March 24, 2016

அந்த ஒரு ஓட்டம் & Finisher தோனி - கையிலிருந்த வெற்றிகளைத் தாரை வார்த்த ஆப்கன் & பங்களா

ஒரே நாள், இரண்டு போட்டிகள், இரண்டு 'சிறிய'அணிகள் - பெரிய அணிகளை மண் கவ்வ வைக்கக் கூடிய சந்தர்ப்பங்களை தங்கள் அவசரம், கவனக்குறைவு, நிதானமின்மை காரணமாகத் தவறவிட்ட ஆச்சரியமான சந்தர்ப்பங்கள்.​அதிர்ச்சியை(upset) அளித்திருக்கவேண்டிய இரு போட்டிகள், எதிர்பார்த்த 'பெரிய' அணிகளுக்கு வெற்றிகளைக் கொடுத்த வழமையான நாளாக மாறிப்போனது.minnows என்று அழைக்கப்படும் சிறிய அணிகளுக்கு ஆதரவை இப்படியான போட்டிகளில் வழங்கும் என் போன்றவர்களுக்குக் கவலை தந்த இந்த முடிவுகள், இந்த உலக T20 தொடரில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவிருந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுள்ளன.


முக்கியமாக அரையிறுதிக்கு செல்லும் அணிகளில் ஏற்படவிருந்த மாற்றம் இப்போது இல்லாமல் போயுள்ளது.

இது உலக T20 கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பிலும் மாற்றம் தரலாம்.


நேற்று இந்தியாவும் இங்கிலாந்தும் தோற்றிருந்தால் அரையிறுதி வாய்ப்புக்களை இழந்திருக்கும்.


ஆப்கானிஸ்தான் இங்கிலாந்தை மடக்கி வீழ்த்தும் சந்தர்ப்பம் ஒன்றை டெல்லியில் 15 ஓட்டங்களால் தவறவிட்டது.

பெங்களூரில் நேற்றிரவு பங்களாதேஷ் அதைவிட மிக நெருக்கமாக வந்து 39.3 ஓவர்களுக்குத் தங்கள் கைவசம் இருந்த வெற்றியை அப்படியே கடைசி மூன்று பந்துகளில் இந்தியாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது.


​இங்கிலாந்து அணியை தனது அபாரமான சுழல் பந்துவீச்சின் மூலம் ஒரு கட்டத்தில் 85 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் தடுமாற வைத்திருந்த ஆப்கானிஸ்தான், இதோ முதல் தடவையாக சிம்பாப்வே தவிர்ந்த இன்னொரு டெஸ்ட் அணியை வீழ்த்தப்போகிறது என்று அனைவருமே எதிர்பார்த்திருக்க, மொயீன் அலியையும் டேவிட் வில்லியையும் இணைப்பாட்டத்தை உருவாக்க தெரியாத்தனமாக அனுமதித்தது.

120 ஓட்டங்களுக்குள் சுருட்டக்க்கொடிய சந்தர்ப்பம் இருந்தும், அத்தனை நேரமும் தனது பந்துவீச்சாளரை சரியாகக் கையாண்டு கொண்டிருந்த அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்சாய் ​19வது ஓவரை இடது கை சுழல்பந்து வீச்சாளர் ஹம்சாவுக்கு வழங்கினார்.

ஆடுகளத்தைப் பழகியிருந்த இரண்டு இடது கைத் துடுப்பாட்ட வீரர்களுக்குப் பந்து வீச ஒரு இடது கை சுழல்பந்து வீச்சாளர்..
அந்த ஓவரில் பறந்த 3 சிக்சர்களுடன் 25 ஓட்டங்கள்..

அத்தோடு போட்டியின் உத்வேகம் அனுபவமுள்ள இங்கிலாந்தின் வசமாகியது.

143 என்ற இலக்கு வெற்றி கிட்டும் என்ற அவாவுடன் காத்திருந்த ஆப்கன் அணிக்கு கொஞ்சம் தடுமாற்றத்தை வழங்கியிருக்கவேண்டும்.

வழக்கமான தடாலடி ஆரம்பத்தை வழங்கும் ஷசாட் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க இங்கிலாந்தின் கை ஓங்கியது.

சிறு சிறு அதிரடிகளுக்கு இடையில் விக்கெட்டுக்கள் சிதறிக் கொண்டே போயின.
இறுதியாக ஷஃபிக்குல்லா 20 பந்துகளில் 35 ஓட்டங்களை வெளுத்து விளாசினாலும், 15 ஓட்டங்களால் தோல்வி.

ஆப்கானிஸ்தான் ரசிகர்களையும் வீரர்களையும் காலாகாலத்துக்கும் உறுத்தி வாட்டப்போகும் ஒரு விடயம்..
அந்த 19வது ஓவரில் 25 ஓட்டங்கள்..
தோல்வி 15 ஓட்டங்களால்.

கொஞ்சம் பதறாமல், 85/7 என்பதிலே வைத்து இங்கிலாந்தை நசுக்கி இருந்தால்..

இதனால் தான் கிரிக்கெட்டில் அடிக்கடி சொல்லப்படுவது 
"அப்படி நடந்திருந்தால், ஆனால் போன்ற பதங்களைப் பயன்படுத்தாதீர்"- There is no IFs and BUTs in cricket.
 என்று.

​ஆப்கானிஸ்தான் விட்ட தவறைப் பற்றி பேசுகையில், மொயீன் அலியின் பொறுமை பற்றியும் பாராட்ட வேண்டும்.

-----------------
ஆசியாவில் இந்திய அணிக்கு இந்த சில மாதங்களாக சவால் விடக்கூடிய அணியாக உருவாகிவரும் ஒரே அணி என்றால் அது பங்களாதேஷாகவே இருக்கவேண்டும்.

2015 உலகக்கிண்ணத்தில் கண்ட காலிறுதித் தோல்விக்குப் பிறகு இந்தியாவைத் தங்கள் கிரிக்கெட் வைரிகளாக வரித்துக்கொண்ட பங்களாதேஷ் (ரசிகர்கள்) கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்தியாவை தங்கள் அணி தோற்கடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
(முன்னைய பாகிஸ்தான் - இந்திய மோதல், பின் இன்று வரை சமூக வலைத்தளங்களில் பரவலாக இடம்பெறும் இலங்கை - இந்திய ரசிகர் மோதல் எல்லாம் இந்த வங்கப்புலி - இந்திய மோதல்களிடம் தோற்றுவிடும் போலத் தெரிகிறது)

அதற்கேற்றது போல இந்திய அணி பங்களாதேஷ் சென்றபோது ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் இந்தியாவை 2-1 என வீழ்த்தியது.

ஆசியக் கிண்ண 


T20

​ போட்டிகளிலும் இலங்கையும், பாகிஸ்தானும் வீழ்ந்துவிட, பங்களாதேஷே இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதியது.இதனால் நேற்றைய பெங்களூர் போட்டி இந்திய அணிக்கு ஒரு சவாலானதாகவே அமையும் என்று யார் கருதினார்களோ இல்லையோ, நான் கருதியிருந்தேன்.

அந்தளவுக்கு இந்தியாவின் பலவீனங்களை பங்களாதேஷ் அறிந்துவைத்துள்ளது என்று நான் கருதுகிறேன்.பாகிஸ்தான் அணியிடம் தோற்றிருந்தாலும் அவுஸ்திரேலிய அணிக்கு பங்களாதேஷ் இறுதிவரை சவால் விடுத்தது.இந்தியா நாக்பூரில் கவிழ்ந்து போனது, அடுத்து பாகிஸ்தானையும் கோலியின் துணையுடன் தடுமாறியே வென்றது.இதற்கிடையில் போட்டி ஆரம்பிக்க முன்னரே மார்ச் 23இல் முன்னைய இந்தியாவின் உலகக்கிண்ணத் தோல்விகள் பற்றி மீம்கள் புறப்பட்டிருந்தன.
நாணய சுழற்சியின் வெற்றிக்குப் பிறகு இந்தியாவைத் துடுப்பாட அனுப்பியதிலிருந்து வங்கப்புலிகள் இந்தியாவை அடக்கிக்கொண்டே இருந்தார்கள்.
வழமையாக சீறும் in -form கோலியும் நேற்று அடங்கி, மடங்கிப் போனார்.
24 பந்துகளில் 24.
அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்த ரெய்னா மட்டும் கொஞ்சம் வேகமாக 23 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
கடைசிப் பந்துவரை நின்ற finisher தோனி கூட 12 பந்துகளில் தடுமாறி 13 ஓட்டங்களையே பெற்றார்.
(finisher என்று இதை வைத்து எழுந்த கேலிகளை இறுதிப் பந்தில் விக்கெட் காப்பாளராக தோனி finish செய்தது தனிக்கதை)

147 என்ற இலக்கை நோக்கிய பங்களாதேஷின் துடுப்பாட்டம் பெங்களுர் ஆடுகளத்தில் பெரிய சிரமமானது என்று யாரும் கருதியிருக்கவில்லை.

காரணம் ஆடுகளம் அப்படியானதொன்றும் பயங்கரமானதல்ல..
இந்திய வீரர்கள் பங்களாதேஷின் கட்டுப்பாடான பந்துவீச்சில் தான் ஆட்டமிழந்திருந்தார்கள்.

அதேபோல, தமீம் இக்பாலின் அதிரடி பங்களாதேஷை நேர்த்தியாக செலுத்தியது.
அஷ்வின், ஜடேஜா ஆகியோரின் சுழல்பந்து வீச்சு இடையிடையே பங்களாதேஷைத் தடுமாற வைத்தாலும், இந்தியா தவற விட்ட பிடிகளும் ஷகிப், சபிர் ரஹ்மான், சௌம்ய சர்க்கார் என்று வருவோர் எல்லாருமே அதிரடிகளை நிகழ்த்தி போட்டியை பங்களாதேஷ் பக்கமே வைத்திருந்தனர்.

இடையிடையே தோனியின் சமயோசிதம் ஜொலித்தது.
அதில் முக்கியமானது தோல்வி நிச்சயம் என்று தெரிந்த பொழுதிலும் களத்தடுப்பு வியூகங்களை நம்பிக்கையோடு மாற்றியதும், துரித வேக ஸ்டம்பிங் ஒன்றும்.

பலரும் கடைசிப் பந்தின் ஆட்டமிழப்பு பற்றி சிலாகித்தாலும் - சிலர் தோனி தவறவிட்ட பிடியோன்று பற்றி கிண்டல் அடித்தாலும் எனக்கு துரித வேகத்தில் தோனி சபீர் ரஹ்மானை ஆட்டமிழக்கச் செய்த அந்தத் துரித ஸ்டம்பிங் போட்டியின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு முக்கிய கட்டம் என்பேன்.

ஆரம்பத்தில் அடி விழுந்தாலும் இளையவர்கள் மீது நம்பிக்கை வைத்து கடைசி இரு ஓவர்களை அனுபவம் குறைந்த இளையவர்கள் பும்ரா, பாண்டியா ஆகியோருக்கு வழங்கிய தோனியின் மனத்திடம் பாராட்டுதற்குரியது.
பல நேரம் அதிர்ஷ்டத்தின் துணையும் இந்த Captain Cool பக்கம் இருப்பதையும் நாம் சொல்லியே ஆகவேண்டும்.

நேற்று இந்த இரு இளையவர்களும் பதறி ஓட்டங்களை அள்ளி வழங்கி இந்தியா தோற்றிருந்தால் தோனியும் சேர்த்தே சபிக்கப்பட்டிருப்பார்.

அஷ்வின், ஜடேஜாவின் இறுக்கமான ஓவர்களும், பும்ராவின் 19வது ஓவரும் கொடுத்த அழுத்தம், இறுதி பாண்டியாவின் ஓவரில் 11 ஓட்டங்கள் பெறவேண்டிய நிர்ப்பந்தத்தை வழங்கியது.

முஷ்பிக்குர் ரஹீம்  இரண்டாவது, மூன்றாவது பந்துகளில் அடித்த நான்கு ஓட்டங்கள் நிலையை இலகுவாக்கி, 3 பந்துகளில் 2 ஓட்டங்கள் என மாற்றியது.

ஒவ்வொரு ஓட்டமாக எடுத்து வெல்லவேண்டிய போட்டியை, அப்ரிடி, தோனி போல ஆறு அடித்து வெல்கிறோம் என்று அரைகுறை பலத்துடன் அடிக்கப் போய் அடுத்தடுத்து முஷ்பிக்குரும் , அவ்வளவு நேரம் நிதானமாக ஆடி வங்கத்தைக் கரை சேர்ப்பார் என்று நம்பிக்கை தந்துகொண்டிருந்த மஹ்முதுல்லாவும் ஆட்டமிழக்க - 
கடைசிப்பந்தில் இரண்டு ஓட்டங்கள் வெற்றிக்கு, ஒரு ஓட்டம் பெற்றால் Super Over என்று போட்டி விறுவிறுப்பின் உச்சக்கட்டத்தை எட்டியது.

நேற்று பங்களாதேஷின் எல்லா துடுப்பாட்ட வீரருமே சராசரியான ஓட்ட நிலை ஒன்றைப் பெற்ற பின்பு, தேவையற்று பெரிய அடிகளுக்குப் போய், கவனக்குறைவாக ஆட்டமிழந்தது கவனிக்கக் கூடியது.
வெற்றி பெறும்போது நிதானமாக அந்த வெற்றியை எடுத்துக்கொள்ளத் தெரியாமல் போயுள்ளது.
இவர்களில் நிதானமாக அண்மைக்காலத்தில் ஆடிவரும் மஹ்முதுல்லாவும் சேர்ந்தது தான் பங்களாதேஷின் துரதிர்ஷ்டம்.

பாண்டியா கடைசிப் பந்து வீசும் வரை அவருக்கு ஆலோசனையின் மேல் ஆலோசனை.
குறிப்பாக அணியின் தலைவர் தோனியும், சிரேஷ்ட பந்துவீச்சாளர் நேஹ்ராவும்.
இருவரது திட்டமும் off திசையைக் குறிவைத்தே அமைய, பந்துவீச முதலே துடுப்பாட்ட வீரர்கள் பெறவுள்ள bye ஓட்டத்தைத் தடுத்து ஆட்டமிழக்கச் செய்ய கையுறையைக் கழற்றி வைத்த தோனியின் சமயோசிதம் பாராட்டுதற்குரியது.

கொஞ்சமும் பதறாமல் தோனி ஓடிவந்தே விக்கெட்டைத் தகர்த்து ஆட்டமிழக்கச் செய்த விதம் இவரது Captain Cool என்ற பட்டத்துக்கான நியாயம்.

தோனி நிஜமான finisher ஆன மற்றொரு சந்தர்ப்பம்.

2007 உலக T20இல் இறுதிப்போட்டியின் இறுதி ஓவரை ஜோகிந்தர் ஷர்மாவுக்குக் கொடுத்த சந்தர்ப்பத்தை நேற்றைய கடைசி ஓவர் ஞாபகத்துக்குக் கொண்டுவந்தது.


இந்த ஒரு ஓட்டத் தோல்வி பங்களாதேஷுக்கு மிக நீண்ட காலம் மன உளைச்சலைக் கொடுக்கும்.
இந்தியாவுக்கு எதிரான முதலாவது T20 சர்வதேச வெற்றிக்கு இன்னும் காத்திருக்கவேண்டும்.

இந்தியாவின் தடுமாற்றம் தொடர்ந்தாலும் நேற்றைய மயிரிழை அதிர்ஷ்ட வெற்றி அவர்களை வியூக ரீதியில் நிறைய யோசிக்க வைக்கும்.

இனி அடுத்து அரையிறுதிக்கான முக்கியமான போட்டியான அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சுழலை வைத்து சாதிக்க நினைக்கும்.

தற்போதைய அணிகளின் நிலைகள்.


பங்களாதேஷும் ஆப்கானிஸ்தானும் வாய்ப்பை இழந்துள்ளன.
ஏனைய அணிகள் அனைத்துக்குமே வாய்ப்பு உள்ளது.

நாளைய இரு போட்டிகளும் வாழ்வா சாவா போட்டிகள் தான்.

அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் 
அப்ரிடியின் இறுதிப் போட்டியாக அமையலாம்.
அவுஸ்திரேலியாவின் பலத்தைப் பரிசீலிக்கலாம்.
இந்த உலக T20 தொடருடன் தான் சர்வதேச ஓய்வை அறிவிப்பதாக அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் ஷேன் வொட்சன் இன்று அறிவித்திருந்தார்.

தென் ஆபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 

தென் ஆபிரிக்காவின் இறுதி வாய்ப்பாகவும், மேற்கிந்தியத் தீவுகளின் உறுதியைப் பரீட்சிக்கும் போட்டியாகவும் அமையும் இரண்டாவது போட்டி.


No comments:

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner