இன்று திரையுலகில் நான் அதிகம் நேசிக்கும் நடிகர்/கலைஞர் கலைஞானி கமலஹாசனின் பிறந்தநாள்.
பதிவுலகம் வந்து மூன்றாவது ஆண்டுக்குள் நான் கால் பதித்துள்ள நிலையில்,இம்மூன்றாண்டிலுமே கமலின் பிறந்த நாளுக்கு விசேடமாகப் பதிவொன்று போடவேண்டும் என பெரிதாக ஐடியா பண்ணியுமே கடைசியில் ஏதாவது ஒரு அவசர வேலை காரணமாக வெளியூர் பயணமாக நேர்ந்து விடும்..
இம்முறையும் அப்படியே..
நண்பர்களுடன்.குடும்பத்துடன் திருகோணமலையில் நான் இருக்கும் நாளில் தான் கலைஞானியின் பிறந்தநாள்..
இருக்கும் இடத்தில் இருந்து நாள் முழுக்க ஊர் சுற்றும் களைப்பில் நான் 'ப்ளான்' பண்ணி வைத்துள்ள விசேட பதிவை அவசர அவசரமாக அரை குறையாகப் பதிவிட மனம் இடம் தரவில்லை.
என் முன்னைய பதிவுகளில் இதுவரை ஏழு பதிவுகளில் கொஞ்சமாவது கமலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.
அவற்றுள் இருந்து காலப் பொருத்தமாக ஒன்றை இந்நாளில் கமலுக்குப் பிறந்தநாள் பரிசாக :)
கமலின் 'ம' வரிசைப் படங்கள் பற்றி என் பார்வையில் கொஞ்சம் சீரியசாக மொக்கையோடு அலசிய பதிவை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்..
என்ன அதிசயம் பாருங்கள்..
அடுத்து வரப்போகும் கமலின் புதிய படமும் 'ம' தான்..
மன்மதன் அம்பு..
கமலின் அண்மைக்கால ஆஸ்தான இயக்குனர் K.S.ரவிக்குமார், அன்பே சிவத்துக்குப் பின் மாதவன்,முதல் தடவையாக ஜோடியாக த்ரிஷா..
ஒரு கலவை மசாலா ரெடி..
கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
ஒரு ரசிகனாக.. ஒரு தொடர்வோனாக.. ஒரு வாசகனாக (கமலின் பல திரைப்படங்களை ஏன் பேட்டிகளைக் கூட நான் ஆழமாக வாசிப்பதால்) மனமார வாழ்த்துகிறேன்.
நீங்கள் ஒவ்வொரு ஆண்டு அதிகமாக வாழ வாழ திரையில் நாம் வித்தியாசங்களை,ரசனைகளின் உயரங்களை அதிகமாகத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டும்.. எனவே கொஞ்சம் சுயநலத்தோடும் வாழ்த்துகிறேன்.
----------------------------------
என் முன்னைய பதிவிலே 'ம' வரிசை பற்றி ஒரு மினி ஆராய்ச்சி செய்திருக்கிறேன்..
மன்மதன் அம்பு ஜெயிக்குமா நீங்களும் சொல்லுங்கள் ;)
மீண்டும் இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி உங்களை அழைத்து செல்கிறேன்.. இது 2008 ஆம் ஆண்டு டிசெம்பரில் பதிவிட்டது..
முன்பு சொன்னவற்றில் எத்தனை சரிவந்துள்ளது.. எத்தனை வெறும் ஊகங்களாகப் போயுள்ளது என்று பார்த்தால் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
-----------------------------------------------
உலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி திரைப்படம் முடக்கப் பட்டுவிட்டது என்ற அறிவித்தல் வந்து சில வாரங்கள் ஆகின்றன.. அடுத்த திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்தது பாராட்டுக்கள் வென்ற புதன்கிழமை அதாங்க The Wednesday என்ற திரைப்படத்தின் தமிழாக்கம் என்று நம்ம கேபிள் சங்கர் எழுதியிருந்தார்.. அதற்கு முதல் பிரபல தெலுங்கு,மலையாள நடிகர்களோடு 'தலைவன் இருக்கிறான்' என்ற படம் வெளிவர இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன..
எனினும் இந்த அறிவிப்புக்கள் எல்லாம் வந்த நேரத்தில் நான் வேண்டிக் கொண்டதெல்லாம், (யாரை,எந்தக் கடவுளை என்றெல்லாம் கேக்காதீங்க.. எனக்கே யாரிடம் வேண்டினேன் என்று தெரியாது.. அதுவும் நாத்திகரான கமல் படத்துக்கேயா? ) அடுத்த கமல் படத்துக்காவது மானா('ம') எழுத்தில் பெயர் வைக்கக் கூடாதென்று தான்..
காரணம் அண்மையில் 'ம' எழுத்தில் ஆரம்பிக்கப் பட்ட இரண்டு கமல் படங்களுமே முடங்கிவிட்டன.. முதலில் மருதநாயகம், பின்னர் இப்போது மர்மயோகி..
இரண்டுமே பிரம்மாண்டத் தயாரிப்புக்கள் என்று பரபரப்புக் கிளப்பியவை.. இரண்டுமே கமலின் கனவுப் படைப்புக்களாகக் கருதப்பட்டவை.
பொன்னியின் செல்வன் போன்றதொரு தமிழ்க்காவியத்தை, அல்லது கிளாடியேட்டர் போன்றதொரு பிரம்மாண்டப் படத்தை தமிழில் எதிர்பார்த்த எம் போன்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. மொக்கைத் திரைப்படங்களுக்கும், மசாலாக் குப்பைகளுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுப்பவர்களால் இது போன்ற நல்ல,சவாலான முயற்சிகளுக்குக் கை கொடுக்க முடியாமல் இருப்பது தமிழரினதும்,நல்ல தமிழ்த் திரைப்பட ரசிகர்களினதும் தலைவிதியே அன்றி வேறொன்றும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது..
கமலின் 'ம' வரிசைத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், நல்ல திரைப்படமாக பாராட்டுக்களை வென்றாலும், வசூலில் படு மோசமாகத் தோற்றுப்போன 'மகாநதி' தான் ஞாபகத்துக்கு வரும்..அவ்வளவு அற்புதமான திரைப்படத்தை வெற்றி பெற வைக்க முடியாததற்கு ரசிகர்களான நாமே தான் வெட்கப்பட வேண்டும்..அதே திரைப்படம் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்..
அதே போல 'ம' வரிசையில் , 'மு' எழுத்தில் வெளியான மும்பை எக்ஸ்ப்றேசும் தோல்வியுற்றது.. அந்தத் திரைப்படத்தின் நகைச்சுவைகளும், சொல்லப்பட்ட சில சமூக நியாயங்களும் நம்மவருக்கு ஏற்புடையதாக இல்லை.. பல பேருக்கு திரைப்படம் புரியவே இல்லை..
கமலுக்கு அப்போ 'ம' சறுக்கல் தருகிற ராசியில்லாத எழுத்தா என்று அவசர அவசரமாக தேடியதில் சில விஷயங்கள் அகப்பட்டன..
ஆரம்ப காலத்தில் கமலின் சகல 'ம' எழுத்தில் ஆரம்பித்த திரைப்படங்களும் பெரு வெற்றியும் ,பாராட்டுக்களும் பெற்றன..
பாலச்சந்தரின் இயக்கத்தில் 'மரோசரித்திரா' (தெலுங்கு), மன்மதலீலை', 'மூன்று முடிச்சு', 'மூன்றாம் பிறை' என்று வரிசையாக எல்லாமே வெற்றி பெற்றவை..
அதன் பின் கமல் எடுத்த மிகப் பெரிய நகைச்சுவை திரைப்படம் மைக்கல் மதன காம ராஜன் கூட ம வரிசையில் இடம் பெற்ற திரைப்படம் தான்..
கமல் ஒரு வித்தியாசமான வேடம் ஏற்று நகைச்சுவையில் பின்னியெடுத்த மகாராசன் கூட 'ம' வில் ஆரம்பித்த படம் தான்.. அதுவும் வர்த்தக ரீதியில் எதிர்பார்த்த வெற்றி தரவில்லை என அறிந்தேன்..
எனினும் அண்மைக்கால பெரிய சறுக்கல்கள் 'ம' எழுத்து கமலுக்கு ராசியில்லை என்ற கருத்தையே தருகின்றன..
இதைக் கமல் ஏற்றுக் கொள்வாரா தெரியவில்லை.. அவர் தான் மூட நம்பிக்கை மீது பெரிதாக நாட்டமில்லாதவர் ஆயிற்றே.. (ஆகா.. அது கூட 'ம' வரிசை தான்)
ஆனால்
அன்புள்ள கமல், என்ன தான் இருந்தாலும் தயவுசெய்து அடுத்த படத்துக்கு 'ம' எழுத்திலே பெயர் வைக்காதீங்க.. கோடி புண்ணியமாகும்..
இதற்கிடையில் மர்மயோகியை சண் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி மீண்டும் எடுப்பதாக அறிந்தேன்... தமிழக நண்பர்கள் யாராவது உறுதிப் படுத்தினால் நல்லது..
-------------------------------------------------
முன்னைய பதிவின் மீள் பதிப்பு எனினும் எந்தவொரு விஷயத்தையும் மாற்றவில்லை.
'ப்ளான்' பண்ணி (மனசுக்குள் தான்) வைத்துள்ள கமலுக்கான விசேட விரிவான பதிவு விரைவில்..
அதற்குள், கமல் பற்றிய என் முன்னைய இம்மூன்று பதிவுகளையும் கூட நீங்கள் கொஞ்சம் மீள அசை போடலாம்..
பதிவுலகில் என் ஆரம்பக் கட்டத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் பதிந்தது..
நான்,சினிமா இன்னும் பல...
இவை இரண்டும் கடந்த ஆண்டில் பதிவேற்றியது..
கமல்,சுஜாதா,அசின்,SPB ஒரே கட்சியில்..
கமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்
என் இனிய கமலுக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!!
எந்திரன் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள சன் குழுமத்தைக் கொஞ்சம் வளைத்து எப்படியாவது மருதநாயகத்தை வெளியே கொண்டுவாருங்கள்..
காத்திருக்கிறோம்..