கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஓர் புதிய படம் - முதல் நாள்,முதல் காட்சி.
எங்கேயும் காதல் பாடல்கள் அத்தனையும் ஹிட் என்பதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அத்துடன் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அதிலும் படம் முழுக்கவுமே பிரான்சின் பாரிசில் எடுக்கப்பட்டது என்பது வேறு காட்சிகள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
அண்மைக்காலத்தில் சராசரியாக ரசிக்கக் கூடிய படங்களிலே நடித்துவரும் ஜெயம் ரவி, மொக்கைப் படங்களாக இருந்தாலும் சற்றே வித்தியாசமாக இயக்கம் பிரபுதேவா என்ற சிறு எதிர்பார்ப்புக்களும் இருந்தன.
மிக சராசரியான காதல் கதை. நட்பு, துரத்தல், நடிப்பு, ஊடல் + இதர மசாலாக் கலவைகள் சேர்ந்த காதல்.. என்ன ஒரு வித்தியாசம் அழகான பாரிஸில்
வெளிநாட்டில் இந்திய பண்பாட்டின்படி வாழும்(அப்படித் தான் இயக்குனர் அறிமுகப்படுத்துகிறார்) இளம் பெண்ணொருத்திக்கும் இந்தியாவில் வெளிநாட்டு கலாசாரத்தில் வாழும் இந்தியப் பணக்கார வாலிபனுக்கும் இடையிலான காதல் தான் கதை.
காதல் என்பதே பிடிக்காத "No commitments, No disappointments" என்ற policy உடன் பெண்களுடன் ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கும் கமல் (ஜெயம் ரவி) பாரிஸில் விடுமுறையைக் கழிக்க வரும் வேளையில் சந்திக்கின்ற அழகான இந்தியப் பெண் கயல்விழி எனப்படும் லோலிட்டா (ஹன்சிகா).
ஜெயம் ரவியின் கண்ணைப் பார்த்துக் காதல் வசப்படுகிறாராம். இந்தப் படத்தில் தான் ரவியின் கண்கள் பல இடங்களில் அவரைக் கவிழ்த்துவிடுவதும் நடக்கிறது. காட்சிகளில் கண்கள் சிறிதும் பெரிதுமாகத் தெரிகின்றன.
இன்னொரு காட்சியில் ரவியின் குரல் பிடித்திருப்பதாக ஹன்சிகா சொல்வதும், ரவி தன்னைத் தானே சுய கிண்டல் செய்வதும் நச்.
அறிமுகக் காட்சிகளில் முத்தங்கள் பரிமாறப்படும் புகைப்படங்களோடு, பாரிசைக் காதல் தலைநகரமாக அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் பிரபுதேவா.
ரசிக்கக்கூடிய நாயகன், நாயகி அறிமுகங்கள்.. கூடவே பிரகாஷ்ராஜ். ரசனையான ரகளை..
ஆனால் இந்த சுவையைத் தொடர்ந்து கொண்டுபோகாமல் தடுமாறும் திரைக்கதை.
பிரகாஷ்ராஜ் இன்னுமொரு காட்சியிலும் இடையில் சும்மா வந்துபோகிறார்.. குறைந்தபட்சம் இறுதிக் காட்சியிலாவது ஏதாவது திருப்பத்துக்கு அவரைப் பிரபுதேவா பயன்படுத்தி இருக்கலாமே.
இதே கதையை எதோ ஒரு ஹிந்திப் படத்திலோ, ஆங்கிலப்படத்திலோ (ரசனையான திரைப்படமாக)ன் பார்த்த ஞாபகம்.
நான்கே பிரதான பாத்திரங்கள்..
ரவி - பணக்கார ஜாலி இளைஞனாகப் பொருந்திப் போகிறார். எந்த உடையிலும் அழகு + கம்பீரம். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். கலக்கலாக நடனமும் ஆடுகிறார்.
வழிப்பறித் திருடனுடனான துரத்தல் சண்டைக் காட்சிகளும் ஹன்சிகாவுடன் வீதியில் திரியும் காட்சிகளும் ரவியின் துடிப்பான, குறும்பான நடிப்புக்களில் களை கட்டுகின்றன.
ஹன்சிகா - முகம் மட்டும் பார்த்தால் காதலிக்க வைக்கும் கண்கள்.. முத்தமிட ரசனையான உதடுகள்; மூக்கையும் உதடுகளையும் மட்டும் பார்த்தல் கொஞ்சம் பூமிகாவையும் நினைவு படுத்துகிறார்.
முழுவதுமாகப் பார்த்தால் குஷ்பு (இந்தக்கால சைஸ் குஷ்பு தான்) ஞாபகம் வருகிறார். அணியும் இறுக்கமான, குட்டையான ஆடைகளில் சில நேரம் கவர்ச்சியாகவும் பல நேரங்களில் அப்பாவி லூசாகவும் தெரிகிறாரே தவிர ரவிக்குக் காதல் வருமளவுக்கு இல்லை.
சில பொருத்தமான ஆடைகளுடன் வரும் காட்சிகளிலும், சேலையில் வரும் காட்சியில் கொள்ளை அழகு.
இப்படியான உப்பு, புளி மூட்டைகளான வெள்ளைத் தோல் நாயகிகள் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையா, இல்லை நாயகர்கள்,இயக்குனர்களின் விருப்பத்தாலான ரசனைத் திணிப்பா?
சுமன் - நாயகியின் அப்பாவாக .. ரவியிடம் உருகி தந்தை சென்டிமென்ட் காட்டும் காட்சி தவிர நடிக்க வாய்ப்பு இல்லை.
ராஜூ சுந்தரம் - ஏகன் தோல்விக்குப் பிறகு வாய்ப்பில்லாமல் இருந்தவருக்கு தம்பியால் வழங்கப்பட்ட இந்தக் காமெடியன் வாய்ப்பில், கோமாளித் தனங்கள் செய்து சிரிக்கவைக்க முனைந்துள்ளார். ஒன்றோ,இரண்டோ இடங்களில் மட்டும் கொஞ்சமாக சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. பல இடங்களில் எரிச்சலே மிஞ்சுகிறது. பழைய சேஷ்டைகள்.
பிரான்ஸ் என்ற காரணத்தால் கவர்ச்சிக்காக இயக்குனர் பிரபுதேவா மினக்கெடவில்லை. வீதிகளில் சர்வசாதாரணமாகப் பெண்களைக் காட்டினாலே போதுமே..
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு நல்ல வாய்ப்பு.. பாடல் காட்சிகளில் மட்டுமல்லாமல் எல்லாக் காட்சிகளிலுமே கலக்கி இருக்கிறார்.
படம் முழுவதுமே கதையின் ரோதனையான போக்கைக் குறைத்து
மனத்தைக் குளிர்விப்பது அழகான குளிர்மையான ஒளிப்பதிவே.
அன்டனியின் எடிட்டிங் ஸ்பெஷல் பாடல் காட்சிகளில் மட்டும் கலக்கல்.. ஏனையவற்றில் திரைக்கதையின் இழுவை எடிட்டிங்கை மேவி சொதப்புகிறது.
ஹரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான நல்ல பாடல்கள் அனைத்துமே காட்சிகளாக வீணடிக்கப்படாமல் அழாகவே வந்துள்ளன.
ரசனையான காட்சிப்படுத்தலும், மிகையில்லா நடன அமைப்புக்களும் அருமை.
ஆனால் இரண்டு பாடல்கள் செருகப்பட்டுள்ள இடம் திணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.இதனால் 'தீயில்லை','நெஞ்சில் நெஞ்சில்' பாடல்களோடு ஒன்றிப் போக முடியவில்லை.
வாலி, தாமரை, முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் செதுக்கிய வரிகள் அருமையான பாடல்களாக எம்மை உருக வைத்தன எனினும் படம் வந்த பிறகு மனதில் காட்சிகளாக நிற்குமா என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.
கதையோட்டம் பாடல்களை ஈர்க்காமல் செய்துவிட்டது.
ஆனால் பிரபுதேவா தோன்றும் ' எங்கேயும் காதல்' , ரவி ரசிக்க வைக்கும் 'லோலிட்டா', வெள்ளைக்கார , கருப்பின இளைஞர்கள் கலக்கும் 'நங்கை' எல்லாம் ரசனையும் ரகளையும் சேர்ந்து சுவைக் கலவைகள்.
இந்தப் பாடல்களை உருவாக்கக் காட்டிய சிரத்தையில் கால்வாசி அளவாவது திரைக்கதையிலும் காட்டியிருந்தால் 'எங்கேயும் காதல்' எங்கேயோ போயிருக்கும்.
பழைய பாணியிலான திரைகதியில் பல லொஜிக் ஓட்டைகள்.. அத்துடன் அந்தக் கடைசி புறா பறக்கும் காட்சியுடன் எரிச்சலை ஏற்படுத்துகிறார் பிரபுதேவா.
ஹன்சிகா - ரவி காதல் பிறக்கும் காட்சிகள் ஈர்ப்பை ஏற்படுத்தாமல் ஜாலியாகவே செல்வது திரைப்படத்தின் பலவீனம். ஒருவேளை நகைச்சுவை காட்சிகள் இல்லாப் பலவீனத்தை இப்படி சரிக்கட்டினரோ?
வசதியான தயாரிப்பாளரின் அனுசரணையுடன் பிரபுதேவா மற்றும் நடிகர் குழுவினர் ஜாலியாக பிரான்ஸை சுற்றிப்பார்த்து வந்துள்ளார்கள்; என்ன நீரவ் ஷாவின் உதவியுடன் எமக்கும் செலவில்லாமல் பிரான்ஸ் பார்க்கக் கிடைக்கிறது.
ஆனால் என்ன.. சன் டிவி இந்தப் படத்தையும் 'வெற்றி'ப் படமாக 'மாற்றி' விடும்.. பிரபுதேவா தனது நான்காவது மொக்கைக்குத் தயாராகிவிடுவார்..
ஹன்சிகா தமிழின் முதன்மை நாயகி ஆகிவிடுவார்..
என்னமோ போங்க..
எங்கேயும் காதல் - பெயரிலும் பாடல்களிலும் மட்டும்...