முதல் நாளே சில படங்களைப் பார்த்துவிடவேண்டும் என்று ஆசைப்படுவேன். அப்படி முதல் நாள் பார்க்க வாய்ப்பில்லாமல், மூன்றாம் நாளில் கூட முக்கியமான பல வேலைகளின் இடையே அவசர,அவசரமாக ஓடிச் சென்று அதிலும் திரையரங்கு நிறைந்த ரசிகர்களோடு பார்ப்பதென்றால்.. அண்மையில் இலங்கையில் ஒரு சில திரைப்படங்கள் மாத்திரமே இவ்வாறு முதல்மூன்று நாட்கள் Houseful ஆக எல்லாத் திரையரங்கிலும் நிறைந்ததாக ஞாபகம்..
எந்திரன், மங்காத்தா இன்னும் வெகு சில மட்டும் தான்..
நண்பன் பார்க்கப் போவதாக இருந்தால் நான் சொல்லும் இந்த விஷயங்களைக் கொஞ்சம் கவனியுங்கள்..
ஹிந்தி 3 Idiots பார்த்திருந்தால் அதை மனதில் வைத்துக்கொண்டு நண்பனைப் பார்க்காதீர்கள். இதை ஒரு புதிய படமாக எண்ணிக்கொண்டே பாருங்கள்.
(நானும் ஆரம்பக் காட்சிகளில் படத்தில் ஒன்றிக்க ரொம்பக் கஷ்டப்பட்டேன்)
விஜயின் படம், ஷங்கரின் படம் என்று எந்த ஒரு எதிர்பார்ப்பும் வேண்டாம்.
கதை என்ன எங்கே இருந்து வந்தது, எப்படியாக நகர்கிறது - இப்படியெல்லாம் பழைய புராணம் சொல்லப் போவதில்லை நான்..
கதை + இத்யாதிகள் அறிய விரும்பினால் எனது முன்னைய 3 Idiots பதிவை வாசியுங்கள்...
3 Idiots - 3 இடியட்ஸ் - All is well.
ஹிந்தியின் 3 Idiots மூலப் பிரதியிலிருந்து எள்ளளவும் மாற்றாமல் காட்சிகள், கமெராக் கோணங்கள் பாத்திரங்கள், சில பாத்திரப் பெயர்கள் என்று அப்படியே போட்டோ பிரதி பண்ணியிருக்கிறார் ஷங்கர். (ஒரு காதல் பாடல் மட்டும் மேலதிகமாக சேர்த்துள்ளார்)
இதனாலேயே ஆரம்பத்திலே இயக்கம் மட்டும் என்று தன் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதற்காகவே ஷங்கருக்கு நன்றி சொல்ல வேண்டும்.. இந்தியாவின் மிகப் பெரிய இயக்குனராக உருவெடுத்த பிறகும் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்ற ஒரு படத்துக்கும், திரைக்கதை + இயக்குனருக்கும் ஷங்கர் கொடுத்துள்ள மரியாதையாகவே மாற்றங்கள் ஏதும் இல்லாமல் நண்பனைக் கொடுத்திருப்பதை நான் கருதுகிறேன்.
ஷங்கரை மனம் திறந்து உயர்வாகப் பாராட்ட இன்னும் சில காரணங்கள் -
விஜய் என்ற மாஸ் ஹீரோவை பாரி என்ற ஒரு பாத்திரமாகவே கருதி ஹிந்தியில் அமீர்கான் செய்துள்ள அத்தனை விடயங்களையும், சந்தித்துள்ள அத்தனை விடயங்களையும் செய்ய விட்டுள்ள துணிச்சலும், அப்படி இருந்தும் விஜய் ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருப்பதும் எல்லா இயக்குனர்களாலும் முடிந்திராது.
அடுத்தது பொருத்தமான பாத்திரத் தெரிவுகள்..
முதலில் விஜய்.. அமீர்கான் வேறு விஜய் வேறு தான். ஆனால் அவர் ஹிந்திக்குப் பொருத்தமாக செய்து இளைஞர் முதல் அத்தனை தரப்பினரது மனதை அள்ளியது போல, விஜயால் தமிழுக்குக் கொடுக்க முடிந்திருக்கிறது.
அடுத்து ஜீவா & ஸ்ரீக்காந்த் - ஷர்மான் ஜோஷி & மாதவன் செய்த பாத்திரங்களை அதே பொருத்தமாகத் தமிழில் இவர்கள் தந்திருப்பதைப் பார்க்கையில் வேறு யாரையும் இவர்களுக்குப் பதிலாக யோசித்துப் பார்க்க முடியாததே ஷங்கரின் வெற்றி தானே?
சத்யராஜ் - வைரஸ் பாத்திரத்தில் போமன் இரானியைப் பார்த்த எமக்கு அச்சொட்டாக சத்யராஜ் தமிழில்.. நடை, உடை, பாவனை என்று சத்யராஜ் கலக்குகிறார்.
இலியானா - ஏனோ கரீனாவை விட எனக்கு இந்த ரியா பாத்திரத்தில் இவர் அதிகமாகப் பொருந்தியதாகத் தெரிகிறார். முன்பே தமிழில் வேறு படங்களில் நடித்த கதாநாயகி யாராவது நடித்திருந்தால் இந்த fresh இருந்திராது என்று நினைக்கிறேன். அடுத்து அந்த முத்தமிட்டால் முட்டிக்கொள்ளும் நீள மூக்குக்காகப் பிரத்தியேகமாக இலியானாவைத் தேர்வு செய்தாரோ?
சத்யன் - விஜய், சத்யராஜையும் தாண்டி இந்தப் படத்தில் ஒருவர் பிரகாசிக்கிறார் என்றால் அது சத்யன் தான். ஷங்கர் இவரைத் தெரிவு செய்தார் என்றால் எம்மில் பலரையும் அது முதலில் ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். ஆனால் ஹிந்தியில் ஓமி வித்யா செய்ததை விட சத்யன் பலமடங்கு சிறப்பாக செய்திருக்கிறார். ஷங்கர் இவர் மீது வைத்த நம்பிக்கைக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட்.
எனக்கு இது மிக ஆச்சரியமாகவும், ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. வேறு மொழியில் வந்த படம் அப்படியே ஒரு translation படமாகப் பார்த்தது இதுவே முதல் தடவை.
வழமையாக ராஜா, தரணியின் படங்களில் 'தமிழுக்கு ஏற்ற மாதிரி' மாறுதல்கள் செய்யப்பட படத்திலிருந்து மாறுபட்டுத் தெரிவது நண்பனின் ஸ்பெஷல்.
அதே கதை, அதே திரைக்கதை, அதே காட்சியமைப்பு, அப்படிஎயான இயக்கம் என்பவற்றால் அவை பற்றிப் பேசாமல், ஏனைய விஷயங்களைப் பார்த்தால்....
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு - வாவ்.. ஊட்டியின் குளிர்மையும், கல்லூரியை மேலிருந்து காட்டுகின்ற காட்சியும் சிகரம் என்றால்.. ஏனைய ஒவ்வொரு சின்ன சின்ன காட்சிகளிலும் சிலிர்க்க வைக்கிறார்.
ஹரிஸ் ஜெயராஜ் - பாடல்களில் கலக்கியவர், பின்னணி இசையில் பெரிதாக சோபிக்கவில்லை. உருக்கமான காட்சிகளில் ஹரிஸும் உருகிவிட்டாரோ?
(மதன்) கார்க்கி + ஷங்கர் - வசனங்கள்.. மதன் இல்லாமல் கார்க்கி மட்டுமே பாடல்கள், வசனம் - கார்க்கி என்று வருகிறது. மதன் கார்க்கி என்பதில் இருக்கும் அழகு, வெறும் கார்க்கியில் இல்லையே :)
பாடல்களில் எங்களை சொக்க வைத்த கார்க்கி, வசனங்களில் லயித்து ரசிக்க வைக்கிறார். மொழிபெயர்ப்பாகத் தெரிந்துவிடும் அபாயத்தை தனது மொழிப் புலமையாலும், ரசிக்கக் கூடிய சில சொற்களாலும் இல்லாமல் செய்து சுவைக்கவைக்கிறார்.
அதிலும் சத்யனின் சொற்பொழிவுக் காட்சி திரையரங்கில் non stop சிரிப்பலை.
கற்பித்தல் - கற்பழித்தல் ஆவதும், கொள்கை - கொங்கை, கல்வி - கலவி என்று ஓயாமல் சிரிக்க வைக்கிற வசனங்கள்..
கொஞ்சம் விளிம்பு தாண்டினாலும் விரசமாகிவிடக் கூடிய இடங்களில் கத்தி நடை- கலக்கல் கார்க்கி.
விஜய் அதிகமாக மினக்கெடவில்லை. கொடுத்த பாத்திரத்தைக் கனகச்சிதமாக, அழகாக செய்திருக்கிறார். அமீர்கான் படம் முழுதும் அணிந்த அதே விதமான round neck t shirts , ஒரு துள்ளல் நடை, சிநேகமான புன்னகை என்று அழகாக இருக்கிறார் விஜய். சச்சின் படத்தில் நான் ரசித்த அதே விதமான இளமை + துடிப்பான விஜய்.
அதிலும் இருக்கான்னா பாடலில் ஒரு stylish தாடியுடன் வருகிறார். அசத்தல்.
பல காட்சிகளில் சிறப்பாக நடிக்கவும் செய்கிறார்.
விஜயின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக நண்பன் இருக்கும் என்பது உறுதி.
சத்யராஜ் - சொல்லவே தேவையில்லை. ஆனால் அவரது வழமையான நக்கல், நையாண்டிகள், குத்தல், குசும்புகளை நாம் மிஸ் பண்ணுகிறோம். சத்யராஜாக பார்க்காமல் அந்தக் கால்லூரி முதல்வர் விருமாண்டி சந்தானமாகவே பார்க்க முடிகிறது. இதுவும் அவருக்குக் கிடைத்த வெற்றியே.
ஸ்ரீகாந்த், ஜீவா இருவருக்குமே விஜய்க்கு இணையாகக் காட்சிகள். அதிலும் ஜீவாவுக்கு நகைச்சுவை, கோபம், சோகம் என்று பலதையும் காட்டக் கூடிய வாய்ப்பு.
சத்யன் கிடைக்கும் வாய்ப்புக்களிலெல்லாம் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விட்டு செல்கிறார். இவர் ஒரு வித்தியாசமான நடிகர். வடிவேல், சந்தானம், விவேக் வகையறாக்களில் சேர்க்க முடியாது. நல்ல வாய்ப்புக்கள் தொடர்ந்து கிடைத்தால் மேலும் கலக்குவார்.
இலியானா - அந்த துறு துறு கண்களும், முயல் முன் பற்களும், நீண்டு நிற்கும் மூக்கும் ஒரு ரசனையான கலவர அழகு. அபார அழகு என்று சொல்ல முடியாது எனினும், இருக்காண்ணா பாடல் பார்த்தால் கிறங்கிப் போவீர்கள். இடுப்பு அழகும் அனாயச அசைவுகளும் சேர்ந்து கிக் ஏற்றுகின்றன.
காதல் காட்சிகளில் கொஞ்சியே கொள்கிறார்.
S.J.சூர்யாவும் ஒரு சிறு பாத்திரத்தில் வருகிறார்; கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கிவிட்டு செல்கிறார்.
ஷங்கரின் இயக்கத்தைப் பாராட்ட ஒன்றுமே கிடையாது.. எல்லாவற்றையும் ராஜ்குமார் ஹிரானியே (ஹிந்தி இயக்குனர்) செய்து வைத்துவிட்டுப் போய்விட்டாரே.
ஆனால் இறுதிக் காட்சி நான் உண்மையிலேயே எதிர்பாராதது .. அட நம்ம விஜயைக் கூட இப்படி நடிக்க வைக்கலாமா?
ஆனால் விஜயின் இறுதிக்காட்சி கெட் அப் வாய்க்கவில்லை.
அத்துடன் ஹிந்தியில் வைத்தது போலவே வித்தியாசமான பெயர்களாக வைக்கப் போய், தமிழில் இதுவரை இல்லாத பெயர்களாக "பஞ்சவன் பாரிவேந்தன்" , கொசாக்சி பாசப்புகழ் இப்படிப் பெயரெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லை?
Virus என்று வரவேண்டும் என்பதற்காக விருமாண்டி சந்தானம் என்று ஒரு பெயர் வேறு.
பாடல் காட்சிகள் ரசிக்க வைத்தன.. அதிலும் அஸ்கு லஸ்காவில் தனது முன்னைய பாடல் காட்சிகளையே ரசனையோடு கிண்டல் பண்ணி இருப்பதும், இருக்காண்ணாவின் இடுப்பு ஆட்டங்களும், ஹார்ட்டிலே பாடலின் குறும்புகளும் சூப்பர்.
ஹிந்திப் படத்தை ஆங்கில உபதலைப்புக்களுடன் பார்த்து ரசித்ததை விட, நண்பனை இயற்கையாகவே ரசித்தேன்.
ஆனால் ஷங்கரின் படம் என்ற எண்ணமே வராதது படத்தின் வெற்றியா அல்லது ஷங்கருக்குக் குறைவா என்று புரியவில்லை.
நண்பன் - 3 Idiots போலவே என்னை உருக வைத்தான், கிறங்க வைத்தான், தவிக்க வைத்தான், சிரிக்க வைத்தான், காதல் நினைவுகளை மீண்டும் மீட்ட வைத்தான், அழவும் வைத்தான், இறுதியாக ஆனந்தப்படவும் வைத்தான்.
காட்சிகள் பற்றிப் பேசப்போனால் எக்கச் சக்கமாக சொல்ல வேண்டி இருக்கும்.. நீங்கள் ஒவ்வொருவருமே பார்த்து ரசித்தால் உங்கள், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துளிகளும், இனி உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பலவும் கிடைக்கும்.
மீண்டும் ஒரு தடவை இவ்வாரம் நண்பர்களோடு பார்க்கும் எண்ணம் உண்டு..
நண்பன் - இந்த நண்பன் போல யாரு மச்சான் ;)
ALL IS WELL !!!