மும்பையில் இடம்பெறும் முக்கிய உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்காக போட்டிகளை நடத்தும் இரு நாடுகளும் எதிர்பார்த்தது போலவே (நானும் பலரும்)தெரிவாகி இருக்கின்றன.
விக்கிரமாதித்தனாக இருந்தாலும் நான் உலகக்கிண்ணம் ஆரம்பிக்க முன்னரே எதிர்வு கூறியது இப்போது நடந்துள்ளது.
இரு அணிகளும் மும்பாய்க்கு சென்றுள்ள நிலையில் நான் இரண்டாவது அரையிறுதி நடந்த மொஹாலிக்கு அருகில் உள்ள சண்டிகார் நகரில் இருந்து இந்தப் பதிவை இடுகிறேன்.
சண்டிகாரில் ஆரம்பித்து மும்பாய் வரை பதிவும் நீள்கிறது.
(கொழும்பு தவிர வெளியூர் ஒன்றில் இருந்து நான் இடும் முதலாவது வரலாற்று சிறப்புமிக்க பதிவு என்ற பெருமை பெரும் பதிவு இது)
நேற்று முன்தினப் போட்டி மொஹாலி மைதானத்திலிருந்து பார்த்த அனுபவம் ஒரு பரவசம்.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்.. பல மிக முக்கிய பிரபலங்கள். அதை விட பதினைந்து மணி நேர இடைவிடாத, தூக்கமற்ற பயணத்தின் பின் கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகளைத் தாண்டி உள்ளே நுழைந்து தமிழில் அங்கிருந்து வெற்றி மூலம் உலகம் முழுவதும் தகவல் கொடுத்த நானும் விமலும்..
இந்தியாவின் துடுப்பாட்டத் தடுமாற்றங்களின் போது மொஹாலியே கலங்கியதும், பின் பாகிஸ்தனிய விக்கெட்டுக்கள் சரிய சரிய உயிர் பெற்று உற்சாகம் பெற்றதும் கண்கொள்ளாக் காட்சிகள்.
ஆனாலும் எனது கமெராக் கண்களுக்குள் இந்த அற்புதமான காட்சிகள் எவற்றையும் பிடித்துக்கொண்டு போக்கிஷமாக்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்காத பாதுகாப்புக் கெடுபிடியாளர்களுக்கு தலையில் இடி விழ...
அரையிறுதியில் இந்தியா வென்று அதன் அமளிதுமளி அடங்க ஒரு நாளாகியது .. சண்டிகாரில். ஆனாலும் இந்தியாவுக்குத் தான் உலகக் கிண்ண வாய்ப்பு என்று அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். (இலங்கை அணி மீது மதிப்புக் கலந்த பயம் இருந்தாலும்)
நேற்று நாம் சண்டிகார் நகரில் சுற்றித் திரிந்தபோது நாம் இலங்கையர் என்று அடையாளம் கண்டவர்கள் எம்மை இறுதிப் போட்டியில் சந்திக்கும் எதிரிகளாக நோக்காமல் சிநேகபூர்வமாக வரவேற்றமையும் சனத், முரளி, மாலிங்க, மஹேல பற்றி விசாரித்தமையும் முக்கியமானவை.
இந்தியா vs இலங்கை - இறுதிப் போட்டியின் சுவாரஸ்ய ஒற்றுமைகள்
இந்தியா, இலங்கை இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு வரும் மூன்றாவது முறை இது.
இரு அணிகளும் இறுதிக்கு வந்த முதல் தடவை கிண்ணத்தைக் கைப்பற்றின. (இந்தியா - 1983, இலங்கை -1996)
அடுத்த முறை இரு அணிகளுமே ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போயின. (இந்தியா - 2003, இலங்கை -2007)
இப்போது போட்டிகளை நடத்தும் இரு அணிகளும் தங்கள் இரண்டாவது கிண்ணத்துக்காகக் களம இறங்குகின்றன.
போட்டிகளை நடத்தும் நாடோன்றாக இலங்கை உலகக் கிண்ணத்தை வென்றது.வேறு எந்த நாடும் செய்யாத ஒரு விடயம். இம்முறை இலங்கை இரண்டாவது தடவையாக அதை நிகழ்த்தும் வாய்ப்பு இருக்கிறது.
இதேவேளை இந்தியா ஒரு சரித்திர சாதனைக்குக் காத்திருக்கின்றது. எந்தவொரு நாடும் தன் சொந்த மைதானத்தில் உலகக் கிண்ணம் வென்றதில்லை.
அத்துடன் இந்த உலகக் கின்னத்தைத் தங்கள் இருபது வருட கிரிக்கெட் கதாநாயகன், இந்தியாவின் கிரிக்கெட் கடவுளுக்காக வெல்ல வேண்டிய கடப்பாட்டுடன் இந்தியா களம் காண்பது போலவே, தங்கள் இருபது வருட உலக சாதனையாளர், சுழல் பந்து வெற்றியாளர் முரளிதரனுக்காக இந்த உலகக் கிண்ணத்தை வென்று ஆகவேண்டிய கடப்பாடு இலங்கை அணிக்கு இருக்கிறது.
ஏற்கெனவே நியூ சீலாந்துடனான இலங்கை அணியின் அரையிறுதிப் போட்டியுடன் இலங்கை மண்ணில் தனது இறுதி ஒரு நாள் போட்டியை விளையாடி சொந்த நாட்டு ரசிகர்களுக்கு விடையளித்துள்ள முரளி மும்பாயில் உலகக் கிண்ண வெற்றியுடன் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பதையும், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி உலகக் கிண்ணப் போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொள்வாரா என்பதையும் ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.
கடந்த உலகக் கினத்திளிருந்து இந்த உலகக் கிண்ணம் வரை தமக்குள்ள அடிக்கடி மோதிக் கொண்ட அணிகள் இவை தான். 34 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை மோதியிருக்கின்றன. அண்மைக்காலத்தில் இவை எப்போது சந்தித்தாலும் 'அட மறுபடி இவர்களா? ' என சலித்துக் கொட்டாவி விடும் எங்களுக்கு இந்த இறுதிப் போட்டியில் இவை சந்திப்பதானது பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பான போட்டியையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
காரணம் கடந்த நான்கு வருடகாலத்தில் தொடர்ச்சியாகவே திறமையாகவும் வெற்றியின் தாகத்தோடும் விளையாடிய இரு அணிகள் இவை தான்.
உலகக் கிண்ணத்தில் இதுவரை ஏழு தடவைகள் இலங்கையும்ஜ் இந்தியாவும் மோதியுள்ளன.. இதில் நான்கு தடவைகள் இலங்கை வென்றுள்ளது .(79, 96 முதல் சுற்று + அரையிறுதி , 2007)
இரண்டு தடவைகள் இந்தியா.(99, 2003)
92ஆம் ஆண்டு போட்டி மழையினால் கழுவப்பட்டது.
இந்த முறை உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இவ்விரு அணிகளின் பெறுபேறுகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
முதல் சுற்றில் இவ்விரு அணிகளும் தத்தம் பிரிவில் முதலிடம் பெறும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன.
அந்தந்தப் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்திய தென் ஆபிரிக்காவிடமும், பாகிஸ்தானிடமும் தோற்று ரசிகர்களை ஏமாற்றின.
இலங்கை ஆஸ்திரேலியாவுடனான போட்டியை மழை காரணமாகக் கழுவிக் கொள்ள, இந்தியா அதிர்ச்சியாக இங்கிலாந்தோடு சமநிலை முடிவைப் பெற்றது.
இரண்டும் தத்தம் கால் இறுதிகளில் ஆஷஸ் எதிரிகளை வெளியே அனுப்பின.
இரண்டு அணிகளுமே தலா ஒவ்வொரு வேகப் பந்துவீச்சாளரில் முழு நம்பிக்கையையும் சுழல் பந்துவீச்சாளரில் தங்கியிருப்பையும் கொண்டுள்ளன.
இரு அணிகளிலும் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் தான் தொடர்ந்து திறமை காட்டி வந்துள்ளனர்.
இலங்கை - தில்ஷான், தரங்க, சங்கக்கார, மஹேல
இந்தியா - டெண்டுல்கர், சேவாக், கம்பீர், யுவராஜ்
முன்னைய எதிர்வுகூறல் பதிவில் சொன்னது போல முதல் தடவையாக விக்கெட் காப்பாளர் தலைமை தாங்கி இம்முறை தன் அணிக்கு உலகக் கிண்ணம் வென்று தரப் போகிறார் - யார் வென்றாலும்.
---------------
மும்பாய் வன்கேடே ஆடுகளம் எல்லோருக்கும் எல்லாம் தரக்கூடியது என்று சொல்கிறார் ஆடுகளப் பராமரிப்பாளர் சுதிர் நாய்க். உண்மை தான்..
இறுதியாக மும்பாயில் நடந்த இலங்கை - நியூ ஸீலாந்து முதல் சுற்றுப் போட்டியில் இது தெளிவாகத் தெரிந்தது.
சங்கா சதம்.
வேகப் பந்துவீச்சாளர் சௌதீ 3 விக்கெட்டுக்கள்.
பின்னர் முரளியின் சுழலில் வீழ்ந்த நான்கு விக்கெட்டுக்கள்.
ஆனாலும் நாணய சுழற்சி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்தும் என்றே தெரிகிறது.
சச்சினின் சொந்த ஊரில் சங்காவின் அணி சரித்திரம் படைக்குமா எனப் பார்க்கலாம்.
இரண்டு அணிகளும் தங்கள் சமபல அணிகளைத் தெரிவு செய்யும் எனத் தோன்றுகிறது.
இரு வேகம் + இரு சுழல் + பகுதி நேரப் பந்துவீச்சாளர்கள்.
சகல வீரர்களும் சம பலம் போல் தெரிந்தாலும், மத்திய வரிசையில் இலங்கை அணி தடுமாறிக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குகிறது.
அரங்கில் நிறைந்து வழியப் போகிற ரசிகர்களின் ஏக ஆதரவு இந்தியாவுக்கு மேலதிக பலத்தை வழங்குமா அல்லது அழுத்தத்தைக் கொடுக்குமா என்பது முப்பது மில்லியன் அமெரிக்கன் டொலர் கேள்வி.(உலகக் கிண்ணப் பரிசுத் தொகை)
அணிகளைப் பற்றி அலசல்
இந்தியா பாகிஸ்தானை வென்ற அதே அணியில் ஒரு மாற்றத்தை செய்வது உறுதி. நெஹ்ரா விரலில் காயம் என்று செய்திகள் வந்துள்ள நிலையில் அஷ்வின் அணிக்குள் வருவது உறுதி. நெஹ்ரா முழு ஆரோக்கியத்துடன் இருந்திருந்தாலும் இந்த மாற்றத்தை இந்தியா செய்திருக்கும் என்றே நம்பலாம்.
தென் ஆபிரிக்காவுடன் சொதப்பியதன் பின்னர் பாகிஸ்தானுடன் நேஹ்ராவின் துல்லியப் பந்துவீச்சைக் கண்டவர்கள் வாயடைத்திருப்பார்கள்.
இலங்கை அணி தனது அணித தெரிவில் கொஞ்சம் தடுமாறுவது போல் தெரிகிறது.
மத்திய வரிசைக் குழப்பம் என்று வெளியே நாம் யோசிக்கும் அளவுக்கு அணிக்குள்ளே அந்தளவு குழப்பம் இல்லை எனக் காண்கிறேன்.
கபுகெதரவை அணிக்குள் சாமர் சில்வாவுக்குப் பதில் கொண்டுவருவார்கள் ன்று ஒரு கதை இலங்கை முகாமுக்குள் இருந்து தெரியவந்தது.
ஆனால் அஞ்சேலோ மத்தியூசின் காயம்+உபாதை காரணமாக அவருக்குப் பதிலாக சுராஜ் ரண்டீவ் விளையாடுவதை ICC இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இம்முறை வீரர்களை காயம் காரணமாக மாற்றும் விதிகளைக் கொஞ்சம் தளர்த்தியதனால் பயன்படுத்திய அதே உத்தியை இலங்கை இந்த இறுதிப் போட்டிக்குப் பயன்படுத்துகிறது.
ஆஸ்திரேலியா போல்லின்ஜர் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து துடுப்பாட்ட வீரர் ஹசியை அணிக்குள் கொண்டு வந்ததும் நேரடியாக அவரைப் பதினோருவருள் ஒருவராகக் கொண்டு வந்ததும் இங்கிலாந்து கெவின் பீட்டர்சனுக்குப் பதிலாக ஒயின் மோர்கனை அணிக்குள் கொண்டு வந்து நேரடியாக இறுதி அணிக்குள் இணைத்ததைப் போலவே இந்தியாவில் வீழ்த்த இலங்கை வகுத்த வியூகம் தான் சுராஜ் ரண்டீவ் + சமிந்த வாஸ் ஆகியோரைப் பக்கபலமாகக் கொண்டு வந்தமை.
முரளிதரன்,மத்தியூசின் காயங்கள் காரணமாக இவர்கள் தயார்நிலை மேலதிக வீரர்களாக வியாழன் மாலை மும்பாய்க்கு வந்து சேர்ந்துள்ளார்கள்.ஆனாலும் மத்தியூஸ் மட்டுமே காயம் காரணமாக விளையாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார். இதனால் யின் தொழிநுட்பக் குழுவானது மத்தியூசுக்குப் பதிலாக ரண்டீவைப் பிரதியிட அனுமதி வழங்கியுள்ளது.
எனவே இந்திய அணிக்கெதிராக சிறப்பாகப் பிரகாசித்துள்ள ரண்டீவையும் திசர பெரேராவையும் ஒரே நேரத்தில் விளையாடும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது. ஆனால் எவ்வளவு தான் உபாதை இருந்தாலும் முரளி விளையாடுவது இலங்கை அணித்தரப்பால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. எனவே சச்சினை அடிக்கடி வீழ்த்திய சமிந்த வாசை இலங்கை அணியால் உள்ளே கொண்டுவர எடுத்த முயற்சி பலன் தரவில்லை.
மைதானத்துக்குள் நுழைந்தவுடன் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களினைப் பார்த்தால் விளையாடும் வீரர்களை அறிந்துகொள்ளலாம்.
முரளிதரன் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
பெரேரா, குலசேகர இருவருமே பந்துவீசுகிறார்கள்.
ரந்தீவின் பந்துகள் எகிருகின்றன.
வாஸ் சந்தோஷத்துடன் பயிற்சியில் ஈடுபடுகிறார்.
மறுபக்கம் அஷ்வினும் யூசுப் பதானும் பந்துகளை அதிகமாக வீசுகிறார்கள். இருவருக்கும் இடையில் தெரிவுப் போட்டியோ? என்று யோசித்தால் அஷ்வின் இன்றும் அணியில் இல்லை. மாறாக ஸ்ரீசாந்தையும் அதிகளவில் பந்துகளை வீசுமாறு தோனி சொல்வதையும் கண்டேன். நேஹ்ராவுக்குப் பதிலாக ஸ்ரீசாந்தை ஆச்சரியமூட்ட அணியில் கொண்டுவரக்கூடும் தோனி என்று நேற்று இந்திய உடகங்கள் சொன்னது உண்மையாகியுள்ளது.
இந்தப் பதிவு சண்டிகாரில் ஆரம்பித்து, மும்பாய் ஹோட்டலில் தொடர்ந்து இப்போது வண்கேடே மைதானத்தில் முடிகிறது.
எனவே நேற்று, இன்று குழப்பங்கள் இருந்தால் மன்னியுங்கள் மக்கள்ஸ்..
எனது எதிர்வுகூறல்கள் இந்த இறுதிப் போட்டிக்கு வேண்டாமே என நினைக்கிறேன்..
சில படங்களுடனான சிறு சிறு பதிவுகள் தொடரும்.
நாணய சுழற்சி முடிந்து இலங்கை அணித் தலைவர் சங்கக்கார வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி.
மும்பாய் ஆடுகளத்தின் முடிவுகள் நாணய சுழற்சியிலும் தங்கி இருக்கின்றன.
இங்கே இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி ஒரு அணி வெற்றி பெற்ற பெரிய ஓட்ட எண்ணிக்கை1997 இல் இலங்கை இந்தியாவை வென்ற 225 .
அதே போல் இவ்விரு அணிகளும் சந்தித்த இறுதி நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றியீட்டி உள்ளது.
படங்களை முடியும் வரை பதிவாக ஏற்றுகிறேன்..