ராவணன் - உசுரே போகுது - ஆண்மையின் தவிப்பு

ARV Loshan
20
ராவணன்






நாளை முதல் உலகெங்கும்..
வழமையான மணிரத்னம் படங்களுக்கு இருப்பது போலவே அதிக எதிர்பார்ப்புக்களும் பரபரப்பும், படம் வரும் முன்னரே, கதை என்னவென்றே தெரியாமல் சர்ச்சைகளும் விமர்சனங்களும்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்தின் நேரடித் தமிழ்ப் படம் ஒன்று வருகிறது.
இதில் வேறு இன்று எதோ ஒரு இணையத் தளத்தில் தன்னுடைய இறுதிப் படமாக ராவணன் இருக்குமென்றும் மணிரத்னம் சொல்லி மேலதிகப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

இன்று மாலையே ராவணன் பார்த்துவிடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என நினைக்கிறேன்.

இலங்கையில் திரையிடப்படவுள்ள ராவணனுக்கு எங்கள் வெற்றி வானொலியே உத்தியோகபூர்வ வானொலி என்பது மேலதிக தகவல் & பெருமை.

ராவணன் பார்க்க வீட்டிலிருந்து கிளம்பு முன், வெளிவந்த நாளில் இருந்து என் உசிரைக் கொள்ளை கொண்ட இந்தப் படத்தின் ஒரு பாடல் பற்றி என் பகிர்வு இந்தப் பதிவு..

வைரமுத்து தான் கவித்துவத்தை மையாகப் பிழிந்து எழுதிய 'உசிரே போகுது...'

கேட்கும் போதெல்லாம் மனசைப் பிழிந்து ஏதோ செய்கிறது.


ராவணனாக உருவகப்படுத்தப்பட்டுள்ள நாயகன் மாற்றான் மனைவி மீது மையலுற்றுப் பாடுகிற பாடலாக இந்தப் பாடலை நினைத்துக் கேட்கையில் உருகி வழியும் விரகதாபமும், அளவு கடந்த காதலும் பாடலில் தொனிக்கிறது.

(இது ராமாயணத்தின் தழுவல் இல்லை என்று மணிரத்னம் சொன்னாலும், படம் பார்த்த பின் தான் அதை நாம் தீர்மானிக்க வேண்டி இருக்கும்.. நாயகன் 'ராவணன்' இல்லாவிட்டால் பாடல் இன்னும் ஒரு அர்த்தம் தரலாம்..)

கார்த்திக் பாடலுக்கு உயிரைக் கொடுத்திருக்கிறார்.வைரமுத்துவின் வரிகள் இவரால் உயிர் பெற்று எங்கள் உயிர்களை அசைக்கிறது.

ஆரம்பத்தில் மெல்லிய மணியோசை(சீன மடாலயங்களில் கேட்கும் மணி போல இருக்கிறது), பேஸ் கலந்த மெதுவான தாளக் கருவியுடன் ஆரம்பிக்கும் இசையில் ரஹ்மான் காட்டியிருப்பது சோகமா,கொஞ்சம் கள்ளத்தனமா என்று யோசிக்கவேண்டி இருக்கிறது.

 இவ்வாறு பேசலாமா பாடலாமா என்பது போல தயங்கித் தயங்கி ஆரம்ப இசையும் விருத்தமும் ஆரம்பிக்கின்றன..
அதன் பின் உணர்வுகள் அறுபட ஏங்கும் மனசு ஓலமிட ஆரம்பிக்கிறது..
குரலிலும் இசையிலும் ஒருவகை உத்வேகமும் ஆவேசமும் எழுகிறது.

உசுரே போகுது என்று அலறும் நாயகன்.. இடையே கொஞ்சம் தயங்கி மடிப் பிச்சையும் கேட்கிறான்.. 

அக்கினிப் பழம் என்று நாயகியை வர்ணிக்குமிடம் அருமை..
இதையே ஒத்த கற்பனையை 'காதல் மன்னன்' படத்தின் உன்னைப் பார்த்த பின்பு தான் பாடலிலும் அவதானித்துள்ளேன்..

'நீ நெருப்பு என்று தெரிந்திருந்தும் 
உன்னைத் தொடத் துணிந்தேன்
என்ன துணிச்சலடி'


உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல

சாதாரண வரிகள்.. ஆனால் உணர்வுகளுடன் சேர்ந்து ஒலிக்கும்போது மனசைத் தொடுகின்றன.
வரிகளை இசைக்கேற்ப உடைக்காமல் கிராமிய சுவையும் காதலின் இனிமையும் சேர்ந்து தொட்டுத் தந்த கவிஞருக்கு என்ன சொல்லி வாழ்த்தினாலும் தகும்.

இந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் முதலில் ஹிந்தியிலே வந்து பின்னரே தமிழில் மாற்றம் செய்யப்பட்டவை என்பதை உணரவே முடியாதவாறு செய்கின்றன வரிகளும் இசையும் பின்னிப் பிணையும் இடங்கள்.

என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா


இதை என்ன சொல்லலாம்? காதல் கிறுக்கா? காமப் பசியா? காதல் வேதனையா?
தீர்த்து வைத்த பின்னர் மன்னிக்க சொல்லும் இந்த இடம் ஒன்று நாயகனின் குழப்பம் சொல்லப் போதும்.

சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

ராவணனாக நாயகன் இருக்கும் பட்சத்தில் அவனது நல்ல இயல்புகளையும் இந்த வரிகளில் பூடகமாக சொல்கிறார் வைரமுத்து..
அவன் சத்தியம் காத்தவன். சீதையைக் காணும் வரை  அவனும் ஏக பத்தினி விரதன். 

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில


இந்த வரிகள் தான் இது இராவணன் - சீதை விவகாரம் என அடித்து சொல்லும் இடம் என நான் நினைக்கிறேன்.
ஒழுக்கத்தில் விலகி செல்லும் பலர் எக்காலத்திலும் இருந்துள்ளார்கள் என நாயகிக்கு சாட்டு சொல்கிறான் நாயகன்..
தொடர்ந்தும்...

விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல

என்று சப்பைக்கட்டு வேறு..


அடுத்த வரிகள் வேதனையுடனும் விரகத்துடனும் கொஞ்சம் இயலாமையுடனும், இவற்றையெல்லாம் தாண்டி சாந்த சுவையுடனும் வந்து குதிக்கின்றன..


எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல

கேட்கையில் மனசை தோ செய்வதோடு, உதடுகள் அடுத்த முறை தானாக முணுமுணுக்கவும் செய்கின்றன.

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே


புத்திக்கு தெரிந்தும் மனசுக்குப் புரியாத நிலையை இதைவிட எளிதாக அதே நேரம் அழகாக சொல்லத் தெரியுமா வேறு யாராலும்?

காதலுக்கும் காமத்துக்கும் இடையில் இருக்கும் ஒரு நூலிழையை அறுக்காமல் ஆட்டி அசைத்து வைரமுத்து தந்துள்ள வரிகளைக் காயமேற்படுத்தாமல் ரஹ்மான் மெருகூட்டி மேலும் உணர்வுகளூட்டி வழங்கி இருக்கிறார்.
பொருத்தமான குரல்களைப் பயன்படுத்துவதில் இசைப் புயலுக்கு நிகர் அவரே என மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளார்.

மனசை அண்மையில் கொஞ்ச நாளாக ஆட்டி வைத்துக் கொண்டுள்ள பாடலை உங்களோடு பகிர்ந்துகொண்டதில் ஒரு ஆத்ம திருப்தி.
இனி காட்சியில் இது எப்படி விரிகிறது என்று பார்க்க முதல் காட்சிக்காக கொன்கோர்ட் திரையரங்கு விரியப் போகிறேன்.


பார்த்திட்டு வந்து பகிர்கிறேன்.

கீழே வரிகளும் , படங்களுடன் ஒலி வடிவில் பாடலும்..

எத்தனை தடவை இதுவரை கேட்டிருந்தாலும் இன்று மறுபடி கேட்டுப் பாருங்கள்.. புதிதாய் ஒலிக்கும்,,.


பாடியவர்கள் : கார்த்திக், முகமது இர்ஃபான்
படம் : ராவணன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து


இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி


உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ.. மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே

அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி


உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கெட்டுத் திரியுதடி
தைலாங்குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி

இந்த மம்முதக் கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிருமா

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே


[உசுரே போகுதே உசுரே போகுதே…]


இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்டயிருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா

நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே


[உசுரே போகுதே உசுரே போகுதே…]




Post a Comment

20Comments

Please Select Embedded Mode To show the Comment System.*