February 23, 2012

ஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன?


இலங்கையிலும், இலங்கையைப் பற்றிய அக்கறை உள்ள உலகின் ஏனைய இடங்களிலும் இப்போது அதிகமாகப் பேசப்படுகிற ஒரு விடயம்.. ஜெனீவா.

இலங்கையில் தமிழரின் இனப் பிரச்சினை + போராட்டத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகின் ஒவ்வொரு இடங்கள், நகரங்கள் அதிகமாகப் பேசப்பட்டு கவனங்கள் குவியும் இடங்களாக இருந்திருக்கின்றன.

80களில் திம்பு (பூட்டான்), சென்னை, கொழும்பு, டில்லி, நல்லூர், பின்னர் 90களில் வன்னியின் பல இடங்களும் 2000களில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்த வெளிநாட்டு நகரங்களும் (குறிப்பாக ஒஸ்லோ), யுத்தங்கள் உக்கிரம் அடைந்து எங்கள் அடையாளங்கள் தொலைந்துபோன பல்வேறு சிறு ஊர்களும் கூட முக்கியத்துவம் வாய்ந்த செய்தி மையங்களாக மாறிப் போயின..
இறுதியாக முள்ளிவாய்க்கால்.



இப்போது தமிழரின் தலைவிதி யார் யாராலோ எழுதப்படும் வேளையில் இலங்கைக்கு தலையிடியைக் கொடுக்கின்ற ஒரு இடமாக மாறியுள்ள நகரம் ஜெனீவா.


ஜெனீவா தொடர்பில் இன்று நம்மில் பேசாதவர்கள் இல்லை. முழு தமிழ் சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர் தொடர்பில்தான்.

இந்நிலையில் இலங்கையில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் இன்றைய வியாழன் விடியலில் (வழக்கமாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் நாள்) தகவல்கள், தரவுகள், பின்னணிகளைத் தேடி எடுத்து (இதில் எங்கள் செய்தி ஆசிரியர் லெனின்ராஜ் எனக்கு நிறையவே உதவி இருந்தார்) இன்று வழங்கி இருந்தேன்..

பல நண்பர்கள் + நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதைப் பதிவாகவும் தரலாம் என்று எண்ணி இந்த இடுகை.
மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள வது வருடாந்த அமர்வு பற்றிப் பார்க்க முதல் கொஞ்சம் வரலாற்றுப் பின்னணிகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.



இலங்கை அரசுக்கு கேட்டாலே ஈயத்தை காதில் ஊற்றும் ஒன்றாக இருக்கும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம் இதில் முக்கியமானது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வரலாற்றில் உதித்து பரிணமித்ததே சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம்.

ஆரம்ப கால கட்டத்தில் நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்களினால் அதிகமான பொது மக்கள் உயிரிழந்தனர்.
அத்துடன் உள்நாட்டு யுத்தங்களும் காணப்பட்டன.
இந்த நிலை வலுவடைந்து இனம் மற்றும் மத ரீதியான யுத்தமாக மாறின.
இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டம் ரீதியாக உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டதே மனித உரிமைகள் ஆணையகம் ஆகும்.

இதன் முதற்கட்டமாக ஆரம்பத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச பேச்சுவார்த்தை ஒன்று 1864 ஆம் அண்டு Jean Henri Dunant   நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கை ஒன்று உருவாக்கப்பட்டது.
ஆரம்ப காலகட்டத்தில் இந்த உடன்படிக்கையை ஐரோப்பிய வல்லரசு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

அத்துடன் 1864 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிபந்தனைகள் அடங்கிய உடன்படிக்கையின பரிந்துரைகள் 1906 ஆம் ஆண்டு சீர்திருத்தப்படடதுடன் கடல் மார்க்க யுத்தங்களுக்கும் இவை பொருந்தும் என பரிந்துரைக்கப்பட்டது.

1929 ஆம் ஆண்டு மூன்றாவது உடன்படிக்கையின் போது யுத்தத்தை முறையாக நடத்துவது  தொடர்பான நிபந்தனைகள் இதில் சேர்க்கப்பட்டன.

இதன்போதே அனைத்து நாடுகளுக்க அதிர்ச்சியளிக்கும் இரண்டாம் உலகப்பேர் ஆரம்பமாயிற்று.
இதற்கமைய 1945 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் இரண்டாம் உலகப்போர் வலுப்பெற்று அமெரிக்காவின் ஆதிக்கம் உலக நாடுகளுக்கு விளங்கியது.

இரண்டாம் உலக போர் நிறைவின் பின்னர் அதிகமான நாடுகள் உடன்படிக்கையை மீறியதாக மனித உரிமைகள் ஆணையகம் அறிவித்தது.

தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சுவீடனின் ஸ்டொக்ஹம் நகரில் இடம்பெற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்;தின் மாநாட்டில் மனித உரிமை ஆணையகத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட சட்டங்களில் புதிய நான்கு உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன.

குறித்த நான்கு புதிய உடன்படிக்கைகளுக்கும் 1949 இல் ஜெனீவாவில் இடம் பெற்ற மாநாட்டின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இது தான் இன்று வரை சர்வதேச யுத்தங்கள், உள்நாட்டு யுத்தங்களின்போது கடைப்பிடிக்கவேண்டிய மனிதாபிமான சட்டங்கள் அடிப்படையாகக் கொண்டுவரப்பட்டன.



இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை என அனைவராலும் தற்போதும் பேசப்படுகின்றது..

இந்த நான்காவது உடன்படிக்கையின் பிரகாரம் யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் யுத்த பிரதேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருத்தல், 
தனி நபரையோ குழுக்களாகவோ பொதுமக்களை நாடுகடத்தல், 
பாலியல் ரீதியில் துன்புறுத்தல் 
உடல் உள ரீதியில் வதைத்தல், 
விசாரணையின்றி விளக்கமறியலில் வைத்தல், 
நியாமின்றி சொத்துக்களை அழித்தல், 
இன மத தேசிய ரீதியில் மற்றும் அரசியல் ரீதியிலும் பாரபட்சம் காட்டுதல் 
என்பன முற்றாக தடைசெய்யப்படல் வேண்டும் என சரத்துக்களில் பரிந்துரைக்கப்பட்டன.

எனினும் இரண்டாவது உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சி, மற்றும் விடுதலை போராட்டங்கள் காரணமாக குறித்த உடன்படிக்கை மீண்டும் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையகத்தினால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலை மேலும் மோசமடைய 1977 ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 1949 உடன்படிக்கைகளுடன் மேலும் இரண்டு புதிய உடன்படிக்கைகள் இணைத்துக்கொள்ளப்பட்டன.

1977 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கைகளில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்தன.
உட்னபடிக்கைகள் தொடர்பில் நாம் பார்க்க வேண்டுமானால் முதலாவது உடன்படிக்கை.

1864 ல் முதலாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது.
2. எல்லாத்தரப்பைச்சேர்ந்த வீரர்களுக்கும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும்.
3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
4. இந்த உடன்படிக்கையின் கீழ் பணிபுரியும் நபர்களையும்  உபகரணங்களையும் இனங்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும்

1929 ல் மூன்றாவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்துதல்.
2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கல்.
3. கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குதல்

1949 ல் நான்காவது உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது.
2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது
3. யுத்த கைதிகளை நடாத்தும் விதம் பற்றியது
4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது.

இதற்கமைய 1977 உடன்படிக்கையின் சாரம் இவ்வாறு அமைகின்றது.
சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள் (கெரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது.

இது வரை குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் மனித உரிமை ஆணையகம் தோற்றம் பெற்றமைக்கு பிரதான காரணங்களாக அமைந்தவையும் மற்றும் அந்த ஆணையகத்தின் நிபந்தனைகளும்.

--------------

இன்னும் விரிவான, இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், இலங்கை அரசாங்கம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள், விசாரணைக் குழு அறிக்கைகள், இதர முக்கிய விடயங்கள் மற்றும் ஜெனீவாவில் இம்முறை இலங்கைக்கு என்ன நடக்கும் என்ற விடயங்கள் பற்றி அடுத்த இடுகையில் பகிர்கிறேன்...

எனது / எமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எடுத்து, தொகுத்த விடயங்களே இவை.. தவறுகள் இருந்தால் திருத்தவும்.
மேலதிக சேர்க்கைகள் இருந்தால் பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக அறியத்தாருங்கள்.

8 comments:

Mathi said...

சரியான நேரத்தில் சரியான இடுகை. அடுத்த இடுகையையும் மிக விரைவாக இட்டால் மிக்க பயனுள்ளதாகும். நன்றி.

anuthinan said...

அண்ணே அடுத்த இடுகைக்குதான் காத்திருப்பு

Shafna said...

ம்ம்..இவ்ளோ விஷயங்களும் அச்சிடப்பட்டு,ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனவா???? நான் நினைத்தேன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் ஒருபுறம் அடுக்கப்பட்டிருக்க,அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆகாய மார்க்கமாக ஹாய் சொல்லி வந்திறங்கி பாய் சொல்லிட்டு, போய் லெட்டர் போடுரம் என்று சொன்னதுடன் எல்லாம் முடிஞ்சுதென்று. பார்ப்பம் பார்ப்பம் என்னதான் நடக்குதென்று,எதுக்கும் 27க்கு பிறகு இதன் தொடரை நீங்கள் போட்டல் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வா தெளிவு கிடைக்கும். தெளிவாகத் தந்திருக்கும் பல விடயங்களுக்கு நன்றி.விடியலிலும் கேட்டேன்.செய்தி ஆசிரியருக்கும் நன்றி.

Nirosh said...

விளக்கமான பதிவு, அண்ணே அடுத்த பதிவைக்காண இப்போதே ஆவல்..!

தனிமரம் said...

இதில் பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது பல அன்னக்காவடிகள் பின்னனியில் கயிறு இழுக்கும் தமிழர் வாழ்வுதான் கேள்விக்குறி அடுத்த பதிவையும் விரைவில் வெளியிடுங்கள் காத்திருக்கின்றேன்.

ஷஹன்ஷா said...

தேடிக்கொண்டிருந்தேன்... தந்து விட்டீர்கள்.. நன்றி

இன்னும் ஒரு விரிவான பதிவிற்காக காத்திருப்பு..

suharman said...

// இலங்கையில் இடம்பெற்ற யுத்தம், இலங்கை அரசாங்கம் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள், விசாரணைக் குழு அறிக்கைகள் // அண்ணா இதெல்லாம் உண்மையாக நீங்கள் போட்டால் பிறகு லோசனுக்கு நடந்தது என்ன என்று நாங்கள் பதிவெழுத வேண்டி வரும் எனவே வந்தோமா ஜெனிவா வரலாற்றை சொன்னோமா என்று போய் விடுங்கள். எங்களுக்கு ஒரு நல்ல அறிவிப்பாளரை இழக்க விருப்பமில்லை

Pranavan G said...

காத்திரமான இடுகை .. நன்றி

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner