ராவணன் - என் பார்வையில்

ARV Loshan
43


ராவணன் திரைப்படத்தின் முதல் காட்சியை நேற்று தெஹிவளை கொன்கோர்ட் திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.


வழமையான முதல் நாள் படம் பார்க்கும் கூட்டம்.


பரபரவென ஆரம்பிக்கும் ஆரம்ப காட்சிகள்.. எதுவித ஆர்ப்பட்டமும் இல்லாமல் நாயகன் விக்ரமின் அறிமுகம்.ஐஸ்வர்யாவை அழகைக் காட்டும் கமெரா முதல் காட்சியிலேயே மனதைப் பறிக்கிறது.


பெயரோட்டம் ஆரம்பிக்கும் போதே விக்ரம்,ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு பலத்த கரகோஷங்கள்.


ஆச்சரியமாக பின்னர் ப்ரியாமணி, ரஞ்சிதாவின் பெயர்கள் தோன்றியபோதும் விசில் ஆரவாரங்களும் கூட..
ரஞ்சிதாவின் பெயர் பார்த்ததுமே நித்தி,நித்தி என்ற கூச்சல்களும் கேட்டது ரஞ்சிதாவிடம் 'நிறைய' எதிர்பார்க்கிறார்கள் எனப் புரிய வைத்தது.


பின்னர் வழமைபோலவே ரஹ்மானுக்கும் மணிரத்னத்துக்கும் பெருவாரியான கரகோஷங்கள்.






வீரா பாடலுடன் எழுத்துக்கள் திரையில்..


வசனம் சுகாசினி.. அட..
அது தான் சில வசனங்களில் சுஹாசினியின் சித்தப்பா கமலும் எட்டிப் பார்க்கிறார்..
'உங்கள் கடவுள் அப்பழுக்கில்லாதவரா?அழகானவரா?' 


மணியின் வழமையான,ஆஸ்தான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்திருப்பது படத்துக்கு ஒரு தனியான உயர்ச்சியைக் கொடுக்கிறது.
ஈரமான,குளுமையான,அழகான,உயரமான இடங்களிலெல்லாம் நாம் உலவுவது போல ஒரு உணர்வை ஒளிப்பதிவு தருகிறது.
சந்தோஷ் சிவனுக்கே உரிய ட்ரேட் மார்க்கான முகில்களும்,பச்சைப் பசேல் பின்னணியும் படத்தின் முக்கிய அம்சங்களாகின்றன.




இசைப்புயல் ரஹ்மான் படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் உயிர்க்கிறார்;ஜொலிக்கிறார்.
மெல்லிய உணர்வுகளை மீட்டும் இசையாகட்டும்,அதிரடி இசையாகட்டும்.. ரஹ்மான் மின்னுகிறார்.


அதிலும் சண்டைக்காட்சிகளின் பின்னணியில் வரும் கலிங்கத்துப் பரணி அருமை.
எங்கேயாவது தேடி எடுத்து மீண்டும் கேட்கவேண்டும்.
படத்தின் இறுதியில் வரும் "நானே வருவேன்" இருக்கையிலிருந்து எழுந்து விடாமல் செய்தது. இன்னும் காதில் ரீங்கரிக்கிறது.


இந்த இரு பாடல்களையும் யாராவது தேடி எடுத்துத் தாங்களேன்.


மணிரத்னத்தின் படங்களில் அதிக சண்டைக் காட்சிகள் இடம் பெற்ற படமாக ராவணனையே கருதமுடியும் என நினைக்கிறேன். விக்ரமினாலும் ரஹ்மானாலும் அந்த சண்டைக் காட்சிகளெல்லாம் அனல் பறக்கின்றன. அலுப்படிக்கவும் இல்லை.


இனி நடிக,நடிகயரைப் பற்றிப் பார்க்க முன், கதை....


நவீன ராமாயணமே..




அப்படியே எடுத்து தந்தால் ராவணனுக்கு பத்து தலை வேண்டுமே என்று சில,பல வசனங்கள்,சில உருவக எடுத்துக்காட்டுக்கள்,சம்பவங்கள்,சில பாத்திரங்களின் குணவியல்புகள் மூலமாக சித்தரிக்கிறார் இயக்குனர்.


அவற்றுள் சில அடடா போட வைத்தாலும், மேலும் சில சலிப்பூட்டுவதையும் தவிர்க்க முடியவில்லை.
மணிரத்னம் படத்தில் என்பதால் மேலும் உறுத்துகிறது.


தன் தங்கையைப் பலியெடுத்த போலீஸ் அதிகாரியைப் பழிவாங்க அவரது அழகு மனைவியைக் கடத்தி செல்லும் தாழ் குடியைச் சேர்ந்த ஒரு முரடனுக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான மோதலே திரைக்கதை.
இடையிலே அந்த முரடன் (தன் மக்களுக்கு அவன் கடவுள் போல) கடத்தி வந்த மாற்றான் மனைவி மீது காதல் கொள்கிறான்.மனைவியை மீட்கப் படையெடுத்து வரும் போலீஸ் அதிகாரிக்கும் வீரையாவுக்கும் இடையிலான மோதலில் இந்த ஒரு தலைக் காதலும் கலக்கிறது.




ராவணன் விக்ரம்.. மனிதர் நடிப்பில் ஒரு ராட்சசனே தான்.. பலத்திலும் உடல் கட்டுக் கோப்பிலும் கூட..
சீதையாக ஐஸ்வர்யா ராய்.. என்ன ஒரு அழகு.. கொஞ்சமும் மாசு மறுவற்ற முகம்.. பேசும்,மிரளும்,காதலிக்க அழைக்கும் கண்கள்..
ராமனாக - மிடுக்குடன் ப்ரித்விராஜ். 
தமிழர் நோக்கில்,ராவணனை ஹீரோவாக்கியதால் ராமனின் நல்ல இயல்புகளைக் குறைத்து வில்லனாக மிகைப்படுத்தியிருக்கிறார்.


அப்படியே கும்பகர்ணன் போல பிரபு(உடல் பருமனும் துணை வந்துள்ளது),விபீஷனனாக முன்னா,சூர்ப்பனையாக முத்தழகு ப்ரியா மணி என்று பரவலாக மூலக் கதை ராமாயணத்தில் கை வைக்காமல் பாத்திரங்களைப் பொருத்தி உலாவிட்டுள்ளார் இயக்குனர்.


அனுமார் யார் என்று எல்லாம் எம்மை சிரமப்படுத்தவில்லை மணி.. கார்த்திக் தன் அறிமுகக் காட்சியிலேயே அங்கும் இங்கும் குரங்கு போலத் தாவியும் சேஷ்டைகள் செய்தும் அனுமன் யானே என்று காட்டி விடுகிறார்.
அதற்காக ஐஸ்வர்யாவைத் தேடி சென்று அனுமன் போலவே கணையாழி போல அடையாளம் கட்ட முற்படுவது எல்லாம் மணிரத்னத்தின் தரத்துக்கு சிறுபிள்ளைத் தனம் போல இருக்கிறது.




விக்ரம் - ஆவேச இராததன்.அக்ஷன் காட்சிகளில் யாராலும் அடிக்கமுடியாத ஆஜானுபாகுவாக மிரட்டுகிறார். முறுக்கேறிய கட்டான உடம்பும்,முறுக்கு மீசையும் உஷ்ணப் பார்வையுமாக வீரையாவாக வாழ்ந்திருக்கிறார்.
ஆவேசப்பட்டு 'கப கப' எனும் போதும் சரி, தாபம்,காதலோடு இங்கேயே இருந்துருங்களேன் என்று கெஞ்சும்போதும், கம்பீரமாக எதிரியை தப்பிக்க அனுப்பும் கண்ணியத்திலும் நடிப்பில் மின்னுகிறார்.
பாத்திரங்களாக இக்கால நடிகர்களில் வாழ்பவர் இவரும் சூர்யாவும் மட்டுமே.


அடுத்த கமல் என்று அடித்து சொல்கிறேன்.




ஐஸ்வர்யா - அழகு.
உருகுகிறார்.உருக வைக்கிறார்.சில இடங்களில் ஏங்கவும் வைக்கிறார்.
கள்வரே பாடலில் வாவ்.. என்னாமாய் உடலை வளைத்து நடனமாடுகிறார்.
நடன அமைப்பு ஷோபனாவாம். அப்படியே ஷோபனா ஐஸ்வர்யாவுக்குள் புகுந்தது போல ஒரு தத்ரூபம்.
கண்களால் பேசும் இடங்களும் அருமை.


"எப்போ வருவீங்க?எனக்கு உண்மையில் துணிச்சலில்லை" என்று தனியே புலம்புவதிலும் பின் கடவுள் சிலை முன்னாள் உருகுவதிலும் நெகிழ வைக்கிறார்.




ப்ருத்விராஜ் - கம்பீரமான ஒரு போலீஸ் அதிகாரி.அழகாக ஹிந்தி நடிகர்கள் போல இருக்கிறார். மணிரத்னப் பட வாய்ப்பு மேலும் பொலிவைத் தந்துள்ளது.விக்ரமின் கம்பீரம் இல்லாவிடினும் சில இடங்கிலாவது ஈடு கொடுக்கிறார்.வசன உச்சரிப்புக்களும் பார்வையினால் மாறுதல் காட்டுவதும் அருமை.
ஐஸ்வர்யாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கையில் அபிஷேக் பச்சனே எரிச்சல் பட்டிருப்பார்.


பிரபு - கம்பீரமான அண்ணன்.வெயிட்டான பாத்திரம்.தாங்குகிறார்.


கார்த்திக்- பிரபுவை விடக் கொஞ்சம் பெரிய பாத்திரம்.சிரிக்கவும் வைக்கிறார். அனுமார் என்பதால் சேஷ்டைகள் விடுகிறார். இவரை தமிழ் சினிமா கதாநாயகனாக இழந்துவிட்டதே என ஏங்கவும் வைக்கிறார்.


ப்ரியா மணி - கொஞ்ச நேரமே வந்தாலும் ஒரு மினி சூறாவளியாக வந்து போகிறார்.அவரது கட்டிக் குரலுக்கேற்ற ஒரு வீரப் பெண் பாத்திரம்.


அரவாணியாக வையாபுரியும்,போலீஸ் அதிகாரியாக 'ஓரம்போ' புகழ் ஜோன் விஜயும் ஏனைய குறிப்பிடத்தக்க பாத்திரங்கள்.




இயக்குனராக மணிரத்னத்தை முன்பு எல்லாத் திரைப்படங்களிலும் வியந்ததையும் ரசித்ததையும் இத்திரைப்படத்திலும் அவர் காப்பாற்றுகிறார்.


முதல் காட்சியில் கம்பீரமாகப் பெரிய படகில் விக்ரம் வந்து ஐஸ்வர்யாவைக் கடத்துவது..
மலையிலிருந்து ஐஸ்வர்யா அதலபாதாலத்திளிருந்து குதிக்கும் பிரம்மாண்டம். (ஆனால் அதை மீண்டும் மீண்டும் ஸ்டன்டாகக் காட்டியது தேவையில்லைப் போல் இருந்தது)
அந்தத் தெப்பக் காட்சி.. சுழலும் கமெராவும் விக்ரமின் முகபாவங்களும் கவிதை.
கடைசிக் காட்சியில் விக்ரம்-ஐஸ்வர்யா உரையாடல்களும் இடையிடையே flashbackஆக வரும் தொங்குபாலக் காட்சிகளும்..


கலிங்கத்துப் பரணியை மிகப் பொருத்தமாக இரு இடங்களில் கையாள்வது class.
ஐஸ்வர்யாவின் ஆடைகளாலேயே கணவரையும் காதலரையும் காதல் பிரிவிலும் தவிப்பிலும் உணர்த்துவதும் கவிதையே. 


அருமையான காட்டு சிறுக்கி பாடலை படத்தில் ஏனோ வைக்கவில்லை. அதற்குப் பதில் ஒரு அடர் குரலில் விருத்தமாக மட்டும் ஐஸ்வர்யா-விக்ரம் இடையிலான ஊடல் சண்டையாகக் காட்டுகிறார்.
ராமர் மனைவி ராவணனோடு டூயட்டா என்று யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்கா?


படம் முழுவதும் இருவருமே தொட்டுக் கொள்ளாமலே நடிப்பதும் ஒரு புதுமையே.


கடவுள் சிலையருகே விக்ரம் கொஞ்சம் தாபம்,கொஞ்சம் வேதனை,கொஞ்சம் கெஞ்சலோடு ஐஸ்வர்யாவிடம் கேட்கும் கேள்விகளும்,பின்னர் செய்யும் காதல் பிரகடனமும் மனசில் நிற்கின்றன..
இங்கேயே பதிவிட்டால் உங்களுக்கு அந்த சிலிர்ப்புக் கிடைக்காது..
பார்த்து உணருங்கள்..உருகுங்கள்.


ஆனால் என்னை மிகக் கடுப்பாக்கிய விஷயம்..
உசுரே போகுதே பாடல் வருமிடம்..
படத்தின் ஆரம்பத்திலேயே இப்பாடல் வந்துவிடுவதால் பாடலும் ஒட்டவில்லை.. அதேநேரம் ராவணின் காதலோ,மோகமோ ஆழமாகப் பதியவுமில்லை. 
வழமையாக மணி பாடல்களை சரியான இடங்களில் பொருத்துவதில் கிங். இம்முறை இந்தப் பாடலில் மட்டும் சறுக்கி இருக்கிறார். 

மணி ரத்னத்தின் படங்களில் வழமையாக இருக்கும் எதோ ஒன்று ஸ்பெஷலான ஒன்று இந்தப்படத்தில் மிஸ்ஸிங்.. ரசிகர்களே நீங்களும் உணர்ந்தால் சொல்லுங்கள்.


நீண்ட காலப் படப்பிடிப்பு இதற்கு ஒரு காரணமோ?


ஆனால் படப்பிடிப்பு நடந்த இடங்களின் தெரிவு மிக அருமை.சாதாரணர் நாம் எல்லாம் நினைத்தும் பார்க்க முடியா இடத் தெரிவுகள்.இந்த இடங்களின் குளுமையை அனுபவிக்கவும் கமெராக் கோலங்களை ரசிக்கவும் மட்டும் மீண்டும் ஒருமுறை ராவணன் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.


உயரமான ஆபத்தான மலைகளைப் பார்க்கும் போது விக்ரம்,ஐஸ்வர்யா மட்டுமல்லாமல் படப்பிடிப்புக் குழுவே பட்டிருக்ககூடிய கஷ்டமும் அவர்கள் எடுத்த கடும் முயற்சிகளும் தெரிகிறது.
ஆனால் படத்தின் மொத்த செலவு 120 கோடி இந்திய ரூபாய் என்பது அழகான,பிரம்மாண்டமான செட்களிலேயே தெரிகிறது.


இறுதிக் காட்சிகளுக்கு கொஞ்சம் முன்னதாக ஒரு சிறு தொய்வு. வழமைக்கு மாறாக மணிரத்னத்தின் படமொன்றில் அதிக வசனங்கள்.
கடவுள் சிலைக்கு முன்னால் விக்ரமும் ஐஸ்வர்யாவும் பேசும் வசனங்களில் தொனிக்கும் காரம் அனேக இடங்களில் மிஸ்ஸிங்.


முடிவு நான் எதிர்பார்த்ததே.. ஆனால் அந்தப் பாடல் ரஹ்மானின் இசையில் மனதைப் புரட்டி எதோ வலிக்க செய்தது.. செய்கிறது.. இப்போது வரை..



நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !




ராவணன் பற்றி ஏகமாக எதிர்பார்ப்புக்கள் இருந்ததோ என்னவோ எனக்கு பூரண திருப்தி இல்லை.
ராமாயணத் தழுவல் என்பதால் அடுத்த காட்சிகள் இப்படி இருக்கும் என ஊகித்து ஊகித்து திரைக்கதையோடு லயிக்க முடியாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கும்.


அங்கு இங்கு என ஆழ்ந்து ரசித்த பல விஷயங்கள் இருந்தும், விக்ரமின் மேல் அபாரமாக ஈர்க்கப்பட்டும், சந்தோஷ் சிவனை நினைத்து நெக்குருகியும்,,ரஹ்மானின் இசை மேல் உயிர் வைத்தும் கூட,


ராவணன் - தனிப்பட எனக்கு முழுத் திருப்தி இல்லை.


மணிரத்னத்தின் தேடலுக்கு இதைவிட இன்னும் பலபடிகள் மேலே ராவணன் விஸ்வரூபம் எடுத்திருக்கலாம்.


நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையோ?
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது
அழுது கொண்டு பூமி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம்..




ரஹ்மானின் குரலில் வைரமுத்துவின் ஆழமான அர்த்தமுள்ள வரிகள் இன்னமும் ஆன்மாவை நிறைத்து இன்னொரு யுகம் வாழும் புத்துணர்வு தருகிறது.
இந்த வரிகளை மீண்டும் இசையுடன் நிரப்பவும் ஒரு தடவை ராவணன் பார்க்கவேண்டும்.
அப்போது பிடித்தால் மறக்காமல் உங்களுக்கு சொல்கிறேன்.


# மனசுல உள்ளதை எல்லாம் கொட்டி முடிக்க அலுவலக மும்முரத்துடன் நேரம் போயிட்டுது. ரொம்ப நேரமாக் காத்திருந்த நண்பர்களே SORRY! 
அடுத்த SORRY இவ்வளவு நீளமாகப் பதிவு போட்டமைக்கு..
என்ன செய்ய மனசிலே இருக்கும் அத்தனை விஷயமும் சொல்ல வேண்டாமோ??

பிற்சேர்க்கை - பல நண்பர்கள் பின்னூட்டங்கள் மூலமாக நான் வருவேன் பாடலை இயக்குனர் மணிரத்னம் எழுதியதாக சுட்டிக் காட்டியிருந்தார்கள்.
ஆனால் ராவணன் பாடல் வெளியீட்டில் ரஹ்மானும் வைரமுத்துவும் உரையாடும்போது
'வீரா' பாடல் மட்டும் வைரமுத்து ஊருக்குப் போயிருந்தநேரம் இயக்குனர் மணிரத்னம் எழுதியதாக சொல்கிறார்கள்.

இங்கே நன்றாக அதைக் கேட்டு அவதானியுங்கள்..
நான் வருவேன் - ராவணன் 

Post a Comment

43Comments

Please Select Embedded Mode To show the Comment System.*