்பம்மா வீட்டிலும் கழிக்கும் இன்பமான நேரங்களையும் இழக்கப் போகிறான் என்பது மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.


ஆனால் அந்த முன்பள்ளியில் இவனை அனுமதிக்கும் நேர்முகப் பாரீட்சைக்கு அழைத்துச் சென்ற போது அங்கே அவன் அடைந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் எங்களுக்கு சந்தோஷமான அதிர்ச்சி.
தன் வயதொத்த சிறார்களைப் பார்த்து என்று அவர்களுடனே தன்னை விட்டுச் செல்லக் கெஞ்சுகிறான்.


இப்போதும் ஒவ்வொருன் நாளும் எப்போது தான் பாடசாலை செல்லப்போகிறேன் என்று கேட்பதும் அதற்கான ஆயத்தங்களை செய்வதுமாக மிக்க எதிர்பார்ப்புடன் இருக்கிறான் என்பது மிகவும் மகிழ்ச்சி.


வருவோர்,சந்திப்போர் அனைவரிடமும் தனது முன் பள்ளிப் பெயரை சொல்லி சொல்லிப் பெருமை கொள்வதைப் பார்க்கையில் அட எங்களுக்குப் பிரச்சினை இல்லையே என நிம்மதி வருகிறது.
நேற்று அவனது பிறந்த நாள் கொண்டாட்டம் வீட்டில் சிறியளவில் நாம் இரவு விருந்துடன் கொண்டாடிய நேரம் அவன் அடைந்த உற்சாகம்.. அப்பப்பா..
அதற்கான ஆயத்தங்களை நாம் திட்டமிட்டபோது தானும் ஒரு பெரியவராக வந்து கலந்துகொள்வார்.


தனக்குப் பிறந்தநாள் என்பதும்,இது மூன்றாவது என்பதும்,தனக்குப் பிடித்தவர்கள் வருவார்கள் என்பதும்,பரிசுகள் கிடைக்கும் என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தன.
ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து ரசித்ததை நாம் ரசித்தோம்.


கிடைத்த பரிசுகளில் ஹர்ஷு மிக ரசித்தது அவனது அப்பம்மா+அப்பப்பா வாங்கிக் கொடுத்த படிக்கும் மேசை+சுழலும் நாற்காலி.
மூன்று வயதுக் கள்ளன் ஏதோ முதுமானிப் பரீட்சைக்குப் படிப்பது போல அதில் அமர்ந்து தன் குட்டிப் புத்தகங்களைப் பெருமையுடன் வாசித்துக் கொண்டிருந்த இன்றைய காட்சிகள் ரசனை.






எனக்கு இதுவரை காலமும் பதிவேற்றியவற்றுள் மிக ரசித்துப் பதிவேற்றும் இப்பதிவு என் ஹர்ஷுவுக்கான இன்னொரு பரிசாகட்டும்..
இதை இன்று எப்படியாவது பதிவேற்றிவிட வேண்டும் என்று தட்டச்சிக் கொண்டிருக்க,என்னிடம் "அப்பா" என்று மழலையுடன் கொஞ்ச வந்தவனைப் பார்த்து, "டேய் செல்லக் கள்ளா உன்னைப் பற்றித் தான் எழுதுகிறேன்" என்று அவனைப் பார்த்து சொன்னது ஏதோ விளங்கியது மாதிரி "எனக்கா? என்ன?" என்று வழமையான கேள்விகளை ஆரம்பித்து விட்டு, தனக்குப் பிடித்த இரவு உடையுடன்(பிஜாமா) Good night சொல்லி அன்புடன் ஈரமுத்தம் தந்துவிட்டுப் போகிறான் என் ஹர்ஷுக் குட்டி.

Post a Comment

48Comments

Please Select Embedded Mode To show the Comment System.*