பாகிஸ்தான் அணியை இலங்கை காலியில் துவைத்தெடுத்து ஒரு பக்கம்; விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் ஆரம்பம் ஒரு பக்கம் என்று நேற்றைய நாள் அமோகமாக இருக்க, கால்பந்தாட்டப் பக்கம் அமைதியாக இருக்கிறது.
ஆனால் இன்று (27 June) முக்கியமான இறுதிக்கட்ட மூன்று போட்டிகளில் முதலாவது போட்டியோடு அமைதி கிழிந்து மீண்டும் கால்பந்தாட்ட ஆர்ப்பரிப்பு ஆரம்பிக்கிறது.
விக்கிரமாதித்தன் கால்பந்தாட்டப் போட்டிகளில் என்னுடன் விளையாட்டுக்காட்டமாட்டார் என்று சொன்னோமா இல்லையா?
கால் இறுதிகளில் மிக நெருக்கமாக அமைந்த இத்தாலி - இங்கிலாந்து போட்டியைத் தவிர (இதைப் பற்றி நான் எந்தவொரு கணிப்பும் தெரிவித்திருக்கவில்லை) ஏனைய மூன்று போட்டிகளுமே எதிர்பார்த்த அணிகளை அரையிறுதிப் போட்டிகளுக்கு அனுப்பி இருக்கின்றன.
விரிவான அலசல் ஒன்றை தமிழ் மிரரில் எழுதியுள்ளேன்.
ஐரோப்பியக் கிண்ணம் 2012; காலிறுதிப் போட்டிகளும் களைகட்டப் போகும் அரையிறுதிகளும்
வாசித்து உங்கள் கருத்தை அங்கேயோ, இல்லாவிடில் இங்கே இந்த இடுகையின் கீழேயோ இடுங்கள்...
என்னைப் பொறுத்தவரை இந்த அரை இறுதிகளில் பெரிதாக சுவாரஸ்யம் இருக்காது என்றே நினைக்கிறேன்..
மேலேயுள்ள தமிழ் மிரர் கட்டுரையில் நான் எழுதியுள்ளதைப் போலவே 2008ஆம் ஆண்டு இறுதிப் போட்டி போலவே இம்முறையும் ஸ்பெய்ன் எதிர் ஜெர்மனியாகவே அமையும் என்பதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருக்கின்றன.
2008ஆம் ஆண்டு டொரெஸ் அடித்த கோல் ஒற்றை வெற்றி கோலாக அமைந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இம்முறை ஹீரோ யாரோ?
-----------------------------------
இலங்கை பாகிஸ்தானை முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிகொண்டது...
இப்படி ஒரு செய்தி நேற்று மாலை வெளியாகும் என்று ஒரு பத்து நாட்களுக்கு முன்னாள் யாராவது சொல்லி இருந்தால் நான் நக்கலாக சிரித்திருப்பேன்...
உமர் குல், சயீத் அஜ்மல், யூனுஸ் கான், மிஸ்பா உல் ஹக் (முதல் போட்டியில் இவர் தடை செய்யப்பட்டது ஒரு நாள் தொடரின் கடைசிப் போட்டியில் தானே?) என்று இவர்கள் அடங்கிய அணி, சரியான பந்துவீச்சு வரிசை ஒன்றை டெஸ்ட் போட்டிகளில் தெரிவு செய்யத் தடுமாறிவரும் இலங்கை அணிக்கெதிராக திணறித் தோற்கும் என்று யார் தான் நினைத்திருப்பார்?
அதிலும் முழுமையான நாள் ஒன்று மீதம் இருக்க?
ஆனால் பாகிஸ்தான் அணியின் தடுமாற்றம் ஒருநாள் தொடரின் தோல்வியில் கொஞ்சம் வெளியே தெரிந்தாலும், இருபது விக்கெட்டுக்களை எடுக்கத் தடுமாறிவரும் இலங்கை அணியால் பாகிஸ்தானை வெல்ல முடியாது என்றே நான் நினைத்திருந்தேன்.
பாகிஸ்தான் அணி அண்மைக்காலத்தில் பெற்று வந்த தொடர்ச்சியான டெஸ்ட் வெற்றிகளையும் இங்கே ஞாபகப்படுத்தவேண்டும்..
இலங்கையும் மத்திய கிழக்கில் வாங்கிக்கட்டி இருந்தது.
ஆனாலும் அப்போது என்னுடைய இடுகையிலும் நான் குறிப்பிட்டிருந்த விஷயம், பாகிஸ்தான் தனக்கு சாதகத் தன்மையை வழங்கும் மத்திய கிழக்கு மைதானங்களுக்கு வெளியேயும் தம்மை நிரூபிக்கவேண்டும் என்று..
இப்போது அது நிரூபணமாகிறது.
ஆனால் பாகிஸ்தானைத் தடுமாற வைத்த இலங்கைப் பந்துவீச்சுத் தெரிவுகள் கொஞ்சம் வித்தியாசமானவை.
பல நாட்கள் டெஸ்ட் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்படாமல் இருந்த நுவான் குலசேகர, முரளிக்குப் பிறகு இலங்கையின் சுழல் பந்துவீச்சு நம்பிக்கை ரங்கன ஹேரத் மற்றும் அணிக்குள் வருவதும் போவதுமாக இருக்கும் சுராஜ் ரண்டிவ்..
இவர்களோடு காயம் காரணமாக நீண்ட காலம் விளையாடாமல் இருந்த நுவான் பிரதீப்..
(இவர் விளையாட ஆரம்பித்தபோது வேகத்துக்காகவும் ஸ்லிங்கிங் பந்துவீச்சுப் பாணிக்காகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது)
மீண்டும் இலங்கைத் தேர்வாளர்கள் தங்கள் ஆடுகளங்களுக்கேற்ற அணித் தெரிவு - Horses for the causes என்ற கொள்கை சரியாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடையலாம். இது பந்துவீச்சில் மட்டும் தான்.
துடுப்பாட்ட வரிசையின் முதல் ஆறு பேரும் (பரணவிதான தான் இந்த வரிசையில் கொஞ்சம் ஆடுகின்ற பல்) விக்கெட் காப்பாளர் பிரசன்ன ஜயவர்தனவும் மாற்றப்பட தேவையில்லாதவர்களாகத் தொடர்ந்து இருக்கிறார்கள்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை மிக மகிழ்ச்சியடையக்கூடிய விடயமாக டில்ஷான் & சங்கக்காரவின் சதங்களைக் குறிப்பிடலாம்..
ஒரு நாள் தொடரில் டில்ஷான் சதமும், சங்கா சதத்தை அண்மித்திருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் இப்படிப் பெரியளவு ஓட்டங்களை இருவரும் பெற்றிருப்பதானது இலங்கை அணிக்கு அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளுக்குமான நம்பிக்கையையும் மகேலவைத் தாண்டி காலியில் இன்னும் ஓட்டங்கள் குவிக்கக் கூடியதாக இவ்விருவரையும் கூடக் காட்டியிருக்கிறது.
சங்கக்கார பாகிஸ்தானுக்கு எதிரான தன் தொடர்ச்சியான இமாலய ஓட்டக் குவிப்பைத் தொடர்கிறார்.
இந்த காலி டெஸ்ட் வெற்றியில் நான் மனம் மகிழ மிக முக்கியமான காரணம் குலசேகர தேர்வாளர்களுக்கு தன்னை டெஸ்ட் போட்டிப் பந்துவீச்சாளராக நிரூபித்தமை.
சங்கக்கார இன்னுமொரு இரட்டை சதத்தைத் தவறவிட்டமை கொஞ்சம் கவலை.
ஆனால் சர்வதேச நடுவர்கள் விட்ட எக்கச்சக்கத் தவறுகளும், அவை எல்லாமே அநேகமாக பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்பியமையும் உண்மையில் கடுப்பை ஏற்படுத்தியது. வெற்றியில் முழுமையாக மகிழ்ச்சிப்பட முடியவில்லை.
இலங்கை அணியின் இந்த வெற்றி முரளிதரனின் ஓய்வுக்குப் பின்னர் பெறப்பட்ட மூன்றாவது டெஸ்ட் வெற்றி என்பதோடு பாகிஸ்தானுக்கு எதிராகப் பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றியும் ஆகும்.
முரளியின் ஓய்வுக்குப் பிறகு இலங்கை அணி ஏழு போட்டிகளில் தோற்றுள்ளது ; பத்து போட்டிகளை சமநிலையில் முடித்துள்ளது.
பெற்ற மூன்று வெற்றிகளும் கடைசி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்டுள்ளதால், இலங்கை வெற்றிக்கான வழிவகையை(formula)க் கண்டுள்ளது என்று பொருள் கொள்ளலாமோ?
ஆனால் பாகிஸ்தான்? மிஸ்பாவின் மீள்வருகை ஓரளவு உற்சாகத்தை வழங்கினாலும், காலியில் தடுமாறிய துடுப்பாட்ட வரிசையை எப்படி SSCஇல் தட்டிநிமிர்த்துவார்கள் என்ற கேள்வி எழுகிறது.
பந்துவீச்சு முதலாம் இன்னிங்சில் கொஞ்சம் சோபை இழந்துபோனாலும், இரண்டாம் இன்னிங்சில் இலங்கை அணியின் விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்தார்கள்.
குல்லும், ரெஹ்மானும் விக்கெட்டுக்களை எடுப்பதை மறந்தவர்களாகத் தெரிகிறார்கள். ஆனால் அஜ்மல் எப்போதும் போலவே சிறப்பாக செய்கிறார்.
பாகிஸ்தானின் கஷ்டத்தின் மேல் கஷ்டமாக இலங்கைக்கு காலியை விட SSC வெற்றி சதவீதத்தை அதிகம் வழங்கும் ராசியான மைதானம் என்பதும் சேர்ந்துகொள்கிறது.
ஆனால் இலங்கை சமரவீர, மத்தியூஸ், டில்ஷானின் சக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் (பரனவிதானவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுமா தெரியவில்லை) ஆகியோரிடமிருந்தும் ஓட்டங்களை எதிர்பார்க்கிறது.
இரண்டாம் மூன்றாம் டெஸ்ட் போட்டிகள் எப்படி முடிவுகளைத் தரும் என்று சும்மா வாயைத் திறந்து இருக்கும் நல்லதைக் கெடுத்துக்கொள்ள விருப்பமில்லை....
எதிர்பார்த்து நடந்த ஐந்தாவது எது என்று யோசிக்கிறீர்களா?
யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்த JPL - Jaffna Premier League
தனியார் அமைப்பு ஒன்று நடத்திய ஒரு Twenty 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு எமது வானொலி நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கி விளம்பரப்படுத்தியது. வானொலியின் பணிப்பாளர் என்ற வகையில் (& கிரிக்கெட்டில் கொஞ்சம் அதிகம் ஆரவமுடையவரில் ஒருவன் என்ற வகையிலும்) மட்டுமே இறுதிப் போட்டிகளுக்காக அங்கே அழைக்கப்பட்டிருந்தேன்.
இலங்கையிலேயே ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் நடந்த முதலாவது இவ்வகையான கழக மட்ட T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி என்ற அடிப்படையில் தானாக ஒரு ஆர்வம் தொற்றிக்கொண்டது.
இலங்கை கிரிக்கெட் சபையினாலேயே SLPLஐ நடத்த முடியாமல் இருக்க யாழ்ப்பாணத்திலே இப்படி எட்டு கழகங்களை சேர்த்து நடத்துவதென்றால் எமக்குத் தானாக சந்தோசம் வராதா?
இறுதிப் போட்டி வரை என்ன நடக்கிறது, எவ்வளவு அருமையாக இதை ஒழுங்குபடுத்தி நடத்தி இருந்தார்கள் என்றெல்லாம் மூச்சே விடாதத பல விமர்சகப் பெருந்தகைகளும், கலாசாரக் காவலர்களும் இறுதிப் போட்டியின் பின் பாய்ந்து விழுந்து புராணம் பாடுவார்கள் என்பது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இறுதிப் போட்டி நாளன்றே எனக்குத் தெரிந்தது.
காரணங்கள் மூன்று...
நடனமாடி உற்சாகப்படுத்தும் மங்கையர்
அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்த இராணுவ, காவற் துறை, கடற்படை அதிகாரிகள்
பிரதம விருந்தினர்களாக வந்திருந்த அரசியல்வாதிகள் இருவர் - பிரதியமைச்சர் திஸ்ஸ கரலியத்த, முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க
நடந்து முடிந்த போட்டிகள், சாதனை படைத்து வெளியுலகுக்கு தம்மை வெளிப்படுத்தியிருந்த யாழ் மண்ணின் இளம் வீரர்கள், வெற்றியீட்டிய கொக்குவில் மத்திய சனசமூக விளையாட்டுக் கழக அணி, வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள், இந்த வீரர்களுக்கு இனி எப்படியான வாய்ப்புக்கள் இருக்கும் இது பற்றியெல்லாம் எதுவும் இல்லை.
ஆனால் ஆடினார்கள், கலாசார சீரழிவு, இராணுவப் பிரசன்னம் இவை பற்றி மட்டும் செவி கிழிந்து இணையப் பக்கங்கள் தேய்ந்து போகும் அளவுக்கு எதிர்ப்புக்குரல்கள்.
அந்த நடன மங்கையர் ஆட்டத்தில் எனக்கும் இணக்கம் இல்லை தான்..
அது யாழ்ப்பாணம் என்று மட்டுமில்லை; எந்தவொரு கிரிக்கெட் மைதானத்திலும் கிரிக்கெட்டைப் பின் தள்ளி கவர்ச்சிக்கு முன்னிடம் கொடுக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் இடம் இருக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அன்றும் கொக்குவில் அணி அபார வெற்றி பெற்ற பிறகும் அவர்களைக் கொண்டாடாமல் ஆடிக் கொண்டிருந்த மங்கையரை வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தபோது கவலையாகவே இருந்தது.
அதற்காக ஒரு அருமையான, இதுவரை யாரும் முயலாத, யாழ் மண்ணின் வீரர்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற ஒரு கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்தவர்களை ஒரேயடியாகத் தூற்றுவதா?
சர்வதேச கிரிக்கெட்டே இப்படியான பின்னர் T20 கிரிக்கெட் என்றாலே இப்படித்தான் என்ற நிலை எல்லா இடமும் வந்துவிட்டதை எங்கே நிறுத்துவது? இதற்கு இம்முறை எழுந்த எதிர்ப்புக்கள் அடுத்தமுறை ஏற்பாட்டாளர்களை யோசிக்க வைக்கக்கூடும். அதை மட்டும் தவறு என்று சுட்டிக்காட்டி நல்ல விடயங்களைப் பாராட்டி இருக்கலாமே இந்தப் புண்ணியவான்கள்.
அடுத்து, இப்படியான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, இராணுவம் மையம் கொண்டுள்ள எல்லாப் பகுதிகளிலுமே இராணுவத் துணை இல்லாமல், அவர்களுக்கு அழைப்பில்லாமல் ஒரு நிகழ்வு, ஒரு விழாவை நடத்தி முடிக்க முடியும் என்று யாராவது சொல்லமுடியுமா?
யுத்த அழிவுகள், மக்களின் வேதனைகள் பற்றிப் பேசிப் புலம்புகின்ற அதே கூட்டம் தான் தாங்கள் மகிழ்வாக இருக்கும் வேளைகளில் அதையெல்லாம் மறக்கும் கூட்டமும் கூட என்பது யாருக்கும் தெரியாத ஒரு விடயம் அல்ல.
இலங்கையில் தமிழ் விளையாட்டு வீரர்களுக்கு இடம் இல்லை; வாய்ப்பில்லை. கிரிக்கெட்டில் இனி முரளிக்குப் பிறகு தமிழன் யார் என்று நுணுக்கம் பார்த்து பிணக்கு செய்யும் இவர்கள் தான், இந்த வேளையில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் வேண்டுமா? அதுவும் சிங்களவன் அர்ஜுன ரணதுங்க வரவேண்டுமா என்று கேட்கிறார்கள்..
யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் போன்ற இடங்களிலிருந்தும் கிரிக்கெட் வீரர்களும் (கல்வி, அடிப்படி வசதிகளை விட்டுவிட்டீர்கள் என்று மீண்டும் முட்டையில் உரோமம் தேடிவராதீர்கள்) வரவேண்டும் என்று ஓயாமல் நாம் சிலர் எம்மால் முடிந்த சிறுசிறு விஷயங்கள் செய்வதை எல்லாம் இந்த சிலர் அறிவார்களோ தெரியாது.
மாற்றுக் கருத்துக்கள், நல்ல விடயங்களை மனம் திறந்து சொல்கிறார் என்று மனமாரப் பாராட்டிய ஒரு தம்பியும் கோவணம் தூக்குகிறார்கள் என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
உண்மையில் எரிச்சலாக இருக்கிறது.
நடந்த எவ்வளவோ நல்ல, எதிர்கால இளம் தலைமுறையை சர்வதேச கிரிக்கெட் பக்கம் ஆர்வம் கொள்ளவைக்கும் நல்ல விடயங்கள் நடைபெற்றிருக்க, அதையெல்லாம் விட்டுவிட்டு பிழை மட்டுமே பிடிக்கும் கூட்டம் ஒன்றை நினைத்தால் இதனால் தான் தமிழன் எங்கே போனாலும் இப்படி என்று சலிப்பும் வருகிறது.
வெற்றிகரமான ஒரு கிரிக்கெட் சுற்றுப் போட்டியை கழகங்கள் மத்தியில் நடத்திக் காட்ட முன் வந்த ஏற்பாட்டாளர்களுக்கு (Ur Friend Foundation - JPL) வாழ்த்துக்கள்..
இனி அடுத்தவருடம், கழகங்களின் சில அடிப்படைத் தேவைகளையும் பார்த்து சிறு குறைகளையும் நீக்கி மேலும் சிறப்பாக நடத்த வாழ்த்துக்கள்.
JPL பற்றி என்னை விட விரிவாக அலசியுள்ள இரு இணைப்புக்களில் மேலும் விபரங்களை அறிந்திடுங்கள்.