January 30, 2014

புதிய உலகம் தேடி இமான் & புதிய முயற்சியில் புரட்சி படைக்கும் எம்மவர்

இமானின் இசையில் வைக்கம் விஜயலக்ஷ்மி பாடிய " புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு " பாடல் பற்றி சிலாகிக்காதோர் கிடையாது.

 கடந்த வார இறுதிகளில் தான் இந்தப் பாடலோடு முழுமையாக மூழ்கும் வாய்ப்புக் கிடைத்தது.

கானா.பிரபா அண்ணன் முழுமையாக  இந்தப் பாடல் பற்றி முத்துக்குளித்த பிறகு, அந்த ரசனை அப்படியே நான் பெற்ற உணர்வை மொழிபெயர்த்து இருக்கையில் புதுசா என்ன சொல்ல இருக்கு?

கேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு

ஆனாலும் இந்தப் பாடலை நேற்று  சூரிய ராகங்களில் ஒலிபரப்பியபோதும் இன்று நட்சத்திரப்  பாடலாக இது வரை இரு தடவைகள் முழுமையாகக் கேட்டபோதும் ஒரு வித கட்டிப்போட்ட உணர்வு....

அந்த வித்தியாசமான குரல், பின்னணி இசை, இடையே மீட்டும் வீணையும் (மூன்றாம் பிறையின் கண்ணே கலைமானே வயலின் பிழிந்து தரும் சோகம் போலவே ) மட்டுமல்ல, இவை தாண்டி கார்க்கியின் வரிகள் தருகிற உணர்வுகள் இளகச் செய்கின்றன மனதை.

பாடகியின் நிஜ வாழ்க்கையின் சில பக்கங்களையும் உருவினால் போல, வரிகளும் இசையும் விஜயலக்ஷ்மியின் நெகிழ்ச்சியான குரலில் இழையோடுவதும் பாடலில் நாம் உருகிப்போக ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் மாற்றுத் திறனாளிகள் மேல் பரிதாபம் கொள்ளாமல் அவர்களது அதீத திறமைகளை மதித்து கௌரவிப்பதும் பாவம் பார்த்து ரசிக்காமல் அனுபவித்து ரசிப்பதுமே தலையாயது என எண்ணுபவன் நான்.
அந்த வகையில் இவர் குரலில் இன்னும் பல பாடல்களை காத்து எதிர்பார்க்கிறது.



ஏதோ எங்கள் வாழ்க்கையில் நாம் சில பாகங்களின் உணர்வுகளையும் கடந்து வந்த சில வந்த சில ரணங்களையும் இன்பமாகக் கிளறி ஞாபகப்படுத்துகிறது.


"ரணங்களை வரங்களாக்கினாய்

தோளில் ஏறினாய்

எனை இன்னும் உயரமாக்கினாய் ​"

"யாரும் தீண்டிடா இடங்களில்

மனதைத் தீண்டினாய்

யாரும் பார்த்திடா சிரிப்பை

என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன்

உன் மனம் இங்கு வேண்டாம் என்று பறந்து எங்கே சென்றேன்

வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா ​"

கார்க்கி யாரும் சேர்க்கா இடங்களில் எங்களைத் தன் கவித்துவப் பாடல் வரிகளில்  கொண்டு சேர்க்கிறார்.
புதிய வார்த்தைகள் மட்டுமல்ல, இதுவரை பிரதிபலிக்காத புதிய உணர்வுகள் கூட.


கார்க்கி ​ ​எழுதும் பாடல்களை நான் எந்திரன் முதல் ரசித்து வருகிறேன்.
மற்றக் கவிஞர்களை விட இவரது பாடல்களுடன் கொஞ்சம் அதிகமாக மனசு நெருக்கமாகி லயிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக நான் உணர்வது, ஏனைய பாடல்கள் எமக்குள்ளே நுழைந்து எம்மை உணரச் செய்து உருக்கும்.
ஆனால் கார்க்கியின் பாடல்கள் எமது உணர்வுகளைப் பிரதிபலிப்பது, ஏதோ நாமே அந்தப் பாடலை எழுதியது போல, நாமாக மாறி கார்க்கி அந்தப் பாடல்களை எழுதியிருப்பார்.

முன்பும் சில கார்க்கியின் பாடல்கள் பற்றி நான் எனது பதிவுகளில் சிலாகித்திருக்கிறேன்.

சில காலமாக நான் விவரித்து சிலாகிக்காத கார்க்கியின் பாடல்களில்
முட்டாளாய் - என்னமோ ஏதோ
பிறந்தநாள் பாடல் (ஏன் என்றால் உன் பிறந்தநாள்) - இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
நெகிழி - நிமிர்ந்து நில்
வானெங்கும் - என்றென்றும் புன்னகை
அகலாதே அகலாதே - சேட்டை
அடியே... அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற - கடல்
ஆகிய பாடல்களின் சில வரிகளாவது முணுமுணுக்க வைத்து, சிலிர்க்க வைத்தவை.

இந்த வைக்கம் விஜயலக்ஷ்மி பாடிய "புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் " பாடல் பற்றி தனது தளத்தில் கார்க்கி
மகனைப் பிரியும் தாயின் குரல், காதலனைப் பிரியும் காதலியின் குரல்! என்கிறார்.


அண்மையில் பத்ம பூஷன்  பெற்ற தந்தை போல் அதிகம் வர்ணனை இல்லாமல், வாழ்க்கையோடு வார்த்தைகளை இயல்பாக, ஆனால் உருக்கமாகக் கோர்க்கிறார் கார்க்கி.

அடுத்து இமான், சுருங்கச் சொல்வதாயின் தமிழில் அண்மைக்காலமாகத் தொடர்ந்து ஜனரஞ்சகப் பாடல்களைத் தந்துவரும் இரண்டு இசையமைப்பாளர்கள் ஹரிஸ் ஜெயராஜ் & D.இமான்.

இதில் ஹரிஸ் கேட்ட தன் மெட்டுக்களையேமீண்டும் அரைத்துத் தருபவர்.

ஆனால் இந்த அமைதியான இமான் நான் முன்பொரு இடுகையிலே சொன்னது போல மனதுக்கு நெருக்கமான மெட்டுக்களால் மைனா, கும்கி, மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று வரிசையாக வித விதமாக விருந்து படைத்துக் கொண்டேயிருக்கிறார்.

விஜய்யின் ஜில்லாவிலும் கூட கண்டாங்கி மனதை சுண்டி இழுக்கிறது.
கும்கியில் அய்யய்யோ வயலினும், விரசாப் போகையிலே விசிலும் எப்போது கேட்டாலும் காற்றில் மிதக்கச் செய்பவை.

ரம்மியின் கூடை மேலே, வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் பார்க்காதே பார்க்காதே , தேசிங்கு ராஜாவின் ஒரு ஓர ஓரப் பார்வை, 3 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தாலும் இன்னும் மனதில் நிற்கும் தம்பிக்கோட்டையின் உனக்காக உயிரை வைத்தேன் ஆகிய பாடல்களும்  எப்போது கேட்டாலும் உயிர் அள்ளக் கூடியவை.

என்னைக் கேட்டால் அண்மைய நாட்களில் வித்யாசாகர் இல்லாத தமிழ்த் திரைப்படப் பாடல்களின் இடைவெளியை இமான் தான் நிரப்புகிறார் என்பேன்.
வித்யாசாகர் போலவே வித்யாசாகர் விட்ட பின் அர்ஜுனோடு ஆஸ்தான இசையமைப்பாளராக இணைந்துகொண்ட இமான் கேட்பவர் அத்தனை பேருக்குமே வஞ்சகம் இல்லாமல் நல்ல, வெற்றிகர இசையை வழங்கி வந்திருக்கிறார்.

தன் முத்திரை பதிக்கும் மெலடி பாடல்களில் ஒன்றையாவது ஒரு படத்தில் அழுத்தமாகப் பதிப்பதிலும் D.இமான் ஒரு புதிய வித்யாசாகர் தான்.
ரஹ்மான், ஹரிஸ் ஜெயராஜ், யுவன் , G.V.பிரகாஷ் குமார் ஏன் தேவி ஸ்ரீ பிரசாத், இப்போது எப்படியெல்லாம் விளம்பரம் பண்ணி தனக்கான வெளிச்சம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் தனக்கு முகவரி தேடும் அனிருத் போல கூட இல்லாமல் தானுண்டு தன்  இசையுண்டு என்று அமைதியாக அசத்தி வரும் இமானின் இசைப்பயணம் இன்னும் இனிமையாகவும் ஏற்றமாகவும் அமையட்டும்.

'பெரிய' ஹீரோக்கள் இவரையும் இன்னும் கொஞ்சம் பார்க்கட்டும். வித்யாசாகர் மாதிரியே இவரும் காணாமல் போய்விடக் கூடாது.

--------------------------------------
இந்தப் பாடல் போலவே, நான் நண்பர் வட்டாரத்தில் சிலாகித்த, ஏன் நண்பர்கள் அண்மைக்காலத்தில் சிலாகித்த இரு நம்மவர் முயற்சிகள் பற்றி நீண்ட நாள் எழுதவேண்டும், பதியவேண்டும், பலரோடு பகிரவேண்டும் என யோசித்திருந்தேன்.
ஆனால் வழமையான பஞ்சியும், ஏதாவது கவனக் கலைப்பானும் நேரத்தைத் தின்று விடும்.
இமானின் பாடலை ரசித்துகொண்டே இருந்த சனி, ஞாயிறுகளில் இவ்விரு விடயங்களின் பகிர்வு + பரம்பலின் அவசியம் மனதில் நின்றது.

1. கதை ஒளி

ஈழத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் இப்போது அருகி வரும் கதை சொல்லும் கலையை தம்மால் முடிந்தளவு அழகாகவும், இளைய தலைமுறையை ஈர்க்கும் விதமாகவும் கொண்டு செல்லும் ஒரு ஹைடெக் முயற்சி.

ஒரு Facebook குழுமமாக ஆரம்பித்த முயற்சி.
கதை சொல்லடா தமிழா

ஞானதாஸ் காசிநாதர் என்ற நண்பர் என்னையும் ஒரு மூன்று வருடத்துக்கு இந்த Facebook குழுமத்துக்குக் கதையொன்றை அனுப்புமாறு கேட்டார்.
ஹீ ஹீ.. இன்னும் அனுப்புகிறேன்.

ஆனால் அவர்கள் இப்போது Youtubeஇல் காணொளியில் கதை சொல்லும் நவீன முயற்சியில் இறங்கி பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுள்ளார்கள்.
கதை ஒளி

இது எதிர்கால, தமிழ் பேச, கேட்க மட்டுமே தெரிந்த ஒரு புலம்பெயர் தமிழ்ச் சிறுவர் சமுதாயத்துக்கு தமிழை அறிய பெரும் உதவியாக இருக்கப் போகிற விடயம்.
தமிழ் சூழலில் இந்த முதன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

இந்தக் கதைகளில் தரம், தராதரம் என்பதையும் தாண்டி நான் ரசிப்பது சொல்லப்படும் கதைகளின் பல்வகைமை, சொல்லப்படும் மொழி வழக்குகளின் பல்வகைமை, அது போல அவர்கள் பல தரப்பட்டவர்களையும் அழைத்துக் கதை சொல்லச் சொல்வது அனைவருக்கும் தன்னம்பிக்கை தரக் கூடிய ஒன்று.

கதை ஒளி குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

இன்னும் பெரிதாக இம்முயற்சி எதிர்காலத்தில் விரிவடையும் என்று மனம் சொல்கிறது.

2. இலங்கைக் கலைஞன்

எங்கள் கலைஞர்களை, கலைப் படைப்புக்களை யாரும் கவனிக்கிறார்கள் இல்லை; கைதூக்கி விடுகிறார்கள் இல்லை என்று புலம்பல் (ஓரளவு நியாயமானதே) பல பக்கங்களிலும் சதா ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
சும்மா புலம்பி விட்டு, ஊடகங்களனைத்தையும் திட்டித் தீர்த்து விட்டு, தாமுண்டு தம் வேலையுண்டு என்று முடங்கி விடாமல், நாமே நம்மை உருவாக்குவோம், உயர்த்துவோம், தரமுயர்த்துவோம் என்று ஒரு இளைய தலைமுறை புறப்பட்டிருகிறது.

இலங்கைக் கலைஞன் என்ற இணையத் தள அறிமுகம் தற்செயலாக Facebook மூலம் கிடைத்தது.
3 மாதங்களில் எத்தனையோ இலங்கைக் கலைஞர்களையும் படைப்புக்களையும் இவர்கள் வெளியே கொண்டுவந்திருக்கிறார்கள்.

பேட்டிகள்,அறிமுகங்கள், விமர்சனங்கள் என்று சாதிக்கத் துடிக்கும் இளையவர்களுக்கு நம்பிக்கை ஒளியைக் காட்டுகிறது இலங்கைக் கலைஞன்.

இன்னும் இன்னும் இலை மறை காயாக இருக்கும் இலங்கை, புலம்பெயர் கலைஞர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சி தொடரட்டும்.

இந்தத் தளம் மூலம் உங்களுள் இருக்கும் கலைஞர்களும் படைப்பாளிகளும் வெளிவரட்டும்.



3 comments:

varma said...

Superb..

ம.தி.சுதா said...

வணக்கம் அண்ணா....
பாடல்கள் தொடர்பாக கருத்துச் சொல்லும் அளவுக்கு என் ரசனை சற்றுக் குறைந்து விட்டது அண்ணா... ஆனால் ரசித்தவரைக்கும் தங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்...

கதை சொல்லி... மிக முக்கியமான முன்னெடுப்பொன்று இணைய ஆசையாக இணைந்தேன் ஆனால் தொடரத் தான் முடியவில்லை....

இலங்கைக் கலைஞன்... பல ஊடகங்களில் எனக்கிருந்த பலவிதமான மாற்றுக் கருத்துக்களால் எனக்குப் பிடித்துக் கொண்ட தனி மனித ஊடகமது...

நன்றியுடன்
சுதா

Dominic said...

இலங்கை தமிழர்கள் பால் உண்மையான அக்கறை கொண்ட சில கலஞர்களில் இமானும் ஒருவர்...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner