நிலாக் காதல் என்ற பெயருடன் பதிவர் வந்தியத் தேவன் ஆரம்பித்துவைத்த அஞ்சலோட்டக் கதை இது..
முன்னைய பகுதிகள்..
வந்தியத்தேவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 01
பவனால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 02
சுபாங்கனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 03
கண்கோனினால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 04
ஆதிரையால் எழுதப்பட்ட கதை நிலாக் காதல் 05
இதெல்லாம் வாசித்திருப்பீர்கள்..இல்லாவிட்டாலும் நிலாக் காதல் 06க்கு செல்லமுதல் முன்னைய ஐந்தையும் வாசித்தபின் வாருங்கள்..
நிலாக் காதல் 06
சற்று முன்னர் கிடைத்த செய்தியொன்று...
எமது செய்திப்பிரிவைச் சேர்ந்த சந்தோஷ் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டுள்ளார். அண்மையில் இவர் சிறந்த இளம் பத்திரிகையாளராக...." செய்தி தொடர்ந்தது.ஒரு கணம் கண்கள் இருட்டி,இதயம் நின்றுவிடுமாற்போல ஆகிப் போனது..
என்னது என் சந்தோஷுக்கா?
கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு
மீண்டும் வரப்போகும் அந்த செய்திக்காக மனதையும் காதையும் உன்னிப்பாக்கிக் கொண்டான்..
மீண்டும் அந்த செய்தியை அறியத் தருகிறோம்..
எமது செய்திப்பிரிவைச் சேர்ந்த சந்தோஷ் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டுள்ளார்......
திகைத்துப் போய் எங்கே போகிறோம்,எதற்குப் போகிறோம் என்றறியாமல் வாகனத்தை அதுபாட்டுக்கு போகவிட்ட ஹரீஷின் மனதில் இப்போது லாவண்யாவோ,நேற்றைய சந்தோஷுடனான மோதலோ இல்லை..
மனம் முழுக்க பதைபதைப்பு..சந்தோஷுக்கு என்ன நடந்திருக்குமோ என்று..
பின்னால் வந்த சாம்பல் நிற பஜெரோக்காரன் அடித்த சத்தமான ஹோர்ன் தான் வாகனம் செலுத்திக் கொண்டிருப்பதை ஹரிஷுக்கு நினைவூட்டியது.
என்ன செய்யப் போகிறோம்.. யாரை அணுகி சந்தோஷ் பற்றி அறியலாம்.. என்றெல்லாம்
மனது கண்டபடி அங்குமிங்கும் அலைபாய, தன்னைத் தானே மீண்டும் நொந்துகொண்டான்..இந்த நேரம் பார்த்து உயிரை விட்டிருந்த தன் செல்பேசிக்காக.
வழியில் எங்காவது communicationஇல் இறங்கி யாருடனாவது பேசலாம் என்று நினைத்தாலும் கடத்தப்பட்டிருக்கும் சந்தோஷ் பற்றி ரகசியங்கள் எங்காவது பரவலாம்;இந்தக்கால சுவர்கள் கூடக் காது முளைத்திருப்பவை என்பதால் ரகசியம் என்பது முக்கியமானது என்றெண்ணிக் கொண்டான் ஹரிஷ்.
வழியெங்கும் நேற்றைய சண்டை பற்றி எண்ணி எண்ணி மனது வேதனைப்பட்டது.
நம்பாத கடவுளையும் மனது அடிக்கடி சந்தோஷுக்காக வேண்டிக் கொண்டது..
"கடவுளே வானொலியில் சந்தோஷ் பற்றி பயங்கரமாக எதுவும் செய்திகள் வந்துவிடக்கூடாது" என்ற வாய் விட்டே அரற்றிக்கொண்டே வாகனத்தைப் படுவேகமாக செலுத்திக் கொண்டிருந்தான்.
சீதுவை,ராகம,ஜா ஏல,கந்தானை என்று இடங்கள் கனவேகமாகக் கரைந்துகொண்டிருக்க,ஹரிஷின் மனது பல இடங்களிலும் அலைபாய்ந்துகொண்டிருந்தது.
லாவண்யாவை விட நண்பன் சந்தோஷ் மனதெங்கும் விரவி நிற்பது புரிந்தது.
சந்தோஷ் மீண்டும் திரும்பிவந்தால் போதும் லாவண்யாவே வேண்டாம் எனும் நிலைக்குக் கூட ஹரிஷ் வந்துவிடுமளவுக்கு வந்துவிட்டான்..
--------------------------------------
மறுபக்கம்..
விமான நிலையத்திலிருந்து வாகனத்தில் வந்துகொண்டிருந்த லாவண்யா நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
ஹரிஷின் செல்பேசி இலக்கம் கிடைத்தும் அது இணைப்பில் வந்தும் அவன் அழைப்பை ஏற்காததும்,பின்னர் off ஆகிப் போனதும் பெரிய ஏமாற்றமாகிப் போனது.
கண்டும் பேசமுடியாமல் போனது,இலக்கம் கிடைத்தும் இணைப்புக் கிடைக்காதது அவ்வளவு தூரம் பரந்துவதது யாருக்காகவோ அவன் அருகிருந்தும் தொலைவாகத் தொலைந்தது போல இருந்தது.
எதற்கும் பின்னால் வேறு எந்த வாகனத்திலாவது ஹரிஷ் வருகிறானா என்று கண்களும் மனதுக்குப் போட்டியாக அலைபாய்ந்து கொண்டிருந்தன.
ஸ்ரீ அங்கிள் கேட்பதற்கு அவளது உதடுகள் மட்டும் பதில் உதிர்த்துக் கொண்டிருந்தாலும் மனது ஹரிஷை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.
அவனை விட்டு விலகவேண்டியிருந்தாலும் லண்டனின் பரபரப்பிலும் மனதெல்லாம் அவனே இருந்ததை அவனிடம் சொல்லவேண்டும்;அவனுடன் வாழவென்றே கடமையை சாக்காக வைத்து இலங்கை வந்ததை சொல்லவேண்டும்;
தன் தங்கை வைஷாலி-சந்தோஷின் காதலில் இடைநடுவே வந்த சிறு விலகலை சேர்த்துவைக்கும் சாக்கோடு தனது காதலையும் வெளிப்படுத்த இலங்கை வந்ததை ஹரிஷிடம் ஆழமாக சொலவேண்டும் என்றெல்லாம் மனம் தவியாத் தவித்தது.
மனம் முழுவதும் காதலின் பாரம் அழுத்த, ஹரிஷ் பற்றி வேறு விஷயம் அறியவும்,தங்கை வைஷாலியின் காதல் பற்றியப் பேச நேரம் எடுக்கவும் மீண்டும் சந்தோஷைத் தொடர்புகொள்ள செல்பேசி இலக்கங்களைத் தட்டினாள்..
மறுமுனையில் "நீங்கள் அழைத்த இலக்கத்தைத் தற்போது அடைய முடியாதுள்ளது......" என்று மும்மொழியிலும் பெண் குரல்கள் ஒலித்தன.
"அட இவனுமா? என்னாச்சு இரண்டு பேரின் செல்பேசிகளுக்கும்?"
-----------------
"கியபாங் .. உம்ப தன்ன தேவல் ஒக்கோம கியபாங்"(சொல்லுடா உனக்குத் தெரிஞ்ச எல்லாம் சொல்லுடா) என்று ஒருவன் அதட்ட ஒரு மூலையில் கொஞ்சம் சோர்ந்தவனாக ஒருக்களித்த நிலையில் இருந்த சந்தோஷை முறைத்தவாறு இன்னும் சிலர்.
கடத்தப்பட்டது முதல் கண்கள் கட்டப்பட்டு இப்போது திறக்கப்பட்ட நேரத்திலிருந்து மிரட்டல்களைக் கேட்டவாறு இருந்தாலும் இன்னும் தன் உடல்மீது ஆயுதங்களோ,கரங்கள்,கால்களோ பாயாதது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
ஆனால் மீண்டும் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதும்,தெரியாத விஷயங்களைப் பற்றியே தன்னிடம் கேட்பதும் ஒருவித பயத்தையும் எரிச்சலையும் தந்துகொண்டிருந்தது.
"மம வென முகுத் தன்ன நே.மம அஹின்சக மாத்யகருவோ"(எனக்கு வேறொன்றும் தெரியாது..நான் ஒரு அப்பாவி ஊடகவியலாளன்) என்று துணிச்சலாக சந்தோஷின் வாய்கள் வார்த்தையை உதிர்த்ததும்
அவனை இங்கே அழைத்துவந்ததிலிருந்து சொல்லப்பட்டுவரும் நக்கலான குற்றச்சாட்டுக்கள் அங்கிருந்த பெரியவனிடமிருந்து வந்தன..
"இவ்வளவு காலம் கொழும்பில் இருக்கிறாய்.மும்மொழியும் தெரிந்திருக்கிறது.
ஆளுவோர்,அமைச்சர்கள்,இன்னும் பலரைத் தெரிந்திருக்கிறது..அத்தனை இடமும் உள் நுழைய முடியும் உன்னால்.. எனவே 'அவர்கள்' உன்னை நிச்சயம் அணுகி இருப்பார்கள்.
எத்தனை தடவை சந்தித்தார்கள்..எங்கெங்கே அவர்களை அழைத்துப் போயிருக்கிறாய்?எந்தெந்த சம்பவங்களுடன் உனக்கு தொடர்பிருக்கு? மரியாதையாக சொல்"
தனக்கு முந்தியவர்களுக்கு நடந்ததெல்லாம் இப்படித்தான் என்று தானறிந்தவை மனதில் நிழலாட சந்தோஷ் கொஞ்சம் கலவரப்பட்டுப் போனான்.
அவனிடமிருந்து பறிக்கப்பட்ட செல்பேசி இப்போது ஆராயப்படுகிறது..
வந்து,போன அழைப்புக்கள் ஒவ்வோன்றாக ஆராயப்படும் என்பது சந்தோஷ் அறியாததல்ல..
அதிகமாக அவனுக்கு வந்த அழைப்புக்கால்,அவன் அதிகமாக எடுத்த அழைப்புக்கள் யாருடையவை என்று யோசிக்க ஆரம்பித்தான்.
"சேர்,வெளிநாட்டு அழைப்புக்கள் நிறைய வந்திருக்கு"
"உடனடியா அந்த போன் கம்பெனிக்கு இந்த நம்பரைக் குடுத்து யார் யாரென்று பாருங்க"
அரை மணிநேரத்தின் பின்...
அந்த இடம் அதகளப்பட்டது..
மீண்டும் விசாரணை..
"யார் அந்த ஹரீஷ்?உன்னுடைய கூட்டாளியா?"
"லண்டனிலிருந்து வந்த பெண் யார்? ஏன் வந்தாள்? என்ன நோக்கம்? நீங்கள் மூன்று பேர் மட்டும் தானா? அல்லது பெரிய க்ரூப்பே இயங்குதா?"
கேள்விகள் மாறி மாறிப் பாய .. பயந்தே போனான் சந்தோஷ்..
"சேர் ப்ளீஸ்.. அவர்கள் எல்லாம் அப்பாவிகள்.. என் நண்பர்கள் மட்டுமே.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது..
நானாவது மீடியாக்காரன்.அவங்களுக்கு ஒன்றும் செய்து போடாதீங்கோ.."
சந்தோஷின் கெஞ்சல்கள் யாரையும் அங்கே இரங்க வைப்பதாகவில்லை.
---------------------
இதே நேரம் வேகமாக பொரல்லை சந்தியை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஹரிஷின் கார்..
'முடியுமான வேகத்தில் வீட்டை அடையவேண்டும்..உடனடியா வீட்டிலிருந்து யாரிடமாவது பேசி சந்தோஷை எப்படியாவது காப்பாற்றவேண்டும்'
மனதில் அந்த சிந்தனைகளே ஓடிக் கொண்டிருக்க வீதியில் அக்கறை இல்லாமல் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த ஹரிஷுக்கு திடீரென முன்னால் திரும்பிய லொறியை அவதானிக்கமுடியவில்லை.
டமார்....
பதிவர் "நா" கவ்போய் மது தொடர்வார்.