March 24, 2016

ஹட் ட்ரிக் வெற்றியுடன் கறுப்புத் தொப்பிகள் அரையிறுதியில் - தோல்வியுடன் ஓய்வுக்கு அப்ரிடி

ஒரு வெற்றி, ஒரு தோல்வி எத்தனை மாற்றங்களை செய்துவிடக்கூடும்?
நியூ சீலாந்து செவ்வாய் பெற்ற வெற்றி - இந்த உலக T20 இல் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றி - அரையிறுதிக்குத் தெரிவான முதலாவது அணி என்ற பெருமையைக் கொடுத்துள்ளது.

இந்த உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கும் நேரம் யாரும் நியூ சீலாந்தை இந்தளவு வலிமையான ஒரு அணியாகக் கருதியிருக்க மாட்டார்கள், அதிலும் பிரெண்டன் மக்கலமின் ஓய்வுக்குப் பிறகு.
ஆனால் கேன் வில்லியம்சன், மக்கலமின் அலையைத் தொடர்கிறார்.

மறுபக்கம், பாகிஸ்தானின் தோல்வி அவர்களது அரையிறுதி வாய்ப்பையே கேள்விக்குரியதாக மாற்றியுள்ளதுடன், அணித் தலைவர் அப்ரிடி தனது ஓய்வை முற்கூட்டியே அறிவிக்கும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதைவிட எப்போதுமே பாகிஸ்தானின் சாபக்கேடாக அமையும் உள்மோதல்கள் மீண்டும் ஒரு தடவை தங்கள் நச்சுப் பற்களை வெளிப்படையாகக் காட்டும் அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.

கிரிக்கெட் விமர்சகர்களால் ஒரு ஜீனியஸ் என்று இப்போது கொண்டாடப்படும் கேன் வில்லியம்சன், நேற்று ஏதும் புதிதாக செய்யத் தேவையில்லாத அளவுக்கு மார்ட்டின் கப்டில்லின் அதிரடி துடுப்பாட்டம் பாகிஸ்தான் எட்டமுடியாத ஓட்ட எண்ணிக்கையை நியூ சீலாந்துக்கு வழங்கியிருந்தது.


கப்டில்லின் அதிரடி - 3 ஆறு ஓட்டங்கள், 10 நான்கு ஓட்டங்களுடன், 48 பந்துகளில் 80, பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தது.
கப்டில் கடந்த ஒரு வருட காலமாகவே தொடர்ச்சியாக ஓட்டங்களை மலையாகக் குவித்து வந்தாலும், (2015 உலகக்கிண்ணப் போட்டிகளில் அடித்த இரட்டைச் சதம் + இல்லங்கை அணிக்கு எதிராகக் குவித்த ஓட்டங்களை யார் தான் மறக்கக்கூடும்?) பெரியளவில் இவரது பெயர் பேசப்படுவது குறைவு என்பது கவலைக்குரிய ஒரு விடயமே.

இதற்கு முந்தைய போட்டியில் விளையாடியிருந்தால் ஏதாவது செய்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட இமாட் வாசிமும், இந்தியாவுடனும் சிறப்பாகப் பந்து வீசிய மொஹமட் சமியும் தான் ஓரளவாவது சிறப்பாகப் பந்துவீசியிருந்தார்கள்.


எனினும் தலைவர் கேன்  வில்லியம்சன் இன்னமும் சொல்லக் கூடியளவுக்கு இந்த தொடரில் ஓட்டங்கள் பெறவில்லை என்பது நியூ சீலாந்துக்குச் சின்னத் தலைவலியை வழங்குகிறது.

ஆனாலும், பாகிஸ்தானுக்கு எதிராக ரொஸ் டெய்லர் ஆடிய விதம் நியூ சீலாந்துக்கு உற்சாகத்தை வழங்கியிருக்கும். டெய்லரின் லாவகமான தட்டல்கள், நேர்த்தியான அடிகள் களை கட்டியிருந்தது.

பாகிஸ்தானின் பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஷஹிட் அப்ரிடி, லசித் மாலிங்கவின் சாதனையை முறியடித்தார்.
உலக T20 கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த இலங்கையின் மாலிங்கவின் 38 விக்கெட் சாதனையை அப்ரிடி முந்தியிருந்தார்.

உபாதை காரணமாக மாலிங்க இந்தத் தொடரிலிருந்து விலகியிருக்காவிட்டால், அவரது சாதனையும் நிலைத்திருக்கும்; இலங்கைக்கும் பலமாக இருந்திருக்கும்.

பாகிஸ்தானின் இன்னிங்க்ஸ் எப்போதுமே அதிரடியாகவே ஆடும் ஷர்ஜீல் கானின் வேகமான ஓட்டக் குவிப்போடு ஆரம்பித்தாலும், அவரது ஆட்டமிழப்பு ஓட்ட வேகத்தை சடுதியாக சரித்தது.
அடுத்து வந்த புதியவர் காலித் லட்டிபின் தடுமாற்றம், தொடர்ந்து வந்த ஷெசாட் - உமர் அக்மலின் ஆகியோரின் மந்த வேக இணைப்பாட்டம் ஆகியன துரத்தியடித்தலை இல்லாமல் செய்திருந்தன.

தன்னை துடுப்பாட்ட வரிசையில் மேலே அனுப்புவதில்லை என முன்னாள் அணித் தலைவர் இம்ரான் கானிடம் முறைப்பாடு செய்திருந்த உமர் அக்மலுக்கு 4ஆம் இலக்கத்தில் துடுப்பாடும் வாய்ப்புக் கிடைத்தும் 26 பந்துகளில் 24 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தடுமாறியிருந்தார்.

இதை நாசூக்காக சாடி நக்கல் செய்திருந்தார் பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுஸ்.
மறுபக்கம் இந்தத் தோல்வியுடன் ஏற்கெனவே அணிக்குள் புகைத்துக்கொண்டிருந்த அப்ரிடிக்கு எதிரான கருத்துக்கள் மேலும் அதிகரித்திருப்பதாக பாகிஸ்தான் செய்திகள் சொல்கின்றன.


இதனாலேயே இன்னமும் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்புக்கள் இருந்தும், அடுத்த போட்டி பற்றிய  நம்பிக்கையீனத்தோடு 
'அடுத்த போட்டியே தனது இறுதி சர்வதேசப் போட்டியாக அமையும்' என்று அன்றே அறிவித்துவிட்டார் அப்ரிடி.

பாருங்கள், முதலாவது போட்டியில் தனது அதிரடி விளாசல் மூலமாக அத்தனை பேரையும் பாராட்ட வைத்த பூம் பூம், ஒரே போட்டியில் அணியின் தோல்வியோடு புஸ் ஆகிப் போனார்.
கிரிக்கெட்டும் வாழ்க்கையும் இப்படித்தான்.

அவுஸ்திரேலிய அணியுடன் நாளைய போட்டியில் இதே நம்பிக்கையீனத்தோடு விளையாடினால் இறுதியாகத் தோல்வியுடன் தான் விடை கொள்ள வேண்டி வரும் அப்ரிடி.

கென் வில்லியம்சனின் ராசி இந்தப் போட்டியிலும் கைகொடுத்தது.
ஷர்ஜீல் சரவெடி ஆட்டம் ஆடியபோது அடம் மில்னே வந்து விக்கெட்டைப் பறித்துக்கொடுத்தார்.
அந்தப் பந்தின் வேகம் மணிக்கு 152.4 கிலோ மீட்டர்.
இந்த உலக T20யில் இதுவரை வீசிய அதிவேகப்பந்து.


இன்னும் வில்லியம்சன் என்னென்ன ஜாலம் நிகழ்த்துவார் என்று பார்த்திருக்க, நியூ சீலாந்தின் அடுத்த போட்டி நேற்று இந்தியாவுக்கு கடைசிப் பந்துவரை மரண பயம் காட்டியிருந்த பங்களாதேஷுடன்.


பதறாமல் நான்காவது தொடர்ச்சியான வெற்றியைப் பெற்றுக்கொள்ள வில்லியம்சனின் அணி முனைந்தாலும், ஒரேயொரு ஓட்டத்தால் தாவம் தவறவிட்ட பொன்னான சந்தர்ப்பம் ஒன்றைப் பற்றி நினைத்துக்கொண்டே இன்னொரு பெரிய வெற்றிக்கு - இந்த உலக T20யில் தங்கள் முதலாவது வெற்றிக்கு வங்கப்புலிகள் குறிவைப்பர்.

நேற்றைய திக் திக் போட்டிகளின் சுவாரஸ்யமான விடயங்கள் இன்றைய அடுத்த இடுகையில்.



2 comments:

2019 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய ஐவர் இவர்கள் தான் . said...

சகோதரா! தாங்களும், தங்களது எழுத்துக்களும்
கிரிக்கெட் பற்றிய தெளிந்த அறிவும் எல்லா
வேலைகளிலும் என் போன்ற கிரிக்கெட்
ரசிகர்களுக்கு ஆர்வமாய் அறிவு
தீனியாய் அமைந்திருக்கின்றது.
நன்றி சகோதரா!

S.MAGINTHAN said...

தகவல்கள் அருமை நண்பரே. தொடர்ந்து எழுதிக்கொண்டிருங்கள் வாசிக்க ஆவலாக உள்ளோம்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner