அசத்திய இலங்கை.. அடிவாங்கிய பாகிஸ்தான்.. ஐயோ பாவம் மிஸ்பா

ARV Loshan
7
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான Twenty 20 தொடர் போலவே ஒருநாள் சர்வதேசத் தொடரும் சமநிலையிலேயே முடிவடைந்துவிடுமோ என்றிருந்த ஒரு நிலையை மாற்றி இலங்கையை அஞ்சேலோ மத்தியூஸ் கரைசேர்த்த நேற்றிரவு இறுதிப் போட்டியுடன் இலங்கை தொடரை வென்றெடுத்துள்ளது.



அணியாக விளையாடி இவ்விரு அணிகளும் மழையினால் குழம்பிய ஒரு போட்டிதவிர ஏனைய நான்கு போட்டிகளையும் வென்றதை விட, ஒரு சில தனிநபர் சிறப்பாட்டங்களால் வெற்றிகொள்ளப்பட்டவை என்பதே சிறப்பம்சமாகும்.

அதிலும் திசர பெரேரா, அசார் அலி, அஞ்சேலோ மத்தியூஸ், சங்கக்கார, மிஸ்பா உல் ஹக் என்று சிலர் நான்கு போட்டிகளிலும் தனித்துத் தெரிந்திருந்தார்கள்.

ஒவ்வொரு போட்டியிலும் அணிகளின் சமநிலையும், அந்தந்த ஆடுகள நிலைகளை சரிவர உணர்ந்து விளையாடிய வீரர்களின் நிலையுமே போட்டியின் முடிவுகளை வசப்படுத்த உதவியிருந்தது எனலாம்.
இலங்கையின் 3-1 என்ற வெற்றியானது நீண்டகாலம் இலங்கை பாகிஸ்தானிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருந்த அடிகளை சரிசெய்யவும், இலங்கையின் மைதானத்தில் பாகிஸ்தான் வைத்திருந்த ஆதிக்கத்தை இல்லாமல் செய்யவும் உதவியிருக்கிறது.
இப்பொழுது இலங்கையில் வைத்து இலங்கை 16 போட்டிகளையும் பாகிஸ்தான் 14 போட்டிகளையும் வென்றுள்ளன. 

இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் வென்றவுடன் நான் இட்ட இடுகையைப் பொய்யாக்கி இலங்கை வீரர்கள் தொடரில் வெற்றி கண்டிருப்பது இரண்டு விடயங்களில் ஒன்றை உறுதிப்படுத்துகின்றது. 
இலங்கை வீரர்கள் என் பதிவைத் தொடர்ந்து வாசிக்கிறார்கள்.. அல்லது விக்கிரமாதித்தன் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நல்ல formஇல் இருக்கிறார்.
(ஹீ ஹீ)

பாகிஸ்தான் அணியோடு ஒப்பிடுகையில் வேகப்பந்துவீச்சிலோ, சுழல் பந்துவீச்சிலோ ஒப்பிட முடியாதளவு கொஞ்சம் பின்தங்கியே இருக்கின்ற இலங்கை அணிக்கு எப்படி இந்த வெற்றி சாத்தியமானது என்று யாராவது விற்பன்னர்கள் கேட்டால், இலகுவான பதில். களத்துக்கு ஏற்ற வீரர்கள் தங்கள் பலம் அறிந்து எதிரணியைப் பதம் பார்த்தார்கள் என்பது தான். 

குலசேகர, மாலிங்க இருவரும் எல்லாப் போட்டிகளிலுமே சிறப்பாக எல்லாக் கட்டங்களிலும் பந்துவீசி இருந்தார்கள்.
இலங்கை தோற்ற ஒரே போட்டியிலும் கூட பந்துவீச்சாளர்களால் இலங்கை அணி தோற்றிருக்கவில்லை.
மூன்றாம் நான்காம் பந்துவீச்சாளர்களாக மத்தியூசும் திசர பெரேராவும் தங்கள் பங்கை எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்திருந்தார்கள். 
ஆனால் இலங்கை வழமையாக சொந்த மண்ணில் சிறப்பாகப் பரிணமிக்க உதவுகின்ற சுழல் பந்துவீச்சாளர்கள் தான் இம்முறை இலங்கைக்குப் பெரிதாக உதவவும் இல்லை; வறட்சியாகவும் தெரிந்தது என்பது தான் புதுமை & கொடுமை.

ஆனால் ஹேரத்துக்கு அவரது சிகிச்சைக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்காகப் பொத்திப் பாதுகாக்க ஓய்வு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவு.
நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட சஜீவா வீரக்கோனுக்கு அவரது 34 வயதில் அறிமுகம் கொடுக்கப்பட்டது. அவரது முதல் போட்டி துரதிர்ஷ்டவசமாகக் கழுவப்பட்டது. இரண்டாவது போட்டியில் வீரக்கோன் சோபிக்கவில்லை. இனி வாய்ப்பு கிடைக்காது பாவம். 
இறுதிப் போட்டியில் மட்டும் விளையாடிய ஜீவன் மென்டிஸ் கலக்கி இருந்தார்.
ஆறாவது பந்துவீச்சாளர் டில்ஷானுக்கு தொடர் முழுவதும் ஐந்தே ஐந்து ஓவர்கள் மாத்திரமே பந்துவீசத் தேவைப்பட்டது.
அந்தளவுக்கு இலங்கையின் பந்துவீச்சுப் பலமாகவும், திடமாகவும் தொடர்ச்சியாக இருந்தது.

மாலிங்க, குலசேகர தலா ஏழு விக்கெட்டுக்களை வீழ்த்த, இந்தத் தொடரின் இலங்கையின் ஹீரோ திசர பெரேரா ஒரு ஹட் ட்ரிக் உள்ளடங்கலாக வீழ்த்திய விக்கெட்டுக்கள் தான் தொடரின் துரும்புச்சீட்டாக அமைந்தது எனலாம்.

இது அவரது கடும் உழைப்புக்கும் சிதறாத குறிக்குமான வெற்றி என்று கருதுகிறேன்.
இவரது துடிப்பான, அர்ப்பணிப்பான களத்தடுப்பு இன்னொரு மேலதிக பலம்.. கலக்குகிறார் திசர... 
இலங்கையின் பயிற்றுவிப்பாளர் கிரகாம் போர்ட் இவரைத் தென் ஆபிரிக்காவின் முன்னாள் சகலதுறைவீரர் லான்ஸ் க்ளூஸ்னருடன் ஒப்பிட்டுள்ளார்.
போர்ட் தென் ஆபிரிக்காவின் பயிற்றுவிப்பாளராக இருந்தபோதே க்ளூஸ்னர் வளர்ச்சிபெற்று புகழடைய ஆரம்பித்திருந்தார்.
போர்ட் வாக்கு பொன் வாக்காக அமையட்டும்.

திசர, மத்தியூஸ் இருவருமே பூரண உடற் தகுதியோடு முதல் டெஸ்ட் போட்டிக்கான குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளமை இலங்கையைப் பொறுத்தவரை ஒரு உற்சாகமான எதிர்பார்ப்பைத் தருகிறது.
மிதவேகப் பந்துவீசும் ஒரு சகலதுறை வீரரைத் தேடித் தவித்துக்கொண்டிருந்த இலங்கை அணிக்கு இப்போது இரு இளம் வீரர்களா? 
கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?

ஆனால் பாகிஸ்தான்... பழைய குருடி கதவைத் திறடி கதை தான்...
அணி பலமானது.. அடுக்கடுக்காக திறமையான வீரர்கள்.. ஆனாலும் வெற்றி பெற என்று வரும்போது ஏதாவது ஒரு பக்கம் சறுக்கி விடுகிறது.
இம்முறை எதிர்பார்த்தபடி யாருமே பந்துவீச்சில் ஜொலிக்கவில்லை.
ஓரளவுக்கு செய்தவர் சொஹய்ல் தன்வீர் மட்டுமே..
அதிலும் அணித்தெரிவும் சேர்ந்து ஆச்சரியப்படுத்தியது.

சில நேரங்களில் ஐந்து பந்துவீச்சாளர்கள்.. இதனால் ஒரு துடுப்பாட்ட வீரர் குறைவு; சில நேரம் ஒரு மேலதிகத் துடுப்பாட்ட வீரர்.. இதனால் ஒரு பந்துவீச்சாளர் குறைவு.. அதிலும் கடைசிப் போட்டியில், தொடர்ந்து சொதப்பிய மூத்த வீரர் யூனுஸ் கானை வெளியே அனுப்பி முஹம்மத் சாமியை அணிக்குள் ழைத்தார்கள். சாமி வரம் கொடுத்து இலங்கைக்கு ஓட்டங்களை அள்ளி வழங்கினார்.
ஆனால் பாகிஸ்தான் இன்னொருவரையும் சேர்த்து வெளியே அனுப்பி இலங்கைக்கு மேலதிக வாய்ப்பை வழங்கியது.
ஆமாம்.. உலகின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் சயிட் அஜ்மல். எப்படிப்பட்ட முட்டாள்தனம்..

பாகிஸ்தானின் துடுப்பாட்டத்தைத் தனியாகத் தாங்கியவர் ஒப்பீட்டளவில் புதியவரான அசார் அலி.

இரண்டு அரைச் சதங்களோடு 217 ஓட்டங்களைக் குவித்தார். அவரது இரண்டாம் மூன்றாம் அரை சதங்களாக இவை அமைந்தன. 
இரண்டு சதங்கள் பெறும் வாய்ப்பைக் கை நழுவவிட்டார். ஆனால் இவர் சிறப்பாக ஆடிப் பெரிய ஓட்டங்கள் பெறும்போதெல்லாம் பாகிஸ்தான் தோற்பதைப் பார்க்கையில் பாகிஸ்தானின் அசங்க குருசிங்கவாக மாறுகிறாரோ அசார் அலி என்று தோன்றுகின்றது. 
பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு நல்ல வரவு. ஆனால் தொடர்ந்து நீடிக்கட்டும் பார்க்கலாம்.

அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி இருந்தும் நின்று வெற்றியாக அவற்றை மாற்றிக்கொள்ள முடியவில்லை. 
தலைவராக அவரால் களத்தடுப்பிலும் பந்துவீச்சு மாற்றங்களிலும் கடந்த தொடர்களில் பார்த்த உற்சாகத்தோடு மிஸ்பாவைப் பார்க்கவும் முடியவில்லை.
அதிலும் யாராவது பிடிகள் தவற விடும்போதும், களத்தடுப்பில் சறுக்கும்போதும் செய்வதறியாமல் தவிப்பார் பாருங்கள். பரிதாபம்.
தனியாக விடப்பட்டவர் போல ஒரு விரக்தி நிலையில் நிற்கிறார்; நடக்கிறார்... 

இப்போது பந்துவீச அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்குபற்ற முடியாதவாறு தடை செய்யவும் பட்டுவிட்டார். 
பாவம்.... மிஸ்பாவின் இறுதி சர்வதேசத் தொடராக இது அமையலாம்.
முதலாவது டெஸ்ட் போட்டியில் யார் பாகிஸ்தானின் தலைவர் என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வியாக இறுகப் போகிறது.
யூனுஸ் கானின் அனுபவம் பலமாக இருந்தாலும் அவரது துடுப்பாட்ட form ம் பலவீனம்.
அப்படிப் பார்த்தால் இளமைத் துடிப்பான ஹபீசுக்கு வாய்ப்பை வழங்கிப்பார்க்கலாம். 
தொடர்ச்சியாக பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு 16 போட்டிகளில் தலைமை தாங்கிய இம்ரான் கான், வக்கார் யூனுஸ் ஆகியோரின் சாதனையை சமப்படுத்த இருந்த மிஸ்பாவுக்கு பாகிஸ்தான் தலைவர்களின் வழமையான துரதிர்ஷ்டம் பலியிட்டுவிட்டது. 
அதிக டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை தொடர்ந்து வழிநடத்திய பெருமை அவர்களின் முதல் டெஸ்ட் தலைவரான அப்துல் ஹபீஸ் கர்தாருக்கு உரியதாக உள்ளது. 

உமர் அக்மலும், இம்ரான் பார்ஹத்தும் ஒவ்வொரு ஆறுதல் அரைச் சதங்களை இறுதிப் போட்டியில் பெற்றுக்கொண்டார்கள்.

தொடரில் பெறப்பட்ட ஒரே சதம் டில்ஷான் பெற்றது. 119*பள்ளேகலையில்...
சங்கக்காரவும் அசார் அலி போலவே 90களில் ஆட்டமிழந்தார்.
சங்காவும் மஹேலவும் தொடரில் சராசரியாக ஆடி டெஸ்ட் தொடருக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

மத்தியூஸ் இறுதிப் போட்டியில் மீண்டும் தன்னை ஒரு finisherஆக நிரூபித்துக் காட்டியுள்ளார். 
ஒரு பெவான், ஒரு தோனி போல உருவாகி வருகிறார் என்று சொல்ல இது too early என நினைக்கிறேன்.. ஆனாலும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
இந்த இளவயதில் இப்போதைக்கு எத்தனை போட்டிகளை இவ்வாறு கீழ்வரிசைத் துடுப்பாட்ட வீரர்களோடு சேர்ந்து மத்தியூஸ் வென்று கொடுத்துள்ளார்...
வாழ்த்துக்கள் மத்தியூஸ். இதை டெஸ்ட் போட்டிகளிலும் தொடருங்கள்.


திரிமன்னே, சந்திமால் ஒவ்வொரு போட்டிகளில் தம்மிடம் சரக்கு இருக்கிறது என்று காட்டியிருந்தார்கள்.
ஆனால் தரங்க ஏமாற்றமே.. இலங்கைக்கு டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிக்கு மீண்டும் வெற்றிடம் நிரப்பப்படவேண்டும்.. சீக்கிரமே.

இவ்விரு அணிகளுக்குமிடையில் மிகப் பெரிய வித்தியாசமாக அமைந்து தொடர் வெற்றியையும் தீர்மானித்த ஒரு மிக முக்கிய விடயம் 'களத்தடுப்பு'.
இலங்கை எவரெஸ்ட் சிகரம் என்றால் பாகிஸ்தான் எங்கேயோ பள்ளத்தாக்கில் விழுந்துகிடக்கிறது.
Julien Fountain என்ற விற்பன்னரைக் கொண்டுவந்தும் ம்ஹூம்.. எதுவும் முன்னேறியதாக இல்லை.
தொட்டில் பழக்கமும், இயல்பான சோம்பலும் தொடர்கிறது.

ஒரு நாள் தொடர் வெற்றி இலங்கைக்கு நிச்சயம் இமாலய தைரியத்தையும் இதையே டெஸ்ட்டிலும் செய்து காட்டலாம் என்ற நம்பிக்கையையும் கொடுக்கும்.
ஆனாலும் பாகிஸ்தானிடம் உள்ள பந்துவீச்சுப் பலமும், சமநிலையும் இலங்கையிடம் இல்லை என்பது நிதர்சனம்.
அதேவளை இலங்கையின் துடுப்பாட்ட பலம் பாகிஸ்தானிடம் இல்லை தான்.
எனவே டெஸ்ட் தொடரானது 
இலங்கையின் துடுப்பாட்டம் vs பாகிஸ்தானின் பந்துவீச்சு

முக்கிய விடயம்...
நேற்றைய வெற்றிக்குப் பின் மைதானத்துக்குள் சந்தோசத்தைக் கொண்டாட நுழைந்த இலங்கை ரசிகர்கள் கொஞ்சம் கவலை தருகிறார்கள். உலக T20 நெருங்கி வரும் வேளையில் இலங்கையின் தயார்ப்படுத்தல்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வீரர்களின் பாதுகாப்பு குறித்து சீரியசான கேள்விகளை இது எழுப்பப்போகிறது.
நேற்றைய வெற்றி உண்மையில் அனைவரையும் மெய்மறக்கச் செய்ய வைத்த வெற்றி & கொண்டாடப்படவேண்டியது தான்.
ஆனால் என்றைக்கும் இல்லாதவாறு மைதானத்துக்குள் ரசிகர்கள் ஓடுவதென்பது ... 
அதுவும் இலங்கையில்...
ம்ம்ம்ம் 

UEFA EURO 2012 கால் இறுதிக்கான அணிகளின் தெரிவு பற்றி நாளைக்குப் பார்க்கலாம் நண்பர்ஸ்...



Post a Comment

7Comments

Please Select Embedded Mode To show the Comment System.*