நேற்று முன்தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள்.
இவரைப் பற்றி எல்லாரும் சொல்லி முடித்துவிட்டார்களே.. நானும் வானளாவப் புகழ்ந்து உங்களைக் கொட்டாவி விட வைக்க விரும்பவில்லை.
கமல் ரசிகனான போதும் ரஜினியையும் பல படங்களில் ரசித்திருக்கிறேன். ரஜினியின் பிடித்த படங்கள் சிலவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...
ரஜினியின் பிறந்தநாளை மையப்படுத்தி இதோ
ரஜினி 12
1.முள்ளும் மலரும்
ரஜினிகாந்தின் மிகப் பிடித்த படம் என்று இதையே சொல்வேன்.
அவருக்கென்றே இயக்குனர் மகேந்திரன் செதுக்கிய பாத்திரம்.
காளி - திமிரும் தன்னம்பிக்கையும் பாசமும் துணிச்சலும் பட்டதைப் பட்டென்று கொட்டிவிடும் குணமும் கொண்டவன்.
'சார், ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட பிழைச்சுக்குவான் சார்.. கெட்ட பய சார் காளி'
மனதில் நிற்கும் காட்சி அது.
பார்வையாலேயே ரஜினி படத்தைக் கொண்டு செல்வார்.
வசன உச்சரிப்பிலும் வார்த்தைகளின் ஏற்ற இறக்கங்களிலும் உடல் மொழியிலும் கூட ரஜினி உச்சபட்சம்.ஒவ்வொரு காட்சியாக வர்ணிக்கலாம்.
அதிலும் இறுதிக் காட்சியில் ஒற்றைக் கையுடன் தங்கையைப் பார்க்கும் அந்தப் பார்வையில் ஆயிரம் வசனங்கள் சொல்லாத விடயங்கள்.
ரஜினியின் குறிஞ்சிப் பூ இந்த முள்ளும் மலரும்.
2.தளபதி
ரஜினியின் மற்றொரு மனதுக்கு நெருக்கமான படம்.
சூப்பர் ஸ்டாரிடம் எதையெல்லாம் மற்ற இயக்குனர்கள் எடுக்க மறந்தார்களோ அவற்றையெல்லாம் எடுத்து ரசனையுடன் தந்திருக்கிறார் மணிரத்னம்.
கமலுடனும் ரஜினியுடனும் மணி இன்னும் சில படங்களைத் தந்திருக்கலாமே என ஏங்கவைப்பவை தளபதி & நாயகன்.
தேவையற்ற வசன மாலைகளோ, ரஜினியின் ஸ்டைலோ இல்லாமல் ரஜினியை சூர்யாவாகவே வாழச் செய்த தளபதியில் ரஜினியின் முக பாவனை,கண்கள், இயற்கையாக ரஜினிக்கிருந்த அந்த அடர் முடி, உதடுகள் என நான் மனம் விட்டு ரசித்தவை பல.
ரஜினி – மம்முட்டி – இளையராஜா – மணிரத்னம் கூட்டணி முத்திரை பதித்த படம் இது.
ரஜினி அதிகம் வசனம் பேசாமலேயே தன் முத்திரை பதித்த படம் தளபதி தான்.
ஷோபனாவுடனான அவர் காதல் தோற்கும் இடம், போலீஸ் நிலையக் காட்சிகள், அரவிந்த் சுவாமி,ஸ்ரீவித்யாவை சந்திக்கும் காட்சிகள், குழந்தைக்கு உணவூட்டும் காட்சிகள் குறிப்பிடத் தக்கவை.
குழந்தையிடம் தன்னைத் தாய் கால்வாயில் விட்டு சென்றதை சொல்லும் இயல்பும்,ஷோபனாவுக்கும் ரஜினிக்கும் இடையில் காதல் மலர்வதும் பின் பிரிவதுமான காட்சிகளில் ரஜினியின் உடல் மொழிகளும் கண்களும் வேறு சூப்பர் ஸ்டார் தனமான திரைப்படங்களில் பார்ப்பது அரிது.
சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் காட்சிகளும் ராக்கம்மா கையத் தட்டு பாடலில் துடிப்பான அந்த ரஜினியும் இன்றும் ரசிக்க வைப்பவை.
3.தில்லு முல்லு
ரஜினி நகைச்சுவையில் பிய்த்து உதறிய முதல் திரைப்படமாக இருக்கவேண்டும்.
கதாநாயகன் இரட்டை வேடங்களில் நடிப்பதை சாதாரணமாகப் பார்க்கும் எமக்கு, ஒரே நாயகன் இருவராக மாறி நடிக்கும் பித்தலாட்டங்களை சின்னவயதில் நன் முதலில் பார்த்து ரசித்தது தில்லு முல்லுவில் தான்.
மீசையுடன் அடக்கமாகவும் மீசையின்றி ஆர்ப்பாட்டமாகவும் கலக்கியிருப்பார்.
4.பாட்ஷா
ரஜினியின் திருப்புமுனைத் திரைப்படம். அடியாட்கள் புடை சூழ அதிரும் இசையுடன் ஹீரோக்கள் நடக்க ஆரம்பித்த திரைப்படக் கலாசாரத்தின் வழிகாட்டி.
பாட்ஷாவை எத்தனை தடவை பார்த்திருப்பேனோ தெரியாது.இது எனக்கும் ஒரு Trend setter தான்.
மாணிக்கத்தை ரசித்த அதேயளவு மாணிக் பாட்ஷாவையும் ரசித்தேன்.
அமைதியாக ரஜினி சொல்லும் பஞ்ச் வசனங்களும், ரகுவரனுடன் நேருக்கு நேர் சவால் விடும் காட்சிகளும் கிளர்வூட்டியவை.
ஒரு பக்கா மசாலாத் திரைப்படத்தின் அத்தனை விஷயங்களும் சரியாகக் கலந்து உருவாக்கிய வெகு அரிய திரைப்படங்களில் இது முக்கியமானது.
காலவோட்டத்தில் சில மசாலாத் திரைப்படங்கள் அடிபட்டு மனதில் இருந்து விலகிவிடும்; ஆனால் பாட்ஷா இன்றும் மனதில் ஆசனம் போட்டு இருக்கிறது.
5.கை கொடுக்கும் கை
ரஜினியின் வித்தியாசமான அமைதியான நடிப்பில் மற்றொரு வித்தியாசமான திரைப்படம்.
ரஜினியுடன் இந்தப் படத்தில் மட்டுமே ஜோடி போட்டவர் ரேவதி.
கொஞ்சம் கோபம் நிறையப் பாசம், கொஞ்சம் காதல் என்று ரஜினி தன் நடிப்பில் தானே போட்டியிட்ட திரைப்படம் இது.
'தாழம்பூவே' பாடலில் ரஜினியின் சிரிப்பும் காதல் பொங்கும் விழிகளும் பாடல் எப்போது ஒலித்தாலும் கண் முன்னே ஜொலிக்கிறது.
6.அண்ணாமலை
ரஜினிகாந்த் தன்னை,தன் வயதை உணர்ந்து அடுத்த கட்டத்துக்குத் தயாரான படமாகவே இதை நினைத்தேன்.
பக்குவமான ஒரு பத்திரமாகப் படத்தின் பிற்பாதியில் வருவதும், சாடை மாடையான அரசியல் வசனங்களும் அவ்வாறு தான் நினைக்க வைத்தன.
ரசிக்க வைக்கும் ஜாலியான பால்காரன் அண்ணாமலை,சவால் விடும் துணிச்சலான நண்பன், பொறுப்பான தந்தை,வெற்றிகரமான தொழிலதிபர் என்று ஒவ்வொரு கட்டத்திலும் மின்னுவார் ரஜினி.
குறிப்பாக 'இந்த நாள் உன் டயரியில் குறிச்சு வச்சுக்கோ.' என்று ஆரம்பித்து ' இந்த அண்ணாமலைய நீ நண்பனாத் தான் பார்த்திருக்கே, விரோதியா பார்க்கல' என்று கொந்தளித்து சவால் விடும் அந்த இடமும், தந்தையாக அமைதியாக மகளின் காதலை அறியும் இடமும் முக்கியமாக class.
அப்பாவியாக ஆரம்பித்து அதிரடியாக வில்லன்களை வீழ்த்தி ஜெயிக்கும் ரஜினி பாணிக் கதைகளில் இப்படம் அதிகமாகப் பிடிக்க மற்றொரு காரணம் 'வெற்றி நிச்சயம்' பாடல் மனதில் ஊட்டும் நம்பிக்கையும் வெறியும்.
7.தர்மதுரை
சின்ன வயதில் அப்பாவோடு கொழும்பு நவா திரையரங்கில் பார்த்த மனது மறக்காத ரஜினி படம்.
ரஜினியின் அப்பாவிக் குறும்புகளும் தம்பிமாருக்காக உருகும் பாசமும் பின்னர் ஆவேசம் கொண்டு மாறுவதுமாக வழமையான ரஜினி பாணி.
எங்கள் வீட்டிலும் மூன்று சகோதரர்கள்;நான் மூத்தவன் என்பதால் எங்கள் அப்பா அடிக்கடி 'நீ தான் தர்மதுரை' என்று வேடிக்கைகையாக சொல்வார்.
ஆனால் என் தம்பிகள் ராமதுரை,ராஜதுரை அல்ல.
தடியனிடம் குசும்பு பண்ணிவிட்டு 'டேய் தடியா' என்று சீண்டுவதும் பின்னர் அவன் துரத்த 'அப்பா' என்று ஓடுவதும் ரஜினிமார்க் நகைச்சுவைகள்.
தந்தை கல்யான் குமாரிடம் தானே பெல்ட்டை எடுத்துக் கொடுத்து அடிவாங்கத் தயாராகும் காட்சி நெகிழ்ச்சியானது.
தம்பிமாரிடம் ஏமாந்து, ஏமாந்து அத்தனையும் தன் வாழ்க்கையில் இழந்து நிற்கும் தர்மதுரை பாத்திரம் ரஜினிக்கு அப்படியே பொருந்திப்போனது.
ஆணென்ன பெண்ணென்ன பாடலும் ரசிக்கக் கூடியது.
8.தர்மத்தின் தலைவன்
ரஜினியின் அமைதியான பாத்திரப் படைப்புக்காக மெய்ம்மறந்து இன்று ஒளிபரப்பானாலும் பார்த்து ரசிக்கும் ஒரு திரைப்படம்.
இந்தப் படத்தின் 'தென் மதுரை வைகை நதி' பாடல் என் உயிர்ப் பாடல்களில் ஒன்று.
பேராசிரியராக வரும் ரஜினி தம்பி பிரபுவின் மேல் கொள்ளும் பாசமும், தன் கொள்கையில் கொண்ட பிடியும் எனக்குப் பிடித்துப் போயின.
அமைதியான ரஜினியின் முதற் பாதியும் அவர் இறந்த பின் இரண்டாவது ரஜினியின் அதிரடியும் கலக்கல் ரகம்.
சுஹாசினியுடனான முதல் ரஜினியின் காதல் உருக்கம் தரக்கூடிய ஒன்று.
9.நான் சிகப்பு மனிதன்
தமிழ் சினிமாவின் வழமையான அண்ணன் - தங்கை சென்டிமென்ட்.
ஆனால் அப்போது கொஞ்சம் வழக்கத்துக்கு மாறான அமைதியான பேராசிரியராக ரஜினி.
குடும்பத்தில் ஏற்பட்ட துர்ச் சம்பவங்களை அடுத்து வில்லன்களைப் பழிவாங்க அமைதியான மனிதர் தான் சிவப்பு மனிதனாக ராபின் ஹூடாக மாறுகிறார்.
இரவில் பழிவாங்கும் கொலையாளியாக மாறிய பிறகும் காட்டும் நிதானமும், பகலில் பேராசிரியராக அமைதியாக நடமாடுவதும் என்று ரஜினிகாந்த் அந்தப் பாத்திரத்தில் நுழைந்திருப்பார்.
இந்தப் படத்தில் ரஜினியின் Hair style அப்படியொரு அழகு. இதையே தான் சிவாஜியில் பின்னர் ஷங்கர் ரஜினியை அழகூட்டப் பயன்படுத்தி இருந்தார்.
இந்தப் பேராசிரியர் பாத்திரத்தின் சில குணாம்சங்களை தர்மத்தின் தலைவனிலும் பார்த்தேன்.
வெண்மேகம், காந்தி தேசமே பாடல்கள் என்றும் ரசிக்கக் கூடியவை.
10.ஆறிலிருந்து அறுபது வரை
ஒரு மனிதனை ஆறு வயது முதல் அறுபது வயது வரையான வாழ்க்கை தான் இப்படம். ரஜினியின் பல தீவிர ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்காது என்று தான் சொல்வேன். எந்த ஒரு ஸ்டைலோ,அக்ஷனோ இல்லை.
ஒரு சராசரி நடுநிலை மனிதனாக,குடும்பத் தலைவனாக,பாசத்துக்கு உருகும் அண்ணனாக பாத்திரமாக வாழ்ந்து இருப்பார்.
வழக்கமான துறு துறு விரைவு ரஜினியாக இல்லாமல் முழுக்கவே சாந்த சொரூபியாக ரஜினியைப் பார்ப்பது எவ்வளவு அரிது?
கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்தது..
11.பணக்காரன்
வழமையான ரஜினி படப் பாணியில் மற்றதொரு திரைப்படம்.
ஆனால் சில காட்சிகளின் டச்சிங் மற்றும் இரு பாடல்களுக்காகப் பிடித்துப் போன படம் இது.
'ஊருக்குள்ள சக்கரவர்த்தி, மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்..'
ஜாலியான ரஜினியையும் 'நூறு வருஷம்' பாடலில் ரசிக்கலாம்.
இதிலே தான் பிரபலமான ரஜினி பெண் வேடம் வருகிறது.
12.படிக்காதவன்
சிவாஜியுடன் ரஜினி தோன்றும் அந்தக் காட்சிகளுக்காகவே ரசிக்கலாம்.அப்படியொரு உருக்கம் இருவரது நடிப்பிலும். சிவாஜியின் கண்களும் ரஜினியின் கண்களும் வசனத்தையெல்லாம் விஞ்சி நிற்கும்.
அப்பாவியாக தம்பிக்காகவும் குடும்பத்துக்காகவும் வாழ்ந்து தம்பியின் துரோகத்தால் மனம் வெம்பி கொதித்தெழும் பாத்திரம்.
ஏமாற்றப்படும் இடங்களில் காட்டும் உணர்ச்சிகளும், அம்பிகாவுடனான காதல் காட்சிகளின் ஆரம்ப நகைச்சுவைகளும் டக்சியுடன் பேசும் காட்சிகளும் ரஜினியால் மட்டுமே முடிபவை.
ஊரைத் தெரிஞ்சிகிட்டு பாடலுக்கு உருகும் அதேயளவுக்கு ராஜாவுக்கு ராஜா நான் தான், சொல்லி அடிப்பேனடி,ஜோடிக் கிளி எங்கே பாடல்களும் ரசிக்க வைப்பன.
வழமையாகத் தொடர் பதிவு என்றாலே கொஞ்சம் தூரப் போகிற நான் இன்று இதையே தொடர் பதிவாக ஆரம்பித்து வைக்கிறேன்..
(முதலிலேயே வேறு எங்காவது இப்படி தொடர் பதிவு ஓட்டம் ஓடியதா தெரியவில்லை)
நான்கு நண்பர்களை அழைக்கலாம் என எண்ணுகிறேன்..
ஜனா - அண்மைக்காலத்தில் பல்சுவையுடன் பதிவுகள் தரும் இவரிடம் ஒரு சுவையான பதிவுக்காக
பவன் - ரஜினி ரசிகராக இவரிடம் கல கல பதிவு பார்க்கலாம்
சி.பி.செந்தில்குமார் - தற்போதைய ஹிட் பதிவர்.. அடிக்கடி சிரிக்க வைப்பவர்.ரஜினி ரசிகர்??
பிரியானந்த ஸ்வாமிகள் - உல்லாச சுவாமிகள் ஆனபோதும் ரஜினி வெறியர்.