எதிர்பார்த்ததைப் போலவே ஆளும் தரப்பு முன்னணி பெற்றுள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி கிடைத்துள்ள வாக்குகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே கிடைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ள அதேவேளை ஜே.வீ.பீயும் சரத் பொன்சேகாவும் இணைந்த ஜனநாயகக் கூட்டமைப்பும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதுவரை வெளிவந்துள்ள யாழ்ப்பாண மாவட்ட முடிவுகளில் ஊர்காவற்றுறை தொகுதி தவிர ஏனைய தொகுதிகளிலெல்லாம் தமிழரசுக் கட்சி(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வெற்றி பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறையில் ஆளும் தரப்பு (ஈ.பீ.டீ.பியின் உபகாரம்) வெற்றியீட்டியது.
மாத்தறை,ஹம்பாந்தோட்ட, மொனராகலை, பதுள்ளை ஆகிய மாவட்டங்களின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நான்குமே அரசு வசம்..
இப்போதைக்கு நான்கு மாவட்டங்களில் ஆளும் தரப்பு 21 ஆசனங்கள், ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்கள்
போகிறபோக்கில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிக அருகில் அரசு வந்துவிடும் போலத் தெரிகிறது..
ஹம்பாந்தோட்டையில் விருப்பு வாக்குகளின் பிரகாரம் ஜனாதிபதியின் புதல்வர் முதலிடம் பெற்றுள்ளார்.. நாமல் ராஜபக்ச பெற்றுள்ள வாக்குகள் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகம்.. பெரியப்பா சமல் ராஜபக்ச இந்தப் புதிய,இளைய அரசியல்வாதியின் முன்னால் பின் தள்ளப்பட்டுள்ளார்.ஜனாதிபதியின் அண்ணர் சமல் ராஜபக்ச பெற்ற வாக்குகள் பாதியளவு தான்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியில் முதலிடம்.. 74 ஆயிரம் வாக்குகள்..
ஐவரும் வாரிசு தானே..காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் புதல்வர்.
மாத்தறையில் பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய விஷயம் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரிய போட்டியிட்டது..
ஆச்சரியம் அவரே அந்த மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
அந்த மாவட்டத்தின் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள்,அமைச்சர்களை எல்லாம் பின் தள்ளி சனத் 74352 விருப்புவாக்குகளைக் குவித்துள்ளார்.
அமைச்சர்கள் மகிந்த யாப்பா அபேவர்தன,லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன(நமது சிறை வாழ்வில் எனக்கு புதிய பட்டம் தந்தவர்) ஆகியோர் எல்லாம் பின்னுக்குத் தான்.
இவ்வளவுக்கும் சனத் ஜெயசூரிய ஒரே ஒரு பிரசாரக் கூட்டத்தினை மட்டுமே நடத்தி இருந்தார்.. எல்லாம் கிரிக்கெட் செய்யும் மாயம்..
இனி சனத் சும்மா சனத் இல்லை.. மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சனத் ஜெயசூரிய..
இன்றாவது மும்பை இந்தியன்ஸ் அணி எங்கள் புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளையாட வாய்ப்பைக் கொடுக்குமா?
சச்சின் கொடுத்தாலும் கொடுப்பார்..இனிக் காயம்,உபாதை ஏற்பட்டால் இலங்கைக்கு சிகிச்சைக்காக வரவேண்டும் இல்லையா? ;)