விஸ்வரூபம்

ARV Loshan
18


இதோ இதோ என்று காத்திருந்து, திருட்டு DVD வந்தும் அதில் பார்க்க விரும்பாமல் நேற்று வந்தவுடன் திரையரங்கில் சென்று விஸ்வரூபம் பார்த்துவிட்டேன்.

இதில் கமல் ரசிகன் என்பதோ, இல்லாவிட்டால் First day First Show பைத்தியம் என்பதோ இல்லாமல் அடக்கி வைக்கப்பட்ட ஒரு படைப்பில் அப்படியென்ன ரகசியம் இருக்கப் போகிறது என்பதே எனது மிகப்பெரும் கேள்வியாக மனதுள் இருந்தது.

படம் பார்த்த கொட்டாஞ்சேனை சினி வேர்ல்டில் படம் காண்பிக்கப்படுகிறது என்று தெரியாததாலோ, அல்லது வழமையான 'புலி வருது' என்ற வதந்தி என்று நினைத்தோ படம் ஆரம்பித்த 6.30 வரை பெரிதாகக் கூட்டமில்லை.
ஏதாவது அசம்பாவிதங்கள் நேர்ந்தாலும் என்ற முன்ஜாக்கிரதைக்கு ஒரு போலீஸ் ஜீப்பில் சில போலீசார் வெளியே (படம் முடிந்ததும் அவர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன்); முக்கால்வாசி நிறைந்த இரண்டாம் காட்சி; சில முஸ்லிம் குடும்பத்தாரும் எங்கள் கூட (சொல்வதற்கான காரணம் பிரித்துப்பார்க்க இல்லை என்பதை நண்பர்கள் புரிக).

தணிக்கை சான்றிதழுக்கும் கூட ரசிகர்கள் கை தட்டி வரவேற்கும் அளவுக்கு விஸ்வரூபம் காத்திருக்க வைத்துள்ளது.
முதலில் சில விஷயங்கள்....

இந்தப் படத்திற்குத் தடை கோரும் அளவுக்கு கமல் முஸ்லிம்களை அவ்வளவு கேவலமாகக் காட்டிவிட்டார் என்றோ, அமெரிக்கர்களை 'மனிதாபிமானிகளாக' காட்டிவிட்டார் என்றோ, ஒஸ்கார் கனவுகளுக்காக அப்பாவிகளின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார் என்றோ, வேண்டுமென்றே கமல் விஷ விதைகளைத் தூவி இருக்கிறார் என்றோ இதுவரை படம் பார்க்காதவர்களும், அரைகுறையாய் பார்த்தவர்களும், மற்றவர்கள் பார்த்து சொன்னதையும், எழுதியதையும் வைத்து ஊகித்துப் புரளி கிளப்பியவர்களும், அவசரமாகப் பார்த்து அவதியாக விமர்சனம் என்று ஏதாவது சொல்லவேண்டுமே என்றோ, வித்தியாசமாகத் தெரியவேண்டும் என்றோ விஸ்வரூபம் DVD என நினைத்து வேறு படம் பார்த்தவர்களும் இதுவரை சொன்னதை நம்பிய நீங்கள்/ உங்களில் பலர் தயவு செய்து திரையரங்கில் இதைப் பாருங்கள்.

இலங்கைத் தணிக்கைக் குழு இரண்டு காட்சிகளையே நீக்கியதாக அறிந்தேன்; இனி நானும் துண்டாடப்படாத 'முழுமையான' விஸ்வரூபத்தை எங்காவது தரவிறக்கிப் பார்க்கவேண்டும்.

தலிபான்களின் போராட்டம் - ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமெரிக்கப் படைகளை எதிர்த்துப் போராடும் அவர்களது வாழ்க்கையில் அப்பாவி மக்கள் மற்றும் சிறுவரின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள், தலிபான்களின் அமேரிக்கா மீதான வன்மைக்கான பின்னணி மற்றும் ஜிஹாதிகள் என்று சொல்லப்படும் தற்கொலைப்போராளிகள் தங்களை மாய்த்துக்கொண்டு அமெரிக்கர்களை எதிர்க்க என்ன காரணம் என்பது சொல்லப்படுகிறது.

இந்தியப் பக்கமோ, இந்திய முஸ்லிம்கள் பக்கமோ கதை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்பது நிஜம்.

தலிபான்கள் நிச்சயமாக இஸ்லாம் மார்க்க வயப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் தண்டனைகள், அவர்களின் யுத்தம், செயல்கள், யுத்தம் எல்லாவற்றுக்கு முன்னதான இறை வழிபாடு காட்டப்படுகிறது. இது வழக்கமானது தான் என்று நண்பர்கள் ஏற்றும் கொண்டார்கள்.
தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளில் இதைவிட புண்படுத்துகிற விடயங்கள் அப்படி என்ன இருந்திருக்கக் கூடும் என்று பின்னர் ஆராயலாம்.

அமெரிக்கப் பக்கம் இருந்து தன்னிச்சையாக கமல் தலிபான்களை மோசமாகக் காட்டிவிட்டார் என்று சொன்னவர்கள் படம் பார்த்த பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?
நுனிப்புல் மேய்ந்தவர்கள் பாடு இனி அந்தரம் தான்.

உதாரணமாக,
'அமெரிக்காவின் இராணுவம் பெண்களையும், குழந்தைகளையும் கொல்லாது' என்று கமல் வசனம் எழுதிவிட்டதாக சொல்லப்பட்டு அது கமல் அமெரிக்காவுக்கே வாளி வைத்துவிட்டதாக படு வேகமாகப் பரப்பப்பட்டது.
ஆனால் அந்த வசனத்தைக் கவனித்தவர்கள் அந்தக் காட்சியையும் பின்னணியையும் உள்ளார்ந்த அர்த்தத்தையும் சரியாக உணர்ந்து கவனிக்கவில்லை என்பதில் எனக்கு மிகப்பெரிய சிரிப்பு.

முல்லா ஓமர் சொல்வதாகத் தான் அந்த வசனம் வரும். அடுத்த நொடியே அவரின் குடும்பம் நின்றிருந்த வீட்டின் மீது அமெரிக்க ஹெலி குண்டு வீசி நிர்மூலமாக்கும். முல்லா 'Ba-----' என்ற தூசணத்தை உதிர்ப்பார்.
இந்தக் குறியீடு (இது குறியீடே இல்லையா?) புரியவில்லை போலும் அவர்களுக்கு.

இதை வைத்துத் தான் 'மனிதாபிமானியான' கமல் அமெரிக்கர்களை மனிதாபிமானிகளாகக் காட்ட முயன்றுள்ளார் என்று பலர் சொல்கிறார்களா?

அதே போல அமெரிக்க - இந்திய ராஜதந்திர உறவுகளுக்கான (தீவிரவாத எதிர்ப்பு + அழிப்பு) பாதை , இடையிலுள்ள  சிக்கல்கள் பற்றி FBI விசாரணைக் காட்சிகளில் காட்டுகிறார்.

இயக்குனராக கமல் தன்னை அளந்து பயன்படுத்தியிருக்கும் மற்றொரு விடயம் - ஹேராம் படத்தில் கதை சொல்லலில் இருந்த குழப்பம், விருமாண்டியில் கதை முன், பின் என்று பயணிப்பதில் வந்த மயக்கம் ஆகியவற்றை இங்கே விடவில்லை. அத்துடன் தீவிரவாதப் பாதையை எடுத்தவருக்கும் அழுத்தமான பின்னணியை ஆப்கானிஸ்தான் காட்சிகளில் கொடுத்திருப்பது.

இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்று (பார்க்காமலே & பார்த்தும்) எதிர்த்தவர்கள் ஆப்கானிஸ்தான் காட்சிகளில் ஒவ்வொரு காட்சியிலும் குறியீடாகவும், அழுத்தமான தெளிவாகவும் அவர் அந்த மக்கள் சார்பாக, தலிபான் போராளிகள் சார்பாகவும் முன் வைக்கின்ற நியாயங்களும், பின்னணிகளும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கா இருக்கின்றன?
எனக்கு அந்தப் 'புத்திஜீவிகளை' புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் ஒரேயடியாக கமல் ஒரு தூய கலைப்படைப்பாளி; எந்த ஒரு அரசியலையும் விஸ்வரூபத்தில் அவர் வைக்கவில்லை என்று ஒரு கமல் வக்காலத்தாக நான் நிற்கமாட்டேன்.

மேலேயுள்ள விஷயங்கள், பூதாகாரப்படுத்தப்பட்ட விஷயங்களில் தான் அரசியல், விஷ விஷமங்கள் இல்லை என்கிறேன்.

கமல் வைத்துள்ள குறியீட்டு, உள்ளார்ந்த, தத்துவார்த்த அரசியலைப் புரிந்துகொள்ள நாங்கள் ஒன்றும் உலகத் தரத் திரைப்படங்களைப் பார்த்திருக்கவேண்டிய தேவையோ, உலக இலக்கியங்களை வாசித்திருக்கவேண்டிய தேவையோ அடையவேண்டியதில்லை.

கமலின் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்தவராகவும், சமகால நடப்புக்களை அறிந்து வைத்திருப்பராகவும், இந்தப் படத்தின் வசங்களைக் கூர்ந்து அவதானிப்பராகவும், காட்சிகளின் சிறுசிறு நகர்வையும் அறிந்துகொள்பவராகவும் இருந்தாலே போதும்.

படத்தின் பெயர் முதலில் காட்சியில் எழுதப்படும் விதத்தையும், முடிவில் எழுதப்படும் விதத்தில் ஆரம்பிக்கிறது இந்த மறைமுக விளையாட்டு.
அதே போல ஆங்கிலத்தில் விஸ்வரூபம் என்பதில் 'War' என்ற எழுத்துக்களுக்கு இருக்கும் அழுத்தத்தையும் அவதானியுங்கள்.
இன்னும் சில என் அறிவுக்கு எட்டிய அவதானிப்புக்களைக் கீழே தருகிறேன்.
இதை விட அதிகம் கூர்ந்து, பகுத்து அறிபவர்களுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள். (எனக்கும் அறியத் தாருங்கள்)

ஒரு சினிமா ரசிகனாக, அதற்குப் பின் கமல் ரசிகனாக எனக்கு மிகப் பிடித்த படம் என்ற வரிசையில் முதல் பத்தில் இந்தப் படம் வராது.
ஆனால் என்னை வியக்க வைத்த, ரசிக்க வைத்த, வசனம் மற்றும் குறியீட்டுக் காட்சிகளால் அசரவைத்த வெகு சில திரைப்படங்களில் ஒன்று என்பேன்.

நடிகன் கமலை விட வசனகர்த்தா + இயக்குனர் கமல் தான் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்.

நடிகர் தேர்வு முதல், களத் தேர்வு, காட்சிகளின் கோர்வை ஆகியவற்றை எந்த ஒரு பிசகும் இல்லாமல் செதுக்கியிருப்பது உலகத் தரம் தான்.
ஆனால் திரைக்கதைத் தொய்வு சில இடங்களில் இருப்பதை ஏற்கத் தான் வேண்டும்.
அதை இல்லாமல் செய்கிறது ஒளிப்பதிவின் அசைத்தலும், இசையின் பிரம்மாண்டமும், கலை இயக்குனரின் நேர்த்தியும்.
இயக்குனர் கமல்ஹாசன்  இருத்தி, எழுப்பி வேலை வாங்கியிருக்கிறார். (இதற்காகத் தானோ அவர் தேடித் தேடி தன் சொல்லுக்கு ஆடும் இளைய பொம்மைகளைத் தேடி எடுக்கிறார்?)

இயக்குனரின் டச் தெரியும் இடங்களில் முதலாவது நடனப் பாடலே அசத்தி விடுகிறது.
அத்தனை பாடல்களையும் கதை சொல்லியாகவே பயன்படுத்தியுள்ள கமல், தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அதிரடியான பாடலைக் கொண்டு வராமல், பெண் தன்மையின் நளினத்துடனான பாடலைத் தந்து, அதிலே தனது உலகத் தர நடிப்பையும், உடலசைவையும், வேறெவரும் ஈடாக முடியாத பாவங்களையும் தந்து கலக்கி விடுகிறார்.
வார்த்தைகளுக்குப் பஞ்சம் மேலதிகமாக சொல்ல.
Hats Off Legend.

ஆனால் பில்ட் அப் பாடலை தனக்கான கதாநாயகத் தன்மைப் பாடல் (நிஜத்தில் சந்தித்த சவால்களுக்குப் பதிலடியாகக் கூட) என்று பட்டும் படாமலும் 'யாரென்று தெரிகிறதா' பாடலைக் கொண்டு வந்து பொருத்தும் இடம் எவரையும் மெச்ச வைக்கும்.

கமல் இயக்கிய அல்லது நடித்த படங்களில் நான் ரசித்த அந்த குறுகிய வசனங்களிநூடு பாத்திரங்களின் தன்மையை வெளிப்படுத்தும் நுட்பமும் சமயோசிதமும், முதலாவது காட்சியிலிருந்தே மனதை அள்ளுகிறது.
எனது அதிர்ஷ்டம் என்னுடன் கூட இருந்து பார்த்த அத்தனை ரசிகரும் அதிகளவு ஆர்ப்பாட்டம் பண்ணாமல் வசனங்களை ரசித்தனர்.

வெண்புறா ஒன்றோடு கதை சொல்ல ஆரம்பித்து, பூஜா குமாரை இணைத்து அறிமுகப்படுத்தும் இடமே போதும் இந்தப்படத்தின் கதை சொல்லல் குறியீட்டுக்கு பிரதானமும், சம்பவக் கோர்வைகளுக்கும் பாத்திரங்களுக்கும் சரியான இடமும் வரப்போகிறது என்பதைக் காட்ட.

(சாதாரண ரசிகனுக்கு இது ஒரு Action, Thriller, தீவிரவாத ஒழிப்பு மசாலா படம் ஆனால் கொஞ்சம் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டுள்ளது)

மனோவியல் வைத்தியருடன் பேசும் பெண், "படுத்துண்டே படிக்கிறது பிடிக்காதுன்னு அவா கிட்ட சொல்லிட்டேன்" என்னும் வசனம் பின்னர் தன் கணவர் யார் என்ற பின்னணி தெரியாமலே வாழ்ந்தவள் என்ற மர்மத்தை உடைக்க எங்களுக்கு உதவுகிறது.
ஆரம்ப பிராமண பாஷையில் அந்த 'பாப்பாத்தி' என்ற சொல்லுக்கும், மாமிசம் உண்ணச் செய்வதற்கும், தன் பிராமண மனைவி இன்னொருவனுடன் தொடர்பு என்று கதை வைத்ததற்கும் இந்தியாவின் பிராமண குலம் அல்லவா தடை கோரி பொங்கியிருக்கவேண்டும்?

கட்டிவைத்து வில்லன்கள் கொடுமைப்படுத்தும் காட்சியிலும் வசனங்கள், தன்னை வெளிப்படுத்தும் இடங்கள், "பாத்திரத்தோடு ஒன்றிட்டேனோ இல்லையோ" என்று கமல் சொல்லும் இடங்களில் கமெராக் கோணங்களும் ஒவ்வொரு நடிகரதும் அசைவுகளும் கலக்கல்.

விஸ்வநாதன் யார் என்று மாறும் காட்சி தான் எங்களை ஆசன நுனிக்குக் கொண்டுவந்து 'விஸ்வரூபத்தின்' அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
விஸ்வநாதன், விஸ், விசாம் என்று மிக நுணுக்கமாக விளையாடியிருக்கும் கமல், கஷ்மீரி என்று பெயரின் பின்பாதியில் சொல்ல வந்த விடயம் இனி எத்தனை பேரால் விவாதிக்கப்படும் எனப் பார்க்கலாம்.

Name meaning of Wisam - Badge of honour, Badge, Logo, like coat of Arms



'அல் கைதாவுக்கே பயிற்சியளித்தவன்' என்ற வசனத்தோடு கதை ஆப்கானிஸ்தானுக்குப் பறக்க, அங்கே கலை இயக்குனர் லால்குடி இளையராஜா கலக்குகிறார்.

மலையடிவாரம், குகைகளாக வீடுகள், பதுங்கு குழிகள், தொங்கிக் கொண்டிருக்கும் பிணங்கள், கட்டட சிதிலங்கள் என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.
அல் ஜசீராவிலும், CNN, BBCஇலும் பார்ப்பதை நேரில் கொண்டுவந்திருப்பது நேர்த்தியான ஒரு பணி.
 பாராட்டுக்கள்.

அதேபோல Green Screen technology யும் இந்தக் காட்சிகளில் மிக நுணுக்கமாகவும், தெரியாத வகையிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது கலக்கல்.

விசாம் காஷ்மீரியாக அறிமுகமாகும் காட்சியிலிருந்து ஒவ்வொரு வசனமும், வந்து சேரும் ஒவ்வொரு பாத்திரமும், ஆப்கன் - தலிபான் - அமெரிக்க யுத்த கள சூழலையும், அந்த மக்களின் வாழ்க்கையின் வேதனையையும் நேரடியாகவும், குறியீடுகளாகவும் சொல்கின்றன.

துப்பாக்கி எங்கள் தோள்களில், அணு விதைத்த பூமியில் பாடல்கள் அழுத்தமாகக் காட்சிகளோடு பயணிக்கின்றன.

இளம் ஜிஹாதி என்று அறிமுகப்படுத்தப்படும் சிறுவன் தன்னை ஊஞ்சல் ஆட்டுமாறு கேட்டு பரவசமடையும் காட்சி எங்களுக்கும் அப்படியொன்று புதுசல்ல.
குண்டுகள் எந்த நேரமும் விழலாம்; எங்கள் வாழ்வு இதுக்கு இடையில் தான் என்ற அந்த சூழலும் எங்களுக்குப் பழகியதே.
இதைக் கமல் காட்சிப்படுத்துகையில் களமும் அந்த மண்ணின் நிறமும் வித்தியாசம் என்றாலும் மனித மனங்களை வாசிக்க முடிகிறது.
இது தானே அந்த சூழல்? சிறுவர் போராளிகள் இருகிறார்களே? இதில் என்ன எதிர்ப்பு வேண்டி இருக்கிறது?

ஓமரின் மனைவி மகன் சம்பந்தப்பட்ட காட்சிகளும், பெண் வைத்தியரை ஓமர் துரத்தும் காட்சியும் அங்கே நடக்கின்ற விடயங்கள் தான்.

சவூதி ஷேக்கின் வீட்டுக் காட்சி இன்னொரு அரசியல் சாணக்கியத்துவம். ஆப்கானிஸ்தானுக்குள் யார் யார் எப்படி, என்ன என்ன என்று மிக நுணுக்கமாக இயக்குனர் கமல் காட்டுகிறார்.
"இவர் ஜிஹாதி அல்ல ஆனாலும் இவர் எங்களுக்குத் தேவை" என்று சவூதி அரேபியரைக் காட்டும் இடம் ஒரு சான்று.
அரேபியர் அபின் கொடுத்துவிட்டார் என்று பொங்கி எழுந்த சிலருக்கு நாசர் சொல்லும் வசனம் ஜிஹாதிகளின் புனிதம் பற்றி சொல்கிறது.
"என் போராளிகளுக்கு அபினை பழக்காதே"

ஒசாமா பின் லேடன் காட்டப்படும் காட்சியிலும் கூட மிக நாசூக்காக கமல் சில விஷயங்கள் சொல்கிறார்.
விசாம் - இவர் ISIக்கு வேலை செய்கிறாரா?
போராளி - இல்லை காசுக்கு. யார் குடுத்தாலும் அவருக்கு.

அமெரிக்க விமானங்கள் குண்டு போடும் காட்சிகளின் பிரம்மாண்டமும், தத்ரூபமும், அந்த அக்ஷன் காட்சிகளில் காட்டியுள்ள சிரத்தையும் தமிழ் சினிமாவுக்கு புதுசு. அப்படியொரு விஸ்வரூபம்.

தலிபான்கள் தண்டனை கொடுக்கும் காட்சியில் ஒவ்வொரு தரப்பாக கமெரா காட்டிவருவது இன்னொரு புது யுக்தி.

ஆனால் இயக்குநராகக் கமல் கோட்டை விடும் இடங்கள் என்று நான் நினைப்பது சில காட்சிகளையே தான்...
வழமையான படங்களில் (தமிழில் மட்டுமல்ல) வருவது போலவே விசாம் ஜிஹாதிகளுக்குள் நுழைந்த ஒரு உளவாளி/ கையாள் என்பதை இலகுவாக ஊகித்துக்கொள்ளக் கூடியதாக இருக்கையில் ஓமர் மற்றும்  குழுவினர் நம்பிவிடுவது.

அடுத்து படுமோசமாகக் காயப்படும் ஓமர் அமெரிக்காவுக்குள் அவ்வளவு இலகுவாக நுழைகிறார் என்பதும் இன்னொரு கேள்விக்குரிய விடயமாகி விடுகிறது.


ஆனால் இரண்டாம்பாதியின் வேகம் சற்றுக் குறைய, அதை ஈடுகட்ட வசனங்களின் நறுக்கிலும், வழமையான கமல் பாணி நக்கல்களிலும் கதை நகர்கிறது.
FBI விசாரணைக் களம், பூஜா குமாருக்கு தம்மைப் பற்றி கமல், அன்ட்றியா கூறும் இடங்களில் வசனங்களை ரசிக்கலாம்.
நறுக்குத் தெறித்த வசனங்கள் கதையோட்டத்தை இலகுபடுத்தவும், ஒரு வசனத்தையும் தவறவிடக் கூடாது என்பதயும் உறுதி செய்கின்றன.

சானு வர்கீசின் ஒளிப்பதிவும், மகேஷ் நாராயணனின் படத் தொகுப்பும் ஆற்றியிருக்கும் பங்களிப்பு கலக்கல்.
ஆப்கன் சண்டை முதல் அமெரிக்க கார் துரத்தல் வரை பின்னி எடுத்துள்ளார்கள்.
ஷங்கர்-எஹ்சான்-லொஆய் கூட்டணி கமலுக்குத் தேவையானதைக் கொடுத்துள்ளார்கள்.
இலங்கையில் துல்லிய ஒலித்தேளிவுடன் விஸ்வரூபத்தை இன்னும் விஸ்வரூபமாகப் பார்க்க விரும்பினால் என் சிபாரிசு சினி வேர்ல்ட் தான். அற்புத ஒலியமைப்பு.

சீசியம், கதிரியக்கம், புறா என்று கதை பரவினாலும், Butterfly theory என்பதையும் முன்னைய காட்சிகளின் விளக்கத்தையும் தொடர்ச்சியையும் காட்டி அசத்துகிறார் இயக்குனர்.

இது தான் கமலுக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசமாக நான் உணர்வது.
ஹேராமில் எங்களைக் குழப்பியபோது நாம் குழம்பி இப்போது தெளிவு பெற்று கமலை மெச்சுகிறோம் என்றால் ஒன்றில் கமல் எங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார்; அல்லது நாம் கமல் படங்களைப் பார்க்கப் பழகிவிட்டோம்.

கமலே மைக்ரோவேவ் அடுப்பு முதல் ஏவுகணை, அணு குண்டு வரை வியாபித்து இருப்பதால் மற்ற நடிகர்கள் அந்த விஸ்வரூபத்துக்குள் அகப்பட்டுப் போனாலும், அவர்களும் தனித்துத் தெரிய இயக்குனர் கமல் காட்சிகள் கொடுக்கிறார்.

ராகுல் போஸ் - ஒரு தேர்ந்த நடிகராக ஹிந்தியில் பார்த்துள்ளேன். இதிலே முதலில் அதிகம் பேசியும் பின்னர் பேசாமலேயும் கலக்குகிறார். உடல் அசைவுகள் பிரமாதம்.
சேகர் கபூர் - இந்த இயக்குனரின் நடிப்பு பற்றி சொல்லவும் வேண்டுமா? அலட்டல் இல்லாத நடிப்பு.

பூஜா குமார், அண்ட்ரியா இருவரும் இருந்தாலும் ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ளாமல், நடிக்கவும் கலக்கவும், காட்சிகளினை நகர்த்தவும் சமயோசிதமாகக் கையாண்டுள்ளார்.

பூஜாவை கதாநாயகி ஆக்கியது எதற்காக என்பது சில காட்சிகளிலேயே புரிகிறது. தேவையான அசைவுகள், தேவையான ஆடைகள் என்று கமலின் எண்ணத்தைப் பொய்யாக்கவில்லை. இவரது அமெரிக்கத் தாக்கம் உடைய பிராமணத் தமிழ் (தமிழும்) அழகு.
ஆங்கில நடிகர்களையும், பெயர் அறியாத ஆப்கானிய (எந்த நாடோ அறியேன்) நடிகர்களையும் நடிக்க வைத்திருப்பது ஒரு இலகுவான விடயம் அல்ல.

கமல் இயக்குனராக மீண்டும் - ஆனால் இம்முறை மிக பிரம்மாண்டமாக ஜெயித்துள்ளார்.

சில விஷயங்களுக்காகக் காத்திருப்பதில் பூரண திருப்தியும் அர்த்தமும் இருக்குமே... அதை விஸ்வரூபத்தில் உணர்ந்தேன்.

தன முன்னைய படங்களில் கமல் கடவுளையும் சமயத்தையும் நக்கல் பண்ணும் இடங்கள் இதில் ஏனோ மிக அரிது. போதாக்குறைக்கு இறுதி யுத்தத்தின் முன் மிக உருக்கமாகத் தொழவேறு செய்கிறார்.
ஆனால் சிற்சில இடங்களில் நக்கல் தொனிக்கிறது. - மிக நாசூக்காக.
வசனங்கள் செம சூடு.

கமல் – ஒருத்தவர் சாவ இப்பிடியா கொண்டாடுறது, தீபாவளி மாதிரி?
அன்ட்ரியா – அசுரர்களா இருந்தா அப்டித்தான் கொண்டாடுவாங்க
சேகர் கபூர் – இதப் போய் அந்த அசுரனின் உற்றார், உறவினர்கிட்ட சொல்லுவீங்களா?

அதேபோல முதலில் ரஷ்யன், அப்புறம் அமெரிக்கன், அப்புறம் ஆப்கன், அப்புறம் தலிபான் என்று ஒரு கிழவி தாங்கொணாத வேதனையுடன் "ஆண்கள் எல்லாரும் முன்னுக்கு வால் முளைத்த குரங்குகள்" என்று இயலாமையில் சபிப்பது ஆப்கனின் பெண்கள் + அப்பாவி மக்களின் நிலையைக் காட்டும் ஒரு தத்ரூப இடம்.

வன்முறைகளும், உடல்கள் சிதறும் கோரமும் கொஞ்சம் டூ மச் என்று நினைத்தாலும், இந்தப் படத்துக்கு இது தேவை என்பதை நாம் உணரவேண்டும்.

தமிழ் ஜிஹாதி, ஓமர் கோவையில் தங்கியவர் என்று சர்சைப்படுத்தப்பட்ட இடங்கள், உண்மையில் இந்தப் படம் தமிழில் வந்ததால் மேற்கொள்ளப்பட்டவை என்பதை உணராதார் உணராதாரே.

குறியீடுகளால் பலவும், நேரடியாக சிலவும் சொல்லி, நேர்த்தியாகத் தான் நினைத்ததைக் கொடுத்ததில் பரிபூரணமாகக் கலைஞானி விஸ்வரூபித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கு வால் பிடித்துள்ளார் என்று சொன்னவர்களுக்கு, FBI கைது செய்யும் இடமும் விசாரணை செய்யும் இடமும் போதும்.

ஏன் இவ்வளவு எதிர்த்தார்கள் (குர் ஆன்  வசன ஒலிகளை கமல் நிசப்தமாக்கியது போக) என்பது ஒரு பக்க இருக்க, பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு படத்தை இன்னும் அதிகம் விளம்பரம் செய்து மிகப் பிரம்மாண்டம் ஆக்கி இப்போதே அமோக இலாபத்தை தயாரிப்பாளர் கமலுக்குக் கொடுத்துவிட்டார்கள் என்பதைக் கமல் நன்றியோடு பார்க்கட்டும்.

நான் இன்னொரு தடவையாவது திரையரங்கிலும் (இன்னும் சில நுண்ணரசியலை நுகர) துண்டாடப்படாத விஸ்வரூபத்தை DVD யிலும் பார்க்கப் போகிறேன்.

விஸ்வரூபம் - கமலின் வியாபித்த விஸ்வரூபம் 

Post a Comment

18Comments

Please Select Embedded Mode To show the Comment System.*