April 06, 2016

6,6,6,6 - சமியின் சம்பியன்கள் - சரித்திரம் படைத்த கரீபியன் வீரர்கள் #WT20

ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போலிருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒரு மாத காலமாக சுழற்றியடித்த உலக T20 புயல், மேற்கிந்தியத் தீவுகள் பக்கமாகக் கரை ஒதுங்கியவுடன் தான் ரசிகர்கள் வேறுவேறு வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.


 ஆனால்,இன்னமுமே மேற்கிந்தியத் தீவுகளின் விதவிதமான வெற்றிக் கொண்டாட்டங்கள், அந்த வலி சுமந்த வெற்றியின் பின்னர் அணித் தலைவர் டரன் சமியின் உரை + பேட்டி, மார்லன் சாமுவேல்ஸின் திமிரான 'பழிவாங்கும்' வார்த்தைகளும் செய்கைகளும் அடங்கிய பதிலடி என்று பரபரப்புக்களுக்கும் செய்திகளுக்கும், பாராட்டுக்களுக்கும் குறைவில்லை.

அதிலே மிக முக்கியமானதாக நான் கருதுவது, இத்தனை நாளாக மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர்களைத் தீண்டத் தகாதவர்கள் போல நடத்திவந்த, வீரர்களது சம்பளக் கோரிக்கைகள், ஒப்பந்தம் பற்றிய மனக்குமுறல்கள் பற்றிக் கவனிக்காத மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் சபை, இந்த வெற்றியை அடுத்து (குறிப்பாக வெற்றி மேடையில் சமியின் பொங்குதலுக்குப் பிறகு) அணியோடு பேசுவதற்கும், கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்கும் இணங்கியுள்ளது.

டரன் சமியின் சொந்த நாடான செயின்ட்.லூசியாவில் உள்ள பீசஜோர் (Beausejour) மைதானம் இப்போது டரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம் எனப் பெயரிடப்படுள்ளது.

1970கள், 80களில் எழுந்து நின்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் போல இன்னொரு அணி கரீபியன் பக்கமிருந்து வராத என்று ஏங்கிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மூன்று கிண்ணங்களை ஒரே மாதத்தில் வென்று சிறிய நம்பிக்கைக் கீற்றை வழங்கியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.

எனினும் சமியின் T 20 சம்பியன்கள் போல இதே வலிமையையும் போராட்டகுணமும் வெற்றிக்கான தாகமும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளிடமும் போய்ச் சேருமா என்பது கேள்விக்குரிய ஒரு விஷயமே.
டரன் சமியிடம் இருந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தலைமைப் பதவிகள் பறிக்கப்பட்ட நேரமே ஒற்றுமையாகிக் கட்டமைத்து வந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி சிதைந்துபோனது.


சமி எப்போதும் எனக்குப் பிடித்த வீரர்களில் ஒருவர்.
இவரது அணிக்கான அர்ப்பணிப்பும், எல்லா வீரர்களையும் சேர்த்து வழிநடத்தும் இயல்பும்,எம்மைப் போன்ற ஊடகவியலாளரோடு சகஜமாக பழகும் விதமும் இவர் மீது மதிப்பை உயர்த்தியுள்ளது.
அடிக்கடி இவை பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால், கடந்த தசாப்த காலமாகவே முறுகிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் சபையும், டெஸ்ட் போட்டிகளை விட IPL மற்றும் இதர பணம் கொழிக்கும் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டும் T 20 specialistகளும் மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருபவர்களாக இல்லை.

--------------

'சிக்சர்கள் சம்பியன்கள் !! மிடுக்கோடு எழுந்த மேற்கிந்தியத் தீவுகள்' என்ற தலைப்பில் தமிழ் மிரர் + தமிழ் விஸ்டன் ஆகியவற்றுக்கு எழுதிய கட்டுரையை மேலதிக சேர்க்கைகள், புதிய இணைப்புக்கள் + புதிய விடயங்களுடன் சேர்த்து தரும் இடுகை இது.

உலகக்கிண்ணத்தை (50 ஓவர்கள்) முதன்முறையாக இரண்டு தடவை தனதாக்கிய சாதனையை நிகழ்த்திய அதே மேற்கிந்தியத் தீவுகள் உலக T20 கிண்ணத்தையும் இரண்டு தடவைகள் வென்ற முதலாவது அணி என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றி இன்னொரு வகையில் மேலும் சரித்திரப் பிரசித்தி பெற்றதாக மாறியுள்ளது.
19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணம், இதற்கு முன்னதாக நேற்று பிற்பகல் நடந்த மகளிர் உலக  T20 கிண்ணம் இவற்றோடு மூன்றாவது 'உலகக்கிண்ணம்' இரு மாத கால இடைவெளியில் மேற்கிந்தியத் தீவுகளின் வசமாகியுள்ளது.

ஆண்களின் அணியும் பெண்களின் அணியும் ஒரே நேரத்தில் உலக T20 கிண்ணத்தைத் தம் வசம் வைத்துள்ள பெருமையும் இப்போது இந்தக் கரீபியன் கலக்கல் வீர, வீராங்கனைகளிடம்.

இவர்களின் கோலாகலக் கொண்டாட்டங்கள் நேற்று, இன்று அல்ல இன்னும் நான்கு வருடங்களுக்கு தொடர்ந்து இருக்கப்போகிறது.
அடுத்த உலக T20  இனி 2019இல் தான்.

எந்த அணி வென்றாலும் இந்த அணி(கள்) தங்கள் வெற்றிகளைக் கொண்டாடும் கலகலப்பான குதூகலம் வேறெங்கும் பார்க்க முடியாதது.

2012 உலக T20 வென்றபோது கிறிஸ் கெயில் ஆடிய கங்கனம் ஆட்டம் போல, இந்த உலக T20யை ஆட்டிப்படைத்து நேற்றைய வெற்றிக்குப் பின் ரசிகர்களின் வெற்றி கீதமாக மாறியிருப்பது ட்வெயின் ப்ராவோ  உருவாக்கி, பாடி வந்திருக்கும் 'Champions' பாடலும், பாடலுக்கான துள்ளாட்ட அசைவுகளும் இப்போது ரசிகர்களின் தேசிய கீதமாகியிருக்கின்றன.

ஒன்றல்ல, இரண்டல்ல தொடர்ச்சியாக நான்கு சிக்சர்கள்..
(இதுவரை T20 சர்வதேசப் போட்டிகளில் இவ்வாறு நான்கு சிக்சர்கள் அடுத்தடுத்துப் பெறப்பட்ட 4வது சந்தர்ப்பம் இது.எனினும் கடைசி ஓவரில் இதுவே முதல் தடவை)
கடைசிப் பந்தில் இந்தியாவின் சேட்டன் ஷர்மாவின் பந்தில் ஆறு ஓட்டம் அடித்து கிண்ணம் வென்ற ஜாவெட் மியாண்டாடை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ​அசுர சிக்சர் அடிகள் மூலமாக சாதனை நிகழ்த்திப் போயிருக்கிறார் கார்லோஸ் ப்ரத்வெயிட்.

அதிக ஓட்டங்கள் துரத்திப் பெறப்பட்ட உலக T20 இறுதிப்போட்டியில் துடுப்பு, பந்து இரண்டுக்கும் இடையிலான ஆரோக்கியமான போட்டி நிலவியிருந்தது.

ஆனாலும் இறுதியாக அரையிறுதியைப் போலவே மேற்கிந்தியத் தீவுகளின் அசுர பலம் ஜெயித்திருந்தது.


எந்தப் பந்தையும் அடித்து நொறுக்கலாம் என்ற அவர்களது தன்னம்பிக்கை காரணமாக அவர்கள் நல்ல பந்துகளுக்கு தேவையற்று அடிக்கச் செல்லாமல், நின்று நிதானமாக விளையாடக்கூடியதாகவும், விக்கெட்டுக்கள் போனால் பொறுமையாக இணைப்பாட்டம் புரிந்து அணியைக் கட்டியெழுப்பக் கூடியதாகவும் இருக்கிறது.


கெயில் பற்றியே எல்லா ஊடகங்களும் விமர்சகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை முன்னிறுத்தி அவர் அடித்தால் தான் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் என்று ஒரு பிரமையை ஏற்படுத்தி இருந்தனர்.
(எனினும் முக்கிய போட்டிகளில் சறுக்கிவிடும் இயல்புடையவர் இவர் என்று நான் அடிக்கடி சொல்லி வந்திருந்தேன்)


கெயில் அரையிறுதி, இறுதி ஆகிய இரு முக்கிய போட்டிகளிலும் சறுக்கி விட, ஒவ்வொரு போட்டியிலும் புதிது புதிதாய் வெற்றியாளர்களும் மேற்கிந்தியத் தீவுகளின் கதாநாயகர்களும் உருவாகினார்கள்.

இதனால் தான் இறுதிப் போட்டிக்கு முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளின் தலைவர் டரன் சமி தம்மிடம் 15 வெற்றியாளர்கள் இருப்பதாகச் சொன்னார்.


இறுதிப் போட்டியிலும் அவ்வாறு தான்..

நான்கு  முக்கிய நாயகர்கள் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கான அடிகோலியவர்கள்.
பத்ரி, சாமுவேல்ஸ், ப்ராவோ + ப்ரத்வெயிட்

அரையிறுதியில் இந்தியாவுக்கு விழுந்த மரண அடியைப் பார்த்தவர்கள் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை மேற்கிந்தியத் தீவுகள் இலகுவாகவே வெல்லும் என்றே எதிர்பார்த்திருந்தனர்.


முதல் பந்திலேயே பத்ரியின் சுழல் இங்கிலாந்தின் அரையிறுதி ஹீரோ ஜேசன் றோயைப் பறித்தெடுக்க, 

 முதல் 2 விக்கெட்டுக்கள் 8 ஓட்டங்களுக்கு சரிந்தது.


இங்கிலாந்துக்கு இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் இடையிடையே கிடைத்த இணைப்பாட்ட வாய்ப்புக்களை உருவாக்கி நல்லதொரு ஸ்திர நிலையை நோக்கி இங்கிலாந்தை அழைத்துச் செல்ல முனைந்துகொண்டிருந்தார்.


எனினும் பத்ரியின் சுழல் இங்கிலாந்தை உலுப்பிக்கொண்டெ  இருந்தது.

இந்த உலக T20 தொடரில் ஓட்டங்களைக் குறைவாகக் கொடுத்து எதிரணிகளைத் தடுமாற வைத்த சிறப்பான பந்துவீச்சாளர்களில் ஒருவர் தற்போது 


T20 தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் உள்ள சாமுவேல் பத்ரி.


பத்ரியின் கூக்ளியில் அணித் தலைவர் மோர்கன் மீண்டும் ஒரு குறைந்த ஓட்டப் பெறுதியுடன் ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் அதிரடி வீரர் பட்லர் சேர்ந்துகொண்டார்.

பட்லரின் 3 சிக்சர்கள் இங்கிலாந்துக்கு தெம்பு கொடுத்து, ஓட்ட வேகத்தையும் உயர்த்திய நேரம் தான், ஒரு B தனது நான்கு ஓவர்களை முடிக்க அடுத்த இரு Bகள் (ப்ராவோ, ப்ரத்வெயிட் ) தங்கள் விக்கெட் எடுப்பு வித்தைகளைக் காட்ட ஆரம்பித்தனர்.


ரூட் அரைச் சதத்தோடு ஆட்டமிழந்த பிறகும் கூட, சகலதுறை வீரர் டேவிட் வில்லி தன்னுடைய அடித்தாடும் ஆற்றல் மூலமாக போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றைப் பெறச் செய்திருந்தார்.

20 ஓவர்கள் முடியும் நேரம் இங்கிலாந்து அகல விக்கெட்டுக்களையும் இழக்காமல் இருந்தது இங்கிலாந்துக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்பது நிச்சயம்.

தன்னை ஒரு பந்துவீச்சாளராகப் பயன்படுத்துவதை ஏனோ மறந்துவருகிறார் என்று நான் குறைப்பட்ட தலைவர் சமி, சுலைமான் பென்னுக்கு விழுந்த அடிகள் காரணமாக (அந்த வேளையில் எனது ட்வீட்டும் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது) ஒரு ஓவர் பந்துவீசவேண்டி ஏற்பட்டது. 
எனினும் 12 ஓட்டங்களைக் கொடுத்ததுடன் ஏமாற்றமாகிப்போனது,எனக்கும் சேர்த்து.


இதற்கு முந்தைய 7 போட்டிகளில் மொத்தமாக இரண்டே விக்கெட்டுக்களை எடுத்திருந்த கார்லோஸ் ப்ரத்வெயிட் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசி வீழ்த்திய 3 விக்கெட்டுக்கள் முக்கியமானவை.


அவரது பின்னைய துடுப்பாட்ட சாகசங்களும் சேர்ந்து இவரையும் இறுதிப் போட்டியின் நாயகனாக விருது வழங்கியிருக்கலாம் என்பது நான் எதிர்பார்த்த விடயம்.


ஆனால் மார்லன் சாமுவேல்ஸ் 2012இல் கொழும்பில், இலங்கைக்கு எதிராக இறுதிப் போட்டியில் நிகழ்த்திய அதே சாகசங்களை, அணியின் துடுப்பாட்டத்தைத் தாங்கி இறுதிவரை கொண்டு சென்றது உண்மையில் எல்லோராலும் முடியாதது.

எதிர்பார்க்கப்பட்ட கெயில், அரையிறுதி ஹீரோக்களில் ஒருவரான சார்ல்ஸ் ஆகியோரை ஜோ ரூட் ஆச்சரியப்படுத்திய இரண்டாவது ஓவர் பந்துவீச்சில் பறித்தெடுத்த இங்கிலாந்து போட்டியின் போக்கைத் திசை மாற்றப்போகிறதோ என்று திகைத்திருக்க, 


5/2 என்றிருந்த நிலை, 11/3 என மாறியது.

இங்கிலாந்தின் அரையிறுதி ஹீரோ ஜேசன் ரோய் போலவே, மேற்கிந்தியத் தீவுகளின் ஹீரோ லெண்டில் சிமன்சும் பூஜ்ஜியத்துடனே ஆட்டமிழந்தார்.

இதோ இங்கிலாந்து கிண்ணம் வெல்கிறது, மேற்கிந்தியக் கதை முடிந்தது என்றிருந்த ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து காத்திருந்தது.


சாமுவேல்ஸ் - ப்ராவோ  (ப்ராவோ சகலதுறை வீரராக மீண்டும் கலக்கிய போட்டி இது. 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய பிறகு அவரது ஓட்டங்களும் முக்கியமானவையாக அமைந்தன) ஆகியோரின் பொறுமையான இணைப்பாட்டம், கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து, இறுதியாக 10 ஓவர்களில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்தபோது, அடுத்துக் காத்திருக்கும் அதிரடி வீரர்கள் மூலமாக மேற்கிந்தியத் தீவுகள் வென்று விடும் என்ற நம்பிக்கை பிறந்தது.

எனினும் அடுத்த அரையிறுதிக் கதாநாயகன் ரசலும் விரைவாகவே ஆட்டமிழந்து ஏமாற்றிவிட, தலைவர் சமி களம் புகுந்தார்.
அவரும் 2 ஓட்டங்கள்.

ஆனால் வற்றாத ஊற்றுப் போல அடித்தாடக்கூடிய அசுரர்களை கீழே கீழே வைத்திருந்த மேற்கிந்தியத் தீவுகளின் நேற்றைய ரகசிய ஆயுதம் கார்லோஸ் ப்ரத்வெயிட் 8 ஆம் இலக்கத்தில் ஆட வந்த நேரம், போட்டி இங்கிலாந்தின் ஆதிக்கத்துக்கு உரியதாகவிருந்தது.

தற்செயலாக இவர்களில் ஒருவர் ஆட்டமிழந்திருந்தாலும் நேர்த்தியாக ஆடக்கூடிய தினேஷ் ராம்டின் இன்னமும் இருந்திருந்தார்.

விக்கெட்டுக்களை வீழ்த்திக்கொண்டிருந்த வில்லியைத் தாண்டி, ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ஏனைய களத்தடுப்பாளரின் சாகசங்கள் தாண்டி (இரு பிடிகள் தவறவிடப்பட்டதும் இங்கே கவனிக்கத் தக்கது) ஒரு பந்துக்கு இரண்டு ஓட்டங்கள் என்று இருந்த சவால், மேலும் இறுக ஆரம்பித்தது.

ஆனால், சாமுவேல்ஸ் ஒரு பக்கம் நங்கூரம் பாய்ச்சியிருந்தார்.

அரையிறுதியில் தோனி பந்துவீச்சு மாற்றங்களில் செய்த தவறுகள் எதையும் விடாத ஒயின் மோர்கனின் கடைசி ஓவர் தெரிவு பென்  ஸ்டோக்ஸ்.

இலங்கைக்கு எதிரான போட்டியில், மத்தியூஸ் துடுப்பாடிய வேளையில் 15 ஓட்டங்களில் 4 ஐ மட்டுமே கொடுத்து அணியைக் காப்பாற்றிய ஸ்டோக்ஸ்சின் சாதுரியமான பந்துவீச்சில் 19 ஓட்டங்களைப் பெறுவதென்பது எவருக்கும் சாத்தியமே இல்லை என்று மோர்கன் நினைத்ததில் தப்பில்லைத் தான்.

ஆனால் நடந்தது என்னவோ யாரும் நம்ப முடியாதது.
மீண்டும் மேற்கிந்தியத் தீவுகளின் அசுர பலம் ஜெயித்தது.

ஓரிரண்டு சிக்சர் அடிக்கவே தடுமாறும் பலர் இருக்க, ப்ரத்வெயிட் 4 சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசி வென்று கொடுத்தார்.
(2010 உலக T20 தொடரின் அரையிறுதியில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மலின் பந்துவீச்சில் இறுதி ஓவரில் அடுத்தடுத்து மிஸ்டர்.கிரிக்கெட் மைக்கேல் ஹசி விளாசிய மூன்று சிக்சர்களை முந்தியது இந்த மரண அடி)

ஆஸ்திரேலிய வழிப்பறி - பரிதாப பாகிஸ்தான்


எனினும் ஸ்டோக்ஸ் வீசிய பந்துகள் எவையும் மோசமானவை அல்ல.
அருமையான பந்துகளே.
ஆனால் ப்ரத்வெயிட்டின் அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்கியிருந்தன.

கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகள் வசமாகியிருந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் சாமுவேல்ஸ் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் தன்னை தொடர்ந்து விமர்சித்த ஷேன் வோர்னையும், தன்னுடன் வார்த்தைகளால் மோதிய  ஸ்டோக்சையும் பதம் பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.
ஷேன் வோர்ன் உடனான அவரது 3 வருட கால மோதல்  அரையிறுதியில் சாமுவேல்ஸ் சொதப்பியதன் காரணமாக ஷேன் வோர்ன் அவரை அணியை விட்டு நீக்குமாறு கூற, அதை மனதில் வைத்துக்கொண்ட சாமுவேல்ஸ் தான் வென்ற போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை ஷேன் வோர்னுக்கு 'அர்ப்பணிப்பதாக' சொல்லி பழியைத் தீர்த்துக்கொண்டார்.


ஆனாலும், ஊடகவியாளர் சந்திப்பில் கால்களை மேசை மேலே தூக்கி வைத்து யாரையும் சற்றும் மதிக்காமல் ஒரு திமிர்த் தோரணையோடு சாமுவேல்ஸ் வழங்கிய பேட்டி கண்டிக்கப்படவேண்டியது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை சாமுவேல்ஸ் வென்ற பிறகு மேலாடையைக் கழற்றி இங்கிலாந்து அணி வீரர்கள் பக்கம் சென்று வசவு வார்த்தைகளுடன் சாமுவேல்ஸ் நிகழ்த்திய 'வெற்றிக் கொண்டாட்டங்களை' கண்டித்து தண்டப்பணமும் அறவிட்டது எதிர்கால வீரர்களுக்கான எச்சரிக்கையே.

ஆனால் தலைவர் டரன் சமியோ தனது அணியை அங்கீகரிக்காத, தங்களுக்கான ஊதிய, ஒப்பந்தங்களை சரியாக நிறைவேற்றாத கிரிக்கெட் சபையைக் கடிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக உலக T20 கிண்ணம் வழங்கப்பட்ட மேடையைப் பயன்படுத்தியிருந்தார்.
(இது பற்றிய விமர்சனங்கள் பல்வகைப்பட்டு இருந்தாலும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையாலேயே தீர்க்கமுடியாத சிக்கலை இப்படி பகிரங்கப்படுத்தி கிரிக்கெட் சபையைப் பணிய வைத்த தலைவனை பாராட்டவே வேண்டும்)

ஆனால் அணியாக நின்று வென்ற இந்த அசைக்கமுடியாத சம்பியன்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் சாதிக்கவேண்டும் என்ற வெறியும் பாராட்டக் கூடியது.

மீண்டும் எழுச்சி கொள்ளும் - இதற்கான சாத்தியங்கள் பற்றி மேலே ஆராய்ந்துள்ளேன் - மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட், கிரிக்கெட்டுக்கு நல்லது.

தொடரின் நாயகனாக விராட் கோலி தெரிவானார்.
அவரது தொடர்ச்சியான பெறுபேறுகளை வேறு யாரும் நிகர்த்திருக்கவில்லை. தனியொருவராக நின்று அவர் போராடியது இந்தியாவுக்கு ஒரு பக்கம் நன்மை, இன்னொரு பக்கம் அவரையே நம்பியிருந்து தோற்றுப் போனது.

ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியாக நின்று ஒருவர் விட்டால் இன்னொருவர் தாங்கி கிண்ணம் வென்றது.
இதே போன்று அணியாக செயற்பட்ட இன்னொரு அற்புதமான அணி இங்கிலாந்து அடித்தடிக்கும் ஆற்றல் கொஞ்சம் குறைவானதால் நேற்று மயிர்ழையில் கிண்ணத்தைக் கோட்டை விட்டது.


சமி சொன்ன "உடுத்தும் ஆடைகளும் இன்றி இங்கே வந்தோம். ஒவ்வொருவரும் எங்களைக் குறைவாகக் கருதி விமர்சித்த ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களுக்கு உரமேற்றின" என்ற வார்த்தைகளும்,

இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன் சொன்ன "ஸ்டோக்ஸின்  சோகத்தில் நாமும் பங்கெடுக்கிறோம்.வெற்றிகளைப் பகிர்வது போலவே, தோல்விகளையும் அணியாக நாம் ஏற்றுக்கொள்வோம்"
என்ற வலிமிகு வார்த்தைகளும்....

கிரிக்கெட் ஒரு அற்புத ஆட்டம்.





2 comments:

Anonymous said...

உங்களை விட்டால் வேற யார் இப்பிடி விவரமாக எழுத இருக்கிறார்கள்?
அருமை அண்ணே.
நிறைய தகவல் அறிந்துகொண்டோம்
நன்றி.
- ராகலை ரகு

Anonymous said...

So Good

plz see here

www.puthumypiththan.blogspot.com

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner