தொண்ணூறுகளுக்குப் பிறகு சர்வதேசக் கிரிக்க்ட்டைப் பொருத்தவரை எழுதப்படாத விதியாக மாறிய ஒரு விடயம் தான் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் உலகக் கிண்ணத்தைக் குறியாக வைத்துக் கட்டமைக்கப்படும் அணிகளின் உள்ளடக்கமும் நிர்வாகமும்.
ஆஷசில் மோதும் எதிரிகள் இருவரும் இதில் கொஞ்சம் விதிவிலக்காக இருந்தாலும் ஆசிய அணிகளும் தென் ஆபிரிக்காவும் உலகக் கிண்ணம் என்ற உயரிய உன்னதத்தையே தம் அணிகளின் இறுதி இலக்காக வைத்துக் கொண்டு வருகின்றன.
நான்காண்டுத் திட்டங்களாக அணிகளை உருவாகுவது, தலைவர்களைக் கட்டியெழுப்புவது என்று இந்த உலகக் கிண்ணத்தை மையப்படுத்திய அண்மைக்காலத்தில் நாம் அவதானிக்கலாம்.
உலகின் முக்கிய அணித் தலைவர்கள் தாம் பதவிகள் விலகுதலை அறிவிப்பதும் அல்லது பதவிகளை கை மாற்றுவதும், வீரர்கள் தம் ஓய்வை அறிவிப்பதும் கூட இந்த உலகக் கிண்ண மேடைகளில் தான்.
இம்முறை உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்தும் பல அணித தலைவர்களில் மாற்றங்கள்; சில வீரர்களின் ஓய்வுகள்.
இவற்றுள் நியூ சீலாந்தின் வெட்டோரி, தென் ஆபிரிக்காவின் ஸ்மித் ஆகியோர் தத்தம் அணிகளின் ஒருநாள் தலைமைகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முற்கூட்டியே அறிவித்திருந்தனர்.
நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியா காலிறுதியுடன் வெளியேறியதை அடுத்து ரிக்கி பொன்டிங் உலகக் கிண்ணத்தின் பின் பதவி விலகிய முதல் தலைவராகினார்.
அதன் பின் இறுதிப் போட்டியில் இந்தியா வென்று, இலங்கை தோற்றபின்னர் உடனே என்று இல்லாமல், நாடு திரும்பிய பிறகு இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார தான் பதவி விலகும் முடிவை அறிவிக்கிறார்; அடுத்த நாள் உப தலைவராகக் கடமையாற்றிவந்த மஹேல ஜெயவர்த்தன பதவி விலகுகிறார்; அதே அன்று தேர்வுக்குழுத் தலைவரான அரவிந்த டீ சில்வா தலைமையிலான குழுவும் தம் பதவிக்காலம் முடிவடைய மூன்று வாரகாலம் இருக்கும் நிலையில் பதவி விலகுகிறது.
அத்துடன் உலகக் கிண்ணத்துக்கு முன்னதாகவே தெரிந்த பயிற்றுவிப்பாளர் டிரேவர் பெய்லிஸ் தன் பதவிக்காலம் முடிவடைவதால் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியிருந்தார்.
இதனால் இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலமானது முற்றிலும் புதியதாக, மீள் உருவாக்கப்பட்டே முன்கொண்டு செல்லப்படவேண்டிய நிலை உருவானது.
இந்தப் பரபரப்பு சூழ்நிலை கடந்த பத்து நாட்களாக நீடித்திருந்தது.
அரசியல் தலையீடுகள், முரண்பாடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இந்த விலகல்கள் இடம்பெற்றதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதிலே சங்காவின் திடீர் பதவி விலகல் கொஞ்சம் ஆச்சரியமானதாகவே அல்லது அதிர்ச்சி தருவதாகவே இருந்தாலும் , அடுத்த உலகக் கிண்ணத்தைக் குறிவைத்து இனி அணியொன்றைக் கட்டியெழுப்புவது சம்பந்தமாகப் பார்த்தால் சங்காவின் இந்த முடிவும் அர்த்தமுள்ளதாகவே தெரிகிறது.
அத்துடன் என்னைப் பொருத்தவரை சங்கக்காரவின் தலைமைத்துவம் மிகச் சிறந்தது என்று சொல்வதற்கில்லை. மஹேல, சனத் ஜெயசூரிய போன்றவர்களுடன் ஒப்பிடுகையில் சங்கா தலைவராக சராசரியாகவே இருந்தார்.
இறுதிப் போட்டியிலும் இலங்கை தோற்றிருந்த இன்னும் சில போட்டிகளிலும் சங்கா தலைவராக சில,பல இடங்களில் சறுக்கியிருந்தார். எனவே புதியவர் ஒருவரைத் தலைவராக்குவது இலங்கைக்கு புதிய உத்வேகத்தைத் தரலாம்.
ஆனால் இருக்கும் சிக்கல் யாரோருவரையும் அடுத்த தலைவராக இலங்கை தயார்ப்படுத்தி இருக்கவில்லை.
இப்போது டில்ஷானை தெரிவு செய்துள்ளார்கள். அதுபற்றி பின்னர் அலசலாம்..
மகேலவின் விலகல் சாதாரணமானது. அவர் முன்னாள் தலைவர். சங்கக்காரவுக்கு உதவியாகத் தான் இந்த உலகக் கிண்ணம் வரை மட்டும் உபதலைவராக இருக்க ஒப்புக் கொண்டவர். எனவே தான் உலகக் கிண்ணம் முடிய, சங்கா விலக மகேலவும் விலகியுள்ளார்.
தலைவரும் உப தலைவரும் இல்லாத இடத்தில், ஏன் அணியும் இப்போதைக்குத் தேர்வு செய்யப்படவேண்டிய தேவை இல்லாத நேரத்தில் தேர்வாளர்கள் எதற்கு?
இதனாலேயே முப்பதாம் திகதிக்கு முடியவேண்டிய தம் கால எல்லைக்கு முன்பதாகவே தாம் தேர்வுக்குழுவில் இருந்து விலகுவதாக அரவிந்தவும் ஏனைய தேர்வாளர்களும் அறிவித்தனர்.
எனவே இதுவும் இயல்பானதே.. சந்தேகப்படவேண்டிய தேவையில்லை. ஒன்றில் தொடங்கிய தொடர்ச்சியான ஒவ்வொரு தாக்கங்கள்.
ஆனால் சங்கக்கார இதை முதலில் தன்னுடைய பேட்டியில் மறுத்திருந்தாலும் பெய்லிஸ் விடைபெறும் நேரம் வழங்கிய பேட்டியில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் வீரர்கள் தம் மனதை ஒருமுகப்படுத்தி விளையாடுவது உண்மையில் மெச்சக்கூடியது என்று பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, சங்காவின் நீண்ட மனம் திறந்த பேட்டியில் சில விஷயங்கள் வெளியாகின..
கொஞ்சம் வெளிப்படையாக, கொஞ்சம் மறைமுகமாக சங்கா சொன்ன விஷயங்கள்.. மற்றும் நாம் உணரக்கூடிய விஷயங்கள்..
பதினொருவர் கொண்ட அணியைத் தெரிவு செய்வதில் தலையீடுகள், அழுத்தங்கள் இருப்பதில்லை எனினும் அணி ஒன்று தேர்வுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் விளையாட்டு அமைச்சர் அங்கீகாரம் வழங்கவேண்டிய நிலை உள்ளது.
அணியில் வீரர் ஒருவரை சேர்க்கவேண்டும் என்று அழுத்தம் தரப்படுவதில்லை; எனினும் சில சமயங்களில் குறிப்பிட்ட வீரர்கள் ஏன் சேர்க்கப்படுவதில்லை என்று கேள்விகள் வந்துள்ளன.
அணிக்குள் எந்தவொரு அரசியல் குழு நடவடிக்கைகளும் இல்லை எனினும் கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் அரசியல் நிறையவே உள்ளது.
உடனடியாக விளையாட்டு அமைச்சர் கொண்டுவந்த புதிய தேர்வுக்குழுவானது அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்களை உள்ளடக்கிய ஒன்று தான்.
இலங்கை அணியின் தலைவராக, முகாமையாளராக, தேர்வாளராக கடமை ஆற்றிய அனுபவம் கொண்ட துலீப் மென்டிஸ், முன்னாள் இலங்கை வீரர்கள் டொன் அனுரசிரி, ரஞ்சித் மதுரசிங்க, சமிந்த மென்டிஸ் (தேர்வுக்குழுவுக்கு இவர் புதியவர்)
ஆனால் அரவிந்த குழுவினர் தம் கடமையை நேர்மையாகவும் பெரும்பாலாக திருப்தியாக இருக்கக் கூடிய விதத்திலும் செய்ததைப் போல இந்த புதியவர்கள் செய்வார்களா என்பது சந்தேகமே.
காரணம் முன்பு அனுரசிரி, மதுரசிங்க தேர்வாளர்களாக இருந்தபோது அவ்வளவு திருப்தியாக செயற்பட்டிருக்கவில்லை.
இப்போது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் துரித நடவடிக்கைகள் ஓரளவு நிதானத்தையும் தெளிவையும் காட்டுகின்றன..
முதலில் டில்ஷானின் தலைவர் நியமனம்..
சங்கா,மஹேல ஆகியோருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் இவர் தான். அத்துடன் இலங்கை அணியில் மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாடும் மிகச் சிலரில் இவர் முதன்மையானவர். எனவே இருப்பவரில் தேடும்போது டில்ஷான் தெரிவுசெய்யப்படுவார் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தது.
சங்கக்கார டெஸ்ட் அணித் தலைவராக யாரும் பொறுப்பேற்காத பட்சத்தில் தானே டெஸ்ட் அணியின் தலைவாரக நீடிக்கத் தயார் என்று அறிவித்திருந்தார். ஆனால் தேர்வாளர்கள் இப்போது இங்கிலாந்துத் தொடருக்கான சகலவிதமான போட்டிகளுக்குமே டில்ஷானைத் தலைவராக அறிவித்துள்ளார்கள்.
இது டில்ஷான் மீதான நம்பிக்கை என்பதை விட, அணிகளையும் தலைமையும் உடைப்பதை விட ஆரம்பத்தில் சிலவேளைகளில் சறுக்கினாலும் ஒரே ஒருவரிடம் அனைத்தையும் ஒப்படைப்பது சிறப்பானது எனத் தேர்வாளர்கள் கருதியுள்ளார்கள் எனத் தெரிகிறது.
புதிய தலைவர் டில்ஷான் பற்றி தனியாகக் கொஞ்சம் விரிவாக அலசலாம் என நினைக்கிறேன்..
அதற்கு முன் உப தலைவராக யாரும் நியமிக்கப்படாமை பற்றியும் பார்க்கவேண்டும்.
டில்ஷானுடன் அடுத்த தலைமைப் பதவிக்கு இணைப் போட்டியாளர் எனக் கருத்தப்பட அஞ்சேலோ மத்தியூஸ் காயம் காரணமாக ஓய்வெடுப்பதனாலேயே இதுவரை உபதலைவர் யாரென அறிவிக்கப்படவில்லை என ஊகிக்கலாம்.
அடுத்து இன்று வெளியான செய்தி - துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக மார்வன் அத்தப்பத்துவின் நியமனம். இது சிலகாலம் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்கக் கூடிய ஒரு விடயமே எனினும் ஏற்கெனவே சிறப்பாகத் தன பங்களிப்பை வழங்கிவந்த சந்திக்க ஹத்துருசிங்கவை கழற்றிவிட்டு அத்தப்பட்டது பக்கம் தாவியது அவ்வளவு நன்றாக இல்லை என எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் இலங்கையின் பயிற்றுவிப்பு அமைப்பு பொதுவாகவே அண்மைக்காலங்களில் உறுதியாகவே இருந்து வருகிறது.
எனவே அத்தப்பத்த்துவின் வருகையுடன் இப்போது இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக இருக்கப்போகிற ஸ்டுவர்ட் லோவுடன் இலங்கையின் துடுப்பாட்டம் மேலும் நிதானம் பெரும் என்பதையும் மத்தியவரிசைத் தடுமாற்றம் இல்லாமல் போகும் என்றும் நம்பி இருக்கலாம்.
எனினும் உலகக் கிண்ணத்தில் முதல் சுற்று, கால் இறுதிகளில் வெளியேறிய அணிகளே பதறியடித்து சடுதியான மாற்றங்களை அவசர,அவசரமாக செய்யாதபோது இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை இப்படிப் பதறியடித்து மாற்றங்களை அவசர,அவசரமாக செய்வது இலங்கை ரசிகர்களுக்கே உள்ளே உண்மையாகவே ஏதாவது அரசியல் கோல்மாலுகள் இருக்கலாமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவது இயல்பானது தான்.
ஆனால் இது ஒரு முக்கிய தொடருக்குப் பின் சாதரணமாக நடக்கின்ற சில,பல மாற்றங்கள் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளல் வேண்டும்.
சாதாரணமாகஇது எம்மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிராது. ஆனால் ரொம்ப எதிர்பார்த்து இறுதிப் போட்டியில் தோற்றதும், அதிலும் இந்தியாவிடம் தோற்றதும் அதைத் தொடர்ந்துவந்த சில இந்திய-இலங்கை அரசியல் 'உபசார' முறுகல்களும் இப்படியொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டன.
இப்போது IPLஇல் விளையாடிவரும் இலங்கை வீரர்களை அவசர,அவசரமாக விளையாட்டு அமைச்சர் அழைத்திருப்பதற்கும் இலங்கை ஜனாதிபதி+அமைச்சர் குழுவினருக்கு இறுதிப் போட்டியில் வழங்கப்படாத 'மரியாதை' தான் காரணம் என்பது அண்மைய முறுகல்களில் இருந்து எல்லோருக்கும் புரியக் கூடியதாக இருக்கும்.
ஆனால் பணக்கஷ்டத்திலும் எக்கச்சக்க கடன் தொல்லையிலும் இருக்கும் இலங்கை கிரிக்கெட் பணத்தை அடிக்கடி வாரி வழங்கும் இந்திய கிரிக்கெட் சபையுடன் இது விவகாரமாக மோதிக் கையைக் கடித்துக் கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கிறேன்.
உலகக்கிண்ணத்துக்கு முன்பே வீரர்களுக்கு சொல்லி இருந்ததைப் (OR என்று சொல்லப்படுவதைப்) போல மே 20ஆம் திகதி வரை விளையாட விடுவார்கள் என்று நம்புகிறேன்..
பேச்சுவார்த்தை அப்படி எதுவும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் சபை நேற்று சொல்லி இருந்தாலும் காதும் காதும் வைத்தாற்போல இந்த விவகாரத்துக்கு இலங்கை - இந்திய கிரிக்கெட் சபைகள் முடிவு கட்டும் என்று நம்பி இருக்கலாம்.
(எம் இரு நாடுகளும் மீனவர் பிரச்சினை, அகதிகள் பிரச்சினை முதல் அனைத்துவிதப் பிரச்ச்சினைகளையும் இப்படித் தீர்ப்பது தானே வழக்கம்)
டில்ஷான் பற்றி அடுத்த பதிவில் அலசுகிறேன்...(இன்னும் வேறு சில விஷயங்கள் பற்றியும்)
பி.கு - கடந்த பதிவில் உங்களை ஊகிக்க விட்ட விஷயத்தில்....
##இம்முறை எந்த IPL அணிக்கு ஆதரவு என்று கேட்கும் நண்பர்களுக்கு......
சிலர் சரியாக ஊகித்திருந்தார்கள்...
இம்முறை நான் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு என் முதல் ஆதரவு.. சென்னை சூப்பர் கிங்க்சை விட ஒரு சில புள்ளிகளால் கொச்சி என் ஆதரவைப் பெற்றுக் கொள்கிறது.. மூன்றாம் இடத்தை டெக்கான் சார்ஜர்சுக்கு வழங்குகிறேன் :)
சரியான விடைகளை ஊகித்த நண்பர்கள்
வந்தியத்தேவன், Komalan, M.Shanmugan, தர்ஷன், Nirosh, Subankan, Vijayakanth, வடலியூரான்