January 20, 2014

வீரம்

அண்மைக்கால ஆணி பிடுங்கல்கள் அமோகமாக இருப்பதால் இதுவும் லேட்டாப் பார்த்த படம்.
எனவே விமர்சன வகையில் சேர்க்காமல் கருத்துப்பகிர்வாக எடுத்துக்கொள்வீர்கள் என்று தெரியும்.

அஜித் ரசிகன் என்று முத்திரை குத்தாமல் (குத்தினாலும் பரவாயில்லை) ரசித்த விஷயங்களில் உடன்பாடுள்ளவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.வீரம் - சிறுத்தையில் தன் திரைக்கதை வேகம், கதையோடு  நகைச்சுவை, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் + அழுத்தம் போன்றவற்றை நேர்த்தியாகப் பயன்படுத்தினால் பழகிய கதை + களமாக இருந்தாலும் படம் பெறும் வரவேற்பு என்பதை நிரூபித்தவர் இயக்குனர் சிவா.

தமிழ் சினிமாவில் காலாகாலமாகத் தெரிந்த அதே சென்டிமென்ட்கள், அதே மாதிரியான ஹீரோக்கள், வில்லன்கள், அதே மாதிரி காதல், இப்படி ஏகப்பட்ட 'அதே மாதிரி'கள் இருந்தாலும் சில படங்கள் மட்டும் ஜெயிக்கும் மந்திர formula பல இயக்குனர்கள், முன்னணி நடிகர்களுக்குப் புரிவதில்லை.

இதைக் கை வரப் பெற்ற வெகு சில இயக்குனர்கள் தங்கள் mixingஐ பக்குவமாகச் செய்து ரசிகர்களை ஈர்த்து ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
கொஞ்சம் miss  ஆகினால் கூட மொக்கை ஆகிவிடும் அபாயம் இருப்பதால் உண்மையில் K.S.ரவிக்குமார், ஷங்கர், முன்னைய சுரேஷ் கிருஷ்ணா, P.வாசு, A.R.முருகதாஸ் இன்னும் பலர் உண்மையில் அந்தந்தக் காலகட்டங்களில் பாராட்டக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சிறுத்தை சிவாவும் தனது இரண்டாவது ஆனால் முக்கிய பரீட்சையில் சித்தி பெற்றுவிட்டார்.

வழமையாக கோட் சூட்டில் யுவனின் பின்னணி இசையுடன் கம்பீர நடை நடக்கும் தலயை வேட்டி சட்டையில் DSPயின் கதறும் இசையில் கெத்தான நடை நடக்க வைத்திருக்கிறார்.

அதுவும் கலக்கலாகத் தான் இருக்கிறது.எனக்குப் பொதுவாகவே stylish making, நட்சத்திர அந்தஸ்துள்ள, பஞ்ச் வசனங்கள் சொல்வதற்குப் பொருத்தமானவர்கள் சொன்னால் பொருந்துகிற இப்படியான ஹீரோயிசத் திரைப்படங்கள் நேர்த்தியாகப் படம் எடுத்தால் மட்டுமே ஒட்டிக்கொள்ளும்.
இதனால் வீரம் ஆரம்பம் முதல் அச்சுப் பிசகாமல் ஒட்டிவிட்டது.

படம் முழுக்க நட்சத்திரக் கூட்டம் அலையடித்தாலும் அஜித், தமன்னா, சந்தானம், நாசர், அதுல் குல்கர்னி, தம்பி ராமய்யா ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஏனையோருக்கான பாத்திரப் பங்களிப்பு அளவோடு பகிரப்பட்டிருப்பது தெளிவான திரைக்கதையோட்டத்துக்கு உதவியிருக்கிறது.

ஏனைய முக்கியமான பெயர் அறிந்த நட்சத்திரங்கள் படத்தின் வெயிட்டுக்கு உதவியிருக்கிறார்கள் போலும்.


ஊகிக்கக் கூடிய திருப்பங்கள் இருந்தாலும் கூட அதை எடுத்திருக்கும் விதமும் அஜித்தின் அலட்டிக்கொள்ளாத ஆனால் ரசிக்கக் கூடிய actionஉம் வீரத்துக்கு வெற்றி தான்.

DSPயின் இசையை இரைச்சல் என்று பலர் சொன்னாலும் இப்படியான படங்களுக்கு படத்துடன் பொருந்துவது இவர் இசை தான் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பாடல்கள் ஒரு பக்கம், 'ரத கஜ துராதிபதி'  theme பொருத்தமான இடங்களில் பொங்கி வருகிறது.
ஒளிப்பதிவு புதியவர் வெற்றி. கலக்கி இருக்கிறார். இனி அமோகமாக வாய்ப்புக்கள் குவியலாம்.
ஒவ்வொரு காட்சியின் தன்மையறிந்து நிறங்களையும் கமெராக் கோணங்களையும் மாற்றியிருப்பதில் அசத்தியிருக்கிரார்.

'இவள் தானா' பாடலில் சுவிட்சர்லாந்து அழகை அப்படியே உள்வாங்கி அள்ளித் தெளித்திருப்பது ரசனை.
அதில் ஒரு சில நிமிடங்கள் பின்னால் பனி மலைகளின் வெண்மையுடன் அஜித், தமன்னா இருவரும் வெள்ளை ஆடையில் வரும் காட்சி கொள்ளை அழகு.
(ஆனால் இதே பாடல்களைப் படத்தின் தன்மையுடன் கிராமிய இயற்கை அழகுடன் எடுத்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்காதா சிவா?)இன்னொரு பலம் பரதனின் சுட்டு சாணை தீட்டிய கத்தி போன்ற வசனங்கள்.
நறுக் + சுருக்.
 நீட்டி முழக்காமல் நெஞ்சில் நிற்பது போல் அளவாக அளந்து எழுதியிருக்கிறார்.
அதிலும் அஜித் முன்னைய பஞ்ச் படங்கள் போல அடுக்கடுக்காமல் பேசாமல் அளவோடு அழுத்தமாகப் பேசியதை ரசிக்கலாம்.
"பெரிய மீசையோட வேற வந்திருக்கிறாய். பஞ்ச் வசனம் பேசாமப் போனா நல்லா இருக்காது"
இப்படி சில நக்கல் இடங்களும் நல்லாவே இருக்கு.

"சோறு போட்டவ எல்லாம் அம்மா; சொல்லிக் குடுத்தவர் எல்லாம் அப்பா" ரக டச்சிங்கும் உண்டு.

முரட்டுக் காளையை தழுவி இருக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும், வானத்தைப்போல, ஆனந்தம் போன்ற 'குடும்ப'திரைச் சித்திரங்களையும் அல்லவா அளவாகக் குழைத்திருக்கிறார்கள்.

puzzle விளையாட்டில் வந்து விழும் set pieceகள் போல அஜித் - தமன்னா,  வில்லன்கள், சந்தானம் & தம்பி ராமையா ஆகியோரும் மட்டுமல்லாமல் சண்டை இயக்குனர், ஒளிப்பதிவாளர்,கலை இயக்குனர், எடிட்டர் ஆகியோரையும் நாம் இயக்குனர் சிவாவுடன் சேர்த்தே பாராட்ட வேண்டும்.

சண்டைக் காட்சிகள் அனல் பறக்கிறது. புதுமையாகவும் வேகமாகவும் இருப்பது முக்கியமானது.
படம் முழுக்க ஏதோஒவ்வொரு கட்டத்தில் சண்டைகள் வந்துகொண்டே இருந்தாலும் சண்டை பயிற்சியாளர் சில்வாவும், ரிஸ்க் எடுக்கும் அஜித்தும் ரசிக்க வைக்கிறார்கள்.

சந்தானம் இருந்தும், மிக நீண்ட காலத்தின் பின் சந்தானத்தினால் படம் ஓடாமல் அந்த பெரும் பாரம் இல்லாமல் சந்தானம் relaxed ஆக ரசித்து நகைச்சுவை செய்ததாக ஒரு எண்ணம் மனதில்.
கொஞ்சக் காலம் அலட்டியாகத் தெரிந்த சந்தானம் மீண்டும் வீரம் முதல் refresh ஆகியுள்ளார் போலத் தெரிகிறது.
அஜித்தும் இவ்வாறு ஜாலியாக காமெடி செய்து நீண்ட காலம்.
அஜித் இல்லாத காட்சிகளை சந்தானம் நிரப்புகிறார்.


இடைவேளைக்குப் பிறகு தம்பி ராமையாவும் சேர்ந்து கொள்வது கலகலப்புக்கு மேல் சிரிப்போ சிரிப்பு.
தம்பி ராமையா தமிழில் இன்னொரு முக்கியமான பல்சுவை ஆற்றலுள்ள நடிகராக வேகமாக வளர்ந்து வருகிறார்.

வில்லன்களில் அதுல் குல்கர்னி அருமையான ஒரு தெரிவு.
ஹீரோ - வில்லன்கள் மோதலில் பறக்கும் பொறி அசத்தல்.

சிவாவின் சிறுத்தையிலும் வீரத்திலும் இருந்து மசாலா இயக்குனர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

அஜித் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை மாறுபட்ட பாத்திரத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதமாக எவ்வாறு காட்டலாம் என்பதும், இவ்வளவு வேகமான, விறுவிறு காட்சிகளுக்கிடையிலும் சந்தானம் போல தனியாக நின்று சிக்சர் போடக் கூடிய சந்தானத்தை நகைச்சுவை படத்தை மொக்கை போடாமல் எவ்வாறு சுவைக்காக மட்டும் பயன்படுத்தலாம் என்பதையும் முக்கியமாக கவனிக்கவேண்டும்.ரசித்த இன்னும் சில விஷயங்கள்...

அஜித்தின் வேட்டி - சட்டை கெட் அப்.
படம் முழுவதும் (பாடல்கள் தவிர) வெள்ளையிலேயே வருவது ஒரு கம்பீரம்.
படம் முழுக்க நிறைந்து கிடக்கும் ஒருவித குடும்ப குதூகலம்.
அந்த சுட்டிக் குழந்தை
உறுத்தாமல்,திணிக்காமல் படம் முழுக்க நிறைந்து கிடக்கும் கமெராக் கவிதைகள்.
சந்தானம் அடிக்கும் சிம்பிளான ஆனால் வயிறு வலிக்கும் கமென்டுகள்
தம்பி ராமையாவின் நசுவல் வில்லத்தனம்.
ரமேஷ் கண்ணா - தேவதர்ஷினியின் 'ஓ '
அஜித் - தமன்னா காதலில் விழ வைக்க சந்தானம், தம்பிமார், ரமேஷ் கண்ணா எடுக்கும் முயற்சிகள்..குறிப்பாக அந்த பறவை பேசும் காட்சி + 'தியானம்'
ஒவ்வொரு பாடல் காட்சிக்குமான ஆடைத்தெரிவுகள்.
நான் பார்த்த தமிழின் அசத்தல் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் இந்த வீரமும் ஒன்றென நினைக்கிறேன்.


பிடிக்காமல் போன சில விஷயங்கள் 

அஜித்தின் தலை நரைத்திருக்கவும் அவரும் தம்பிமாரும் திருமணம் முடிக்காமலே இருக்க சொல்லப்பட்டும் சப்பைக் காரணம் ஒட்டவில்லை.
(ஆனால் அமரர் பெரியார்தாசன் வரும் அந்த டீக்கடை காட்சி வசனம் டச்சிங்.
"அவன் டீ குடிச்சிட்டே இருக்கிறான்; நான் குடுத்திட்டே இருப்பேனடா")
சில காட்சிகளில் தமன்னா காட்டும் முகபாவங்கள் - படு செயற்கை
இரண்டாம் பாதியில் தாடியில்லாமல் தனியே மீசையுடன் வரும் அஜித் கெட்அப்.
என்ன தான் விறுவிறுப்பு, ரசனையாக இருந்தாலும் மொத்தமாக யோசித்துப் பார்க்கையில் இன்னும் இந்தக் குண்டுச் சட்டியை விட்டு வெளியே வரமாட்டார்களா என ஆயாசப்படவைக்கும் கதை.

சிவா போன்றவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராகும் அஜித் போன்றவர்களை வைத்து இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக வெளியே வரலாமே?

அஜித்தை சொதப்பிவிடவில்லை; அதை விட என் நேரம் கொட்டாவி இல்லாமல் கொடுத்த காசுக்கு ரசிக்கக் கிடைத்து என்பது வரை திருப்தி.

இதனால் தான் படம் பார்த்தவுடன் போட்ட ட்வீட்.

வீரம் - கதை, களம் இதெல்லாம் பழகியவை என்றாலும் அஜித் மிடுக்கு, படமாக்கிய விதம், சண்டைகளில் புதுமை, சந்தானம் கலக்கலில் #வீரம் வென்றது.
#Veeram

வீரம் - வென்றது.

3 comments:

மயில்வாகனம் செந்தூரன். said...

வீரம் இன்னும் பார்க்கவில்லை உங்கள் விமர்சனம் பார்க்க தூண்டுகிறது அண்ணா. நன்றி.

மயில்வாகனம் செந்தூரன். said...

வீரம் இன்னும் பார்க்கவில்லை உங்கள் விமர்சனம் பார்க்க தூண்டுகிறது அண்ணா. நன்றி.

drogba said...

பார்க்கலாம். ஆனால் super இல்லை. 15 $க்கான பெறுமதி இல்லை.
ஜில்லாவின் விமர்சனம் வாசித்ததால் risk எடுத்து போக மனம் வரவில்லை. நான் படம் வந்தவுடன் எந்த பட விமர்சனத்திற்க்கும் comment எழுதுவதில்லை. ஏனெனில் தயளிப்பாளரின் தலையில் துண்டை போடுவதற்கு நானும் ஒரு காரணியாக இருக்க விருப்பம் இல்லை. பிடித்திருந்தால் comment எழுதுவது உண்டு. படம் வந்து பல நாட்கள் ஆகியதால் இதை பகிர்கிறேன்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner