400வது பதிவு..தேர்தல் மசாலா
April 08, 2010
33
நானூறாவது பதிவாம்..பதிவுகளின் எண்ணிக்கை சொல்கிறது. (சில மீள்பதிவுகள் ஆங்காங்கே இருந்தாலும் கூட..)
நல்லது.மகிழ்ச்சி.
இதுவரை பதிவிடுவது அலுக்கவில்லை.சலிக்கவில்லை என்பதும், தொடர்ந்தும் பதிவிடுவது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்பதும் நிறைய நண்பர்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதும் நிறையப் புதிது புதிதாய் வாசிப்பதும் பதிவுலகினால் எனக்குக் கிடைத்த பரிசுகள் எனக் கருதுகிறேன்.
பதிவுலகப் பயணம் தொடரும்.. பதிவுகளும் தொடரும்..
= = = = = = = = = =
இலங்கையில் இன்று பொதுத் தேர்தல்.
நேற்று முன்தினம் வரை திருவிழாப் போல அமர்க்களமாக பரபரப்பாக இருந்த தேர்தல்களம் பிரசாரங்கள் முடிந்தபிறகு நேற்றிலிருந்து அடங்கிவிட்டது.இன்றும் தேர்தல் நடக்கிறதா எனுமளவுக்கு கொழும்பில் அமைதி.
வாக்களிப்புக் கூட மிக மந்த கதி என அறிந்தேன்.எங்கள் அலுவலகத்திலும் வழமையாக விரலில் மையோடு வரும் பலரும் சுத்தமான விரலோடு வந்திருந்தார்கள்..போகும்போது பார்க்கலாம் என்று கொஞ்சம் அலுப்பாகவே பலர் சொன்னதைக் கண்டேன்.
மூன்று மணியளவில் தான் எனக்கு வாக்களிக்கப் போகும் சந்தர்ப்பம் கிடைத்தது.நான் வாக்களிக்கும் நிலையத்தில் நான் போனபோது என்னுடன் வாக்காளர்கள் நான்கே பேர்.அதிகாரிகள் தான் அதிகம்.
எனது ஜனநாயகக் கடமையை சரியாக நிறைவு செய்தேன்.
இம்முறை மோதிரவிரலில் மை தீட்டினார்கள்.ஆனால் அலுவலகத்தில் ஒரு சிலரை சின்ன விரலில் மைக் கறையுடனும் கண்டிருந்தேன்.
காரணத்தை எனக்கு மை தடவி விட்டவரிடம் கேட்டபோது, ஜனாதிபதித் தேர்தலில் பூசிய மை பலருக்கு அழியவில்லையாம்..(குளிக்கவே மாட்டாங்களோ.. குறைந்தது கை கழுவக் கூட மாட்டாங்களா? அதுவும் இடது கை.. சீ)அதனாலேயே இம்முறை பலருக்கு மோதிர விரலில் மை பூசுகிறார்களாம்.
ஐயா பெரியவங்களே அடுத்த தேர்தல் வருவதாக இருந்தால் கொஞ்சம் இடைவெளி கொடுத்து வையுங்கப்பா..ஒரு கையில் இருப்பது ஐந்து விரல்களே.
என் குடும்ப,நட்பு வட்டத்தில் அநேகமானோர் வாக்களித்திருந்தாலும் கொழும்பைப் பொறுத்தவரை இம்முறை தமிழர்கள் வாக்களித்தது குறைவு என்று தான் கணிக்க முடிகிறது.
தமிழர் மட்டுமல்லாமல் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை கொழும்பில் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தந்த ஏமாற்றம் அல்லது அதிர்ச்சி அதற்கான காரணமாக இருக்கலாம்.
இலங்கை முழுவதுமே இன்று வாக்களிப்பு வீதம் மிகக் குறைவு என்று கண்காணிப்பாளர்கள் சொல்லியுள்ளனர்.நாடு முழுவதும் பாதியளவானவர்களே வாக்களித்துள்ளார்கள்.அதாவது 50 முதல் 52 வீதம் வரையே வாக்களிப்பு இருந்துள்ளது.
வடக்கு-கிழக்கில் இது இன்னும் குறைந்திருக்கலாம்..குறைந்துள்ளது
குறைந்துள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 சதவீதமானோரே வாக்களித்துள்ளனர்.இதை ஜனநாயகம் என எடுக்கலாமா?
தேர்தல் பற்றிய நம்பிக்கை மக்களுக்கு குறைந்திருப்பதையும் அவர்கள் தேர்தல் ஒன்றினை முழு மனதோடு ஏற்கும் காலம் இது இல்லை என்பதையும் தமது வாக்களிப்பின்மை மூலம் அமைதியாகக் காட்டியுள்ளனர் என்று தான் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் இதன்மூலம் தப்பானவர்கள்,பொருத்தமற்றவர்கள் நாடாளுமன்றம் புகுந்துவிடுவார்களோ எனும் அச்சமும் எட்டிப் பார்க்கிறது.
தேர்தல்கள் ஆணையாளர் முதல் முடிவு இன்று நள்ளிரவுக்கு முதல் அறிவிக்கப்பட்டு விடும் என்று உறுதியாக சொன்னது எண்ணுவதற்கு இலகுவாக வாக்குகள் குறைவாகத் தான் இருக்கு என்பதாலா?
இன்னொரு விஷயமும் இங்கே முக்கியமானது.ஐக்கிய தேசியக் கட்சி நேற்றே வலியுறுத்தி இருந்த விஷயம்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியிட்டது போலல்லாமல், இம்முறை தொகுதிவாரியாகக் கிரமமாக வெளியிட்ட பின்னரே மாவட்ட ரீதியாக முடிவுகள் வெளியிடப்படவேண்டும் என்பது.
இது மீறப்ப்பட்டு மாறப்பட்டதுமே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஐயத்துக்குள்ளாக்கியது
இம்முறை பார்க்கலாம்.. எப்படி நடக்குதென்று..
இம்முறை வேட்பாளர்கள் தனித்தனியாகப் பெற்ற விருப்புவாக்குகளையும் வேறு எண்ணி அறிவிக்கவேண்டி இருப்பதால் ஒரு ஒழுங்கில் செல்லாவிட்டால் எல்லாமே குழப்பமாகி விடும்...
கொழும்பில் தேர்தல் மோசடிகள் வன்முறைகள் குறிப்பிடத்தக்களவில் இடம்பெறாவிட்டாலும், இருநூறுக்கு மேற்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளன.
தேர்தல் வன்முறைகள்,மோசடிகளுக்கேன்றே உருவெடுத்தவராக வர்ணிக்கப்படும் மத்தியமாகாண அமைச்சரின் கைங்கர்யம் வழமை போலவே இம்முறையும் நாவலப்பிட்டியில் பெரிய தேர்தல் வன்முறைகள்,மோசடிகளை உருவாக்கியுள்ளது.
ஆனால் வடக்கில் கடந்தமுறை போல இம்முறை வாக்களிப்பு தடுப்பு,பயமுறுத்தல்கள் இம்முறை இல்லாதது (அல்லது நான் இதுவரை கேள்விப்படாதது ஆறுதல்)
ஆனால் வவுனியாவில் சில தடைகள்,அசௌகரியங்கள் இடம்பெற்றுள்ளன.
கள்ளவாக்கு,வன்முறை,சாதக பாதக கணக்குகள் பார்த்து தடுப்பதும் விடுப்பதும் தேர்தலில் பிரிக்கமுடியாத அம்சங்கள் தானே.. எவ்வளவு பார்த்திட்டோம்..இதைப் பெரிதாக சொல்வதற்கு..
கிட்டத்தட்ட முடிவுகளும் ஊகித்தே இருக்கின்ற நிலையில்..
சரி இனி என்ன பேசியென்ன.. வாக்குகளை எண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.. இன்னும் சில மணிநேரங்களில் முடிவுகள் வர ஆரம்பிக்கும்.. பரபரப்பான 24 மணித்தியாலங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டே பெங்களூர்-டெக்கான் அணிகளின் IPL போட்டியை இப்போதைக்கு ரசிக்கிறேன்..