வெள்ளம் - உள்ளம் - வள்ளல்கள் - சில உணர்வுகள்

ARV Loshan
15
அண்மையில் ஏற்பட்ட கிழக்கு மாகான வெள்ள அனர்த்தமும் அதனைத் தொடர்ந்து பல்வேறுபட்டோரால் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பொருள் சேகரிப்புப் பணிகளும் எனக்கு வாழ்க்கையில் கடந்துவந்த பல பழைய சம்பவங்களின் மீள்வருகை தான்.

வாழ்க்கையில் சில வட்டங்கள் மீண்டும் மீண்டும் வாழ்க்கையின் இன்னொரு கட்டத்தில் வருவதைத் தடுக்க முடிவதில்லை.

யுத்தகால இடம்பெயர்வுகள், முன்னைய இயற்கை அழிவுகள், சுனாமி அனர்த்தம் என்று பலவற்றைப் பார்த்திருக்கிறேன்.. இவ்வாறான பல சம்பவங்களில் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரித்துக் கொடுத்தும் இருக்கிறேன்;நேரடியாக அந்த இடங்களுக்கு சென்று அவர்கள் அவலங்களில் பங்கெடுத்தும் இருக்கிறேன்.



ஊடகவியலாளனாகஎன் வாழ்க்கை மாறிய பின்னர் இப்படியான நிகழ்வுகளில் அதிக ஈடுபாட்டோடு இணையும் வாய்ப்பும், இப்படியான நிவாரணப் பணிகளில் ஈடுபட நேரும்போதேல்லாம் என் துறை மூலமாகக் கிடைத்த அரசியல்,வர்த்தக,நட்பு,நேய தொடர்புகளை இந்த மனிதாபிமானப் பணிகளில் பயன்படுத்தி ஏதோ என்னால் முடிந்ததை அந்த அப்பாவி மக்களுக்கு வழங்கி மனதளவில் திருப்திப்பட்டு வந்திருக்கிறேன்.

இம்முறை கிழக்கு மாகான வெள்ள அனர்த்தத்திற்கும் எம் வானொலி மூலமாக நிவாரணப் பணிகளை ' எம்மால் முடியும்' என்ற பெயரிட்டு ஆரம்பித்திருந்தோம்.
உடனடியாகவே நண்பர்கள்,நேயர்கள், பெரிய மனம் படைத்த வர்த்தக சமூகத்தினர் என்று பலரும் உதவிகளைப் பொருளாகவும் பணமாகவும் வழங்கி இருந்தார்கள்.

பணமாகத் தந்த உதவிகளை நாம் பொருளாகவே தருமாறு கோரியிருந்தோம்.
வானொலி,தொலைக்காட்சி என்று இருந்தாலும் எம்முடன் வர்த்தக நிறுவனங்கள் இரண்டு இணைந்திருந்தாலும் விளம்பர நோக்கம் அறவே இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் போய்ச சேரவேண்டும்;அதிலும் விரைவில் போய்ச் சேரவேண்டும் என்பதில் உண்மையான அக்கறைகொண்டிருந்தோம்.

இதனால் தான் உண்மையான நோக்கத்தோடு எந்த அமைப்பு வந்தாலும் எம்முடன் இணைத்துக்கொள்ளத் தயாராக இருந்தோம்.
கெய்சர் வீதி வர்த்தக இந்து அமைப்பு, இந்து இளைஞர் அமைப்பு, கொழும்பு பலகலைக்கழக தமிழ் சங்கத்தினர் இன்னும் பல அமைப்புக்கள் இவ்வாறு இந்த நல்ல காரியத்தில் இணைந்துகொண்டன.

இலங்கைத் தமிழ்ப்பதிவர்கள் சார்பாகவும் பொருட்கள் சேகரிக்கும் எண்ணக்கருத்தொன்று சகோதரன் நிரூஜாவினால் குழுமத்தில் முன்வைக்கப்பட்டு சேகரிப்பு நிலையமொன்றும் தேடப்பட்டு அனைவருக்கும் அறிவித்தும் இருந்தோம்.
ஆனால் எண்ணி மூன்றே மூன்று பதிவர்கள் தவிர வேறு யாரும் எந்தவொரு உதவியுமே செய்திருக்கவில்லை.

பதிவுகளுக்கு வெளியே என்ன செய்யலாம் என்று கேள்வி எழுப்பியதற்கு இதைவிட வேறு நல்ல பொருத்தமான முதல் முயற்சி இருந்திராது என்றே நான் நினைக்கிறேன்.

மற்ற வெளிமாவட்டப் பதிவர்களின் பங்களிப்புப் பற்றித் தெரியாது.ஆனால் கிழக்கிலங்கையில் பல பதிவர்கள் முன்னின்று களத்தில் இறங்கி தம்மால் முடிந்த சேவைகளை வழங்கியது பாராட்டுதற்குரியது.

முக்கியமாக சிதறல்கள் ரமேஷ், சந்த்ரு,சீலன் சிவகுரு,சர்ஹூன் ஆகியோர்.
அடிக்கடி தகவல்களை வழங்கியும் மக்களுக்கு நிவாரணம் வழங்க செல்வோர்/சென்றோருக்கு உதவிகள்+வழிகாட்டல்களைத் தந்தும், மக்களுக்கு உண்மையில் தேவையான பொருள்கள் பற்றி அறியத் தந்தும் தொடர்கிறார்கள் தம் சேவையை.

இறுதிநாள் பொருட்களைப் பகிர்ந்து பொதிசெய்யும் கடமையிலும் பல்கலை மாணவர்களும், பதிவர்கள் நிரூஜா,அனுத்தினன் ஆகியோரும் இன்னும் சில நண்பர்களும் நீண்ட நேரம் நின்று மிகப்பெரிய ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர்.

முதல் தொகுதியை அனுப்பிவிட்டு நாம் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும் கொழும்பு பல்கலை மாணவர்கள் தமது அரியமுயற்சிகளை இன்றும் கூடத் தொடர்ந்துவருவது பெருமையாக இருக்கிறது.

பணம் படைத்தோர் பலரும் கூட உதவிகள் செய்யும் மனம் இல்லாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்த இளைஞர்களும் யுவதிகளும் வெயிலிலும் மழையிலும் ஒவ்வொரு கடையாக,வீடுகளாக ஏறி இறங்கி பொருட்கள் சேகரிக்கும் இவர்கள் நிச்சயம் நாளையைப் பற்றிய எம் சமூகத்தின் நம்பிக்கைக்கான விடிவெள்ளிகளே.

இன்றைய இளைய சமுதாயம் இணையத்திலும், பேஸ்புக்கிலும்,செல்பெசியிலும், கிரிக்கெட்டிலும், கேளிக்கைகளிலும் தம்மைத் தொலைத்துக்கொண்டிருக்கிறது என்று புலம்பித் திரியும் மூத்த சமுதாய நல விரும்பிகளே இவர்களையும் கவனியுங்கள்.

தன் பெயரை வெளியே சொல்லவேண்டாம் என்று வேண்டிக்கொண்ட எனக்கு நண்பரான வைத்தியர் ஒருவர் தனது சொந்த செலவில் பெருந்தொகை மருந்துகளோடும், வைத்தியக் குழுவினரோடும் உடனடியாக அங்கே பயணித்தது மறக்க முடியாதது.
அவர் எனக்கு அனுப்பியிருந்த sms வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாராட்டுக்களில் ஒன்று..

Hi Loshan, I am taking a team with medicines,doctors, nurses, lorry full of dry foods exclusivley from ----- Hospitals staff to Eastern ppl.Dont publicize this. But i took this initiative from ur announcement.Tnx to you and ur staff.

இப்படிப் பெருமைப்படக்கூடிய பக்கம் ஒரு பக்கம்..


உதவி செய்யும் மனம் இல்லாத ஒரு சிலர்;
உதவி செய்கிறோம் என்று விளம்பரம் செய்துகொள்ளும் நபர்கள் சிலர்;
தங்கள் வீட்டுக் கழிவுகள்,குப்பைகளை அகற்றப் பழைய துணிமணிகளை அளித்த தந்த 'வள்ளல்கள்' சிலர்;
கடைகளில் இருந்த காலாவதித் திகதி கடந்த பொருட்களை அள்ளி வழங்கிய 'கொடையாளிகள்'
இவர்களையெல்லாம் என்ன செய்வது??

அடுத்து நிவாரணப் பொருட்களை வழங்க சென்ற வேளையில் உண்மையில் பாதிக்கப்பட்டோரைவிட தங்களுக்கும் தம் உறவினருக்கும் மட்டும் பொருட்களை அமுக்கிக் கொள்ள எண்ணியோரையும் அறிந்துகொண்டோம்.

ஆனால் அந்தப் பிரதேச மக்கள் பலருக்கு இன்னும் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. முகாமலில் இருந்து பலர் தம் சொந்த இடங்களுக்குத் திரும்பி சென்றிருந்தாலும் வழமையான வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்ப முடியவில்லை.
தொற்று நோய்கள் பரவும் அபாயமும், நுளம்புகள் பெருகும் அபாயமும் இருக்கிறது.
குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் இன்னும் தேவைப்படுகின்றன.

தேவைப்படும் பொருட்களை அறிந்து நாளையும் நாம் அனுப்புகிறோம்.
விரும்பியோர் இன்னமுமே உதவிகளை அனுப்பலாம்; எம் மூலமாகவும்.. கொழும்பு பலகலைக் கழக மாணவரிடமும் கொடுக்கலாம்.


ம்ம்.. மனிதர்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு நேரம் வரவேண்டுமே..
அரசின் உதவிகள் கொஞ்சமும் மனிதரின் உதவிகள் அதிகமும் கிழக்கு நோக்கி சென்று கொண்டே இருக்கின்றன.. மனிதாபிமானம் வாழ்கிறது.. ஆனால் இன்னும் அதிகமாக வாழவேண்டும்.
தேவையான நேரங்களில் மனதில்,பேச்சில்,எழுத்தில் அல்லாமல் செயலில் வரவேண்டும்.

இப்போது மீண்டும் கிழக்கு வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது..
எல்லாம் கடந்து போகும் வாழ்க்கை எம் தமிழருக்குப் பழக்கமானது தானே....


படங்கள் - சிதறல்கள் ரமேஷின் பதிவில் இருந்து
& நிவாரணப் பொருட்களை நாம் பொதி செய்த இடத்தில் இருந்து
http://www.facebook.com/album.php?fbid=1680511425500&id=1618998317&aid=86009

Post a Comment

15Comments

Please Select Embedded Mode To show the Comment System.*