March 22, 2016

கொல்கொத்தாவில் கோலி, ரூட்டின் ருத்ர தாண்டவம், பெங்களூரில் ஃப்ளட்ச்சர் & நாசமாய்ப்போன நடுவர்கள்..

வெள்ளி இரண்டு போட்டிகள், சனிக்கிழமை ஒரு போட்டி (இன்னோரு போட்டி வைத்திருக்கக்கூடிய நாள்), நேற்று முன்தினம் - ஞாயிறு இன்னும் இரு போட்டிகள், நேற்று இன்னொரு போட்டி..

ஆறு போட்டிகளிலும் சில கதாநாயகர்கள்..

ஆனால் மூன்று பேர் மட்டும் தனியாகத் தெரிந்திருந்தார்கள்.
தத்தம் அணிகளின் வெற்றிக்கான பங்களிப்பைத் தனித்து நின்று போராடி வழங்கியவர்கள் என்று அவர்களைக் குறிப்பிடலாம்.

கொல்கொத்தாவில் பாகிஸ்தானின் சவாலை, சிக்கலான ஆடுகளம் ஒன்றில் தனியாக நின்று சமாளித்து இந்தியாவுக்கு மறக்கமுடியாத வெற்றியைப் பெற்றுக்கொடுத்த விராட் கோலி.

தென் ஆபிரிக்க வைத்த சவாலான இலக்கை வேகமாகவும், அதே நேரம் விக்கெட்டுக்கள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, நிதானமாகவும் ஆடி அபாரமான வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இங்கிலாந்தின் ஜோ ரூட்.

ஓட்டங்கள் பெற சிரமமான ஆடுகளம்; விக்கெட்டுக்கள் ஒரு பக்கம் பறிபோய்க் கொண்டிருக்கிறது.
தனியே நின்று அடித்தாடி, ஆனால் இடையிடையே சிக்சர்களையும் தூவி தனது குருவித் தலையில் சுமத்தப்பட்ட கெயிலின் பனங்காயை லாவகமாகக் கையாண்ட அன்ட்ரே ஃப்ளட்ச்சர்.

இந்த மூவரின் ஆட்டங்கள், அதிரடிகள் செலுத்திய தாக்கம் அற்புதம்.

தனி நபர் சாகசங்களை விட அணியின் ஒன்றுபட்ட பெறுபேறுகள் கிரிக்கெட்டில் வெற்றிகளைப் பெற்றுத் தந்தாலும், சில சிக்கலான சமயங்களில் அணியின் வெற்றிக்குத் தனி நபர் ஒருவரது ஆட்டமும், ஆற்றல் வெளிப்பாடும் தேவைப்படுகையில் அது மறக்க முடியாததாகிறது.

-------------
அவுஸ்திரேலிய - நியூ சீலாந்து போட்டியைப் பற்றி நான் ட்விட்டரில் சொன்னது
Awesome Kiwis.Clinical catching, tactical captaincy and Bowling to their strength.Going to be tough to beat this #NZWell played Kane & cohttps://twitter.com/LoshanARV/status/710828757532155904
​மிக விறுவிறுப்பான ஒரு போட்டி..

ஆனால் நேர்த்தியான சாகசக் களத்தடுப்பினால் நியூ சீலாந்து அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

தன்னிடமுள்ள பந்துவீச்சாளரைத் தந்திரோபாயமாகப் பயன்படுத்தி,எதிரணிகளைத் தினறடிப்பதில் கேன் வில்லியம்சன் நியூ சீலாந்தின் முன்னைய தலைவர் பிரெண்டன் மக்கலமை விஞ்சி வருகிறார்.

​நியூ சீலாந்தின் முக்கியமான இரு பந்துவீச்சாளர்களும் இன்னும் வெளியே.(சௌதீ & போல்ட்)
​நாக்பூர் போட்டியில் ​சிறப்பாகப் பந்து வீசியிருந்த நேதன் மக்கலமை  நீக்கிவிட்டு, யாரும் எதிர்பாராத இடது கை வேகப் பந்துவீச்சாளர் மிட்ச் மக்லெனகனை அணிக்குள் கொண்டுவருகிறார், அவர் மூன்று விக்கெட்டுக்கள்.
போட்டியின் சிறப்பாட்டக்காரர்.
வில்லியம்சன் தொட்டதெல்லாம் துலங்குகிறது.

இப்போது எல்லா ரசிகரினதும் கேள்வி,அடுத்த போட்டியில் வில்லியம்சன் நிகழ்த்தப்போகும் வியூக ஜாலம் என்ன?
சுழல்பந்து வீசும் சகலதுறை வீரர் சண்ட்னர் நியூ சீலாந்துக்கு புதிய வரம்.

அந்தப் போட்டியில் இரு அணிகளின் துடுப்பாட்டமுமே பெரிதாக ஜொலிக்காவிடினும் , போட்டி ஆரம்பிக்கும் நேரமே நான் சொன்னது போல 
இரு சுழல்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய அவுஸ்திரேலியாவுக்கு எந்த விதத்திலும் பயன்தரவில்லை.
அடுத்த போட்டியில் இன்னும் மாற்றங்களை செய்யவேண்டி இருக்கும்.

அவுஸ்திரேலிய T20 அணிக்கு இதுவே விதியாகி விட்டது.
ஒரு தொடர்ச்சியில்லாமல், அடிக்கடி மாற்றங்கள்.
இப்படித் தான் அவர்களது தலைவர்களும் இந்த தொடர்ச்சியின்மை காரணமாக அவர்களும் தடுமாறி, இறுதியாக தலைஒமைப் பதவியை இழந்து, பின்னர் அணியிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள்.

மைக்கேல் கிளார்க் முதல், கமெரோன் வைட், ஜோர்ஜ் பெய்லி, இறுதியாக ஷேன் வொட்சன், ஏரொன் ஃபிஞ்ச் என்று பலரைப் பழிவாங்கிய இந்தத் தொடர் தடுமாற்றம், டெஸ்ட் மற்றும் ஒருநாளில் வெற்றிகரமான தலைவராக வலம்வரும் ஸ்டீவ் ஸ்மித்தையும் பீடித்து விடுமோ என்று தோன்றுகிறது.

நேற்றும் மிகத் தடுமாறி  ஒரு வெற்றி, அதிலும் ஸ்மித் இன்னும் ஓட்டங்கள் பெறுனராக தன்னை இவ்வகைப் போட்டிகளுக்கு மாற்றிக்கொள்ள முடியாமல் இருப்பது துரதிர்ஷ்டமே.

-------------
அண்மைக்காலத்தில் அடிக்கடி பார்த்த அணிகள் என்று சற்று ஆர்வமின்றி ஆரம்பித்த இங்கிலாந்து - தென் ஆபிரிக்க போட்டி தான் இம்முறை உலக T20யின் மிக விறுவிறுப்பான போட்டியாக அமைந்திருந்தது.

அம்லா , டீ கொக் கொடுத்த அதிரடி ஆரம்பம், இறுதிக் கட்டத்தில் டுமினியின் 28 பந்துகளில் 54 என்பவற்றோடு தென் ஆபிரிக்கா பெற்றிருந்த 229 ஓட்டங்களை, தென் ஆபிரிக்காவின் பயமுறுத்தும் பந்துவீச்சை அடித்துப் பெறுவதென்பது, நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று என்று அனைவருமே எண்ணியிருக்க,

ஆரம்பம் முதலே அதிரடியாக அடித்த ஆரம்பித்தது இங்கிலாந்து.
ஜேசன் ரோய் , ஹேல்ஸ், ஸ்டோக்ஸ்  கொடுத்த ஆரம்பத்தை கொஞ்சமும் வேகம் குறையாமல் தக்கவைத்துக்கொண்டார் ஜோ ரூட்.
ஜேசன் ரோய்  - 16 பந்துகளில் 43 ஓட்டங்களை 3 சிக்சர்களுடன் பெற்றது அண்மைக்கால ஆரம்பங்களில் ரசித்த ஒன்று.
உலகின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் உபாதையின் பின்னர் மீண்டும் அணிக்குள் உருப்படியாகத் திரும்ப விட முடியாத அளவுக்கு மீண்டும் ஒரு அடி..
2 ஓவர்களில் 35.

ஆனால் கதாநாயகன் என்னவோ ரூட் தான்.
எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தற்போதைய மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர் யார் என்ற போட்டியில் தொடர்ந்தும் அசத்தி வரும் நான்கு இளம் வீரர்களில் (கோலி, ஸ்மித், வில்லியம்சன் ஆகியோர் மற்ற மூவர்) ரூட் சகல ஆடுகளங்களிலும் தன்னை நிரூபிக்க முனைந்து கொண்டிருக்கிறார்.

தென் ஆபிரிக்காவின் அபொட்டும்  மற்றவர்களும் இடையிடையே விக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டிருக்க, ரூட்டின் ருத்திரதாண்டவம் மறுபக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.
4 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்களுடன் ரூட் 44 பந்துகளில் 83 ஓட்டங்களை விளாசிவிட்டு ஆட்டமிழந்தபோது போட்டி இங்கிலாந்தின் ரூட்டுக்கு மாறியிருந்தது.

ரூட்டின் ரூட்டு வழமையான இங்கிலாந்து வழியல்ல..
ஆசிய ஆடுகளங்களில் ஆடுவதற்கான சில நுணுக்கங்களை இப்போது துடுப்பாட்ட ஆலோசகராக இருக்கும் மஹேல ஜெயவர்த்தன சொல்லிக் கொடுத்திருப்பார் என்பது எனதும் ஊகம்.

------------------

கிரிக்கெட்டின் பெரும்போர் என்று ஊதி ஊதி  பரபரப்புத் தீ வைக்கப்பட்ட இந்திய - பாக் மோதல்..
கொல்கொத்தா மழை காரணமாக நமுத்துப் போகுமோ என்று பலரும் அங்கலாய்த்திருக்க, மழை விட்டுக்கொடுக்க, மைதான ஊழியரின் கடுமையான உழைப்பினால் போட்டி நடந்தது.

நடிகர்கள், முதலமைச்சர், முன்னாள் இந்திய - பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்களின் வருகையினால் மேலும் இரண்டு ஓவர்கள் விழுங்கப்பட்டு 18 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாறியது.

ஆடுகளத்தை தவறாக விளங்கிக்கொண்ட (நாக்பூர் ஆடுகளத்தில் தோனி போல) அப்ரிடி நான்கு வேகப்பந்து வீச்சாளரோடு  களமிறங்கியபோதே, இந்திய வெற்றி அங்கே எழுதப்பட்டது.

உலகக்கிண்ணப் போட்டிகள் எவற்றிலுமே இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்பது மீண்டும் உறுதியானது.

அஷ்வின் ஒரு பக்கம், துடுப்பாட்ட வீரர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் ஜடேஜாவுக்கு கிடைத்த திருப்பம், ரெய்னா வீசிய ஒரே ஓவரில் கிடைத்த விக்கெட் என்று இந்தியா பாகிஸ்தானை மடக்கியது.

ஆனால் 108 பந்துகளில் 119 என்ற இலக்கு, இறுதிவரை உயிரைக் கொடுத்துப் போராடும் பாகிஸ்தானிய அணிக்கு முன் சவாலானது தான் என்பதை துரிதமாக வீழ்த்தப்பட்ட 3 இந்திய விக்கெட்டுகளின் பின் தான் இந்தியா உணர்ந்துகொண்டது.

கோலி - யுவராஜின் இணைப்பாட்டம் அணியைத் திடப்படுத்த, இந்தியாவின் எதிர்காலமாக சில ஆண்டுகளாக நம்பிக்கை அளித்துவரும் விராட் கோலி ஒரு சுவராக நின்றுகொண்டார்.

திடமும் துணிவும் அவரது முக்கிய இரு ஆயுதங்கள்.
சில அற்புதமான கவர் டிரைவ்கள், ஒரு அபாரமான சிக்சர்..
மற்றவர்களைத் தடுமாறவைத்த கொல்கொத்தா ஆடுகளம் கோலிக்கு net practice களம் போல இலகுவாகத் தெரிந்தது.

மிக லாவகமான ஆட்டம்..
அரைச் சதம் பெற்றவுடன், அதை பார்வையாளர் அரங்கில் இருந்து ரசித்த சச்சின் டெண்டுல்கருக்கு அழகாக அர்ப்பணித்த விதம் என்று கோலியின் கலக்கல் தான்.

கோலியின் ஆக்ரோஷமும், தன்னம்பிக்கையும் இன்னும் பல தூரம் அவரைக் கடக்க வைக்கும்.

திரைப்படங்களில் படத்தை முடிக்க வரும் போலீஸ் போல, அணித் தலைவர் தோனி வந்து வழமையான ஒரு சிக்சர் அடிக்க ஆட்டம் முடிந்தது.

இது உலக T20களில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்திய 5வது சந்தர்ப்பம்.
மொத்தமாக உலகக்கிண்ணங்களில் 11 தடவைகளுக்கு பூஜ்ஜியம் என இந்தியா முன்னிலையில்.

இந்தியாவோடு விளையாடுகிறோம் என்னும்போது ஏற்படும் தடுமாற்றம் தீரும் வரையில் பாகிஸ்தான் இவ்வாறான போட்டிகளில் வெல்வது இயலாது.

நாக்பூர் தோல்வியின் பின்னர் பரம வைரிகளுக்கு எதிரான இந்த வெற்றி இந்தியாவுக்கு மீண்டும் நம்பிக்கை கொடுத்துள்ளது.

--------

தென் ஆபிரிக்கா ஒரு பலமான அணி..
அந்த அணியின் பந்துவீச்சு உலகின் மிகச்சிறந்த வரிசைகளில் ஒன்று என்பதெல்லாம் மூன்று நாட்களுக்குள் இரண்டாவது தடவையாக சிதறடிக்கப்பட்டது.

ரூட்டின் தாக்குதலுக்குப் பிறகு ஆபத்தான ஆப்கானிஸ்தானிடம் அகப்பட்டது தென் ஆபிரிக்கா.

நடப்பு சம்பியன்கள் இலங்கை அணியையே கொஞ்சம் ஆட்டிப் பார்த்த AfGUNs தென் ஆபிரிக்காவைத் துரத்தி அடிக்கும் துணிவோடு ஆடியது ஒரு பரபரப்பான போட்டி.

பொதுவாக சர்வதேச T20களில் பெரிதாகப் பிரகாசிக்காத ஏபி டீ வில்லியர்சிடம் 17 வயதான ஆப்கனின் சுழல்பந்து வீச்சாளர் ரஷிட் கான் மாட்டிக்கொண்டு கிழிபட, (ஒரே ஓவரில் 29 ஓட்டங்கள்)
தென் ஆபிரிக்கா 209 ஓட்டங்களைப் பெற்றது.
டீ வில்லியர்ஸ் 29 பந்துகளில் 64.

தென் ஆபிரிக்காவின் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் சுருண்டு விடும் என்று நினைத்த பலருக்கு தென் ஆபிரிக்காவின் அதிரடி ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும்.


குட்டி ராட்சதர் மொஹம்மாடி  ஷசாட்டின் அசுர அடியோடு ஆரம்பித்த ஆட்டம் - ஷசாட் - 19 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 44.
கடைசி வரை தொடர்ந்தது.
செய் அல்லது செத்து மடி என்பது போல, ஆட்டமிழக்கும் வரை அதிரடி..
கடைசி சில ஓவர்களில் விக்கெட்டுக்களை கிரிஸ் மொறிஸ் பறித்தெடுக்க மடங்கிப்போனது ஆப்கனின் போராட்டம்.

ஷசாட்டின் விக்கெட்டொடு சேர்த்து மொறிஸ் 4 விக்கெட்டுக்கள்.
போட்டியின் நாயகனாகப் பொருத்தமாக அவரே தெரிவானார்.

நான் ரசித்த ஒரு விடயம் - ஷசாட்டின் பேட்டி " இன்று டேல் ஸ்டெயின் விளையாடாதது மிகவும் கவலையே. அவர் இருந்தாலும் பயப்பட்டிருக்க மாட்டேன்."
இந்தத் துணிச்சல் தான் இந்த ஆப்GUNs இடம் எனக்குப் பிடித்தது.


------------------

தடுமாறும் இலங்கை அணி தடம்புரண்ட போட்டி..
இலங்கை அணியின் உண்மையான நிலையை மீண்டும் புட்டு வைத்த ஒரு போட்டி.

சுழல் பந்துவீச்சுக்குத் தடுமாறும் துடுப்பாட்டம், நம்பிக்கையீனமான களத்தடுப்பு, வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையற்ற விளையாட்டு..

இவற்றோடு அண்மைக்காலமாக இலங்கை அணிக்கு எதிராக சதி போலவே தொடரும் நடுவர்களின் தீர்ப்புக்களும் சேர்ந்துகொள்ள 
(ஒரே போட்டியில் மூன்று தீர்ப்புக்கள் ஒரு அணிக்கு எதிராக வழங்கப்படுமாயின் அது வெற்றியைப் பறிக்கக் கூடியது என்பது யாருக்கும் தெரிந்த ஒன்றே)
நடப்பு சம்பியன்கள், 2012 சம்பியன்களிடம் தோற்றுப்போனார்கள்.

எல்லோரும் பெங்களூர் - கிறிஸ் கெயில் என்றே பேசிக்கொண்டிருக்க நான் மிக நம்பிக்கையாக இருந்தது கெயில் இலங்கையுடன் மீண்டும் சறுக்குவார் என்பதில்.
எல்லா அணிகளையும் வைத்து விளாசினாலும் கெயில் இலங்கையுடன் மட்டும் T20களில் சறுக்கியே வந்துள்ளார்.
4 இன்னிங்க்சில் ஒரு தடவை தானும் 5 ஓட்டங்களைத் தாண்டியதில்லை.

ஆனால், இலங்கை அணியின் அண்மைக்கால சறுக்கலில் யாராவது வேறு ஒருவர் வந்து சாத்தக்கூடும் என்று நினைத்திருந்தேன்.
அது ஃப்ளட்ச்சர் வடிவில் வந்திருந்தது.


வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லருக்குப் பதிலாக அன்று அணியில் சேர்க்கப்பட்ட ஃப்ளட்ச்சர், கெயிலின் உபாதையால் ஆரம்ப வீரராக அனுப்பப்பட அதுவே இலங்கைக்கு ஆப்பு ஆகியது.

கெயில் இருந்தால் கூட இலங்கை அணி அவரை சிலவேளை தடுமாற வைத்திருக்கும்.
ஆனால் ஃப்ளட்ச்சர் நங்கூரம் அடித்து நின்றதோடு சிக்சர்களையும் பயமின்றி விளாசித்தள்ளி இருந்தார்.
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவது என்பது இதைத் தான்.

கொடுத்த பிடிகளை இலங்கை அணி கோட்டை விட்டதும்,சந்திமால் எடுத்த பிடியை தொலைக்காட்சி நடுவர் முட்டாள் தனமாக இல்லை என்று அறிவித்ததும் இலங்கை அணியின் தலைவிதி.

T20 போட்டிகளுக்கும் DRS முறை அவசியம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.
(நேரச் சிக்கனம் - போட்டியின் வேகம் குறைகிறது என்று சப்பைக்கட்டு  கட்டி இம்முறை உலக T20 போட்டிகளில் DRS முறை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது)

டில்ஷானுக்கு வழங்கப்பட்ட தவறான ஆட்டமிழப்போடு தடுமாறிப்போன இலங்கையின் துடுப்பாட்டம், திசரவினால் ஓரளவு சீர்ப்பட்டாலும், ஓட்ட இலக்கு போதுமானதாக அமையவில்லை.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிதானப்படவும், விக்கெட்டுக்கள் போனாலும் பதறாமல் ஆடவும் கற்றுக் கொள்ளவேண்டும். மஹேல, சங்கா ஆடிய அணியா இது என்று வெட்கமாக உள்ளது.
அதேபோல எதிரணியின் எந்தப் பந்துவீச்சாளராக இருந்தாலும் அடியென்று வந்தால் முன்னால் பாய்ந்து விளாசி வெளுக்க பயமில்லாத அணுகுமுறையை ஆப்கன், பங்களாதேஷ் அணியிடம்  இருந்தும் கற்றுக்கொள்ளவேண்டும்.

இந்தத் தோல்வியுடன் இலங்கை அணிக்கு எல்லாம் முடிந்துவிடவில்லை.

வழமையாக வந்தால் அதிரடி, இல்லாவிட்டால் ஆட்டமிழப்பு என்றிருக்கும் திசரவின் நின்றாடிய பாங்கும் , இளைய பந்துவீச்சாளர்கள் துஷ்மந்த சமீர, ஜெப்ரி வண்டர்சே ஆகியோரின் பிரகாசிப்பும் எதிர்காலம் மீது நம்பிக்கை தருகிறது.


மாலிங்கவுக்குப் பதிலாக அணிக்குள்ளே வந்து, ஆச்சரியப்படுத்தும் இந்தக் குட்டிப் பையனின் அபாரமான பந்து சுழற்சியும், கட்டுப்பாடான திருப்பு கோணமும் ரசிக்க வைத்துள்ளது.
லெக் ஸ்பின் என்ற ஆபத்தான, அபாயமான ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ள இவன் அதை ரசிக்கக் கூடிய விதத்தில் செய்வான் என நம்புகிறேன்.

வண்டர்செயை சரியான முறையில் தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராகப் பயன்படுத்தவேண்டும்.


இன்னும் இரண்டு போட்டிகள்.. இருக்கு இன்னும் நம்பிக்கை.

பிரிவு 2 இல் நியூ சீலாந்து போல, இந்தப் பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள்..

---------------------

ICCயின் தடையால் இரண்டு முக்கியமான பந்துவீச்சாளர்களை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத பங்களாதேஷ் அணியை இன்னமும் உறுதிப்படாத தனது அணியைக் கொண்டு தடுமாறி வென்றிருக்கிறது அவுஸ்திரேலியா.

போட்டியின் சிறப்பாட்டக்காரர், பாராட்டக் கூடிய விதத்தில் பந்தை சுழற்றி விக்கெட்டுக்களை கழற்றிய அடம் சம்பா, சில மாதங்களாக எல்லா வகைப் போட்டிகளிலும் ஓட்டங்களைக் குவித்து வரும் உஸ்மான் கவாஜாவின் கன்னி அரைச்சதம் ஆகியன அவுஸ்திரேலியாவுக்கு இரு முக்கியமான மகிழ்ச்சிகள்.


எனினும் இன்னும் தடுமாறும் அவர்களது பந்துவீச்சும், T 20 போட்டிகளில் இன்னும் சுருதி சேராத ஸ்மித்தின் துடுப்பாட்டமும் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்த போட்டிக்கு முன்னதாக மாற்றவேண்டிய இரு விடயங்கள்.

கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை நேற்றைய தோல்வியோடு இழந்திருக்கும் பங்களாதேஷுக்கு மஹ்மதுல்லாவின் துடுப்பாட்டம் ஒரு பிரகாசமான புள்ளி.
2015 உலகக்கிண்ணம் முதல் ஒட்டகுவிப்பு இயந்திரமாக இருக்கிறார்.
உறுதியான துடுப்பாட்ட இடம் ஒன்றை இவருக்கு வழங்கி மேலும் திடப்படுத்தவேண்டும்.
அடுத்து நேற்று தடுமாறிய களத்தடுப்பு.
கொஞ்சம் அதை சரியாகச் செய்திருந்தால், அவுஸ்திரேலியா தடுக்கி விழுந்திருக்கும்.

-------------
கொல்கொத்தாவின் தோல்வி பாகிஸ்தானை நிலைகுலைய வைத்ததா இல்லை நியூ சீலாந்தின் தொடர் வெற்றி அலை தொடரப்போகிறதா என்று இன்றிரவு போட்டி சொல்லும்.


ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner