இந்தியா,பாகிஸ்தான்.... இனி?? இலங்கை??

ARV Loshan
10


உலகக் கிண்ணப் போட்டிகளின் காலிறுதிகள் வரை வந்துவிட்டன.. எப்படித் தான் நாட்கள் ஓடுகின்றனவோ என யோசிக்கத் தோன்றுகிறது.

உலகக் கிண்ணப் பரபரப்பில் நான் ஒரு பதிவர் என்பதே மறந்து ஒரு மாதமாகிறது..
போட்டிகளை மைதானத்துக்கு சென்று பார்க்கும் பரவசத்தில் பதிவுகளை எழுத நேரம் இருந்தும் மனம் ஏனோ சோம்பல் பட்டது..
பதிவுலகில் கண்ணில் படும் பதிவுகளை கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நேரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசித்ததோடு சரி. மிக சிலவற்றுக்கு மட்டும் பின்னூட்டம் போட்டிருந்தேன்..

இலங்கையில் நடந்த பத்துப் போட்டிகளில் எட்டுப் போட்டிகளை மைதானத்தில் பார்க்கும் வாய்ப்பும், மும்பாய், சென்னை போட்டிகளை இந்தியா சென்று பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இப்படியான வாய்ப்பு இனி எப்போதும் இல்லை என்பதால் கிடைத்த அனுபவங்களை கற்றுக்கொண்டேன். பல முக்கியமானவர்களின் அறிமுகம் கிடைத்தது. பெயரளவில் அவர்களின் எழுத்துக்கள் வாயிலாக அறிந்தோரை ஊடகவியலாளர் அறையில் ஒன்றாக இணைந்து பணியாற்றும் நண்பர்களாக அறிந்துகொண்டேன்.
இதைப் பற்றியெல்லாம் உலகக் கிண்ணத்தின் பின்னதாக விரிவாக எழுதலாம்..

முதல் சுற்றுப் போட்டிகள் பற்றியும் எழுதப் புறப்பட்டால் காலிறுதிகள் நான்கும் முடிந்துவிடும்.
ஆனால் முதல் சுற்றுப் போட்டிகளின் சில சாதனைகள், சில வீரர்கள், சில பாடங்கள், சில விடயங்கள் பற்றிப் பதிந்தே ஆக வேண்டும். பிறகு பார்க்கலாம் என்பது தான் இப்போதைக்கு சொல்லக் கூடியது.

இந்தக் கால் இறுதிப் போட்டிகள் நான்கில் ஒன்றே ஒன்றுக்கு மட்டுமே செல்ல முடிகிறது என்பது எனக்குக் கொஞ்சம் மனவருத்தமே.. ஆனால் தவிர்க்க முடியாத மங்கள நிகழ்வு ஒன்று நாளை இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அத்துடன் வங்கதேசத்துக்கான விமானசேவைகளையும் நம்பமுடியாமல் உள்ளது. எனவே இலங்கை எதிர் இங்கிலாந்து போட்டி மட்டுமே காலிறுதிகளில் பார்க்க இருக்கிறேன்.
இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்க முன்னர் நான் எதிர்வுகூறிய அணிகளில் பங்களாதேஷ் காலிறுதிக்குத் தேர்வாகவில்லை; ஆனால் மாறாகத் தேர்வான மேற்கிந்தியத் தீவுகள் மோசமாக, மிக மோசமாகத் தோற்று தாங்கள் தெரிவானதே தவறானது என்பதைக் காட்டிவிட்டார்கள்.

எப்படிப்பட்ட பாரம்பரியப் பெருமை வாய்ந்த அணி, இப்போது இப்படி ஆகி நிற்கிறது. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்காவது உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியாக அரையிறுதி காணாமல் வெளியேறியுள்ளது இந்த 'வேஸ்ட்' இண்டீஸ் அணி.

பாகிஸ்தான் அணி வெல்லும் என்று நேற்றைய பதிவில் எதிர்வுகூறி/விரும்பி இருந்தேன். நடந்துள்ளது.
இந்த உலகக் கிண்ணத்தின் Dark Horses என்று வர்ணிக்கப்பட்ட பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு இன்னும் இரு வெற்றிகளே தேவைப்படுகின்றன.
அணிக்குள் ஒற்றுமையின்மை, வேண்டுமென்றே தோற்க விரும்பும் சில சந்தேகப் பேர்வழிகள், மோசமான, சோம்பலான களத்தடுப்பு, நம்பகமற்ற துடுப்பாட்டம் என்று தங்கள் ஆதரவாளர்களாலேயே நம்பப்படாத அணியாக ஆரம்பித்த பாகிஸ்தான் இந்த உலகக் கிண்ணத்தினை வெல்லும் வாய்ப்புடைய அணியாக மாறியிருப்பது இந்த உலகக் கிண்ணத்தின் மிகப்பெரிய அதிர்ச்சி.
அதிலும் முதல் சுற்றில் இவ்வுலகக் கிண்ண வெற்றி வாய்ப்புடைய இரு அணிகளை மண்கவ்வச் செய்து பலரையும் வியப்புக்குள்ளாக்கியும் இருக்கிறது.

இந்த மாற்றம் எப்படி சாத்தியம்?
ஒரேயொரு காரணம்; ஒரேயொருவர் - ஷஹிட் அப்ரிடி

'92இல் பாகிஸ்தானை சோம்பேறிகளின் கூடாரமாக இருந்து சூறாவளிக் கூட்டமாக மாற்றியவர் இம்ரான் கான்.தலைமைத்துவத்தினூடாக இம்ரான் ஏற்படுத்திய மாற்றத்தை, தன் தனிப்பட்ட சிறப்பான பெறுபேறுகளின் மூலம் அணிக்கு ஊட்டியிருக்கிறார் பூம் பூம்.
இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் அப்ரிடி தான். ஏழு போட்டிகளில் 21 விக்கெட்டுக்கள்.
தனியாக நின்று முதல் மூன்று வெற்றிகளை அப்ரிடி வழங்கிய பின்னர் பாகிஸ்தான் பல்லாக்கைப் பலர் சேர்ந்து உற்சாகமாகத் தூக்குகிறார்கள்.

ஆனால் அடுத்த கட்டம் ஆபத்தானது.. அரையிறுதியில் பாகிஸ்தான் சந்திப்பது இந்தியா.
இதுவரை உலகக் கிண்ணப் போட்டிகளில் எப்போதுமே பாகிஸ்தானிடம் தோற்காத இந்தியா.. அதுவும் இந்திய மண்ணில்.
பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணம் வெல்லும் கனவு நனவாகுமா என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் வந்துள்ள அரையிறுதியில் மொஹாலியில் வைத்துத் தெரியும்.


இந்தியா - சொந்த மண்ணில் சாதிக்கும் வெறியோடு அரையிறுதிக்கான இடத்தை உறுதிப்படுத்திவிட்டார்கள் நேற்று.
பன்னிரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியா இறுகப் பிடித்திருந்த உலகக் கிண்ணத்தை நேற்று அஹ்மெதாபத்தில் இந்தியாவிடம் கண்ட தோல்வியுடன் கைவிட்டு கவலையுடன் வெளியேறியுள்ளது நான்கு தடவை உலகச் சாம்பியனான அணி.

ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி தெரிந்தே இருந்தாலும் இவ்வளவு நாளும் கொஞ்சம் சறுக்கி பின்னர் பொன்டிங் சதத்துடன் பிரகாசிக்கையில் ஆஸ்திரேலியா தோற்று பரிதாபமாக வெளியேறுகையில் மனதில் கொஞ்சம் கவலையாகவே இருந்தது.



இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை உலகின் மிகப் பலமானதும் அனுபவம் வாய்ந்ததும் என்பது எந்த ஒரு காலகட்டத்திலும் எவராலும் சந்தேகப்பட முடியாதது தான். ஆனாலும் முதல் சுற்றின் பல போட்டிகளில் இந்தியா நல்ல ஆரம்பத்தை எடுத்த பிறகு மத்திய வரிசைத் தடுமாற்றத்தில் விக்கெட்டுக்களை இழப்பது வழக்கமா இருந்தது.

ஆனாலும் அந்தக் குறைபாட்டை நேற்றைய போட்டியின் முக்கியமான தருணத்தில் இந்தியா வெற்றிகரமாகக் களைந்து வெற்றியீட்டிக் கொண்டதும் பலவீனமாகக் கருதப்பட்ட பந்துவீச்சு+ களத்தடுப்பையும் ஓரளவு சீர்ப்படுத்தியுள்ளதையும் பார்த்தால் இருபத்தெட்டு வருடக் கனவை மும்பையில் வைத்து நிறைவேற்றி விடுவார்கள் போலவே தெரிகிறது.

அதிலும் சச்சின் டெண்டுல்கரின் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்கள், யுவராஜ் சிங் ஒரு போட்டிகளை வெல்லும் சகலதுறை வீரராக விஸ்வரூபம் எடுத்திருப்பது, சாகிர் கானின் துல்லியம் இந்த மூன்று விடயங்களும் இந்தியாவை மொஹாலியில் மேலுயர்த்தலாம்.

ஆனால் மொஹாலி ஆடுகளத்தின் வேகப்பந்து வீச்சுக்கான சாதக இயல்புகள் பாகிஸ்தானுக்குக் கை கொடுக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு.
உமர் குல் அந்தப் பக்கம்,  சாகிர் இந்தப் பக்கம் என்று வேகப் பந்து இரு அணிகளுக்கும் ஒரு கை ஓசையாகவே இருந்துகொண்டிருப்பதால் துடுப்பாட்டத்தால் தான் அந்த அரையிறுதியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட இருக்கிறது என்று வருகையில் இந்தியா தெளிவாக முன்னால் நிற்கிறது.

இந்தியா மொஹாலி to மும்பாய் பயணத்துக்கு தயாராகி விட்டது.

இன்றைய கால் இறுதி மிர்பூரில் ஆரம்பித்துள்ளது.
இன்றும் நாளையும் வெற்றி பெறும் அணிகள் அநேகமாக இவை தான் என்று உறுதியாகத் தெரிந்துள்ள போதும், நியூ சீலாந்தும் இங்கிலாந்தும் அதிர்ச்சிகளை பெரிய அணிகளுக்குத் தரக்கூடிய அணிகளே..

ஆனாலும் இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்காவும் நாளை இலங்கையும் வென்று கொழும்பில் விறு விறு அரையிறுதியில் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நியூ சீலாந்து இலங்கையை சந்தித்தால் இலங்கை அணி இலகுவாக இறுதிக்கு முன்னேறும்; எனினும் போட்டி மும்பாய் போட்டி போல சப்பென்றாகி விடக் கூடாது பாருங்கோ.

இவ்வளவு நாளும் முதல் சுற்றுப் போட்டிகளில் பெரிதாக ஆதிக்கம் செலுத்தாமல் இருந்த ஆடுகளத் தன்மைகள், நாணய சுழற்சிகள் இனி வரும் போட்டிகளில் முக்கியமானவையாக மாறும்.
இதுவரை இறுதிப் போட்டி காணாத தென் ஆபிரிக்காவுக்கும் நியூ சீலாந்துக்கும் இன்று வாழ்வா சாவா போராட்டம்.
இதுவரை கிண்ணம் வெல்லாத இங்கிலாந்தும் நாளை இறுதி மூச்சுவரை போராடக் கூடும்.கிரேம் ஸ்வான் தான் அவர்களது நாளைய கடவுள்.

ஆனால் முரளி, மென்டிஸ்,ஹேரத்,டில்ஷான் என்று நான்கு முனை சுழலோடு இலங்கை இறங்கி இங்கிலாந்தை மண் கவ்வச் செய்யலாம்.

எப்படிப் பார்த்தாலும் இம்முறை அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகின்ற அணிகள் நான்கும் இதுவரை எந்த உலகக் கிண்ணப் போட்டியிலும் ஒன்றாகத் தெரிவாகவில்லை.
அதிலும் இந்த உலகக் கிண்ணத்தின் முக்கிய ஹைலைட்டே இந்திய - பாகிஸ்தானிய அரையிறுதி.

எனவே மீண்டும் ஒரு தடவை எனது முன்னைய உலகக் கிண்ண முன்னோட்டப் பதிவில் -

உலகக்கிண்ணம் - விக்கிரமாதித்த விளையாட்டு - உலகக் கிண்ண அலசல் 4


எதிர்வுகூறிய விடயத்தையே இங்கேயும் மீள வலியுறுத்துகிறேன்..


இம்முறை முன்னெப்போதும் இல்லாத மாதிரியாக இரு ஆசிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்புக்கள் ஆதிகமாகவே கானப்படுகின்றன.
ஆனாலும் அந்த இரு நாடுகளில் ஒன்று பாகிஸ்தானாக இராது என்றே நம்புகிறேன்.பாகிஸ்தானும் அண்மைக்கால இலங்கை மழை போல ஊகிக்க முடியாதவாறு இருந்தாலும் இறுதி வரை நடைபோடும் பலம் இல்லை என்றே ஊகிக்கிறேன்.

இந்திய - இலங்கை இறுதிப் போட்டி நடக்கவே அதிக வாய்ப்புஎன்று பல பெரிய விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் சொல்வதைப் போலவே நானும் அபிப்பிராயப் படுகிறேன்.

காரணம் இந்த ஆஸ்திரேலிய அணி சம்பியனாகும் அணியாகத் தோன்றவில்லை. போராடி வெல்லக் கூடிய ஆற்றலோ, எந்த சூழ்நிலையிலும் வெல்லும் ஆற்றலோ இந்த ஆஸ்திரேலியாவிடம் தெரியவில்லை.

எனவே இப்போதே பிரகடனப்படுத்துகிறேன் இம்முறை உலகக் கிண்ணம் இரு நீல சீருடை அணிகளில் ஒன்றின் இரண்டாவது உலகக் கிண்ணம்.
இந்தியா வென்றால் சொந்த நாட்டில் வைத்து உலகக் கிண்ணம் வென்ற முதல் அணியாகும்.
இலங்கை வென்றால் போட்டிகளை நடத்தில் உலகக் கிண்ணத்தை வென்ற இரண்டாவது தடவை.

கடந்த வெற்றி போட்டிகளை இலங்கை நடத்திய போதும் பாகிஸ்தானிய மண்ணில் பெறப்பட்டது.

இன்னொரு அதிசயம் இதுவரை விக்கெட் காப்பாளராக இருந்த அணியொன்று உலகக் கிண்ணம் வென்றதில்லை.
தோனி, சங்கா இருவருமே சரித்திரங்களை மாற்றுவதில் விருப்புடையவர்கள்.




காத்திருப்போம்.. நாளை அரையிறுதி அணிகள் எவையென உறுதியாகத் தெரியும்.






Post a Comment

10Comments

Please Select Embedded Mode To show the Comment System.*