January 22, 2014

ஜில்லா

யாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகும், ஜில்லா வந்து இருவாரம் ஆகும் நேரத்திலும் சளைக்காமல் ஜில்லா பற்றி தில்லா எழுதுகிறேன் என்றால் ஒரு பின்னணி இருக்கவேண்டுமே...

ஒன்றல்ல, இரண்டு..

வீரம் பற்றி எழுதிய பின் ஜில்லா பற்றி எப்போ எழுதுவீங்க என்று கேட்டு வந்த அன்புக் கோரிக்கைகள்.
மொக்கைக்கும் சராசரிக்கும் இடையில் என்று போட்ட என் ட்வீட்டின் காரணம் அறிய விரும்பிய சில ரசிக விருப்பங்கள்.

படம் பார்த்து முடிந்தவுடன் போட்ட ட்வீட்...

ஜில்லா - இழுவை.விஜய்க்கு போலீஸ் கெட் அப் தவிர எல்லாமே செட் ஆகும் கதை.ஆனால் மொக்கைக்கும் சராசரிக்கும் இடையில் ஆடுது. #ஜில்லா - என்னத்த சொல்ல



ஜில்லா ஓரளவாவது ஓட ஒரே காரணம், விஜய் என்னும் மாஸ்.
மற்றும்படி படத்தின் ஏனைய விஷயங்கள் எல்லாம் படு லூஸ்.

ஆனால் மாஸ் விஜய் எப்படித்தான் இவ்வளவு நீண்ட கால அனுபவத்துக்குப் பிறகும் இப்படியான கதைகளை ஏற்று நம்பி நடிக்கிறாரோ என்று அசதியை விட எரிச்சல் வருகிறது.

ஒருவேளை அந்த ஜனா, ஆஞ்சநேயா, ஆழ்வார் காலத்தில் அஜித் புதிய இயக்குனர்களை நம்பி ஏமாந்தது போல விஜயும் இப்போது அதே மாதிரியான ஒரு காலகட்டத்திலோ?

ஆனால் நிறையப்பேர் நினைப்பது போல இயக்குனர் நேசனுக்கு இது முதல் படம் அல்ல. முன்பு  முருகா என்று ஒரு படம் எடுத்திருக்கிறார். அத்துடன் வேலாயுதம் படத்தில் இயக்குனர் ராஜாவின் உதவியாளராம்.

சரி கதை பழசு என்றாலும், விஜய் மாதிரியான ஒரு ஹீரோவுக்கு ஒரு தீர்மானிக்கப்பட்ட கட்டமைப்புக்குள்ளேயே பாத்திர வடிவமைப்பு இருந்தாலும் படமாக்கலாவது சுவாரஸ்யமாக (வித்தியாசமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை) இருக்கவேண்டுமென்று இயக்குனருக்கோ, விஜய்க்கோ கூட இருக்கும் அல்லக்கைகளுக்கோ கூடத் தெரியவில்லை?

ஜில்லா படம் ஓடுகிறது என்று விஜய் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், அல்லது நம்ப வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சொல்லவேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது.(பிறகு மனசுக்குள்ளே துள்ளாத மனமும் துள்ளும் விஜய் போல குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்கள்)

இது ஒரு விதத்தில் வீரத்தினால் என்றும் சொல்லவேண்டியுள்ளது.
வீரம் ஓடிக்கொண்டிருப்பதால் ஜில்லா ஓடுகிறது, ஜில்லா மோசமில்லை, சுமார் என்று சும்மாவாவது சொல்லவேண்டிய ஒரு காலத்தின் கட்டாயம்.

ஜில்லா, வீரம் இரண்டுமே ஊகிக்கக் கூடிய, ஏற்கெனவே பார்த்த முன்னைய படங்களின் சாயல்கள் கொண்டவை; இரு பெரும் ஹீரோக்களின் படங்கள் என்று இருந்தாலும் பெரிய, முக்கிய வித்தியாசங்கள் திரைக்கதை + பாத்திரப் பொருத்தம் + படத்தை இயக்கிய விதம்.


விஜய்க்கு போலீஸ் கெட் அப் செட் ஆவதில்லை என்று தெரிந்தும் போலீசாக வரும் இந்தப் பாத்திரத்தை எப்படித்தான் ஏற்கத் துணிந்தார் என்பது தான் கேள்வி.
எத்தனை தடவை போலீஸ் வேடம் ஏற்று விஜய் சிரிப்பு போலீஸ் ஆகியிருக்கிறார் எண்ணிப் பாருங்கள்.

"அதென்ன எல்லா ஹீரோவுக்குமே போலீஸ் வேடம் பொருந்துதே, ஏன் விஜய்க்கு மட்டும் பொருந்துதில்லை ?" அண்மையில் விஜய் ரசிகர் ஒருவர் அழாக்குறையாக என்னிடம் கேட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் சொல்லப் போய், என் வீட்டுக்கு முன்னாலும்  ஆர்ப்பாட்டம் நடந்தாலும் பரவாயில்லை.

ஒரு போலீஸ் வேடம் தாங்கும்  நடிகர்களைப் பாருங்கள்.
சூர்யா, விக்ரம், கமல் இந்த அவதாரங்களை விடுங்கள். இவர்கள் எந்தச் சிறு பாத்திரமாக இருந்தாலும் தங்களை உருக்கி வார்த்து நடிப்பவர்கள்.
ஆனால் அஜித், கார்த்தி போன்றோர் அண்மையில் நடித்தபோது கூட பொருந்தியிருந்ததே..

வேறொன்றுமில்லை, பாருங்கள் ஜில்லாவில் விஜய் போலீஸ் ஆகிறாராம். ஆனால் போலீஸ் பயிற்சிக்கு வேடிக்கையாகப் போனால் என்ன, சீரியஸ் போலிஸ் ஆக, சின்சியர் ஆக அவர் ஒரு சாமி போல, துரைசிங்கம் போல மாறி நெஞ்சை நிமிர்த்தி லெக்சர் குடுக்கும்போது கூட அந்தக் குறுந்தாடி கெட் அப்பை மாற்றி நம்பும் மாதிரி இருக்கவேண்டாம்?
அதே படத்தில் பரோட்டா சூரி கூட போலீஸ் என்றால் பொருத்திய மாதிரித் தெரிகிறாரே.

அடுத்து இயக்குனர் விட்ட பெரிய பிழை, அல்லது அது இயக்குனர் நேசன் குழம்பிய விஷயமாகவும் இருக்கலாம்.

விஜயை எப்படிக் காட்டுவது?
போலீசாக மாறிய பிறகும் அதே ஜாலி விஜயாகக் காட்டுவதா, அல்லது கொஞ்சமாவது விறைப்பாக மாற்றுவதா என்று.
இதனால் நிமிடத்துக்கு நிமிடம் சந்திரமுகியாகவும் கங்காவாகவும் கங்காரு போல விஜய் தாவுவதாக ஒரு உணர்வு.

இதனால் அடிக்கடி போக்கிரி விஜய் ஞாபகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

ஆனால் துள்ளல், எள்ளல் விஜய் கலக்குகிறார்.
அவரது துடிப்பும், இளமையும், குறும்பும் நடனமும் வேறு யாராலும் நிகர்க்க முடியாதது.

அதையே அவரது plus pointsஆக வைத்தே அழகாய் இந்தக் கதையைப் பின்னியிருக்கலாம் நேசன். பிளந்து கட்டியிருக்கலாம்.

அடுத்து மோகன்லால்....

சிவன்..இல்லை இல்லை அவர் சொல்வதைப் போல் ஷிவன்...

காலாகாலமாக தமிழ் சினிமாவில் ராஜ்கிரண், ரகுவரன், பிரகாஷ் ராஜ் ஏன்அண்மையில் இதே விஜயின் தலைவாவில் சத்யராஜ் ஏற்ற அரதப் பழசான தாதா பாத்திரம்.

இதற்காக மினக்கெட்டு ஏன் இந்த மலையாள சிங்கம் தமிழுக்கு வந்து மொக்கை சுண்டெலியாக மாற வேண்டும்?

சரி மோகன்லால் கிடைத்தாலும் கிடைத்தார் அவருக்கேற்ற கெத்தை பாத்திரத்திலாவது வைக்கவேண்டாம்?

இதே போன்றதொரு பாத்திரத்தில் அஜித்தின் தீனாவில் சுரேஷ் கோபிக்கு இருந்த இமேஜின் கால்வாசி கூட இல்லை.
கிட்டத்தட்ட இன்னொரு வில்லன் ஆக்கியுள்ளார்கள்.
பாதி வசனங்களில் மலையாள வாசனை.

இப்படியான இரண்டு தாதா படங்களில் இலகுவாக ஊகிக்கக்கூடிய விடயங்கள் படம் முழுக்க.

சில எதிரிகள், சில துரோகிகள், படத்தின் எப்போது எப்படி பெரிய தாதாவும் சின்ன தாதாவும் ஏன்மோதிக்கொள்வார்கள்? எப்படி சேர்வார்கள் என்ற formulaவில் அட்சரம் பிசகாமல் எடுத்து எங்களையெல்லாம் தேர்ந்த சினிமா பார்வையாளர்களாக மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் நேசன்.
சின்னப் புள்ளத் தனமா இல்லை?

விஜயின் அறிமுகக் காட்சியிலேயே தீனா படத்தின் அறிமுகக் காட்சியை ஞாபகப்படுத்திவிடும் இயக்குனர், விஜய்க்கு போலீசையும் காக்கி சீருடையையும் பிடிக்காமல் போவதற்கான  (முன்னைய தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களின் புஸ் நெடி வருகிறது) காரணத்தை நீட்டி முழக்கி சொதப்புகிறார்.

அதிலும் ஜில்லா என்ற பெயருக்கு சொல்லும் விளக்கம் இருக்கே... (அந்த விளக்கம் வில்லன்களுக்கு இல்லீங்கோ, எங்களுக்கு) தெய்வமே....

வீரம் படத்தில் தம்பி ராமையாவை எப்படி இயக்குனர் சிவா பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார்?
இங்கே அந்த அற்புத நடிகரை சும்மா வீணடித்திருக்கிறார்.

சம்பத் வழக்கம் போலவே அழுத்தமாகக் கலக்கி இருக்கிறார்.


காஜல் அகர்வாலுக்கு வழமையான விஜய் பட கதாநாயகியின் வேலை. கொஞ்சமாக நடித்து நிறைய கண்ணால் பேசி, பாடலுக்கு எல்லாம் அழகாக ஆடி...

ஆனால் விஜய் தான் படம் முழுக்க..

இதுவே தான் புதியவர் நேசனைத் தடுமாற வைத்திருக்கிறது போலும்.
விஜய் ரசிகரை (மட்டும்) குறிவைத்து அவர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்று படக்கதையைத் திருத்தியிருப்பார் போலும்.

மோகன்லாலின் பாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் வெயிட் கொடுத்து, விஜய் போலீசாக வந்த பிறகு ஒரு சரேல் மாற்றத்தையும் கொடுத்திருந்தால் துப்பாக்கி போல விஜய்யை ஜில்லாவும் ஒரு தூக்கு தூக்கியிருக்கும்.

அதுசரி, கண்டாங்கி சேலைக்கும் - ஜப்பானிய கிமோனோ உடைக்கும் என்னா சம்பந்தம்?
வைரமுத்து இழைத்து இழைத்து எழுதி, இமானின் நயந்து ரசிக்கக் கூடிய இசையில் விஜயும் ஷ்ரேயா கோஷலும் பாடி உருகவைத்த அந்தப் பாடலை எவ்வளவு அழகாக எடுப்பார்கள் என்று கற்பனை பண்ணி வைத்திருந்தேன். சொதப்பியிருக்கிறார்.

எனது எதிர்வுகூறல்கள் jinx ஆவது கிரிக்கெட்டில் மட்டும் தான் என்று நினைத்தேன்... ஜில்லா பாடலுக்கும் jinxஆஆ???

கண்டாங்கி பாடல் பற்றி பாடல் வெளிவந்த இரவு போட்ட status

விஜயினதும் காஜலினதும் அழகான அசைவுகளும் கண்களின் பாஷையும் தான் எஞ்சியிருக்கு.

ஆனால் விசிலோடு ஆரம்பித்து விசிலோடு முடிகிற விரசாப் போகையிலே போக்கிரி வசந்த முல்லையை ஞாபகப்படுத்தினாலும் ரசனையுடன் படமாகியிருக்கிறது.
விஜய்யின் ரசிக்கக் கூடிய குறும்புகளுடன் தமிழரின் பண்டைய நடன, கலையம்சங்கள் பாடல் முழுக்க வந்துபோகின்றன.

விஜய் எங்களை மறந்து ரசிக்கச் செய்கிற இடங்கள் தான் படத்தின் பெரிய ஓட்டைகளை ஓரளவுக்கு அடைத்து மொக்கை லெவலில் இருந்து சராசரிக்கு எடுத்துச் செல்கிறது.
அந்த அலட்சியமான கெத்து, அனாயசமான சண்டைக் காட்சிகள், காஜலுடனான குறும்பு காட்சிகள் (ஆனால் டிக்கி லோனா பிடிகள் எல்லாம் கொஞ்சம் அதிகமானவை தான்.. மாறி மாறி அமுக்குகிறார்களாம். சிரிக்கணுமோ?) - அதிலும் அந்த தாத்தா கதை கலக்கல், என்று விஜய் முத்திரைகள் பாராட்டுக்குரியவை.

இப்படியே ரசித்து விஜய்யிடம் ரசிகர்கள் (விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல) எதிர்பார்க்கும் விடயங்களையும் விஜய் சிறப்பாக செய்யக் கூடிய விடயங்களையும் இணைத்து இழைத்து ஜில்லாவை நேசன் இயக்கியிருந்தால்....
அதுசரி நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.

விஜய்யும் ஜெயலலிதா குழப்பங்கள், தடை வருமோ வராதோ, பஞ்ச் வசனப் பயம் என்று குழம்பி குழம்பியே இருந்திருப்பதால் முழு ஈடுபாட்டோடு இருந்திருக்க மாட்டார் போலும். பாவம்.

ஜில்லா - இதுக்கு மேல என்ன சொல்ல நல்லா.


5 comments:

Anonymous said...

boss... neenga ennathan film mokkanu sonnalum, jilla super hit... ungala mathiri vijay haters'ku padam pidikathu...

Anonymous said...

Correct Anna............ jilla mokkai.... over buildups... As usual.......

Anonymous said...

Overall its flop.... Flop....

Shanojan.A said...

/// ஒரு போலீஸ் வேடம் தாங்கும் நடிகர்களைப் பாருங்கள்.
சூர்யா, விக்ரம், கமல் இந்த அவதாரங்களை விடுங்கள். இவர்கள் எந்தச் சிறு பாத்திரமாக இருந்தாலும் தங்களை உருக்கி வார்த்து நடிப்பவர்கள்.///

அது...! அங்கதான் நிக்கிறம் அண்ணா நீங்களும் நானும்...

Anonymous said...

http://www.ibtimes.co.in/articles/535928/20140125/veeram-box-office-collection-jilla-ajith-vijay.htm

within 10 days, jilla 73crore, veeram 69crore

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner