May 11, 2011

'தலைவர்' டில்ஷான்


இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக டில்ஷான் அறிவிக்கப்படும்போதே இட எண்ணிய பதிவு இது..  ஆனால் இங்கிலாந்து தொடர் ஆரம்பிக்கு முன்னராவது இந்தப் பதிவை இட முடிந்தது மகிழ்ச்சியே.

இலங்கை கிரிக்கெட் அணிக்குள், தேர்வில், தேர்வாளரில் + தலைமைத்துவத்தில் இருந்த சிக்கல்கள் அத்தனையும் தீர்ந்து சுமுகமான சூழல் திரும்பியுள்ளது ஆறுதல் தருகிறது.

(ஹஷான் திலகரட்ன கிளப்பியுள்ள ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டு என்ற புதிய பூதம் இன்னும் உறுதியாகாத தனிக்கதை- உறுதியாகும் வரை எவையும் வதந்திகளே)
டில்ஷான் தலைமைக்குப் பொருத்தமானவரா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால், நான் எனது முன்னைய கிரிக்கெட் பதிவில் சொன்னதுபோல, தற்போதைய சூழலில், சங்கக்கார, மஹேல ஆகியோருக்கு அடுத்தபடியாக டில்ஷான் தான் இருக்கிறார் என்பதே முக்கியமானது.
இவருக்கு நேரடிப் போட்டியாகக் கருதப்பட்ட அஞ்சேலோ மத்தியூஸ் அனுபவமும் குறைந்தவர்; உபாதைக்கும் உள்ளாகியுள்ளார். இவர்கள் நால்வரைத் தவிர மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவோர் இலங்கை அணியில் வேறு இல்லை.

டில்ஷான் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதை எதிர்த்தோர் (நானும் தான்) முன்வைத்த காரணங்கள் - தனிப்பட்ட ஒழுக்கக் குறைபாடு, ஆவேசப்படக் கூடியவர், தலைவராகப் பக்குவமான மனோபாவமோ, உதாரணபுருஷராக இருக்கக் கூடிய இயல்போ இல்லை, துடுப்பாட்டத்தில் நிதானமில்லாத, அவசரப்படும் அணுகுமுறை, சங்கக்காரவை விடவும் வயது அதிகம் (அணியிலேயே தற்போது வயது கூடியவாறான சமரவீரவை விடவும் சில நாட்களே இளையவர் டில்ஷான்)

டில்ஷானுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்படியொரு நெருங்கிய உறவு என்பதும் இவருக்குத் தலைமைப் பதவி வழங்குவதை (நானுட்பட) பலர் விரும்பாமைக்கான காரணம் இருந்தது..

திருமண முறிவு, அதன் பின் ஊக்க மருந்து அல்லது போதை மருந்து உட்கொள்ளல், சிம்பாப்வே சுற்றுலாவின் போது(டில்ஷான் முதல் தரம் தலைவராகக் கடமையாற்றிய ஒருநாள் தொடர்) இளம் பெண் மீதான பாலியல் வன்முறைக் குற்றச் சாட்டு, கிரிக்கெட் சூதாட்டம்/நிர்ணயத்தில் தொடர்பு .. ஆனால் இவை எவற்றிலும் டில்ஷான் குற்றவாளி என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை..
அதன் பின் ரண்டீவை சேவாகுக்கு எதிராக நோ போல் வீசத் தூண்டியமை யார் மறந்தாலும் இந்திய ரசிகர்களுக்கு மறக்காது..

ஆனால் இந்த சர்ச்சைகள் ஏற்படும்போதெல்லாம் டில்ஷான் உறுதியாகத் துடுப்பாட்டம் மூலமாகத் தன்னை நிரூபித்து வந்திருக்கிறார்.. அதற்குக் காரணம் அவரிடம் உள்ள தன்னம்பிக்கை. ஆனால் இந்தத் தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகமாகப் போகும் நேரங்களில் அவசரப்பட்டு ஆட்டமிழப்பதும் உண்டு.

ஆனால் அத்தனையையும் கடந்து திலகரட்ன டில்ஷான் தலைவராக நியமிக்கப்பட்ட தேவை +காரணம் & நிர்ப்பந்தம் - வேறு பொருத்தமானவர் யாரும் இப்போது இன்மை & குறுகிய கால நோக்கத்துடனான, தோல்வியைத் தவிர்க்க எண்ணிய எண்ணமே.

(புதிய, இளைய ஒருவரை ரிஸ்க் எடுத்துத் தலைவராக நியமித்து அதிக சேதாரத்தை இந்த சூழ்நிலையில் சந்திக்க இலங்கை தயாராக இல்லை.. தென் ஆபிரிக்காவின் கிரேம் ஸ்மித், இந்தியாவின் தோனி, ஆஸ்திரேலியாவின் பொன்டிங் உதாரணங்கள் இங்கே, இப்போது பொருந்தா.. அந்த மூன்று 'இளைய' தலைவர்களுக்கும் அனுபவம் வாய்ந்த அணி , குறிப்பாக அனுபவம் +பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். இலங்கையின் நிலை இப்போது அப்படியல்ல..

முரளியும் இல்லை; போதாக்குறைக்கு மாலிங்கவும் டெஸ்ட் குழுவில் இல்லை.

இப்படி ஒரு சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்தவரான டில்ஷானின் தெரிவு நிகழ்ந்திருப்பது நியாயமானதாகவே படுகிறது.

இங்கிலாந்துத் தொடருக்குப் பிறகும் இந்த வருட இறுதி வரையாவது டில்ஷான் தலைவராகத் தொடர்வது இலங்கை அணிக்கு நன்மை பயக்கும் என நம்பி இருக்கலாம்.

இங்கிலாந்துத் தொடருக்கு உடற்தகுதியின்மை காரணமாக செல்லாமலிருக்கும் மத்தியூஸ் விரைவில் குணமடைந்து அணிக்குள் வந்து உப தலைவராக டில்ஷானின் கீழ் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வது இலங்கையின் எதிர்காலத்துக்கான முதலீடாகும்.

திலகரட்ன டில்ஷான் தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு காட்டி வருகின்ற பக்குவங்களும் நிதானமான அணுகுமுறைகளும் மனநிறைவைத் தருகின்றன.
தலைவரான உடனேயே இந்தியாவில் இருந்து நாடு திரும்பி பத்திரிகையாளர்களை சந்தித்தமை, சீரான, நாகரிக சிகை, உடை அலங்காரங்களுடன் கலந்துகொண்டமை, இங்கிலாந்து செல்லும் அணிக்குத் தலைமை தாங்குவதொடு முற்கூட்டியே சக வீரர்களுடன் இணைந்து புரிந்துணர்வை ஏற்படுத்த விரும்பியமை போன்றவை பாராட்டுக்குரியவை.

தலைவராக முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு... அருகே நிஷாந்த ரணதுங்க (செயலாளர்) & துலிப் மென்டிஸ் (தலைமைத் தேர்வாளர்) 

ஒரு தலைவர் எப்படியான முன்னுதாரணமாக இருக்கவேண்டுமோ அப்படியாக நடக்க ஆரம்பித்துள்ளார்.
அனால் டில்ஷான் முற்கூட்டியே இங்கிலாந்துத் தொடருக்காக IPL ஐ விட்டு வெளியேற விரும்பியபோதும் இலங்கை கிரிக்கெட் இல்லை வேண்டாம் என்று நிறுத்திய வேடிக்கையும் நடந்தது.


திலகரட்ன டில்ஷான் - இலங்கை கிரிக்கெட் அணியின் முதலாவது மலாய் இனத்தை சேர்ந்த அணித்தலைவர்.

பிறப்பால் முஸ்லிமாக இருந்து, பாடசாலைக் காலத்தின் பின்னர் பௌத்தராக  மதம் மாறியவர்.(1998 இல் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவுக்கு முன்னர்)
துவான் மொஹம்மத் டில்ஷானாக இருந்தவர், திலகரட்ன முதியன்சலாகே டில்ஷானாக மாறிப்போனார். இல்லாவிடில் இலங்கை அணியின் முதலாவது முஸ்லிம் தலைவராக டில்ஷான் சாதனை படைத்திருப்பார்.

(இன்னொரு சுவாரஸ்யம் டில்ஷானின் மூத்த சகோதரன் சம்பத் - இன்னும் முதல் தரப் போட்டிகளில் விளையாடி வருகிறார் - யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்)

ஆனால் அண்மையில் இலங்கையின் பிரபல ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் தன் மதமாற்றம் குறித்த விளக்கத்தை டில்ஷான் வழங்கியுள்ளார்.
தன் தாய் பௌத்தர் என்றும் சிறுவயதில் இருந்து தனக்கு இஸ்லாம் முறைப்படி பிரார்த்தனை செய்யத் தெரிந்திருக்கவில்லை என்றும், தாயுடன் களுத்துறை மகா போதிக்கு சென்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது தந்தையாரும் பௌத்தராக மாறியுள்ளதாக டில்ஷான் கூறியுள்ளார்.

Dilshan’s decision to change his name from Tuwan Mohamed Dilshan to Tillakeratne Mudiyanselage Dilshan and convert from Islam to Buddhism in 1998 has intrigued many.
In his own words Dilshan describes the change: “Although my father Tuwan Mohamed was Malay I didn’t know anything about Islam. I didn’t know how to speak or to pray from my small age. I used to go to the temple with my mother who was a Buddhist. I discussed with my parents why I am having a Malay name because in future I was going to follow Buddhism, that’s why I changed my name and took after my mother. “I changed my name in 1998 to Tillekeratne Mudiyanselage before going to England with the Sri Lanka ‘A’ team. Because we stayed in my mother’s home town Kalutara we regularly visited the Kalutara Bodhiya. My father has also converted to Buddhism and he goes to the temple regularly more than us. He is the one who lights the oil lamp in front of the Buddha statue at home.”

இலங்கையின் அண்மைக்கால அணித்தலைவர்களில் டில்ஷான் வித்தியாசமானவராக இருக்கப் போகிறார். அர்ஜுன ரணதுங்கவுக்குப் பிறகு இலங்கைக்குத் தலைமை தாங்கப்போகிற ஆக்ரோஷமான தலைவர் இவர்.
சனத் ஜெயசூரிய, மார்வன் அத்தப்பத்து , ஹஷான் திலகரட்ன, மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார ஆகிய அனைவருமே கொஞ்சம் அமைதியான, கனவான் தன்மை கொண்டவர்கள். ஆனால் டில்ஷான் எதிரணி வீரர்களுடன் (சில நேரம் சக வீரர்களுடனேயே) முரண்பட்டு மோதுகின்ற குணமுடையவர். வம்புச்சண்டைகளுக்குப் போகும் சுபாவமும், நிதானமில்லா நிலையும் கொண்டவர்.

ஆனால் டில்ஷான் துடுப்பெடுத்தாடக் களம் இறங்கும் போது எல்லாரையும் விட அதிக மனவுறுதியோடும், பயப்படா இயல்போடும் இருப்பார் என்று சக வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களும் சொல்கிறார்கள்.

அர்ஜுன ரணதுங்க போன்ற ஒருவர், அல்லது ஆஸ்திரேலியாவின் முரட்டுத் தன்மை கொண்ட வீரர் போன்ற ஒருவர் இலங்கை அணியின் தலைவராக வருதல் இந்தக் காலகட்டத்தில் இலங்கைக்குத் தேவையான ஒன்று என்றே நான் கருதுகிறேன்.

இந்திய அணி தொடர்ச்சியான தோல்விகளாலும், கிரிக்கெட் சூதாட்டக் குற்றச்சாட்டுக்களினாலும் தளர்ந்து பலவீனப்பட்டிருந்த நேரத்தில் சௌரவ் கங்குலி அணித்தலைவராக வந்து ஏற்படுத்திய மாற்றங்கள் நல்ல உதாரணம்.
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி பத்தாண்டுகளுக்கு மேலாகியும் டில்ஷான் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தன்னை நிலை நிறுத்தி, அணியில் நிரந்தர இடம் பிடித்தது கடந்த நான்கு ஆண்டுகளாகத் தான்.

இப்போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும் தலைவராகவும் தேவைப்படும் நேரங்களில் சகலதுறை வீரராகவும் மூன்று முக்கிய பொறுப்புக்களை ஒரே நேரத்தில் டில்ஷானினால் சமாளிக்க முடியுமா என்ற கேள்வியே முக்கியமானது.
சச்சின் டெண்டுல்கர் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டத் திறனையே தலைமைத்துவம் மழுங்கடித்திருக்கும் வரலாறு இருக்கையில் டில்ஷானுக்கு என்ன நடக்கும்?


டில்ஷானிடம் உள்ள மிகப்பெரிய சொத்து அவரது அசாத்திய நம்பிக்கை.. இதனால் தான் மத்திய வரிசையில் தடுமாறிக்கொண்டிருந்த டில்ஷானினால் அப்போதைய இலங்கை அணித் தலைவராக இருந்த மஹேல ஜெயவர்தனவினால் சுமத்தப்பட்ட/வழங்கப்பட்ட ஆரம்பத் துடுப்பாட்டப் பொறுப்பைத் துணிச்சலாக எதிர்கொள்ள முடிந்தது.

அடிக்கடி மாறிக் கொண்டிருந்த இலங்கையின் டெஸ்ட் ஆரம்ப ஜோடியையும் டில்ஷானின் மாற்றத்துக்குப் பிறகு நிலையாகக் கொண்டு வர முடிந்தது.

கடந்த பருவகாலத்தில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் டில்ஷான் குவித்த சதங்களின் எண்ணிக்கை 11.டில்ஷானின் இந்தத் திடீர் எழுச்சிக்கான மற்றொரு காரணமாக அவரது புதிய திருமணமும் சொல்லப்படுகிறது. குடும்ப, முதல் மண சிக்கலால் அதிக மன உளைச்சலுக்கு டில்ஷான் ஆளாகி இருந்ததாக அறிய வந்தது.

அந்த வேளையில் தான் இந்தியாவில் IPL உம்,  உலக Twenty 20 இல் டில்ஷான் கண்டுபிடித்து IPLஇல் பிரபலமாகிய Dillys Scoopஉம் அதன் பின் இந்தியாவில் இடம்பெற்ற டில்ஷானின் இரண்டாவது திருமணமும் டில்ஷானை ஒரு நட்சத்திரமாக்கி நம்பிக்கையையும் அதிகரித்தன..

இன்று டில்ஷான் சர்வதேசக் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம்.. ஒரு போட்டியைத் தனித்து மாற்றும் ஆற்றல படைத்தவர்.. அந்த ஆற்றலைத் தலைவராகவும் தளர்ந்து போயிருக்கும் இலங்கை அணிக்கு வழங்க முடியுமா என்பதே அவர் மீதுள்ள பெரிய கேள்வி..

டில்ஷானின் மற்றொரு சிறப்பு அவரது விக்கெட்டுக்களை எடுக்கும் பயனுள்ள பந்துவீச்சும், மின்னல் வேகக் களத்தடுப்பும்.. இந்த வேகமான துடிப்பான களத்தடுப்பு டில்ஷானின் வயதேற ஏற இன்னும் மெருகேறுவது ஆச்சரியம் கலந்த ஆனந்தம்.

களத்தடுப்பின் முக்கியத்துவம் பற்றி டில்ஷான் நன்கு அறிந்தவர். அவரது அசாத்திய நம்பிக்கையைப் பாருங்கள்.. "இலங்கை அணியின் களத்தடுப்பை என் தரத்துக்கு உயர்த்த முயற்சிப்பேன்" - அண்மையில் வழங்கியுள்ள பேட்டி ஒன்றில்

அத்துடன் தேவையேற்படும் நேரங்களில் ஒரு விக்கெட் காப்பாளராகவும் மாறக் கூடியவர்.

டில்ஷான் பாடசாலைக் காலத்தில் ஒரு விக்கெட் காப்பாளராகத் தான் தன் கிரிக்கெட்டை ஆரம்பித்திருந்தவர். தென் ஆபிரிக்க, இங்கிலாந்து நாடுகளுக்கான இலங்கையின் 'A' சுற்றுலாக்களின் பொது டில்ஷான் முதன்மை விக்கெட் காப்பாளராகவும் , முன்னைய தலைவரும் முதன்மை விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார இவருக்கு உதவி விக்கெட் காப்பாளராகவும் சென்ற சுவாரஸ்யமான வரலாறும் பலருக்குத் தெரியாது.
எனினும் அப்போது ரொமேஷ் களுவிதாரணவை தேசிய அணியில் விக்கெட் காப்பாளராக அகற்ற மோத முடியாமல் போகவே டில்ஷான் துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி துடுப்பாட்ட வீரராக மாறியிருந்தார்.

அத்துடன் மேலதிகமாகக் களத்தடுப்பிலும் தன் துரித திறனை வளர்த்துக்கொண்டார்.

இன்று இலங்கையின் புதிய தலைவர் டில்ஷான் இவ்வாண்டு IPLஇல் தனது இறுதிப் போட்டியை விளையாடுகிறார். இந்தப் போட்டியுடன் இங்கிலாந்து புறப்படும் அவர் பொறுப்பான ஒரு அணித் தலைவராக இலங்கையை இங்கிலாந்து சுற்றுலாவின் முதலாவது பயிற்சிப் போட்டியிலிருந்து வழிநடத்தப் போவது ஆரோக்கியமான ஒரு ஆரம்பமே..வாழ்த்துக்கள் முன்னாள் குழப்படிகாரரே..இந்நாள் தலைவரே..

இன்று பெங்களூர் Royal Challengers அணிக்கு இளைய இந்திய வீரர் விராட் கொஹ்லி தலைமை தாங்குவதும் இன்னொரு ஆரோக்கியமான அத்திவாரம் தான்.. IPLஇல் மிக இளவயதான தலைவர் இவரே.. இவரை எதிர்த்து ராஜஸ்தான் Royalsக்கு தலைமை தாங்கும் ஷேன் வோர்ன் தான் இன் வயது முதிர்ந்த தலைவராம். இருவரின் சாதனைகளுமே முறியடிக்கப்பட முடியாதவை என நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்றைய தனது இறுதி IPL போட்டியில் டில்ஷான் கலக்கட்டும்...
இதே கலக்கலை ஒரு ஆக்ரோஷமான தலைவராக ஆளுமையுடன் இலங்கைக்கு குறைந்தது ஒரு வருடமாவது வழங்கட்டும்.. (மத்தியூசோ மற்றொருவரோ தயாராகும் வரை)

14 comments:

ஷஹன்ஷா said...

won the toss...

Unknown said...

வாதங்கள் நியாயமானவை!

மனோவி said...

அதெப்படியோ தெரியவில்லை தில்ஷான் இந்தியாவுடன் போட்டி என்றாலே சிறப்பாக விளையாடுகிறார்..

மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது..

புதிய தலைவருக்கு வாழ்த்துகள்

Pratheeban Sri said...

//வாழ்த்துக்கள் முன்னாள் குழப்படிகாரரே..இந்நாள் தலைவரே..//

full details குடுத்துட்டு கடைசியா நல்ல ஒரு punch வைச்சிட்டிங்களே..!!

கன்கொன் || Kangon said...

நான் உங்களிடம் எதிர்பார்த்த ஆக்கம்.
அவ்வப்போது கதைத்துக் கொண்டாலும், பதிவாக வரும்போது அதன் சுவையே தனிதான்.

டில்ஷானின் தெரிவை விரும்பியிருக்காத அனேமான எங்களை, உங்களைப் போன்றவர்கள் டில்ஷானின் அண்மைக்கால மாற்றங்களால் கவரப்பட்டிருக்கிறோம் என்பது உண்மை தான்.

// தென் ஆபிரிக்காவின் கிரேம் ஸ்மித், இந்தியாவின் தோனி, ஆஸ்திரேலியாவின் பொன்டிங் உதாரணங்கள் இங்கே, இப்போது பொருந்தா.. அந்த மூன்று 'இளைய' தலைவர்களுக்கும் அனுபவம் வாய்ந்த அணி , குறிப்பாக அனுபவம் +பலம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். இலங்கையின் நிலை இப்போது அப்படியல்ல..

முரளியும் இல்லை; போதாக்குறைக்கு மாலிங்கவும் டெஸ்ட் குழுவில் இல்லை. //

அப்படியே ஆமோதிக்கிறேன்!!!


// சச்சின் டெண்டுல்கர் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டத் திறனையே தலைமைத்துவம் மழுங்கடித்திருக்கும் வரலாறு இருக்கையில் டில்ஷானுக்கு என்ன நடக்கும்? //

சச்சின் ரென்டுல்கர் இதில தனித்துவமானவர் என நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை அணித்தலைமைப் பொறுப்பு டில்ஷானுக்கு சுமையாக இருக்காது என நம்புகிறேன். டில்ஷானின் குணவியல்பு அப்படி.

நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு முழுமையான கிறிக்கற் பதிவு.
இடைக்கிடை எழுதவும்.

ம.தி.சுதா said...

அண்ணா டில்சானுக்கு அவரைப் பற்றி தெரிந்ததை விட தங்களக்கு அவரைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்கிறது மிக விளக்கமான பதிவு ஒன்று....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?

ஷஹன்ஷா said...

ஆக்ரோஸமான தலைமைக்காக அட்டகாசமான பதிவு..


டில்சான் துடிப்பாக செயற்படுவார் என நம்புகின்றேன்.. அவரின் அண்மைக்கால செயற்பாடுகள் நம்பிக்கை தருகின்றன..

டில்சான் ஏனைய வீரர்கள் போலில்லை...அவரின் அசாத்திய துணிச்சல் இந்த தலைமை,துடுப்பாட்டம் என்பவற்றில் அதிகம் நன்மை பயக்கும்..ஆனால் களத்தடுப்பில் கொஞ்சம் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதுதான்.. பார்ப்போம்..

விராட்..- வாழ்த்துகள்.. இந்தியாவுக்கு எதிர்காலத்துக்கு தேவையான ஒருவர்...

அண்ணா...கிரிக்கட் அலசல் நீண்ட நாட்களுக்கு பிறகு.. சூப்பர்..அடிக்கடி வேண்டும் என்பதே என் வேண்டுதல்.

MANO நாஞ்சில் மனோ said...

ரைட்டு..

Vathees Varunan said...

good post anne! You know, after work Cup im also Dilshan's Fan bcoz of his alrounder Perfomance....
Congrats Dilshan :)

Shafna said...

dilscoop வாழ்க.! அவரது ஆக்ரோஷமான முகம்,துடிப்பு அனைத்தையும் அவர் குறைத்திருப்பது அவரது முகத்தில் தெளிவாகத்தெரியுது... எங்கே ஒரேயடியாக ஓவர் மூடியாகி கோட்டை விடுவாரோ தெரியாது..அங்கு என்னதான் நடத்தப் போகிறாரென்று இங்கிருந்து பார்க்கத்தானே போகிறோம்.. அவர் நான்கு குழந்தைகளின் தந்தையாமே, அவருக்கு சிங்கள உணவுகள்தான் பிடிக்குமாம்.சோறு,கருவாடு,தேங்காய் சம்பல்,பருப்பு போன்றவை. கிடைக்கும் நேரங்களிலெல்லாம் பன்சல விற்குதான் செல்வாராம்.அங்கு ஹாமதுருவிடம் தான் எதற்கும் ஆலோசனை பெறுவாராம்.இப்ப கூட அவரது கோபத்தை குறைத்து, குழுவை வழி நடாத்தவும் அங்குதான் ஆலோசனை பெற்றாராம். ஒரு சிங்களத்திரைப்படத்தில் கிரிகட் கோச் ஆக நடித்திருக்கிறாராம். பேஷன் டிஸைனிங் ரொம்ப பிடிக்குமாம்..ஆடை நிர்வனமும் நடத்தி வருகிறாராம்.dilscoop என்ற பெயரில் denim,t-shirt வெளியிடப்போகிறாராம். அதன் பின் அவரதும் அவரது மனைவி மஞ்சுளாவினதும் பெயர்களின் முதல் எழுத்துக்களான DM என்ற பெயரில் பெண்களுக்கான ஆடைகளை வெளியிடுவாராம்...கொஞ்சம் சமைக்கவும் தெரியுமாம்.. இவ்வாறு பல விடயங்களை அவரே கூறினார்.. எதிர்கால இலங்கை கிரிகட் அணியின் சிறந்ததோர் தலைமைத்துவம் வாழ்க! டில்ஸ்கூப் வாழ்க! டில்ஷான் வாழ்க! உங்களது விளக்கமான பதிவுக்கு நன்றி... SLPL பற்றி தெரிந்தமட்டில் ஒரு பதிவை இப்போதைக்கு தாருங்கள்.பின்னர் விளக்கமான ஒரு பதிவைத் தாருங்கள்.

நிரூஜா said...

உள்ளேன் ஐயா...

கவி அழகன் said...

ஃஉண்மை அருமை

Mohammed Sajeer said...

Please Visit this link...

http://anbudansaji.blogspot.com/

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner