March 29, 2016

விராட் கோலி என்ற துரத்தல் மன்னன், போராடித் தோற்ற மத்தியூஸ், ஆறுதல் தந்த ஆப்கன்ஸ் - முடிவுக்கு வந்த சூப்பர் 10

3 நாட்களில் நடந்த ஆறு போட்டிகளில், இப்போது அரையிறுதிக்கான நான்கு அணிகளும் தெரிவாகியிருக்கின்றன.

நேற்று நடைபெற்ற இறுதி சூப்பர் 10 போட்டி வெறும் சம்பிரதாயபூர்வமான போட்டியாக மட்டுமே நடைபெற்றது.
அதிலும் இலங்கை அணி தோற்று, நடப்பு சம்பியனாகப் போய் , எல்லாவற்றையும் இழந்து நொண்டிக் கொண்டு நாடு திரும்புகிறது.

1996இல் உலக சம்பியனாக இங்கிலாந்து போய், முதற்சுற்றோடு நாடு திரும்பிய 1999 உலகக்கிண்ண அணியே ஞாபகம் வருகிறது.

இனி ஹேரத், டில்ஷான் ஆகியோரின் ஓய்வுக்கு (அறிவித்தல் விரைவில் வரும் என நினைக்கிறேன்)பிறகு இளைய அணி ஒன்று மத்தியூசை மையமாக வைத்துக் கட்டி எழுப்பப்பட வேண்டும்.

சிலவேளை காலம் எடுக்கும், ஆனால் பல வாய்ப்புக்கள் கொடுத்தும் அணியில் தங்கள் இருப்பை உறுதியோ நியாயமோ படுத்த முடியாத பலரை அணியை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, தகுதியான இளையவர்களுக்கு அணியில் இடம் கொடுக்கவேண்டும்.
தெரிவுக்குழுவில் இருக்கும் அரவிந்த, சங்கா, களுவிதாரண போன்றவர்கள் அனுபவம், சிரேஷ்ட வீரர்கள் என்ற 'அடையாளங்களை'அடித்து விழுத்திவிட்டு திறமைக்கும் பெறுபேறுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நம்பியிருப்போம்.

-----------

6 போட்டிகளில் 5 இறுதி வரை விறுவிறுப்பை அளித்த போட்டிகள்.
இரண்டு போட்டிகள் மனதை உடைத்த போட்டிகளாகவும், மூன்று போட்டிகள் 'அட' போட்டு உற்சாகமாக ரசித்து முடிவுகளை ரசித்துக் கொண்டாடிய போட்டிகளாகவும் அமைந்தன.

இவ்வகைத் துரித வேகப் போட்டிகளில் ஒரு ஓவரில், சில பந்துகளில் முடிவுகள் சடுதியாக மாறிவிடும்; இதனால் தான் இந்த அணி வெல்லும் என்று அறுதியாக உறுதியாக எந்தவொரு போட்டி பற்றியும், அது எந்தவொரு பலமான அணியாக இருந்தபோதும் நான் ஊகம் தெரிவிப்பதில்லை.

-------------------
அவுஸ்திரேலிய அணியின் விஸ்வரூபம்..
ஸ்மித் தன்னை இவ்வகைப் போட்டிகளிலும் நிரூபித்ததும், அவுஸ்திரேலிய அணியின் முதலாவது  5 விக்கெட்  பெறுதி ஜேம்ஸ் ஃபோல்க்னர் மூலமாகக் கிடைத்தது என்று பாகிஸ்தானை சுருட்டி அனுப்பியது அவுஸ்திரேலியா.

பூம் பூம் அப்ரிடியின் ஓய்வை இந்தத் தோல்வியுடன் எதிர்பார்த்தவர்களுக்கு, இப்போது இல்லை, பிறகு அறிவிக்கிறேன் என்றிருக்கிறார்.
ஆனால் பாகிஸ்தானின் முடிவுரையோடு, அப்ரிடிக்கும் முடிவுரை எழுதப்பட்டு இருக்கிறது அவுஸ்திரேலியாவினால். பாகிஸ்தான் நிறைய எதிர்பார்க்க வைத்து இப்படியே சொதப்புவது வழக்கம் தான்.

ஸ்மித், மக்ஸ்வெல், வொட்சன் மூவரினதும் அதிரடிகள் ஒன்றாகச் சேருமிடம் அவுஸ்திரேலியா அசைக்க முடியாத பலம் கொண்ட அணியாக எல்லா அணிகளையும் துவம்சம் செய்யக் கூடிய அணி தான்.
ஆனால், நான் முன்னைய இடுகைகளில் சொன்னது போல, இந்த அணி இப்போது தொடர்ச்சியான, சடுதியான, சில நேரங்களில் அனாவசியமான மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதால் இன்னும் T20 போட்டிகளில் வெற்றிபெறும் அணியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதில் சிக்கல் இருக்கவே செய்யும்.

அடம் சம்பாவை நல்லதொரு சுழல்பந்து வீச்சாளராக இவர்கள் இனி ஒருநாள் போட்டியிலும் முயற்சிக்கலாம்.
ஆனால் ஞாயிறு நடந்தது போல அவரை சரியாகப் பயன்படுத்தாமல், முன்னைய (வோர்ன் தவிர்ந்த) ஏனைய அவுஸி  சுழல்பந்து வீச்சாளருக்கு நேர்ந்தது போலவே நேருமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

---------------------------
ஒரு இலங்கை ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு ஆசைப்பட்டேன்.
தென் ஆபிரிக்கா வென்று இருந்தால் இலங்கையின் வாய்ப்பு அன்றே அருகியிருக்கும்.

உலகக்கிண்ணம் என்றாலே தாமாகவே சறுக்கி, சொதப்பும் தென் ஆபிரிக்காவை சுழற்றிப் போட, அண்மைக்காலமாக பெரிதாகப் பந்துவீசாத கிறிஸ் கெயில் உபயோகப்பட்டார்.
முதற்போட்டியில் இந்தியாவுக்கு படுதோல்வியைப் பரிசளித்த அதே நாக்பூர் ஆடுகளம் வேலையைக் காட்ட எவ்வளவு தான் முயன்றும் தென் ஆபிரிக்காவால் பெற முடிந்தது 122 ஓட்டங்களே..

கெயிலின் அதிரடியோடு மேற்கிந்தியத் தீவுகள் இதைக் கடக்கும்.
தென் ஆபிரிக்காவின் படுதோல்வி net run rate விஷயத்திலும் இலங்கைக்கு உதவும் என்று நம்பியிருக்க, நாக்பூரின் ஆடுகளம் விளையாட்டுக் காட்ட ஆரம்பித்தது.
(இன்னும் எத்தனை போட்டிகளை இந்த ஆடுகளம் நாசப்படுத்தப் போகிறது?)
மார்லன் சாமுவேல்ஸ் நின்றிருக்க, அவரைச் சுற்றி சடுதியாகச் சரியாய் ஆரம்பித்த விக்கெட்டுக்களும் , ஓட்டங்களைப் பெறுவதில் இருந்த சிரமமும் சேர்ந்து கடைசி ஓவர் வரை போட்டி சென்றது ஏற்படுத்திய பதைபதைப்பு விளையாடிய நாட்டின் ரசிகர்களுக்குக் கூட இராது.

Chokers பட்டத்தால் கேலி செய்யப்படும் தென் ஆபிரிக்கா இறுதிவரை போராடித் தோற்றது, பின்னர் நடைபெற்ற இலங்கை - இங்கிலாந்து போட்டிக்கு மேலும் முக்கியத்துவத்தை வழங்கினாலும், உலகக்கிண்ண, உலக T20 போட்டிகளில் தென் ஆபிரிக்காவின் தொடரும் தடுமாற்றத்தைக் காட்டி நிற்கிறது.

------------------

முந்தைய போட்டியில் இந்தியாவை கிட்டத்தட்ட வெல்லும் நிலையிலிருந்து ஒரே ஒரு ஓட்டத்தால் போட்டியைத் தாரைவார்த்த பங்களாதேஷ் நியூ சீலாந்து அணியை வெல்லாது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனாலும் அந்த ஒரு ஓட்டப் போராட்டத்துக்குப் பிறகு இப்படி ஒரு மோசமான தோல்வியை நியூ சீலாந்து அணியிடம் சந்திக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

கறுப்புத் தொப்பிகளின் ஓட்டக்குவிப்பு மன்னரான கப்டில்லுக்கு ஒய்வு கொடுத்த போட்டியில், வில்லியம்சன், மன்றோ, டெய்லர் ஆகியோரின் நிதான ஓட்ட சேகரிப்பில் 145 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் வில்லியம்சன் இன்னும் form க்குத் திரும்பாதது நியூ சீலாந்துக்கு கவலை தரக்கூடிய ஒரு விடயம் என்று கடந்த இடுகையில் சொல்லி இருந்தேன்.
இந்தப் போட்டியில் 42 ஓட்டங்களைப் பெற்றுக் காட்டியிருக்கிறார்.
ஆனாலும் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ற நிதானமான ஆட்டம் தான்.

பங்களாதேஷ் அணி துரத்தப் பார்க்குமா என்று யோசிக்க முதலே, 70 ஓட்டங்களுக்கு சுருண்டு போனது.
இது பங்களாதேஷின் T20 சர்வதேசப் போட்டிகளில் மிகக் குறைவான ஓட்ட எண்ணிக்கை. (முன்னதாக 78 - இதுவும் நியூ சீலாந்துக்கு எதிராகவே)
நியூ சீலாந்துக்கு எதிராக ஒரு அணி பெற்ற குறைந்த ஓட்டங்களும் இதுவே.

தலா மூன்று விக்கெட்டுக்கள் எடுத்த சோதி, எலியட் ஆகியோரை வில்லியம்சன் கையாண்ட விதம் ரசிக்கக் கூடியது.
இந்தப் போட்டியிலும் சௌதீ, போல்ட் விளையாடியிருக்கவில்லை.

------------------

இங்கிலாந்து வென்றால் அரையிறுதி, தோற்றால் வெளியே, 
இலங்கை வென்றால் தான் இலங்கைக்கு மட்டுமில்லை, தென் ஆபிரிக்காவுக்கும் வாய்ப்பு என்ற நிலையில் ஆரம்பித்த  போட்டியில், ஆரம்பம்  என்னவோ அருமை தான்.

எதிர்பார்த்தது போலவே சுழலைப் பயன்படுத்தி இங்கிலாந்தை தடுமாற வைத்த அணித் தலைவர் மத்தியூஸ், தானும் கலக்கியிருந்தார்.
10 ஓவர்களில் 65 ஓட்டங்கள் மட்டுமே.
ஆனால் இங்கிலாந்து அதற்காகத் தடுமாறவில்லை.
சுழல்பந்து வீச்சாளர்கள் ஓயும் வரை காத்திருந்து, விக்கெட்டுக்களைக் கையில் வைத்துக்கொண்ட இங்கிலாந்து, ரோய், ரூட் ஆகியோர் இட்டுக் கொடுத்த அடித்தளத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அதிரடி மன்னன் ஜோஸ் பட்லரைக் களமிறக்கியது.

மரதன் போல போய்க்கொண்டிருந்த இங்கிலாந்தின் ஆட்டம், 100 மீட்டர்  வேகம் எடுத்தது. அணித் தலைவர் ஒயின் மோர்கனுடன் சேர்ந்து வெறும் ஆறு ஓவர்களில் 74 ஓட்ட இணைப்பாட்டம்.

போதாக்குறைக்கு மத்தியூசின் பந்துவீச்சு மாற்றங்களின் தடுமாற்றமும் சேர்ந்துகொள்ள இங்கிலாந்தின் ஆதிக்கம் உறுதியானது.
இலங்கை வசமிருந்த போட்டி, அப்படியே மாறிப்போனது.

திசர பெரேரா, டசுன் ஷானக ஆகியோரை எல்லாம் பட்லர் ஆடுகளத்தை நன்கு பரிச்சயம் ஆக்கிக் கொண்ட பின்னர் பந்துவீச இறக்கி பலிக்கடா ஆக்கிக்கொண்டார்.

திசர இத்தனை கால அனுபவத்துக்குப் பிறகும் இப்படியான கட்டங்களில் பக்குவமற்றுப் பந்துவீசுவது, இலங்கையின் துரதிர்ஷ்டமே.

கடைசி 5 ஓவர்களில் 72 ஓட்டங்கள் வாரி வழங்கப்பட்டன.
மத்தியூசின் இந்தப் பாரிய தவறு போட்டியை அப்படியே இங்கிலாந்து வசமாக்கிவிட்டது.

பெரிய இலக்கின் அழுத்தம்.
இலங்கை அணியின் ஆட்டம் ஆரம்பத்திலேயே தெறித்து விட்டது.
15/4 என்று இருக்கையில் இது இப்போதே முடிந்த கதை என்று எல்லோருமே நினைத்திருக்க, மத்தியூஸ் - கப்புகெதர இணைப்பாட்டம் ஆச்சரியமூட்டியது.

இலங்கை அணியிடம் சில காலமாகக் காணாமல் போயிருந்த பொறுமையுடன் கூடிய போராட்ட குணம் வெளிப்பட்டது இங்கே.
மத்தியூஸ் ஒரு finisher ஆக நின்று இலங்கை அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்.
ஆனால் சாமர கப்புகெதர மிக நீண்ட காலமாக அவர் மீது வைத்திருந்த ரசிகரின் எதிர்பார்ப்பை இப்போது வாய்ப்புக் கிடைக்கும் நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துவது ஆறுதல்.

நிதானமாக ஆரம்பித்து புயலடித்த இணைப்பாட்டம் 10 ஓவர்களில் 80 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தது.
இலங்கை அணியின் வெற்றிக்கான துரத்தல் உயிர் பெற, சரியான தருணத்தில் திசர பெரேரா சேர்ந்துகொண்டார்.
பந்துவீச்சில் வாரி வழங்கிய ஓட்டங்களை திசர அடித்தாடி கொஞ்சம் எடுத்துக் கொடுத்தார்.
அவர் ஆட்டமிழக்க, தான் கொடுத்த ஓட்டங்களை அடித்தாடி எடுத்துக் கொடுக்க டசுன் ஷானக வந்தார்.

இருவரும் சேர்ந்து கொடுத்த ஓட்டங்கள் 18 பந்துகளில் 42 ஓட்டங்கள்.
அடித்துப் பெற்றவை 20 பந்துகளில் 35.

ஆனாலும் கால் தசைப்பிடிப்பு உபாதையுடனும் அதை சகித்துக்கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்த மத்தியூஸ் இலங்கை அணிக்கு ஒரு சரித்திரபூர்வ வெற்றியைப் பெற்றுத் தரப்போகிறார் என்ற நம்பிக்கை இருந்தது.

ஷானக ஜோ ரூட்டின் அபார பிடியெடுப்பில் ஷானக ஆட்டமிழக்க, மீண்டும் இங்கிலாந்தின் கரம் ஓங்கியது.
அந்தப் பிடியெடுப்பு  மிக உன்னதமான பிடிகளில் ஒன்று.
சில அங்குலங்கள் விலகி இருந்தால் நான்கு ஓட்டங்கள்..
போட்டியின் போக்கும் மாறியிருக்கும்.
ஷானக இலங்கை அணி மெருகு ஏற்றி எடுக்கக் கூடிய ஒரு வீரர்.

கிட்ட்டத்தட்ட ஒற்றைக் காலுடன் இறுதிவரை முயன்ற மத்தியூசினால் ஸ்டோக்ஸ் வீசிய அபாரமான இறுதி ஓவரில் வெற்றிக்குத் தேவையான 15 ஓட்டங்களைப் பெற முடியாமல் போக, இலங்கை 10 ஓட்டங்களால் தோற்றுப் போனது.

தனியொருவனாக நின்று போராடிய தலைவர் மத்தியூஸ் 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73.
3 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்களுடன்.

இந்தப் போராட்ட குணம் மீண்டும் பழைய இலங்கை அணியை ஞாபகப்படுத்துகிறது.
தோற்றாலும் போராடித் தோற்றோம் என்பது ஆறுதலானது.
இனி மீண்டும் புதிதாய் இலங்கை அணி எழும் என்ற நம்பிக்கையும் வருகிறது.

மறுபக்கம் இங்கிலாந்து நம்பிக்கையுடன் அரையிறுதிக்கு உறுதியான அணியாகச் செல்கிறது.

----------------

ஆரம்பம் முதலே ஒரு வெற்றியுடனாவது தான் விடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆப்கன் அணி இந்தப் பிரிவில் மிகப் பலம் வாய்ந்த அணிக்கு எதிராகத் தான் அதை செய்யப்போகிறது என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

ஆனால் நடந்தது அது தான்..
ஆப்கன் அடித்த ஆப்பு, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுவந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு அடிக்கப்பட்டது தான் இந்த உலகக்கிண்ணத்தின் பெரிய அதிர்ச்சி.

மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சில் மிகத் தடுமாறி 123 ஓட்டங்களை மட்டுமே பெற்ற ஆப்கானிஸ்தான் வழமை போல தங்களது துடிப்பான களத்தடுப்பு, கட்டுப்பாடான பந்துவீச்சு மூலம் மேற்கிந்தியத் தீவுகளை மடக்கியது ஒரு விறுவிறுப்பான திரைப்படம் போன்றது.

ஆரம்பத்தில் பத்ரியின் அற்புதப் பந்துவீச்சும், ஆப்கனின் எதிர்கால நட்சத்திரம் நஜிபுல்லா சட்ரானின் அதிரடியும் ரசிக்க வைத்தவை என்றால், பிற்பாதியில் அமீர் ஹம்சாவின் பந்துவீச்சு - 4 ஓவர்களில் 9 ஓட்டங்கள் (இவர் தான் இங்கிலாந்துடன் ஒரே ஓவரில் 25 ஓட்டங்களைக் கொடுத்தவர்) மற்றும் ஆப்கானின் துரித களத்தடுப்பு.

இலங்கையை இறுதி வரை போராட வைத்தது.தென் ஆபிரிக்காவைத் தடுமாற வைத்தது.
இங்கிலாந்துடன் வெல்ல வேண்டிய போட்டியை வெல்லும் அவதியில் வீணாய் இழந்தது.
ஆனால், இன்று இந்தப் பிரிவில் பலமான அணிக்கு பலமாக ஒரு அடி கொடுத்து சரித்திரபூர்வமான வெற்றி !!! 
எப்பவோ கிடைத்திருக்கவேண்டிய வெற்றி, இன்று கிடைத்திருக்கிறது.
சிம்பாப்வே தவிர்ந்த டெஸ்ட் அணி ஒன்றுக்கு எதிரான முதலாவது சர்வதேச T20 வெற்றி. 
ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷையும் வென்றுள்ளார்கள்.
போராட்ட குணத்துக்கும் பொறுமைக்கும் எப்பொழுதும் என்று அழைக்கும் இந்த வருங்கால சம்பியன்களுக்கு வாழ்த்துக்கள்.
ICC இன்னும் அதிகதிகமான போட்டிகளை வழங்கட்டும்; இன்னும் பல 'பெரிய' அணிகளைக் கவிழ்த்து ஆப்படிக்கும் இந்த ஆப்'GUN'

----------------------

இந்தியாவா அவுஸ்திரேலியாவா அரையிறுதியில் என்ற கேள்விக்குப் பதில் சொன்ன போட்டி, கடைசியாக விராட் கோலியின் போட்டியாக மாறிப்போனது.

கோலி பற்றி எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
காரணம் அவுஸ்திரேலியாவின் கையில் இருந்த போட்டியைக் கடைசி வரை தனி நபராக துடுப்போடு போராடி கரை சேர்த்தவர் கோலி தான்.

இந்தக் கால துடுப்பாட்ட வீரர்களில் தனக்கு சமகாலப் போட்டியாளர்களை எல்லாம் இப்படியான துரத்தியடிக்கும் ஆட்டங்களில் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் கோலி.

ஒருநாள், T20 போட்டிகளில் இலக்குகளைத் துரத்துவதில் விராட் கோலி காட்டும் அசாத்தியத் துணிச்சலும் அந்த நேரம் அவரது அசராத நம்பிக்கையும் பாராட்டுக்குரியவை.

எந்தவொரு தேவையற்ற அடிப் பிரயோகங்களுக்கும் செல்லாமல் அழகான துடுப்பாட்ட பிரயோகங்களுடன் எந்தவொரு பந்துவீச்சாளரையும் நொறுக்கித் தள்ளுவதில் கோலி ஒரு சூரன்.

தனது ஆக்ரோஷத்தால் எதிரணி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட விராட் கோலி அதே ஆக்ரோஷத்தைத் துடுப்பில் காட்டுவதன் மூலம் எதிரணி ரசிகர்களின் மதிப்பையும் அன்பையும் இப்போது சம்பாதித்து வருகிறார்.

முதல் 3.4 ஓவர்களில் 50 ஓட்டங்களைத் தடுமாற வைத்து ஓட்ட வேகத்தை மந்தப்படுத்தி 160 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியத்தில் மந்தமாகிக் கொண்டிருந்த ஆடுகளத்தின் தன்மை போலவே, தோனியின் பந்துவீச்சு மாற்றங்களும் ஒரு காரணம் என்றால், வேகம் குறைந்துகொண்டே செல்லும் ஆடுகளத்தில் மறுபக்கம் விக்கெட்டுக்கள் போய்க்கொண்டிருக்க கோலி ஒரு சுவராக (புதிய சுவர் என்றே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்)மாறி நின்று கொண்டார் என்பது இந்திய அணிக்குக் கிடைத்த ஒரு வரமே.

முதலில் யுவராஜுடன் 45 ஓட்ட இணைப்பாட்டம்.
இது அணியைத் திடப்படுத்த யுவராஜ் தனது கால் உபாதையுடனும் கோலியின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓட்டங்களை ஓடிப் பெற்றது மெச்சக் கூடியது.

அடுத்து கோலி-தோணி இணைப்பாட்டம்.
வெற்றிக்கான 67 ஓட்டங்களை 31 பந்துகளில் இருவரும் சேர்ந்து குவித்தது அவுஸ்திரேலியாவுக்கு ஆப்பாக அமைந்தது.

வழமையாக பந்துவீச்சாளர்களை பாராட்டக்கூடிய விதத்தில் கையாளும் ஸ்டீவ் ஸ்மித் தடுமாறியது நம்பமுடியாத ஒரு விடயம்.

மெதுவான ஆடுகளத்தில் 2 ஓவர்களில் 11 ஓட்டங்களை மட்டுமே கொடுத்த சம்பாவுக்கு மேலதிக ஓவர்கள் கொடுக்காமல் விட்டதும், முதலிலேயே கோலியினால் தாக்கி நம்பிக்கை இழந்திருந்த ஃபோல்க்னருக்கு மீண்டும் கடைசி ஓவரை வழங்கியது என்று ஸ்மித் சொதப்பியிருந்தார்.

கோலியின் off drive கள்  ஒரு பக்கம் ரசிக்க வைத்தால், மறுபக்கம் கோலி- தோனி இருவரும் ஒற்றை ஓட்டங்களை இரண்டாக மாற்றிக்கொண்ட வேகமான லாவகம் அசத்தல்.


51 பந்துகளில் கோலி பெற்ற 82 ஓட்டங்கள் இந்தியாவின் மிகப்பெறுமதி வாய்ந்த சில ஓட்டங்கள்.
இனி எந்த ஆடுகளமாக இருந்தாலும் எந்தவொரு அணியும் கோலி இருக்கும்வரை இந்தியாவை இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடப் பணிக்கப் பயப்படும்.

கோலி -  Genius & Chasing King.

--------------
அரையிறுதிகளில் இப்போது ஏற்கெனவே கிண்ணம் வென்ற மூன்று அணிகளோடு இதுவரை உலக T20 கிண்ணம் வெல்லாத நியூ சீலாந்தும்.

நாக்பூரின் தோல்விக்குப் பிறகும் பங்களாதேஷுடன் தடுமாறி இருந்தாலும், கோலி கொடுத்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி இப்போது இந்தியாவுக்கு பெரிய உற்சாக மாத்திரை.

உலகக்கிண்ண அரையிறுதிகள் தாண்டியதில்லை என்ற சாபம் கடந்த உலகக்கிண்ணத்தோடு நீங்கினாலும் இன்னும் உலகக்கிண்ணம் ஒன்று இல்லை என்ற குறை போக்க உத்வேகத்தோடு போராடும் வில்லியம்சனின் நியூ சீலாந்து.

T20 சிறப்புத் தேர்ச்சி  வீரர்களோடு வெறித் தனமாக விளையாடும் இங்கிலாந்து, ஆப்கனிடம் அடி வாங்கிய புலியாகக் காயத்துடனும் அதே வேளை  2012 வெற்றியை மீண்டும் பெறக் காத்துள்ள மேற்கிந்தியத் தீவுகள்.

இனி களை  கட்டும் அரையிறுதிகள்.

---------
மெல்பேர்னில் அவுஸ்திரேலியா தனது ஐந்தாவது உலகக்கிண்ணம் வென்று இன்று ஒரு வருடப் பூர்த்தி.

2 comments:

2019 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய ஐவர் இவர்கள் தான் . said...

மிக துல்லியமான , திறமையான பதிவுகள்.
தங்களது முதிர்ச்சியான கிரிக்கெட் அறிவு என் போன்ற சிறு கிரிக்கெட் ரசிகனுக்கும்
பல வகைகளில் கிரிக்கெட் பற்றிய அறிவை, புரிதலை பெற வழிவகுத்திருகிறது.
நான் சக அச்சு ஊடகத்தில் பணிபுரிந்தாலும் தங்களது இது போன்ற
பதிவுகள் எனது விளையாட்டு அறிவுக்கு மேலதிக பலம்.

நன்றி சகோதரா!

ARV Loshan said...

நன்றி ஆதவ்>>
அப்படியொன்றும் அனுபவ ஞானம் ஒன்றும் கிடையாது.
தெரிந்த சில அடிப்படை விஷயங்களை ஒரு ரசிகனாகப் பார்க்கிறேன்.
புரிந்ததை எழுதுகிறேன் :)
அவ்வளவு தான்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner