பொதுத் தேர்தல் 2010 - இறுதிக் கட்டப் பார்வை

ARV Loshan
31


இலங்கையின் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கின்றன.
மீண்டும் ஆளும் கட்சி.. இல்லை ஆளும் கட்சி மீண்டும் ஆளப் பதவியேற்கும் என்பது ஏறத்தாழ உறுதியாகவே தெரிகிறது.


பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியிடமோ, புதிதாக முளைத்த ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்திக் களம் கண்டுள்ள ஜனநாயக் தேசிய கூடமைப்பிடமோ அரசுக்கெதிராக மக்களை ஈர்க்கக் கூடிய எந்தவொரு புதிய விடயமும் இல்லை என்று தான் கருதவேண்டியுள்ளது.


யுத்த வெற்றியும், அனைவரையும் அடக்கி அமர்த்தியுள்ள சாதுரியமும், பலவீனமான பிளவுண்டுள்ள எதிர்க்கட்சிகளும் அரச தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பொறுத்தவரை வெற்றி என்பதையும் தாண்டிய மாபெரும் வெற்றி ஒன்றைப் பற்றிய ஏன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பற்றிய கனவைத் தோற்றுவித்திருக்கின்றன. 


ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற (திட்டமிட்டு??) பிரம்மாண்ட வெற்றி தந்துள்ள மாபெரும் நம்பிக்கையும், எதையும் சாதிக்கலாம் என்ற உற்சாகமும் கூட இவற்றுக்கு ஒரு காரணம் என்பதை நாம் சுட்டிக் காட்டியே ஆகவேண்டும்.


அண்மைய சுயாதீனக் கருத்துக் கணிப்பொன்றின் அடிப்படையில் ஆளும் தரப்புக்கு 135 ஆசனங்கள் கிடைக்குமாம்.மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற தேவைப்படும் மேலதிக 15 ஆசனங்கள் வழமையான பண மாற்றல்கள்,கட்சி உடைப்புக்கள்,பதவி பரிசளிப்புக்கள் என்ற ராஜபக்ச யுக்திகளால் இலகுவாகப் பெற்றுக் கொள்ளப்படும் என்று சொல்லியா தெரிய வேண்டும்?



இங்கே தான் ஒற்றுமையின் குரலும்,பிரதிநிதித்துவத்தின் முக்கியமும் எம் எல்லோருக்கும் தெரியவேண்டும்.
எண்ணிக்கையளவில் தமிழர்,முஸ்லிம்கள் என்று எல்லாக் கட்சிகளையும் சேர்த்து எண்ணினாலும் வரும் என்றாலும் கொள்கைகள் எந்தக் கட்சியின் பால் பட்டன, தனித்துவம் என்பதெல்லாம் தேசிய,பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்து வருவதைவிட, தத்தம் இனத்தின் கட்சிகளில் இருந்துவரும் போது வலிமையையும், நியாயமும் பெறும்.  


வடக்கிலும், கிழக்கிலும்,தென் கிழக்கிலும் திட்டமிட்டபடி வாக்குப் பிரிப்புக்களுக்காகப் பல முனை மோதல்களை அரச தரப்பு ஏற்படுத்தியுள்ளது.அது பற்றி நான் முன்பே தந்த பதிவிலே சொல்லி இருந்தேன்.


கிழக்கிலும் வடக்கிலும் அரசின் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாகவே வாக்குகள் செல்லும் என்று எதிர்பார்த்தாலும், கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு வாரி எடுத்தது போலவோ,முஸ்லிம் காங்கிரஸ் அள்ளி எடுத்த ஆசனங்கள் போலவோ இம்முறை கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.


இப்படிப்பட்ட இலகுவான வெற்றி சூழ்நிலை ஒன்று தென்பட்டாலும் கூட ஆளும் தரப்புக்களுள்ளேயே அதிகம் முட்டல்கள் மோதல்கள்.எல்லாம் விருப்பு வாக்குகள் செய்யும் வேலை.
சட்ட விரோத பிரசார யுக்திகள்,அளவுக்கதிகமான தேர்தல் வன்முறைகள்,கட்டுப்பாடில்லாமல் அரச வளங்கள்,சொத்துக்களை இம்முறை பிரசாரத்தில் ஈடுபடுத்தியும் கூட தேர்தல் ஆணையாளர் படு அமைதி.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொங்கி வெடித்து,அதிருப்தி காட்டி பின்னர் காத்துப் பொய் அடங்கிப் போன அனுபவம் இருப்பதால் இம்முறை ஆரம்பத்திலிருந்து கப்சிப்.
அப்படி இருந்தால் கூடப் பரவாயில்லை.
இடையிடையே தேர்தல்கள் ஆணையாளர் தன்னுடைய கண்டிப்பான அறிக்கைகள் என்று சில காமெடிப் பீசுகளை வெளியிட்டு சிரிப்புக்கிடமாகிப் போனார்.
விளம்பரப் பதாகைகள்,சுவரொட்டிகளை அகற்றக் கால எல்லை வகுத்து அதை அரசியல்வாதிகளும் கணக்கெடுக்காமல்,போலீசும் நிறைவேற்றாமல் இப்போது இறுதிக் கால எல்லையாக ஐந்தாம் திகதியை (இன்று) அறிவித்திருக்கிறார்.


இதிலே மாபெரும் வேடிக்கை இன்றோடு எல்லா ஊடக பிரசாரங்களும் முடிவுக்கு வருகின்றன.நாளையுடன் அனைத்துவித பிரசாரங்களும் முடிவடைகின்றன.இவ்வளவுகாலமும் இந்த வீதியோர தேர்தல்கால அரசியல் குப்பைகளை அகற்ற முடியாத பொலீசாரால் இன்றைக்குள் இவற்றை எப்படி அகற்ற முடியும் என்பது தான் முக்கிய கேள்வி.


அகற்றாவிட்டால் போலீசாருக்கு வழங்கப்படவிருக்கும் எஞ்சிய கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்ற எச்சரிக்கை வேறு தேர்தல் ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ளது.


கொழும்புக்குள் வந்தால் யாரோருவருக்கும் பைத்தியம் பிடிக்காத குறை தான்.ஒரு சுவர் கூட மீதமில்லாமல், விளக்குக் கம்பங்கள்,மின்சார,தொலைபேசிப் பெட்டிகளையும் கூட மூடிக் கொண்டு சிரிக்கிறார்கள் வேட்பாளர்கள்.


ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரிதாய் எதிர்பார்க்கப்பட்ட ஜெனரல் பொன்சேகா இம்முறை தேர்தலில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் கொழும்பில் இரு ஆசனங்களோடு மட்டும் போய்விடுமா என்ற சந்தேகம் எனக்கு..

ரணில் விக்ரமசிங்க - வெற்றியைப் பற்றியே யோசிக்க முடியாத ஒருவராகவே மக்களால் பார்க்கபடுகிறார்.
ஜனாதிபதியின் திட்டமிட்டு கட்டி எழுப்பட்டுள்ள ஆளுமைக்கு முன்னால் வேறு யாரும் இப்போதைக்கு நிற்க முடியாது.

இதே போல அவரது சகோதரர் பசில் கம்பகாவில் இருந்தும் ,மகன் நாமல் ஜனாதிபதியின் சொந்த இடம் ஹம்பாந்தோட்டையில் இருந்தும் திட்டமிட்டு பிரசாரப்படுத்தப்பட்டு வெற்றிகளை உறுதிப்படுத்தி அடுத்த பரம்பரையின் அடித்தளத்தை உறுதி செய்துள்ளார்கள். 




உடல்நலக் குறைவால் வீட்டிலிருப்பதால், இரத்தப் பரிசோதனைக்காகக் கொஞ்சம் வெளியே போய் வந்தால் இன்னும் புத்தம் புதியதாய் சுவரொட்டிகள்.கிழிக்க கிழிக்க புதிது புதிதாய் வந்துகொண்டே இருக்கின்றன.
இவ்வளவு பணம் கொட்டி வருவோர் எல்லாம் சேவைகள் மட்டுமா செய்யப் போகின்றனர்?


கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்கள்.இவற்றுள் பெரும்பான்மை வாக்குகளை எடுக்கும் கட்சிக்கு ஆகக்கூடியது 11 ஆசனங்கள் கிடைக்கலாம்.
ஐக்கிய தேசியக் கூட்டணியில் என்றால் இரு தமிழ் பேசும் தெரிவுகள் இலகுவாக இருக்கிறார்கள்
குமரகுருபரன் மற்றும் பிரபா கணேஷன்.அவர்களது தலைவர் மனோ கணேஷன் இம்முறை மத்திய மாகாணத்தில் கண்டியில் போட்டியிடுகிறார். இது ஒரு விதமான சாணக்கியத் தனமே.காரணம் மனோ கணேசனுக்கு என்று இருக்கும் வாக்குவங்கியை இவர்கள் இருவருக்கும் வழங்கி கண்டியிலும் தம் கட்சியின் தடம் பதிக்கும் முயற்சியை எடுத்திருக்கிறார்.


எனினும் குமரகுருபரன்,பிரபா கணேஷன் இருவரும் இதுவரை தனித்துவமாகத் தெரிபவர்களாகவோ,சாதித்துக் காட்ட வாய்ப்புக் கிடைத்தவர்களாகவோ குறிப்பிடமுடியாதவர்கள்.ஆனாலும் களங்கப் படாதவர்கள்.


ஆனால் ஐக்கியதேசியக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கொழும்பிலே கிடைக்கும்? அதிலே இவர்கள் இருவரும் இடம்பிடிப்பார்களா என்பதே இப்போதுள்ள கேள்வி.
காரணம் அரச எதிர்ப்பு வாக்குகளுள் கணிசமானவற்றை பொன்சேக்காவை முன்னிறுத்தியுள்ள ஜ.தே.கூ வும் பிரிக்கவுள்ளது.


அமரர் மகேஸ்வரன் இருந்தபோதிருந்த வாக்கு உடைபடும் பிரச்சினை இப்போது இல்லாத போதிலும், தென் கொழும்பு வாக்காளர்களின் வாக்குகள் கொஞ்சம் தளம்பலடையலாம்.


மறுபக்கம் ஆளும் தரப்பைப் பார்த்தால் மலையக மக்கள் முன்னணி சார்பாக அமைச்சர் ராதாகிருஷ்ணன், தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ரவிச்சந்திரன் (இவர் யார்? என்ன செய்தார்?)ஆகியோர் நிற்கிறார்கள்.  


ராதாகிருஷ்ணன் இரு தடவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.எனினும் இரு முறையும் தேசியப் பட்டியல் மூலமாகவே.முதல் தடவை தேர்தல் களம் காண்கிறார்.
நல்லவர்,நாணயமானவர் எனப் பெயரெடுத்தவர்.உதவி எனக் கேட்கும்போது பலருக்கும் உதவியுள்ளார்.கைதான பல இளைஞர்களை விடுவிக்கப் போராடியவர்;பல முயற்சிகளை எடுத்தவர்.


தனிப்பட்ட முறையில் என்னுடன் தொடர்புகொண்ட பலரை இவரிடம் அனுப்பி பலரை காவலில் இருந்தே வெளிஎடுத்துள்ளேன்.தனிப்பட்ட முறையில் என் விடுதலைக்கும் இவரது குரல் உதவியாக இருந்தது.
அரசு தரப்பில் இருந்தபோதிலும் கூட அரசின் குறைகளை ஏற்றுக் கொள்ளும் ஒரு கண்ணியவான்.


என்னைப் பொறுத்தவரை ஆளும் தரப்பில் இவர் தெரிவு செய்யப்படும் சத்தியம் குறைவேயானாலும் கூட, பதவிக்காலத்தில் சாதித்துக் காட்டியவர் என்பதனால் வெற்றிலை சின்னத்தில் இவருக்கு மட்டும் விருப்பு வாக்குகளை அளிப்பதன் மூலம் கணிசமான வாக்குகளைப் பெற வைத்து ஏனைய முன்னணி தலைகளை முந்தவைக்கலாம்.


சுசில் பிரேமஜயந்,விமல் வீரவன்ச, பவுசி, தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, துமிந்த சில்வா, சுமதிபால, ஜீவன் குமாரதுங்க, ரோகித போகொல்லாகம, சம்பிக்க ரணவக்க, காமினி லொகுகே என்று அடுக்கடுக்காக லட்ச வாக்குக் குவிப்பு பேர்வழிகள் வரிசையில் முன்னின்றாலும், வாக்களிக்கும் ஒட்டுமொத்தப் பேரும் விருப்புவாக்குகளில் மற்றவற்றை வேறு யாருக்கும் வழங்காமல் ராதாகிருஷ்ணனுக்கு மட்டும் வழங்கினால் போதும்.


இதனால் தான் அதிகமாக ஆளும் தரப்புக்குள்ளேயே இந்தக் கோர மோதல்கள்.தமக்குள்ளேயே கொலை வெறித் தாக்குதல்களை நடத்திக் கொள்கிறார்கள்.
அண்மையில் ஒரு சியி நிகழ்ச்சியில் குறித்த இரு வேட்பாளர்கள் தத்தம் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு நேரடியாகவே மோதலை ஊக்குவித்த கண்கொள்ளாக் காட்சியை என் நண்பர் ஒருவர் படமாக்கி எனக்குக் காட்டி இருந்தார்.


பாவம் அப்பாவி அடியாட்கள்.
உங்க புள்ள குடியைப் படிக்க வையுங்கப்பா..




ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்போரும் விருப்பு வாக்கு விஷயத்தில் மிகக் கவனமாயிருத்தல் வேண்டும்.இல்லையேல் பிரதிநிதித்துவம் சிதறிவிடும்.


ஆனால் எரியும் வீட்டில் பிடுங்கியதெல்லாம் லாபம் என்று கொழும்பிலே ஆனந்தசங்கரியாரின் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திலே (எப்படிப்பட்ட பெருமை கொண்ட சின்னம் அது) பெயர் அறியாத, கட்சியினதோ, வரலாற்றினதோ பின்னணி அறியாத ஒரு கூட்டம் வாக்குக் கேட்கிறது.


இதில் ஒரு சிலர் நான் அடிக்கடி காண்கின்ற முகங்கள்.வர்த்தகமே நோக்கம் கொண்ட வட்டங்கள்.இவ்வளவு காலமும் சங்கல முகம் காட்டி சில்லறை பிஸ்னெஸ் செய்த ஒருவர் தமிழில் வாக்குப் பிச்சை கேட்கிறார். கொதிக்கிறது.


முஸ்லிம்களைப் பொறுத்தவரை கொழும்பில் தெரிவு சிக்கல்களோ வாக்கு சிதறல்களோ இல்லை எனவே நம்பலாம்.
இந்த சிக்கலை ஏற்படுத்தாமல் முஸ்லிம் காங்கிரஸ் தன் மரசின்னத்தை இம்முறை எடுக்காமல் எல்லா இடங்களிலும் ஐ.தே.மு வின் யானையிலேயே சவாரி செய்கின்றார்கள்.
இதன்மூலம் கடந்த முறை பெற்ற ஐந்து இடங்களை விடக் கூடுதல் இடங்களைக் கைப்பற்ற முயற்சிக்கின்றார்கள்.


முஸ்லிம் அரசியல்வாதிகள் தம் இனத்தவரிடம் மட்டுமன்றி மற்ற இனத்தவரிடமும் செல்வாக்குப் பெற்றுள்ளார்கள்.சேவைகளையும் களங்கமின்றி செய்த பலர் உள்ளார்கள்.
அதிலும் முசம்மில் (ஐ.தே.மு உறுப்பினர்)நல்லதொரு முன்னுதாரணமாக மக்களுடன் ஒப்பந்தம் செய்து அதை வெளியிட்டுள்ளார்.வெற்றி பெற்ற பிறகு எந்தவொரு சலுகை,பதவிக்காகவும் கட்சி மாறமாட்டேன் என்று.


மற்றவர்களும் இதைப் பின்பற்றலாமே.ஓகோ.. பின்னர் சிக்கலோ? ;)


மலையகத்தில் இம்முறை பாரம்பரியக் கட்சிகள் அண்மைக்காலத்தில் கண்டுவரும் பாரிய சவால்களை இன்னும் அதிகமாகக் காணவுள்ளன.


குறிப்பாக இம்முறையும் தம் சேவல் சின்னத்திலல்லாமல் ஆளும் தரப்பின் வெற்றிலையில் களம் காணும் தொண்டமானின் தொழிலாளர் காங்கிரசுக்கு தம் இருப்பை நிலை நாட்டவேண்டிய கட்டாயம்.
அவரது சொந்த மாவட்டம் நுவர எலியாவிலே வழமையான வைரிகளான மலையக மக்கள் முன்னணி ஒரு பக்கம், அண்மைக்காலத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் சதாசிவம்,திகாம்பரம் ஆகியோர் என்று ஒரு ரணகளம் தான்.அனல் பறக்கிறது அங்கே.


மலையக மக்கள் முன்னணியின் மறைந்த தலைவர் சந்திரசேகரன் இல்லாதது நிச்சயம் ஒரு வெற்றிடம் தான்.அவரது மனைவியார் போட்டியிட்டாலும்,அனுதாப வாக்குகள் வந்தாலும் அடுத்தக்கட்டத்தினர் தெரிவாகும் வாய்ப்புக்கள் குறைவு என்கின்றனர் அங்குள்ளோர்.


மலையகத்தின் இன்னொரு பரபரப்பு மாவட்டம் கண்டி.
மனோ கணேஷன் ஒரு பக்கம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு பக்கம்.வழமையான கண்டியின் பரபரப்பு மைந்தர்கள் என்று தேர்தல் சூடு பிடித்துள்ளது.


இன்னும் நிறைய எழுத ஆசை தான்.உடல் நலம் ஈடு கொடுப்பதாகவும் இல்லை.இன்னும் எழுதினால் நீங்கள் வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.


எந்த இடத்தில் உள்ளீர்களோ, நல்ல படி தீர்மானித்து நல்லவர் ஒருவருக்கு அல்லதில் உள்ளவரில் நல்லவருக்கு வாக்களியுங்கள்.
அதேவேளை தோற்றுப் போகும் ஒருவருக்கு அளிக்கப்படும் வாக்கும் செல்லா வாக்குத் தான் என்பதையும் மறக்காதீர்கள்.


  இந்த தேர்தலின் முக்கியத்துவம் செல்லா வாக்குகளையும்,அளிக்கப்படா வாக்குகளையும் குறைக்கும் என்றும் நம்புகிறேன்.

வடக்கில் வாக்கிருந்தும் வாழ்விழந்தோரை எண்ணி உருகிக்கொண்டே..  

Post a Comment

31Comments

Please Select Embedded Mode To show the Comment System.*