March 18, 2016

மீண்டும் டில்ஷான் !!! - வயதைக் குறைக்கும் உலக T20

ஆப்கானிஸ்தானைத் தானே இலங்கை வென்றது?
இதையெல்லாம் கொண்டாடவேண்டுமா?
டெஸ்ட் அந்தஸ்தே இல்லாத ஒரு அணியை வென்றிட்டு உலகக்கிண்ணம் வென்ற ரேஞ்சுக்கு அளப்பறையைப் பாரு..

இவை இலங்கை அணியைப் பிடிக்காத / இலங்கை ரசிகர்களைக் கலாய்க்கும் பலரின் கேலிகள்..

ஆனால், நேற்றைய வெற்றி பல வகைகளில் கொண்டாடக் கூடிதாக இல்லாவிட்டாலும் மகிழ்ச்சி அடையக் கூடிய ஒன்று.

இந்த உலக T20 கிண்ணத் தொடரில் தனது முதல் போட்டியிலேயே வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது இலங்கை.
இதுவரை உலக T20 கிண்ணத் தொடரில் சம்பியனான  அணிகளில் இலங்கை மட்டுமே முதல் போட்டியிலேயே வெற்றியுடன் ஆரம்பித்திருந்தது - 2014இல்.

எந்தவொரு தொடரிலும் முதல் வெற்றி ஊக்கமளிக்கக் கூடிய ஒன்று.

அதிலும் அண்மைக்காலமாக போட்டிகளில் மட்டுமன்றி, அணித் தெரிவு, தலைமைத்துவ மாற்றம் என்று தடுமாறிக் கொண்டிருந்த இலங்கை அணி கொஞ்சம் பிசகினாலும் எந்த அணியும் ஏறி மிதித்து விளையாடக்கூடிய நிலை.

அதிலும் "எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள்?" என்று ரசிகர்களே கிண்டல் செய்யக் கூடிய நிலைக்கு ஆளாகியிருந்த 39 வயது டில்ஷானின் துடுப்பின் மூலமாக பாதிக்கும் மேற்பட்ட ஓட்டங்கள் கிடைத்து வெற்றியீட்டியது.

நேற்றைய இடுகையில் இது மூத்த வீரர்களுக்கான கிண்ணம் என்று சொல்லி வைத்தது அடுத்தடுத்த நாளாக டில்ஷானும் கலக்கியிருக்கிறார்.

நேற்று எனது பதிவிலே சொல்லியிருந்ததைப் போலவே டில்ஷான் & மத்தியூஸ் இருவருமே தங்கள் துடுப்பாட்டத்தின் form ஐ சிறப்பாக அடைந்திருக்கிறார்கள்.

"இலங்கை ரசிகனாக இன்று இலங்கையின் துடுப்பாட்டம் மீண்டும் நேர்த்தியான form க்குத் திரும்பவேண்டும் என்று விரும்புகிறேன்.
குறிப்பாக தலைவர் மத்தியூஸ் மற்றும் டில்ஷான்.
நேற்று கெயில் & அப்ரிடி போல, இன்று ஒருவேளை டில்ஷானின் நாளாக அமையுமோ?"
http://www.arvloshan.com/2016/03/blog-post.html

இது இனி பெரிய அணிகளுக்கு எதிராகவும் தொடரவேண்டும்.

அடுத்து, இந்த ஆப்கானிஸ்தான் அணியை இளக்காரமாக நினைப்பவர்களுக்கு - இதே  போல தான் 1990களுக்கு முன்னதாக இலங்கை அணியும் இருந்தது.
கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் வெறியோடு விளையாடி, வெல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த காலம் இவர்களைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.

ஆனால், அப்போதைய இலங்கை அணியை விட இந்த ஆப்கானிஸ்தான் அணி பலமான, வெறிகொண்ட, கட்டமைப்பும், உடல் உறுதியும், நேர்த்தியான பயிற்சியும் கொண்ட அணியாகத் தெரிகிறது.

இவர்களை நான் எப்போதும் செல்லமாக AfGUNS என்றே குறிப்பிடுவது வழக்கம்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த சின்ன அணியின் துரித வளர்ச்சி, முயற்சி, பயிற்சி உணர்ந்து தொடர்ச்சியான சர்வதேச வாய்ப்புக்களையும் , டெஸ்ட் அந்தஸ்தையும் வழங்கவேண்டும் என்பது என்போன்ற பல கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


நேற்றும் ஆப்கானிஸ்தானின் துடுப்பாட்ட பலம், அதிலும் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்சாய் & சமியுல்லா ஷின்வாரி அடித்த அசுர பல சிக்சர்களைப் பார்த்த எவரும் இந்த அணியின் ரசிகராக மாறாமல் இருக்க முடியாது.
என்ன ஒரு பலம்?
இந்தப் பலத்துடன் இன்சமாமின் பயிற்றுவிப்பும் சேரும்போது ??

நேற்று வழமையாக சிறப்பாக செயற்படும் ஆப்கான்  களத்தடுப்பும் சிறப்பாக அமைந்து, அவர்களது வேகப்பந்துவீச்சும் முன்னர் போல செயற்பட்டிருந்தால் இலங்கை அணி 154 என்ற இலக்கை அடைய இன்னும் சிரமப்பட்டிருக்கும்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் இன்னும் மிகப்பெரிய முன்னேற்றம் தேவை.
மாலிங்க வந்தால் எல்லாம் சரியாகும் என்பது மாயை.
நேற்று நொண்டிக் கொண்டிருந்த மாலிங்கவைப் பார்க்கும்போது அடுத்த போட்டிக்கும் சரியாவாரா என்பது சந்தேகமே என்று எழுதிக்கொண்டிருக்க சற்று முன்னர் வெளியான தகவல் லசித் மாலிங்க உபாதை காரணமாக இந்த உலக T20 தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

இலங்கை ரசிகர்களுக்கு பேரிடி.
இலங்கை அணிக்கு பெரும் இழப்பு.
நடப்பு சம்பியனாக  கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றும் கனவு கொஞ்சம் நடுக்கம் காண்கிறது.

*மாலிங்கவுக்குப் பதிலாக ஒரு சுழபந்து வீச்சாளரை அனுப்பும் எண்ணம் இருப்பதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அது சுழல்பந்து வீசும் சகலதுறை வீரர் சீக்குகே பிரசன்னா என்று நினைக்கிறேன். அதிரடிக்கும் பயன்படுவார் என்பதால்.

துஷ்மந்த சமீர  மட்டுமே நேற்று முழு நிறைவைக் கொடுத்த ஒருவர்.
சராசரியாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில், திடமாகப் பந்துவீசிய இந்த மெல்லிய பொடியன், தகுந்த பயிற்சிகள், வழிகாட்டுதல்கள் இருந்தால் எதிர்காலத்தில் இலங்கையின் சிறந்தவொரு வேகப்பந்துவீச்சாளராக வருவான்.

4 ஓவர்களில் 19 ஓட்டங்கள்.
அதிலும் ஒரு பந்து 149.4 கி,மீ வேகம்.
இந்த மெல்லிய உடலால் இத்தனை வேகமா?


ரங்கன ஹேரத்திடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம், சந்திமால், கப்புகெதர ஆகியோரின் துடுப்பாட்டத்தைப் போல..

குலசேகர போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளருக்கு அவரது வேகத்தின் பலவீனமும், தனது பந்துகளின் பலமும் தெரியாமல் போனது பரிதாபமே..
அடுத்த போட்டிக்கு முன்னதாக நேற்றைய போட்டியின் தவறுகளைக் களைவார், அல்லது அணிக்கும் சர்வநாசம்.

டில்ஷானின் அதிரடியில் நான் கவனித்த விடயம், அவர் form க்குத் திரும்பி பழைய டில்ஷானாக மாறியதைக் காட்டிய அவருக்கே உரித்தான Dilliscoope உம், வேகப்பந்துகளை சிக்சர்களாக மாற்றிய லாவகமும்.

இது இனி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமையும்.


56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 83.
டில்ஷானின் 13வது அரைச்சதம்.

T20 சர்வதேசப் போட்டிகளில் கூடிய அரைச்சதம் பெற்றிருந்த, பிரெண்டன் மக்கலம், கிறிஸ் கெயில், விராத் கோலி ஆகியோரை சமப்படுத்தியுள்ளார் டில்ஷான்.
ஒரு போட்டியை எப்படி நின்று வென்று கொடுக்கவெண்டும் என்பதை ஒரு அடிப்படை விளக்கமாக நேற்று ஆடிக் காட்டிய டில்ஷானுக்கு  பாராட்டுக்கள்.
இந்த 39 வயது இளைஞர் இப்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை என்று சொல்வதில் தப்பேதும் இல்லைத் தான்.

தலைவர் மத்தியூஸ் கொஞ்ச நாளாகக் காணாமல் போயிருந்த தன்னுடைய லாவகமான வென்றுகொடுக்கும்  Finishing துடுப்பாட்டத்தின் நேர்த்தியினைக் கண்டுபிடித்துள்ளார்.
இலங்கை அணிக்கு இது மகிழ்ச்சியான விடயமே.

நேற்று விட்ட சிறு சிறு களத்தடுப்பு தவறுகளைக் களைந்து, துடுப்பாட்டத்தை இன்னும் கொஞ்சம் சீர்ப்படுத்தி, பந்துவீச்சையும் சீர்ப்படுத்திக்கொண்டால் இலங்கை அடுத்த அசுர அணிகளை சந்திக்கத் தயார்.

நேற்றைய இலங்கை தினத்தை (1996 உலகக்கிண்ண வெற்றி நாள்) மகிழ்ச்சியாக மாற்றித் தந்த டில்ஷான் & இலங்கை அணிக்கு நன்றி.

------------------

இன்று இரண்டு போட்டிகளில் இரவு இடம்பெறும் இங்கிலாந்து - தென் ஆபிரிக்கா போட்டி எனக்கு பெரிதாக ஈர்ப்பை ஏற்படுத்தப் போவதில்லை.
இந்த அணிகள் இப்போது அண்மையில் தானே விளையாடியிருந்தன?

6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தட்பாவையாக மோதிக்கொள்ளும் அண்ணனும் தம்பியும் தான் எனக்கு ஆர்வத்தைத் தருகிறார்கள்.

தரம்சலாவில் மழையே விட்டுக்கொடுக்க 2015 உலகக்கிண்ண இறுதியில் விளையாடிய இந்த ஓஷியானிய நாடுகள் முட்டி மோதும் போட்டி.

இதுவரை 5 தடவைகள் மாத்திரமே T20 போட்டிகளில் மோதியுள்ள இவ்விரு அணிகளும் (நான்கில் அவுஸ்திரேலியா வெற்றி, இறுதியாக 2010இல் நடைபெற்ற போட்டியில் சூப்பர் ஓவரில் நியூ சீலாந்து வென்றது) இதுவரை உலக T20 கிண்ணம் வென்றதில்லை என்பது இரு அணிகளுக்குமே ஆழ்மனதில் வெறியாக இருக்கும் என்பது உறுதி.

இந்தியா நியூ சீலாந்தின் சுழலில் சிக்கி 79 ஓட்டங்களுக்கு சுருண்டதை அடுத்து தங்களது அணியின் பந்துவீச்சில் மாற்றங்களைப் பெரிதாக செய்யவிரும்பாத சூழ்நிலையில் தொடர்ந்தும் தங்கள் மிகச்சிறந்து இரு வேகப்பந்து வீச்சாளரையும் வெளியேயே வைத்துள்ளது.

ஆனால் இன்றைய அவுஸ்திரேலியாவின் அணித்தெரிவு எனக்கு ஆச்சரியத்தை மட்டுமல்ல, அதிருப்தியையும் வழங்கியுள்ளது.

அடித்தாடும் ஏரொன் ஃபின்ச் அணியில் இல்லை.
அவுஸ்திரேலியாவின் தற்போதைய T20 அணியில் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர் இவர் என்பேன்..
அணித் தலைவர் ஸ்மித்தை விட சிறந்த பெறுபேறுகள்.
முதலில் ஸ்மித்திடம் T20 போட்டிகளில் தலைமைப் பதவியை இழந்தவர், இப்போது அணியில் இடத்தையும் இழந்துள்ளார்.

ஹெசில்வூட்டுக்கு  பதில் கோல்டர் நைல் அணியில்.
போதாக்குறைக்கு அவுஸ்திரேலியாவின் மிகப் பலவீனமான அம்சமான சுழல்பந்துவீச்சாளர்கள் இருவரை இன்றைய அணியில் சேர்த்துள்ளது.

சற்று முன்னர் ஆட்டமிழக்க முதல் கப்டில் ஆஷ்டன் அகாரின் முதல் ஓவரில் 3 சிக்சர்களை விளாசியிருந்தார்.
என்னமோ..
துடுப்பாட்டப் பலத்தினால் அவுஸ்திரேலியா வென்றால், இந்த அணித்தேரிவும் அன்றைய நாக்பூர் நியூ சீலாந்தின் அணித் தெரிவு ஆச்சரியம் போல வியந்து பாராட்டப்படலாம்.





1 comment:

Anonymous said...

SUPER POST

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner