மும்பாய் வண்கேடே இறுதியிலிருந்து..

ARV Loshan
9
எமது ஊடகவியலாளர் அறையினுள்ளே ஒரு அழகான தரைக் கோலம் 

இன்று மும்பாய் இறுதிப் போட்டிக்காக மகாராஷ்டிரா முழுவதும் அரச அலுவலகங்களில் விடுமுறை. ஆனால் கடைகள் சில தான் மூடியுள்ளன.'இந்தியா உலகக் கிண்ணம் வென்றால் நாடு முழுவதும் விடுமுறையோ?



மைதானத்தை சுற்றியுள்ள ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வாகனங்கள் உள் நுழைய முடியாது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரம். இராணுவத் தாங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கி கொண்டு திரியும் விசேட ராணுவத்தினர் என்று அவசரகால நிலையிலிருந்த நம் நாட்டைப் பார்த்த ஞாபகம்.

மைதானத்துக்குள்ளே நுழைவதற்குள் எத்தனை கெடுபிடி? முதலில் பைகளைக் கொண்டு போக விடமாட்டோம் என்று ஹிந்தியில் இராணுவம்.ஊடகவியலாளர்கள் என்று சொன்னபிறகும் எங்கள் இருவரினதும் மடிக்கணினிகளை அனுமதிக்க மறுத்த காவல்துறை.
ஆங்கிலத்தில் பாதி எங்களுக்குத் தெரிந்த ஹிந்தியில் மீதியாக கஷ்டப்பட்டு அவர்களுக்குப் புரியச் செய்து வண்கேடே மைதானத்துக்குள் ஊடகவியலாளரான நாம் நுழையும் வாயிலான பல்கலைக்கழக வாயிலோடு நுழைந்தால் முன்னூறுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள்.

கள நேரடித் தகவல்களுடன் நானும் விமலும் 

இலங்கையில் இருந்த திட்டமிட்ட போட்டிக்கான ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை இங்கே இருக்கவில்லை. நீண்ட நேரம் காக்கவைத்து உள்ளே அனுப்பினர்கள்.

நுழைவாயில் பிரதேசம் 

நல்ல காலம் ICC  பெரிய அதிகாரி கொலின் ஜிப்சன் புண்ணியத்தில் அந்தக் காய்ந்த நேரத்தில் கொஞ்சம் குடிக்க பெப்சியும் தண்ணீரும் கிடைத்தன.
வரவேற்புக்கு இலங்கைக்குப் பிறகு சென்னை தான். மும்பாய், மொஹாலி எல்லாம் கடுப்பேற்றிய இடங்கள்.

இந்த கிரிக்கெட் சபைகளுடன் பார்க்கையில் இலங்கை ஆயிரம் மடங்கு அற்புதமான உபசாரத்தை வழங்கி இருந்தது.


நாணய சுழற்சி குழப்பமானது.. சங்கக்கார தலை என்று சொன்னது இந்தியத் தலைவருக்கு மாறிக் கேட்டதாம்.. போட்டித் தீர்ப்பாலருக்குக் கேட்கவே இல்லையாம்.
இரண்டாம் முறை இடம்பெற்ற நாணய சுழற்சியிலும் சங்கா வென்றார்.

இன்றுன் மட்டும் மும்பாய்க்கு வந்த விசேட விமான சேவைகள் பன்னிரெண்டாம்.
அதிலும் இன்றைய உள்ளூர் விமான சேவைக் கட்டணங்களை எல்லாம் கண் மண் தெரியாமல் உயர்த்தியுள்ளார்கள்.. இலங்கையில் எரிபொருள்களின் விலைகளை நேற்று உயர்த்தியது போல..

இலங்கை ரசிகர்களும் இருக்கிறார்கள் 

சச்சின், முரளி ஆகிய இருவரினது இறுதி உலகக் கிண்ணப் போட்டி என்பது பலருக்கும் செண்டிமெண்டைக் கிளறியுள்ளது.
சச்சின் சறுக்கி விட்டார்.

அவரது நூறாவது சதத்தை எதிர்பார்த்து வந்தோர்க்கு ஏமாற்றமே.

எங்கு பார்த்தாலும் மூவர்ணக் கொடிகள்..


மகேள தனது மூன்றாவது உலகக் கிண்ண சதத்தையும் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தன் இரண்டாவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.
சாகிர் கானின் பந்தில் சதத்துக்கான ஓட்டம் பெறத் தயாராகும் மஹேல

இதற்கு முதல் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சதமடித்த ஐவரும் உலகக் கிண்ணத்தைத் தம் அணிக்கு வென்று கொடுத்துள்ளார்கள்.
(லோயிட், ரிச்சர்ட்ஸ், அரவிந்த டீ சில்வா, பொன்டிங், கில்கிரிஸ்ட்)

கமீரும் இன்னும் சொற்பவேளையில் சதம் பெற்றுவிடுவார் போல் தெரிகிறது. ஒரே உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரு வீரர்கள் சதம் அடித்த வரலாறு இதுவரை இல்லை.

டில்ஷான் இந்த உலகக் கிண்ணத்தில் ஐந்நூறு ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
சச்சினால் அவரை முந்த முடியவில்லை. (482) 



சாகிர் கான் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த ஷஹிட் அப்ரிடியை சமன் செய்தார்.

முரளிதரனுக்கு இன்னும் இருக்கும் சொற்ப ஓவர்களில் உலகக்கிண்ணங்களில் மொத்தமாகக் கூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய மக்க்ராவின் சாதனையை சமப்படுத்த மூன்று விக்கெட்டுக்கள் தேவை.

மும்பாய் மைந்தன் பந்துவீசுகிறார் 

சச்சின் அண்மையில் உலகக் கிண்ணத்தில் இரண்டாயிரம் மொத்த ஓட்டங்களைப் பெற்ற ஒரே வீரரானார்.
இன்று சங்காவும் மஹேலவும் ஆயிரம் ஓட்டங்களை நெருங்கி வந்து மயிரிழையில் தவற விட்டனர்.
சங்கா -991 மஹேல - 975
அடுத்த உலகக் கிண்ணத்தில் பார்த்துக்கலாம்.

மஹேல சதம் 


ரிக்கி பொண்டிங்கின் அதிக உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய சாதனையை (46) சச்சின் டெண்டுல்கரால் முறியடிக்க முடியாமலேயே போய் விட்டது.
சச்சினின் இன்றைய இறுதி அவரது 45வது போட்டி. 
இன்று முரளிதரனின் 40வது போட்டி.

இந்த இறுதிப் போட்டியைப் பார்க்க பல பிரபலங்கள், மிகப் பிரபலங்கள் எங்களுடன் வந்திருந்தார்கள் என்பது எமக்கும் பெருமை தானே..

இலங்கை ஜனாதிபதி, அவர் புதல்வர் நாமல் ராஜபக்ச, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், அமீர் கான், ராகுல் காந்தி, முன்னாள் வீரர்கள் ரொஷான் மகாநாம, அடம் கில்கிரிஸ்ட், இப்படிப் பலர்..
இவர்களில் நாம் இருந்த ஊடகவியாலளர் பகுதிக்கு அருகில் இருந்த நடிகர் பாரத்தை மட்டும் கண்டுகொண்டோம்.

கண்ணாடி சுவருக்கப்பால் சைகையால் பேசிக்கொண்டோம்.
இந்தியா சிறப்பாக செய்யும்போது தன்னை மறந்து எழுந்து ஆரவாரம் செய்வதும் சச்சின், சேவாகின் ஆட்டமிழப்பின்போது அழும் முகத்துடன் இருந்ததும் ஒரு தீவிர ரசிகராகக் காட்டியது.


இன்று ரசிகர்கள் பலவிதங்களில் பாவம்.. 
அவர்களால் கமேராக்களை உள்ளே கொண்டுவர முடியாமல் போன சோகம் அப்படியே தெரிந்தது. முடியுமானவரை தம் செல்பேசிகளைக் கமேராவாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
கண்ணாடி சுவர்களோடு எம்முடன் மொழிகடந்து நட்பானவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக சில படங்களை அனுப்பி வைத்தோம்.

மஹேலவின் சதத்தை வாழ்த்தும் இந்திய ரசிகர்கள் 

முடியுமானவரை எடுத்த படங்களை என் Facebookஇல் பகிர்ந்துள்ளேன்..










Post a Comment

9Comments

Please Select Embedded Mode To show the Comment System.*