விக்கிரமாதித்தன் vs இந்திய,ஆஸ்திரேலியத் தேர்வாளர்கள்
January 17, 2011
12
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு அண்மித்த நாட்களே இருக்கையில் ரசிகர்களில் பெரும்பாலானோர் எதிர்பார்த்துள்ள இரு அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் இடம்பெறப் போகின்ற அந்தப் பதினைந்து பேரும் யார் என்பதே மில்லியன் ரூபாய்க் கேள்வி.
ஊகங்களும் எதிர்வுகூறல்களும் அதன் பின்னரான சில மூக்குடைவுகளும் விக்கிரமாதித்தனின் வாடிக்கையானதினால் இந்திய,ஆஸ்திரேலிய உலகக் கிண்ணப் பதினைவர் அணிகளைத் தேர்வாளர்களுக்கு முன்னர் ஊகிக்கலாம் என்று இந்தப் பதிவு.
`
ஏற்கெனவே இலங்கைத் தேர்வாளராக நான் மாறித் தெரிவு செய்த அணியில் அரவிந்த டீ சில்வா இரண்டே இரண்டு மாற்றங்களையே செய்திருந்தார்.
நான் தேர்வு செய்த அணி..
இடம்பெற்ற மாற்றங்கள்
தினேஷ் சந்திமால் - திலான் சமரவீர
சுராஜ் ரண்டீவ் - ரங்கன ஹேரத்
அந்த இரண்டு மாற்றங்களும் கூட நீண்ட நேரம் யோசித்தே அரவிந்த+குழுவால் செய்யப்பட்டிருக்கும்..
இருவரின் வெளியேற்றங்களும் சரி என்று நான் நினைத்தாலும் சந்திமால் தொடர்ந்து சிறப்பாக ஓட்டங்களை உள்ளூர்ப் போட்டிகளில் குவித்துவருகிறார்.
மற்றைய உலகக் கிண்ணத் தெரிவுகள் அத்தனை பேருமே சிறப்பாக செய்துவரும் வேளையில் எஞ்சேலோ மத்தியூசின் பந்துவீச்சு,துடுப்பாட்டம் இரண்டுமே பெரிதாக எதிர்பார்த்தது போல இல்லை. சமிந்த வாசை எடுக்காதது தப்போ என்று நினைத்தாலும் , அவர் அரைச் சதம் ஒன்றை ஆரம்பத் துடுப்பாட்ட வீராரகப் பெற்றிருந்தாலும் கூட, சில விக்கெட்டுக்களை எடுத்திருந்தாலும் கூட, அவர் இப்போது முன்னைய 'பலம் வாய்ந்த' புகுந்து விளையாடக் கூடிய வாஸ் இல்லை என்பதைத் தேர்வாளர்கள் போல நானும் நம்புகிறேன்.
ஆனால் சனத் ஜெயசூரிய(அதுக்குள்ளே மறந்திருப்பீங்களே..) பந்துவீச்சாளராகக் கலக்கிக் கொண்டிருந்தவர், கடைசி இரு போட்டிகளிலும் அசுர வேகத்தில் ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இனியென்ன யாராவது காயப்பட்டால் மட்டுமே வேறு யாராவது உள்ளே வரலாம்.
ஆனால் இந்தப் பதினைந்துபேரில் எப்படியான பதினோரு பேர் கொண்ட அணி உருவாக்கம் விளையாடப் போகிறது என்பது மர்மமும் சுவாரஸ்யமும் நிறைந்த ஒரு கேள்வி.
மேற்கிந்தியத் தீவுகள் இலங்கையில் இம்மாத இறுதியில் விளையாடப் போகும் மூன்று ஒருநாள் போட்டிகளின்போது இலங்கை அணியின் உண்மைப் பலமும் உலகக் கிண்ணத்துக்கான விளையாடும் பதினொருவரும் தெரியவரும்.
இந்திய அணியை நான் ஊகிக்கமுதல் ஸ்ரீக்காந்த் குழுவினர் அறிவித்துவிட்டார்கள்.
(ஹர்ஷா போக்லேயின் ட்வீட் படி பதினைந்து நிமிடங்களில் தீர்மானித்துவிட்டார்களாம்..- தகவல் நன்றி அனலிஸ்ட். வீட்டிலேயே Home work பண்ணி முடிவெடுத்திருப்பான்களோ?)
Squad: MS Dhoni (capt & wk), Sachin Tendulkar, Virender Sehwag, Gautam Gambhir, Yuvraj Singh, Suresh Raina, Virat Kohli, Yusuf Pathan, Harbhajan Singh, Praveen Kumar, Zaheer Khan, Ashish Nehra, Munaf Patel, Piyush Chawla, R Ashwin
இப்போது தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ள அணி சில அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தாமல் இல்லை..
ரோஹித் ஷர்மா,பிரக்யான் ஓஜா இல்லை. எங்கேயோ இருந்த பியுஷ் சாவ்லாவுக்கு இடம் கிடைத்திருக்கிறது.
இரண்டரை வருடங்களாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இவர் விளையாடி இருக்கவில்லை என்பது முக்கியமானது.
ஸ்ரீசாந்த், இஷாந்த் ஷர்மா ஆகியோர் எதிர்பார்த்ததைப் போலவே அணியில் அறிவிக்கப்படவில்லை.
நான் தேர்வு செய்து வைத்திருந்த அணி - (இந்தியத் தேர்வாளர்கள் போலவே நானும் காயம் அடைந்துள்ள சச்சின், சேவாக், கம்பீர் மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் தேறிவிடுவார்கள் என்றே நினைத்து அணியைத் தெரிவு செய்திருந்தேன்)
டோனி - தலைவர், சேவாக், சச்சின் டெண்டுல்கர், கம்பீர், கொஹ்லி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், சாகிர் கான், பிரவீன் குமார், ஆசிஷ் நெஹ்ரா, முனாப் படேல், அஷ்வின், ரோஹித் ஷர்மா.
ஸ்ரீகாந்த் ரோஹித்தைக் கழற்றி விட்டதும் பகுதி நேர சுழல்பந்துவீச்சாளர்கள் இத்தனை பேர் இருக்க இன்னொருவராக சாவ்லாவை இணைத்ததும் ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம்.
லோஷனாக நான் இருப்பதால் அஷ்வினையும் நேஹ்ராவையும் தேர்வு செய்திருந்தேன். ஹர்பஜன்- off spinner இருப்பதால் ஒஜாவை-Left arm spinner தேர்வாளர்கள் மாற்று optionஆக விரும்புவார்கள் என்றும் நேஹ்ராவுக்கு அண்மைக்காலமாக அடி விழுவதால் சில வேளை அவரைத் தூக்கிவிடுவார்கள் என்றும் சந்தேகம் இருந்தது.
ஆனால் ஸ்ரீக்காந்த் என்னைப் போலவே யோசித்துள்ளார்.
அடுத்து ஆஸ்திரேலியா..
இது லோஷனின் விருப்பத் தெரிவாக இல்லாமல் ஆஸ்திரேலியத் தேர்வாளர்களில் ஒருவராக நான் இருந்து தெரிவு செய்கின்றன அணி..
ரிக்கி பொன்டிங்- தலைவர், ஷேன் வொட்சன், பிரட் ஹடின், மைக்கல் கிளார்க், மைக் ஹசி, கமேரோன் வைட்,ஸ்டீவ் ஸ்மித், டேவிட் ஹசி, மிட்செல் ஜோன்சன், ப்ரெட் லீ, நேதன் ஹோரித்ஸ், டக் போளின்ஜர்,பீடர் சிடில், சேவியர் டோஹெர்ட்டி,ஷோன் டெய்ட்.
ரயன் ஹரிஸ் (கடந்த வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்காகக் கூடுதல் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்) , களும் பெர்குசன், கிளின்ட் மக்காய் ஆகியோரின் காயங்கள் நிச்சயமாகத் தேர்வாகவேண்டிய அவர்களை இல்லாமல் செய்துள்ளது.
பந்துவீச்சு நிச்சயம் பலவீனமாகத் தான் இருக்கிறது.
லோஷனாக என் தெரிவு -
ஷோன் டேய்ட்டுக்குப் பதிலாக சகலதுறையில் பிரகாசிக்கும் ஜேம்ஸ் ஹோப்சையோ,ஜோன் ஹெஸ்டிங்க்சையோ அணியில் சேர்ப்பேன்.
ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதிலாக பிரட் ஹோட்ஜை அணிக்குள் இட்டிருப்பேன்.
ஆனால் உபகண்ட ஆடுகளங்களில் பகுதி நேர சுழல்பந்துவீச்சாளர்கள் தேவை என்பதால் ஸ்மித்தின் இடம் நியாயப்படுத்தப்படலாம்,
T 20 அணியின் உபதலைவராக டிம் பெய்ன் நியமனம் பெற்றிருப்பதால் டேவிட் ஹசிக்குப் பதிலாக பெய்ன் அணிக்குள் இடப்படலாம்.
அதற்குள் சற்று முன் வெளியாகியுள்ள செய்தி ஆஸ்திரேலியாவுக்கும் அதன் ரசிகர்களுக்கும் இடி போல இறங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா மத்திய வரிசையின் முதுகெலும்பான மைக் ஹசி தசைக் கிழிவு காரணமாக விளையாடுவது சந்தேகமாம்.
பொன்டிங்கும் காயத்தால் அவதிப்படும் வேளையில் ஹசியும் விளையாட முடியாது போனால் அது பேரிழப்பாக அமையலாம்.
அப்படி ஹசி மிஸ் ஆகும் பட்சத்தில் தேர்வாளர்கள் நிச்சயமாக பிரட் ஹோட்ஜை அணியில் கொண்டுவந்தே ஆகவேண்டும். அவரது இந்தப் பருவகால உம்,அனுபவமும் நிச்சயம் கைகொடுக்கும்.
(ஆனால் தேர்வாளர்கள் ஹோட்ஜுடன் கொண்டுள்ள பழைய வேலிச் சண்டைகளை மறக்கவேண்டுமே)
இன்னொரு உலகக் கிண்ண செய்தி - எமது வெற்றி FM வானொலி மூலமாக உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்பதற்காக ரசிகர்களுக்கு அனுமதிச் சீட்டுக்களை நாம் வழங்க ஆரம்பித்திருக்கிறோம்.
இப்போது எங்கும் எந்தவொரு அனுமதிச் சீட்டும் கிடைக்காத நிலையில் சாதாரண ரசிகர்கள் ஒவொருவருக்கும் இந்த வாய்ப்பை நாம் வழங்குகிறோம்.
பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ஆசியாவுக்கு வரும் உலகக் கிண்ணத்தை இப்போது நாம் தவறவிட்டால் இனி எப்போது பார்க்கக் கிடைக்கும்???
வழமையாகவே விளையாட்டு செய்திகளை + நிகழ்ச்சிகளை சுட சுட தருவதில் முன்னிற்கும் எமது வெற்றி வானொலி உலகக் கிண்ணப் போட்டிகள் நெருங்கிவரும் வேளையில் இன்னொரு முன்னேற்றப் பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளோம்.
திறமைகளைத் தேடியெடுத்துப் பயன்படுத்தும் முயற்சியின்(புதிய முகாமைத்துவத்தின் மற்றொரு நன்மை) அடுத்த கட்டம்.
பிற்சேர்க்கை - மத்தியூஸ் பற்றி நான் குறிப்பட்டதை யாரோ அவருக்கு சொல்லி இருக்கவேண்டும். இன்றைய மாகாண அணிகளுக்கிடையிலான போட்டியில் அரைச் சதம் பெற்றுள்ளார். மகிழ்ச்சி.