ஊடக, இணையப் பேட்டிகளில் அடிக்கடி இயக்குனர் A.R.முருகதாசும், இளைய தளபதி விஜயும் "இது வழக்கத்திலிருந்து வித்தியாசம்; ஒரு முற்றிலும் வித்தியாசமான விஜயைப் பார்க்கலாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தாலும்... 'என்னத்த வித்தியாசமா' என்று ஆயாசப் பட்டவர்கள் ஆயிரக் கணக்கானவர்களில் நானும் ஒருவன்.
ஆனால் சொன்னது போலவே செய்து காட்டியிருக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள்.
வழமையான தமிழ்க் கதாநாயகர்களின் தீவிரவாத ஒழிப்பு, குண்டுவெடிப்பு தடுப்பு - One man army show - விஜயகாந்த், அர்ஜுன் செய்வதையே இளைய தளபதியும் A.R.முருகதாஸ் சொன்னபடி செய்கிறார்.
ஆனால் களம் வேறு - மும்பாய். & இயக்குனர் காட்சிப் படுத்தியிருப்பதில் விறுவிறுப்பு & வித்தியாசம். துப்பாக்கி இதனால் துடிப்பாகவே சுட்டிருக்கிறது.
இராணுவ வீரராக விஜய்; விடுமுறைக்காகத் தனது குடும்பத்தினர் இருக்கும் மும்பாய்க்கு வரும் அவர், தற்செயலாக ஒரு குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்ட ஒருவனைப் பிடித்துவிட, தொடர் குண்டுவெடிப்புக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்கிறார். தொடர் குண்டுவெடிப்புக்களை மறைந்திருந்து இயக்கும் பிரதான தீவிரவாதியை அழிக்கும் முயற்சியில் இறங்கும் விஜயை, சந்தித்து அழிக்க நினைக்கும் வில்லனுடனான மோதலில் இறுதியாக என்ன நடக்கிறது என்பதைத் துப்பாக்கி சொல்கிறது.
இப்படியான கதைகளில் தொய்வில்லாத திரைக்கதையும், கண்டபடி கதைகளில் செருகல்கள் இல்லாமையும் முக்கியம். A.R.முருகதாஸ் அதையும் சரியாகச் செய்திருக்கிறார்.
ஆனால் நீண்ட தூர மோப்பத்துக்கு விஜயின் நாய் உதவுவதும், வில்லன் கோஷ்டியினால் கைது செய்யப்படும் விஜய் கை விலங்கை அகற்றிவிடுமாறு கேட்டுக் கழற்றுவதும், முறிந்த கையை உலுக்கி, குலுக்கி சரி செய்யும் மஜிக் காட்சிகளையும் தவிர்த்திருக்கலாம்.
அதேபோல இவ்வளவு புத்திசாலி Sleeper Cell Head வில்லன், விஜய் ஒரு chip ஐத் தன் உடலுக்குள் மறைத்து வந்திருப்பதையும், பின்னாலேயே ஒருவன் வருவதையும் கண்டறியமாட்டானா என்பதையும் யோசித்திருக்கலாமே...
அத்தோடு படம் வந்த பிறகு பரபரப்பைக் கிளப்பி, இப்போது விஜய் மன்னிப்புக் கேட்டு அவரது தந்தையார் விஜய் முஸ்லிமாக நடிப்பார் என்று வாக்குக் கொடுத்திருக்கும் 'ஜிஹாத்' விஷயம்.
காலாகாலமாக தமிழ்த் திரைப்படங்களில் - தீவிரவாதம்- பாகிஸ்தான் - முஸ்லிம்கள் என்று வந்து கொண்டே இருப்பதால் பலரும் இதை இவ்வளவு பெரிதாக எடுப்பார்கள் என்று படம் பார்த்தபோது நான் யோசிக்கவில்லை; ஆனால் 'ஜிஹாத்' (புனித யுத்தம்) அந்தப் பெயர் தான் இதைப் பெரிதாக்கி இருக்கிறது என்று நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன்.
ஆனால் இந்தப் பாணியில் 'இஸ்லாமிய தீவிரவாத ஒழிப்பு' விஷயத்தைக் கையில் எடுக்கும் இயக்குனர்கள் செய்கின்ற அதே மாதிரியான சில காட்சிகளை இயக்குனரும் செய்திருக்கிறார்.
இறுதிப் பாடல் காட்சியிலும், முதலாவது இராணுவ வீரர்கள் விடுமுறைக்கு ஊர் திரும்பும் காட்சியிலும் தவறாமல் முஸ்லிம்களும் இந்திய இராணுவத்தில் இருப்பதைக் காட்டி இருக்கிறார்.
அதுசரி இந்திய இராணுவம் என்றவுடன் மனதில் நிழலாடும் இலங்கையில் இடம்பெற்ற அவர்கள் செய்த கொடுமைகள் பற்றிப் பொங்கும் நம்மவர்கள் பலரும் இந்தப்படத்தை இந்திய இராணுவத்துக்கு இயக்குனரும் தயாரிப்பாளரும் (நிழல் தயாரிப்பாளராக விஜய் அவர்களும் ஏராளம் பணம் கொட்டியதாகத் தகவல்கள் வந்திருந்தன) அர்ப்பணித்தும் அமைதியாக இருப்பதேனோ?? (அப்பாடா .. ஆரம்பிச்சு விட்டாச்சு.. )
விஜய் - துறுதுறு என்று இருக்கிறார். கம்பீரமாக, துடிப்பாக, அழகாக, கட்டுக்கோப்பாக... பில்ட் அப் இல்லாத, குத்துப்பாட்டுக்கு ஆடாத, பஞ்ச் வசனம் பேசாத விஜயை நண்பனைத் தொடர்ந்து மீண்டும் பார்ப்பதில் ஆனந்தம்.
இயக்குனரின் நடிகராக நல்லாவே செய்கிறாரே.. மற்ற இயக்குனர்களும் விஜயின் இந்த நல்ல மாற்றத்தைப் பயன்படுத்தலாமே.
சண்டைக் காட்சிகள், காஜல் அகர்வாலுடன் காதல் - குறும்பு காட்சிகளில் ரசனையாகக் கலக்குகிறார்.
காஜல் அழகாகவே இருக்கிறார்.
கிடைக்கும் வாய்ப்புக்களில் ரசிக்க வைக்கிறார். நடனம் ஆடுகிறார். கொஞ்சம் கிறுக்குத் தனமும் சேர்ந்தே இருக்கிறது. (மும்பாய் தமிழ்ப் பெண் என்பதால் இவர் தம் அடிப்பது & குடிப்பது பற்றி கலாசாரக் காவலர்கள் ஏதும் சொல்ல மாட்டார்கள்)
அவ்வளவு தான். பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் கதாநாயகிக்கு வேறு என்ன வேலை?
சத்யன் விஜயின் நண்பன்.. கொஞ்சமாக சிரிக்கவைக்க.
'பத்மஸ்ரீ' ஜெயராம் பாவம்.. அவரையும் சேர்த்து சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். சரி..
வில்லன் வித்யுத் ஜம்வால்..
முருகதாசின் படங்களில் வரும் வில்லன்கள் சிலநேரம் ஹீரோக்களை விட அதிகம் கவர்ந்து நிற்பார்கள்.
அந்த வரிசையில் ஏழாம் அறிவு டொங் லீக்கு அடுத்ததாக இந்தக் கட்டுமஸ்தான வில்லன்.
குறைவான பேச்சும், கூரிய கண்களும், கம்பீர நடையுமாகக் கலக்குகிறார்.
கடைசி முட்டாள் தனம் தவிர இவரது நுணுக்கமான திட்டமிடல்களும் ஈவு இரக்கமற்ற அசைவுகளும் இயக்குனருக்கான பாராட்டுக்கள்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் பிரம்மாண்டம் எல்லாம் காட்டவில்லை. ஆனால் புதிய ஒளிப்பதிவு நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளாராம். இப்படியான விறு விறு படம் ஒன்றுக்குத் தேவையானதைக் குறைவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
இவரும் இயக்குனர் A.R.முருகதாசும் கூகிள் பாடல் காட்சியிலும் தலை காட்டியுள்ளார்கள்.
பாடல்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட அளவுக்குக் குறைவில்லாமல் ரசனையாகவே படத்திலும் வந்திருக்கின்றன. அதிலும் மதன் கார்க்கியின் 'அண்டார்ட்டிக்கா' படமாக்கப்பட்ட விதத்தில் மனதை அள்ளி எடுக்கிறது.
வரிகளுக்காக நேசித்த 'போய் வரவா' இறுதியாக சென்டிமென்ட்டாக டச்சுகிறது.
கூகிள் & அலேய்க்கா நடனத்துக்காக ரசிக்கலாம். ஆனால் விஜய் நடனத்திலும் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார் போலத் தெரிகிறதே... (எனக்கு மட்டுமா?)
பாடல்களில் ரசிக்க வைத்த ஹரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் அப்படியொரு சொதப்பல். பின்னணி இசை ஒட்டியிருந்தால் முக்கிய காட்சிகளும் முடிவுக் காட்சிகளும் இன்னும் பரபரவாக இருந்திருக்கும்.
ஆனால் இப்படியொரு விறுவிறுப்பான படத்தில் பாடல்கள் இரண்டொன்றைக் குறைத்திருந்தாலும் நாம் ரசித்திருப்போம். சில இடங்களில் பாடல்கள் படத்தின் வேகத்தைக் குறைப்பதாகவும் இருக்கின்றன.
முருகதாஸ் கைவண்ணம் தீனா, ரமணாவில் இருந்து நான் ரசிப்பது சிறு சிறு காட்சிகளின் மெருகில். அது 'ஏழாம் அறிவில்' இல்லாமல் போயிருந்தது.
ஆனால் துப்பாக்கியில் தன்னை மீள நிரூபித்திருக்கிறார் எனலாம்.
Sleeper Cells என்ற ஒரு சிறு பொறியை சரியாகப் பயன்படுத்தி பெரிய கதையை தொய்வின்றி உருவாக்கியவிதம், 12 பேரை ஒரே நேரம் பிசகில்லாமல் போட்டுத் தள்ளும் திட்டம், வில்லன் விஜயைக் கண்டுபிடித்து நெருங்கும் விதம், துரோக இராணுவ அதிகாரிகளின் தற்கொலைகள் என்று சில ஞாபகம் வந்தவை.
விஜய் தன் மாற்றத்தை சரியாக உணர்ந்துவிட்டார். இனியும் இது தொடர்ந்தால் சிறப்பு.
ஆனால் இயக்குனர் முருகதாஸ் ஒரு formula வுக்குள் விழுந்திருக்கிராரோ என்ற கேள்வியும் கூடவே. அடுத்த படம் பதில் சொல்லும் என்று நினைக்கிறேன்.
துப்பாக்கி - குறி தப்பவில்லை