மெரீனா

ARV Loshan
6



மிகத் தாமதமாகப் பார்த்த படம்.. தெஹிவளை கொன்கோர்ட் அரங்கில் பார்த்த காட்சி தான் கொழும்பில் இறுதிக் காட்சி.
உங்களில் பலர் பார்த்திருக்கலாம்; பல விமர்சனங்களும் வாசித்திருக்கலாம்..

ஆனால் பார்த்த உடனேயே நினைத்தது விமர்சனமாக இல்லாவிட்டாலும் ஏதாவது எழுதவேண்டும்.

'மெரீனா' நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த ஒரு படம்..
'பசங்க' பாண்டிராஜ், சின்னத்திரையில் மனம் கவர்ந்த சிவ கார்த்திகேயன், பட விளம்பரங்களில் வந்த சிறுவர்கள், 'வணக்கம் வாழவைக்கும் சென்னை' விளம்பரப் பாடல் என்று பல விஷயங்கள்...

ரொம்ப சிரமப்பட்டு விமர்சனங்கள் எவற்றையும் வாசிக்காமல், படம் பார்த்தவர்கள் கதை சொல்லாமல் இருக்கப் பார்த்துகொண்டு படம் பார்க்கப் போயிருந்தேன்..

மெரீனா கடற்கரையில் நிகழும் சம்பவங்கள், அந்தக் கடற்கரையோரம் வாழும் சிறுவர்கள், ஆதரவற்றோர், அங்கே பிழைப்பு நடத்தும் மக்கள் பற்றிய கதை..
மெரினாவை ஒரு கதைக்களமாக மாற்றிய இயக்குனர் பாண்டிராஜ் பாத்திரங்களையும் பார்த்துப் பார்த்துப் படைத்திருக்கிறார்.

வணக்கம் வாழவைக்கும் சென்னை பாடலின் பின்னணியுடன் வரும் பெயரோட்டத்தில் 'பக்கோடா' பாண்டியின் பெயர் முதலாவதாக வரும்போதே இயக்குனர் எதோ ஒரு வித்தியாசம் வைத்திருக்கிறார் என்று புரிகிறது.
'மெரீனா'வின் கதாநாயகன் என்று சொல்லப்பட்டு வந்த சிவகார்த்திகேயனின் பெயர் மூன்றாவதாக வருகிறது.



கதையும் அப்படித்தான்.. படம் முழுக்க விரிந்து நிற்கிற கதாபாத்திரம் சின்னஞ்சிறுவனான பாண்டி தான்.. பெற்றோரை இழந்து சித்தப்பாவின் அசுரப்பிடியிலிருந்து தப்பி சென்னையில் பிழைக்கவும் படிக்கவும் ஆசை கொண்ட சிறுவன் அம்பிகாபதியை சுற்றி செல்லும் கதை..
அவனுக்கு நண்பன் ஆகிற கைலாசம், உதவி செய்கிற ஆதரவற்ற பிச்சைக்காரத் தாத்தா, கூடத் தொழில் செய்யும் சிறார்கள், குதிரையை வைத்துப் பிழைப்பு நடத்துவோர், டோலக் வாசித்துப் பாட்டுப் பாடி மகளை ஆடவைத்துப் பிழைப்பு நடத்தும் ஒருவர், இந்த சிறார்களுக்கு உதவும் மனது கொண்ட தபால்காரர் என்று மெரினாவை விட்டு கதை வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்வது இயக்குனரின் திறமை.

ஆனால் சொல்ல வந்ததை அவர் சரியாக சொன்னாரோ, அல்லது நாம் இவர் சொல்வார் என்று எதிர்பார்த்ததை பாண்டிராஜ் சொல்லாமல் விட்டாரோ என்பது விவாதத்துக்குரியது..
பாசம், பராமரிப்பு, படிப்பு இல்லாமல் அவதிப்படும் கடற்கரையோர சிறார்களைக் காட்டுவதற்குப் பதிலாக - ஆடிப்பாடி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டு, நேரகாலம் தெரியாமல் நண்பர்களோடு கும்மாளமிட்டு, தமக்குள்ளே மகிழ்ச்சியாக வாழும் சிறுவர்களைத் தான் 'மெரீனா' காட்டுகிறது.
இதுவே இன்னும் வீட்டில் கோபித்துக்கொண்டு, கல்வி வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு எத்தனை சிறுவர்களை கடற்கரை சிறுவர் தொழிலாளர்களாக மாற்றிவிடுமோ என்ற ஆதங்கம் உண்மையில் வருகிறது.
உருக்கமான ஒரு சில காட்சிகளை உப்பு, உறைப்பு போல ஆங்கங்கே தூவிவிட்டு நகைச்சுவைக் காட்சிகள், நக்கல் நையாண்டி, சிறுவர்களின் குறும்பு என்றே படம் முழுக்க செல்கிறது.
பிச்சைக்காரத் தாத்தா, பாடகரும் மகளும் என்று சில சில பாத்திரங்கள் உருக்க என்றே உலா வருகின்றன.

அப்போ, சிவகார்த்திகேயனும் ஓவியாவும் என்ன செய்கிறார்கள் என்றால்??
அவர்கள் தான் நகைச்சுவைப் பகுதியை பூர்த்தி செய்கிறார்கள். அவர்களின் காதல் காட்சிகள் செம காமெடி.. ஊடல்களும் மோதல்களும் அதற்குப் பதிலடிகளும் என்று கலகல தான்.. அலுக்காமல் ரசிக்க வைத்திருக்கும் காட்சிகள்.
சிரிப்பொலிக்கு குறைவேயில்லை.. (நான் பார்த்த நேரம் மொத்தமே ஒரு இருபது பேர் தான்)

இடைவேளைக்கு கழிவறை போன போது நடுத்தர வயது மனிதர்கள் இருவர் பேசிக்கொண்டது
"இப்பிடியான படங்கள் எண்டால் பயப்பிடாமல் மனுசி, பிள்ளையளோட வரலாம்.. மற்றப் படங்கள் எண்டால் என்னத்தைக் காட்டுவான்களோ எண்டு பயந்துகொண்டேல்லே பார்க்க வேண்டி இருக்கு"

இன்னொரு டயலாக் - இது ஒரு இளைஞர் ஆதங்கப்பட்டது "மச்சான், சிவா பாவம்டா.. ஹீரோ எண்டு பில்ட் அப் குடுத்து சந்தானம் மாதிரி ஆக்கிட்டான் இந்த டிரெக்டர்"

வணக்கம் பாடல் தவிர, வேறெந்தப் பாடலுமே மனதில் ஒட்டவில்லை.. எல்லாப் பாடல்களும் கதை சொல்லிகளாக (montage) வந்தது தான காரணமோ தெரியவில்லை..

எப்படிப்பட்ட படமாக இதைத் தரப்போகிறேன் என்று இயக்குனர் முடிவெடுத்திருந்தாலும் , கடற்கரையோர சிறுவர்களின் கல்வி பற்றி, அவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு பற்றி அழுத்தமாக படத்தில் கௌரவ வேடம் ஏற்றுள்ள ஜெயப்பிரகாஷ் பேசுவதால் கொஞ்சம் சீரியஸ் தன்மையும் இந்த சிறுவர் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைப் பற்றி 'மெரீனா' சொல்லும் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் ஏமாற்றமாகிப் போவதால் எதோ அரைகுறைப் படைப்பு ஒன்றைப் பார்ப்பதாக ஒரு ஏமாற்றம் வருவதைத் தவிர்க்க முடியாததாகிறது.

'பசங்க' மூலம் மனதில் இடம் பிடித்தவராதலால் பாண்டிராஜே அந்த என்னத்தை எமக்குள் ஏற்படுத்தி இருக்கிறாரோ என்னவோ?
அதிலும் சிறுவர்களைப் பிரதானப்படுத்தியே இந்தப்படமும் வந்திருப்பதாலும் அதே பசங்க நேர்த்தியை நாம் எதிர்பார்க்கிறோமோ?

கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கோர்வையான விவரண விஷயங்கள் என்று வந்திருக்கும் மெரீனா பாண்டிராஜுக்குப் பாராட்டுக்களைப் பெரிதாகக் கொடுக்காது.. ஆனாலும் பாடங்கள் சிலவற்றைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.

மெரீனா - இன்னும் எதிர்பார்த்தேன். 

Post a Comment

6Comments

Please Select Embedded Mode To show the Comment System.*