இதற்கு முந்தைய இடுகையின் தொடர்ச்சி....
இலங்கையில் இடம்பெற்று வந்த முப்பதாண்டு கால யுத்தம் 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நிறைவுக்கு வந்தது.
இந்த முப்பது ஆண்டுகளும் தலையிடாத ஐக்கிய நாடுகள் அமைப்பு, யுத்தத்தின் அகோர கட்டங்களில் நேரடித் தலையீடுகளை மேற்கொள்ளாத ஐ.நா அமைப்பு இப்போது எல்லாம் நடந்து முடிந்து மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் postmortem நடத்தி விசாரணைகளைக் கொண்டு வந்து இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டுவருவது என் என்ற கேள்விகளுக்கு அரசியலில் கரைகண்ட ஞானிகளும், சாணக்கியர்களும் தான் தெளிவான விடை பகிரவேண்டும்.
ஆனால் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மேலே ஐ.நா அமையத்தின் சாசனங்களில், மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரைகளில் சொல்லப்பட்ட அத்தனை விடயங்களையும் அரசாங்கம் மீறியுள்ளது என்பதை இதற்கு முந்தைய இடுகையில் குறிப்பிட்ட விடயங்களில் இருந்து அறிந்துகொள்ளலாம்.
ஒரு போராளிக்குழு - அது விடுதலை இயக்கமாக இருக்கலாம்.. அல்லது தீவிரவாத/ பயங்கரவாத இயக்கமாக இருக்கலாம் - இப்படியான விதிகளை, ஒப்பந்தங்களை மீறினால் அது ஒரு பெரிய விடயமாக சர்வதேச ரீதியில் கருத்தில் கொள்ளப்படாது. ஆனால் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபடும்/ஈடுபட்ட ஒரு அரசாங்கம் எனும்போது தங்கள் குடிமக்களுக்கு எதிராக இந்த விதிகளை மீறும்போது அது நிச்சயம் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச நாடுகளின் விமர்சனங்களையும் கண்டனங்களையும் உருவாக்கக் கூடியது.
மூன்று தசாப்த கால யுத்தத்தின்போது இலங்கை சர்வதேச நாடுகளுக்கும், ஐ.நா சபைக்கும் தொடர்ந்து அறிவித்து வந்தது - பிரிவினைவாத பயங்கரவாத கிளர்ச்சி அமைப்புக்கெதிராக இடம்பெறும் போராட்டம் இது என்று.
எனினும் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் சாசனத்தை ஏற்றுக் கையொப்பம் இட்ட நாடுகளில் ஒன்று.
இலங்கையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து,
இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கைகளின் மூலமே அரசாங்கம் தீவிரவாதத்தை இல்லாதொழித்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.
இதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் மக்கள் வசிக்கும் பிரதேசங்களின் மீது விமான குண்டு வீச்சு நடத்தியதாகவும் ஷெல் தாக்குதல் மேற்கொண்டதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களாலும் புலம் பெயர் தமிழர்கள் அமைப்பினாலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையினாலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் புரியவில்லை என்பதோடு யுத்தகுற்றங்களும் இடம்பெறவில்லை எனவும் அறிவித்தது.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட பாரிய மனித அவலங்களின் மீதான கண்டனங்களை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் சாசனத்திற்கு ஏற்றவாறு இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகள் நடைபெறும் என இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டது.
இதன்பிரகாரமே இலங்கை விவகாரங்களில் ஜெனீவாவில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் சபை தலையீடு செய்கின்றது.
இந்நிலையில இலங்கை அரசாங்கம் தெரிவிப்பது போன்று இலங்கையில் யுத்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லை என்றால் இலங்கையில் சுயாதீன விசாரணை ஒன்றை நடத்த அனுமதியளிக்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் சர்வதேச நாடுகளின் தலையீடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
இலங்கையில் வெளிநாட்டு குழுக்களுக்கு யுத்த குற்றச்ச்hட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இடமளிக்காத அரசாங்கம் சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கி தருமாறு பல நாடுகள் வலியுறுத்தின.
பல நாடுகள் வலியுறுத்தியும் இணக்கம் தெரிவிக்காத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் போக்கு அமைந்திருந்தது.
இதன்போதே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிக்கையே தருஸ்மன் அறிக்கை எனவும் நிபுணர் குழு அறிக்கை எனவும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கைக்கு பதிலளிக்காத இலங்கை அரசாங்கம் குறித்த அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இல்லை எனவும் அறிக்கையை நிராகரிப்பதாகவும் அறிவித்தது.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கும் நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுனர் குழு.
அரசாங்கத்திற்கு அடுத்த நெருக்கடியை தந்தது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 18 ஆவது கூட்டத்தொடர் கடந்த வருடத்தில் ஓகஸ்ட் காலப்பகுதியில் இடம்பெற்றது.
இதில் பங்கேற்கும் கடப்பாடும் இலங்கை மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் கட்டாய நிலையில் இலங்கை அரச பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவாவிற்கு விஜயம் செய்தது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 18 ஆவது கூட்டத்தொடரில் விளக்கமளித்து உறுதியான தீர்வின்றி சமாளித்து தாயகம் திரும்பியது ஜெனீவாவிற்கு விஜயம் செய்த இலங்கை பிரதிநிதிகள்.
சர்வதேச மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விஷேட தூதுவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்கவின் குழுவினர் ஜெனீவா தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளளோம் என அறிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் சூடு பிடிக்காமைக்கு காரணம் இரண்டாவது முறையாகவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவி வகிக்க பான் கீ மூன் போட்டியிட்டமை.
இலங்கை மீதான குறித்த குற்றச்சாட்டை சாதகமாக பயன்படுத்தி பான் கீ மூனுக்கே வாக்களிக்க செய்தமை அவரின் இராஜ தந்திரம் என்றும் சொல்லலாம்.
ஆனால், இலங்கை மீது பொருளாதார தடையை ஏற்படுத்தவும் பல நாடுகளிடம் இதற்கு ஆதரவு திரட்டவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் உள்ளிட்ட ஐரோப்பிய தரப்பினர் மறைமுகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அத்தோடு இந்தியாவின் மறைமுக ஆதரவும், இலங்கை தனக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் வியூகம் வகுத்து தடைகளைக் கொண்டுவருவதாக இருந்தால் அவற்றுக்கு எதிரான வியூகங்களை வகுக்க ரஷ்யா, சீனா ஆகியவற்றின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் உத்தியும் இலங்கையைத் தற்காலிகமாகக் காப்பாற்றித் தக்க வைத்தது என்று சொல்லலாம்.
19 ஆவது கூட்டத்தொடரை சமாளிக்குமா 57 பேர் கொண்ட இலங்கை அரச பிரதிநிதிகள் குழு??
முன் அனுபவமற்ற இலங்கை அரசாங்கம் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) என ஒரு குழுவை நியமித்து 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சிகளை பதிவு செய்தது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்களை கொண்டு அறிக்கை ஒன்றை தயாரித்து பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
இது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை என அனைவராலும் அழைக்கப்படுகிறது.
அரசாங்கத்தினால் தயாரித்து வழங்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் யுத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க போதுமானதாக அமையவில்லை என சர்வதேச நாடுகள் விமர்சித்தன.
எனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளையாயினும் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தியது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதால், இப்போது இலங்கை எதிர்நோக்கும் மிக முக்கிய சிக்கல், யுத்தம் நடந்துமுடிந்த மூன்று ஆண்டுகளிலும் இலங்கை என்ன செய்தது? சர்வதேசத்தால் எழுப்பப்பட்ட சந்தேகங்களை இலங்கை எவ்வாறு தெளிவுபடுத்திக்கொண்டது, இல்லாவிட்டால் அதற்கான தெளிவாக்கல் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டிருக்கிறதா என்ற கேள்விகளை இலங்கை எதிர்கொள்ளும்.
அத்துடன் நேற்றும் கூட, பிரித்தானியாவும், அமெரிக்க அரசின் ராஜாங்கப் பிரதிநிதிகளும் நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையாவது நடைமுறைப் படுத்துமாறு வலியுறுத்தி இருக்கின்றன.
எனவே திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனீவ கூட்டத்தொடரில் இதுவரை இலங்கை காணாத அழுத்தங்களை இலங்கை இம்முறை எதிர்கொள்ளும் என்பது உறுதி.
இதில் பங்கேற்கும் வகையிலும் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தின் புத்தி ஜீவிகளாக பட்டியல்படுத்தப்பட்ட 57 பேர் குழுவொன்று ஜெனீவா பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், மஹிந்த சமரசிங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் சிறி பால டி சில்வா, ரிஷாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்களும் சட்ட மா அதிபரும், சட்டமா அதிபர் காரியாலயத்தின் பிரதிநிதிகள் 50 பேரும் விஜயம் செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைக்கும் எனவும் அதற்கு அதரவாக அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் செயற்படும் எனவும் அண்மையில் ஹலரி கிளிண்டன் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு எதிரான பிரேணைகள் முன்வைக்கப்பட்டால் அதனை வெற்றிகரமாக நிராகரிக்கும் உண்மை சான்றுகளுடனேயே நாம் ஜெனீவா சென்றுள்ளோம் எனவும் ஜெனீவாவிற்கான இலங்கை அரசாங்கத்தின் பிரதிநதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவருவதில் ஐரோப்பிய நாடுகள் இவ்வளவு முனைப்புக் காட்டுவதில் மனித உரிமை பற்றிய அக்கறை தாண்டி ராஜதந்திர, அரசியல் ரீதியான வல்லரசு முனைப்புக்களும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இலங்கையின் நட்புக்கலான சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் மூக்கை உடைக்கவும் , இந்தியாவின் நேரடித் தலையீடு இலங்கையிலும் இந்து சமுத்திரப் பகுதியிலும் இருப்பதைக் கொஞ்சமாவது குறைக்கவும் அமெரிக்கா தனது நேச நாடுகளுடன் சேர்ந்து இலங்கையை முடக்குவதனூடாக அடையும் என்பதும் தெளிவு.
இந்தக் கூட்டத்தொடரில் வருடாந்தம் நடைபெறுவதைப் போல, ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பு நாடுகளின் மனித உரிமை மீளாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த மீளாய்வு நடத்தப்பட உள்ளது.
நாட்டின் மனித உரிமை நிலைமைகள் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டநடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு இந்த அமர்வில் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இம்முறை இலங்கைக்கான இந்த வாய்ப்பை இலங்கை எவ்வாறு பயன்படுத்தும் என்ற கேள்வி எல்லோருக்குமே உள்ளது.
இலங்கை ஒன்றில் ராஜதந்திர அஸ்திரங்களை (கெஞ்சல், கொஞ்சல், சரணடைதலும் இவற்றுள் அடங்கும்) பயன்படுத்தி பேரவையின் கூடத்துக்கு முதல் தனக்கெதிரான தீர்மானங்களை நிறுத்தப் பார்க்கும் - இதற்காகத் தான் இத்தனை பெரிய தூதுக்குழு முற்கூட்டியே ஜெனீவா பயணமாகியுள்ளது.
இல்லை தகுந்த ஆதாரங்களையும், பெரிய ஆதரவுகளையும் பயன்படுத்திப் பார்க்கும்
மூன்றாவது - இவை இரண்டும் சரிவராமல் போனால் கால அவகாசம் கேட்டு, ஒக்டோபர் மாதத்துக்குள் ஏதாவது செய்துகொள்ள முயற்சிக்கும்.
இதை விடுத்து இலங்கையில் ஆம் திகதி அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மக்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்து மக்களை உசுப்பேற்றி திசை திருப்பி விடுவதெல்லாம் சும்மா தான்..
இலங்கைக்கு எதிராக வரும் தீர்மானம் மூலம் நடைபெறக் கூடிய விடயங்கள் -
நிதியுதவிகள் நிறுத்தப்படலாம்
பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படலாம்
யுத்தக் குற்ற விசாரணைகள் மேலும் தீவிரமாகக் கொண்டு வரப்படலாம்.. (போஸ்னிய - செர்பிய யுத்தக் குற்ற விசாரணைகள் மூலம் ஸ்லோபோடன் மிலோசெவிக் தண்டிக்கப்பட்டது போல)
ஆனால் ஏற்கெனவே விலையேற்றம், ஆர்ப்பாட்டங்கள், மீண்டும் ஆரம்பித்திருக்கும் ஆட்கடத்தல்கள் மூலமாக நொந்துபோயிருக்கும் அப்பாவி மக்களையே இந்த நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் என்பதும் யோசிக்கவேண்டிய விஷயமே..
மீண்டும் உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள், மேலும் தெளிவாக்கல் + திருத்தங்களுக்காக..
உங்களுடன் சேர்ந்து திங்கள் இரவுக்காக காத்திருக்கிறேன்..