எவன்டி உன்னைப் பெத்தான் பாடல் தந்த பரபரப்பு படத்தை மிக எதிர்பார்க்க வைத்திருந்தது.
இது தவிர தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற வேதம் படத்தின் தமிழ்ப்பதிப்பே இதுவென்பதும், தெலுங்கு இயக்குனர் க்ரிஷ் தான் படத்தை தமிழிலும் இயக்குகிறார் என்பதும் வேறு வானம் படத்தைக் கொஞ்சம் எதிர்பார்க்க வைத்தன.
அத்துடன் தமிழில் இரு நாயகர்கள் சேர்ந்து நடித்தாலே அபூர்வம்.. அதிலும் 'இளைய' 'சின்ன' போன்ற பட்டங்களை இட்டுக்கொள்ளும் நாயகர்கள் தேசிய விருது பெற்ற பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து நடிப்பதும் எனக்குள் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருந்தது.
பிறருக்காக உதவும், வாழும் நல்ல மனது வேண்டும்; இறைவன் நல்லவர்கள் வடிவில் வாழ்கிறான் என்ற போதனை தான் படத்தின் கரு.
ஐந்து வேறு பட்டவரின் கிளைக் கதைகள் வந்து இரண்டாம் பாதியின் முடிவுக் கட்டத்தில் சேருமாறு திரைக்கதை.
இராணுவத்தில் சேருமாறு தாய் கேட்டும் தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்று, யார் பற்றியும் பொருட்படுத்தாமல் ஒரு ரொக் இசைக் கலைஞனாக வருவதே இலட்சியம் என்று வாழும் இளைஞன் பரத்..
தூத்துக்குடி உப்பளத்தில் கந்துவட்டிக்குப் பணம் கடன் வாங்கிவிட்டு, கட்டமுடியாமல் மகனைப் பணயமாகக் கடன்கொடுத்தவன் சிறைப்பிடிக்க, மீட்க சிரமப்படும் ஏழைத்தாய் சரண்யாவும் அவரின் மாமனாரும்...
கோவையில் மனைவி, தம்பியுடன் வாழ்ந்துவரும் நிலையில் விநாயக சதுர்த்தியில் ஏற்படும் மத சண்டையினாலும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் பழிவாங்கலினாலும் மனைவி வயிற்றிலுள்ள குழந்தையை இழந்தும், தம்பியைப் பிரிந்தும் மனம் முழுக்க சோகத்துடன் வாழும் முஸ்லிம் நடுத்தர மனிதர் பிரகாஷ் ராஜ்.
வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் வேதனைப்படும் விபச்சாரி சரோஜா(அனுஷ்கா)..
குப்பத்தில் பிறந்து கேபிள் ராஜாவாகக் கும்மாளமிட்டு அலைந்து பணக்காரக் காதலியாக செட் பண்ணப் போலிப் பணக்கார வேடம் இட்டுப் பணம் தேடி அலையும் இளைஞன் (சிம்பு என்று முன்னர் அழைக்கப்பட்ட STR)
இந்த ஐவரும் சந்தித்துக் கொள்ளும் இடம் பரபரப்பாக இருந்திருக்க வேண்டாமா?
கதை தொய்ந்துபோகும் இடத்தில் அந்த உச்சக்கட்டம் வருகிறது.
முதல் பாதியில் கொஞ்சம் இழுவையாகவும் கோர்வையின்றிப் படம் நகர்வதுவும் இரண்டாம் பாதியில் சீர்செய்யப்பட்டாலும் கடைசிக் காட்சிகள் எந்தவொரு பரபரப்பையும் எனக்குத் தரவில்லை.
செண்டிமெண்ட் வரவழைக்க காட்டப்படும் சில காட்சிகளில் ஆயாசமே வருகிறது..
விபசாரியின் சோகங்கள், சிம்புவின் காதல், பிரகாஷ் ராஜின் கொஞ்சம் ஓவர் அக்டிங், பரத்தின் மனமாற்றம் என்று பல இடங்கள்..
உதவி செய்யாமல் நாம் கைவிட்டு செல்வோர் எமக்கு வந்து உதவி செய்வது, திருடுபவன் மனம் திருந்தி திருடிய பொருளை மீண்டும் கொண்டு வந்து ஒப்படைப்பது என்று சிறுவயது அம்புலிமாமா நீதிக்கதைகள் போல இருக்கின்றன.
வானம் என்ற பெயர்ப் பொருத்தமோ என்னவோ, ஏராளமான நட்சத்திரங்கள்.. பல இடங்களில் முகில்கள் போலவே அலையும் கதை..
பிரகாஷ் ராஜ் என்றவுடன் நிறையவே எதிர்பார்த்தால் மனிதர் கிடைத்த வாய்ப்பில் நிறைவாக செய்துள்ளார்.
சோனியா அகர்வால், வேகா, தண்டபாணி, ஜெயப்ரகாஷ், பிரம்மானந்தம் என்று சிறு சிறு காட்சிகளில் வந்து வீணாக்கப்படும் நட்சத்திரங்கள் அதிகம்.
ராதாரவி ஒரே காட்சியில் வந்தாலும் மற்றவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிடுகிறார்.
விண்ணைத் தாண்டி வருவாயாவில் சிம்புவுடன் சுற்றிய கணேஷ் இதில் மாமா.. கலக்குகிறார் மனிதர்.
சந்தானம் தான் படத்துக்கு ஒரு துள்ளல் கொடுப்பவர்.. கடித்துத் தள்ளுகிறார்.
மோட்டார் சைக்கிள் கடி தொடக்கம், அம்பானியின் மகள் என்று அடுக்கடுக்காக சந்தானம் வெகு லாவகமாக கடிக்கிறார்.
இப்போது தமிழ் சினிமாவின் டிமாண்ட் மிக்க கொமெடியன் இவர் தானாம்.
ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பதாயின் பத்துலட்சம் இந்திய ரூபாய் கேட்கிறார்.
"கஷ்டப்பட்டு மேல வந்தாலும் விட மாட்டேங்கிறாங்கப்பா" என்ற வசனத்தோடு அறிமுகமாகிறார் எஸ்.டி.ஆர்.
"Who am i?" என்று ரொக் பாடலோடு அறிமுகமாகிறார் பரத்.
பரத் பாத்திரத்தோடு ஒன்றினாலும், சிம்பு விடுவதாக இல்லை. குப்பத்துப் பையனாக இருந்தாலும் பளபள முகமும், நுனிநாக்கு ஆங்கிலமும் துருத்துகின்றன.
ஆனால் துடிதுடிப்பும், சந்தானத்தோடு சேர்ந்து அடிக்கும் கூத்துக்களும் ரசனையானவை.
"என்ன வாழ்க்கைடா இது" ஒவ்வொரு முறை சொல்லப்படும் இடங்களும், விதங்களும் டச்சிங்.. ரசனை
எவன்டி உன்னைப் பெத்தான் பாடல் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. உண்மைதான். ஆனால் இன்னும் கொஞ்சம் ரசனையாக செய்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. அதிலும் அந்த சப்பை மூஞ்சி பிகரான ஜாஸ்மினைப் பார்த்துப் பாடியதால் பாட்டு வேஸ்ட்டாகி விட்டது.
ஸ்னேஹா உள்ளாலுக்காக எழுதிய பாடலை இப்படி ஒருத்திக்காகப் படமாக்க வேண்டி வந்துவிட்டதே என்று நாயகி இல்லாமலேயே பாடலை எடுத்துள்ளார்கள் போலும்.
no money பாடல் படமாக்கப்பட்ட விதம் கலக்கல். செம குத்து.. சிம்பு கலக்குகிறார். அனுஷ்காவும் திறமை 'காட்டுகிறார்.'
தெய்வம் வாழ்வது எங்கே பாடல் வரிகளால் எனக்கு முன்பே பிடித்துப்போன பாடல்.. ஆனாலும் ஆரம்ப எழுத்தோட்டத்திலும், இடை நடுவேயும், பின்னர் அடிக்கடி துண்டு துண்டாக வரும்போதும் அந்த அழுத்தம் இல்லாமல் போய்விடுகிறது.
வரிகள் எழுதிய முத்துக்குமாருக்கு வாழ்த்துக்கள்.
அனுஷ்காவைப் பற்றி சொல்வதற்குப் பெரிதாக எதுவுமே இல்லை. உடலின் பாதியளவைக் காட்ட முயற்சித்தாலும் நடிப்பே வராத அந்த முகமும், அசாதாரண உயரமும், தமிழ் வசனங்களோடு பொருந்தாத உதட்டசைவுகளும் சலிப்பையே தருகின்றன.
அனுஷ்கா தனியாக வரும் ஆரம்பக் காட்சிகள் தெலுங்கில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டுள்ளன போல் தெரிகிறது.
அந்தப் பாடலிலும் காட்சிகளிலும் அப்படியொரு டப்பிங் நெடி.
சரண்யாவும்,அவரது மாமனாராக வருபவரும் காட்டும் உணர்ச்சிகள் நெகிழ வைக்கின்றன.
உப்பளக் காட்சியில் அந்த சிறுவனும் மனத்தைக் கொள்ளை கொள்கிறான்.
கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வருபவர் மிரட்டுகிறார்.
பல இடங்களில் வசனங்கள் அபாரம்.. ஆகா போடா வைக்கின்றன..
விபசாரியின் வாய்கள் உதிர்க்கும் தத்துவங்கள் "நாங்க துணிய அவுத்துட்டு விக்கிறோம், நீங்க துணிய போட்டுக்கிட்டு விக்கிறீங்க", சிம்பு சொல்கிற "பொய் சொல்றது எப்பவும் இலகு.. உண்மை சொல்றது தான் மச்சி கஷ்டம்"..
இன்னும் பல இடங்கள் அபாரம்.
வசனகர்த்தா - ஞானகிரி..(புதியவரா?)
ஒளிப்பதிவு நீரவ் ஷாவாம்.. அப்படியா?
Editor அந்தனியும் கூட எவ்வளவு முயன்றும் சில காட்சிகளை ஓட்ட வைக்க முடியவில்லை.
பின்னே ஐந்து கோணத்தில் ஒரு திரைக்கதை நகர்ந்தால்?
போதனை, சொல்ல வந்த நீதிகள் எல்லாம் சரி.. ஆனால் படமாக்கிய விதம் தான் சறுக்கி விட்டது..
ஓவர் செண்டிமெண்டும் ஓவர் போதனையும் ரோதனை என்பதை யாரும் இயக்குனருக்கோ, சிம்புவுக்கோ சொல்லவில்லையோ?
சிம்பு எதை செய்தாலும் ஓவராகத் தான் செய்கிறார் போலும்..
ஒழுங்காக சமைக்கப்படாத நல உணவு போல் ஆகிவிட்டது 'வானம்'.
ஆனால் நல்லதொரு படத்தைத் தர முயன்ற குழுவினருக்கு வாழ்த்துக்கள்..
ஆனாலும் தயாநிதி அழகிரியின் நிறுவனத்தின் புண்ணியத்தில் 'வானம்' எப்படியும் 'வெற்றி' பெற்று விடும்..
அடுத்த முயற்சியில் சிரத்தை எடுத்து நல்லதாகத் தர முயற்சி செய்யுங்கள்..
வானம் - மப்பாகத் தான் இருக்கிறது