முக்கியமான மூன்று அணிகள் & Cheer leaders - IPL அலசல் பகுதி 2

ARV Loshan
30

காலையில் நான் தந்த அலசல் பகுதி 1க்கு கிடைத்த வரவேற்பையடுத்து உற்சாகத்துடன் இதோ அலசல் பகுதி 2.

சென்னை – ஆரம்பத்தில் சறுக்கல், சொதப்பல், வழுக்கல்களோடு ஆரம்பித்து படிப்படியாக வேகமெடுத்து இப்போது ராஜ பாதையில் பயணிக்கின்றது.இப்போது அணி மிகப் பலமான நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்..

ஹெய்டன் என்ற செம்மஞ்சள் தொப்பியணிந்த (Orange cap) மிகப் பெரிய ஒரு தூணோடு சுரேஷ் ரைனா மட்டும் போராடிக் கொண்டிருந்தார்.. எனினும் அண்மைய போட்டிகள் மூலம் பத்ரிநாத், தோனி ஆகியோரும் நல்ல formக்கு திரும்பியிருப்பது நல்லதொரு சகுனம்.

கடந்த போட்டிகளிலும் ஹெய்டன்,ஹசி போன்றோர் சென்ற பிறகே சென்னை வெளுத்து வாங்க ஆரம்பித்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
இம்முறையும் துடுப்பாட்டப் பலத்துடன் கட்டுப்பாடான பந்து வீச்சும் ஏனைய அணிகளோடு ஒப்பிடும் பொது சிறப்பான களத்தடுப்பும் சேர்வது சென்னைக்கு அபாரமான பலம்.

தோனியின் நுட்பமான தலைமைத்துவமும் சேர்ந்துகொள்ளும் போது சென்னை முடிசூடும் என்று சொல்ல நான் முன்வந்தாலும், பந்துவீச்சின் ஆழம், பலம் இன்னும் கொஞ்சம் அதிகரித்தாலே டெல்லி, டெக்கான் போன்ற அணிகளுடன் தாக்குப் பிடிக்க முடியும். 


காரணம் முரளி, மோர்கல் போன்ற பந்து வீச்சாளர்கள் இன்னமும் முழுத் திறமையைக் காட்ட ஆரம்பிக்கவில்லை.. இனி வரும் முக்கியமான போட்டிகளில் ரைனாவையும்,ஜகாதியையும் நம்பியிருக்க முடியாதே.. 

அடுத்து நான் சமச்சீர்த் தன்மையும், சமமான அணிப் பரம்பலும் உள்ள அணிகள் என்று நான் கருதும் இரு அணிகள் டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டெயார்டெவில்ஸ்.

ஆரம்பித்து ஒரு சில நாட்களிலேயே எனது பதிவில் இவ்விரு அணிகளே இறுதிப் போட்டியில் விளையாடும் என்று எதிர்வு கூறியிருந்தேன். ஆரம்பம் முதலே இவ்விரு அணிகளும் செலுத்திய ஆதிக்கம் அத்தகையது..

நான்கு தொடர்ச்சியான வெற்றிகள் அவை தந்த பெருமிதம்..
அதன் பின் மூன்று தொடர்ச்சியான தோல்விகள் தந்த தடுமாற்றம் ..
டெக்கான் அவ்வளவு தான் சார்ஜ் இறங்கி விட்டது என்று யோசிக்கும் வேளையில் வியூகம் மாற்றிக் கொண்டு எழுந்து நிற்கிறது..

கிப்சின் form போனாலென்ன, எட்வர்ட்ஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போனாலென்ன இன்னும் இருக்கிறார்கள் பாருங்கள் என்று தகுந்த பிரதியீடுகளைக் களம் இறக்கி வெற்றி காணும் வழிமுறை கில்க்ரிஸ்ட்டுக்கும் பயிற்றுவிப்பாளர் லீமனுக்கும் தெரிந்திருக்கிறது.


ஊதாத் தொப்பியின் (Purple cap) தற்போதைய உரிமையாளரான(அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்) R.P.சிங், சுழல் பந்து வீச்சில் தடுமாற வைக்கும் ஓஜா, துடுப்பாட்டத்தில் தடுமாறினாலும் பந்துவீச்சில் அண்மையில் hat trickஉம் எடுத்து டெக்கானின் முன்னணிப் பந்துவீச்சாளராக மாறிவரும் ரோகித் ஷர்மா, சகலதுறை வீரராக அசத்தும் மேற்கிந்திய வீரர் ட்வைன் ஸ்மித், சுமன், வேணுகோபால், புதிதாக அசுர பலம் சேர்க்க வந்திருக்கும் ஆஸ்திரேலியரான அன்றூ சைமண்ட்ஸ், ரொம்பவே தாமதமாக அணிக்குள் அழைக்கப்பட்டுள்ள வாஸ் என்று கில்க்ரிஸ்ட்டின் சகபாடிகள் 



வெற்றி பெறும் வேகமும், தாகமும் டெக்கான் சார்ஜர்சுக்கு இருப்பதும் அணி ஒற்றுமையும் இளையவர்களை தட்டிக் கொடுத்து தூக்கிவிடும் தலைவராக கில்க்ரிஸ்ட் இருப்பதுவும் டெக்கானை இம்முறை கிண்ணத்தைத் தூக்கவைத்தாலும் ஆச்சரியப் படாதீர்கள்.

இதே டெக்கான் அணியா கடந்த வருட IPLஇல் கடைசி ஸ்தானத்தில் இருந்த அணியா என்று வாய் பிளக்கும் ஆச்சரியம் எழுகிறது.. (லக்ஸ்மனுக்கும், கில்க்ரிஸ்ட்டுக்கும் இடையிலான வித்தியாசம் தான் இதோ?)  

இவை எல்லாவற்றிலும் யாரை நீக்குவது, யாரை எடுப்பது என்று அணி முகாமைக்கும், தலைமைக்கும் தலையிடியைத் தரும் அளவுக்கு எல்லாருமே சிறப்பாக விளையாடும் அணி தான் மிகப் பலம் வாய்ந்த டெல்லி டெயார்டெவில்ஸ் அணி.

மக்க்ரா என்ற உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இன்னமும் ஒரு போட்டியிலும் விளையாடாமல் காத்திருக்கும் அளவுக்கு, சேவாக் காயமடைந்த வேளையில் கொஞ்சமேனும் அவர் இல்லாத குறை தெரியாத அளவுக்கு விளையாடக்கூடிய வீரர்கள் நிறைந்துள்ள அணி இது.

ஒரு போட்டியில் வாங்கிய செமத்தியான அடியோடு நியூசீலாந்து அணியின் வேட்டோரியையே தூக்கி வெளியே போட்டுவிட்டு இன்னும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது டெல்லி. 

அதிரடி ஆரம்பத் துடுப்பாட்டத்துக்கு கம்பீர்,சேவாக், வோர்னர்.. பின்னர் போட்டிகளை வென்று கொடுக்கும் அடித்தளம் இட்டு அசத்த தில்ஷானும் டீ வில்லியர்சும் பின் தினேஷ் கார்த்திக்கும்.. 

இம்முறை டில்ஷானின் அதிரடி ஆட்டம் அசத்துகிறது.. இவ்வளவு காலமும் சேர்த்து வைத்த கணக்கையெல்லாம் இந்த 2009ஆம் ஆண்டில் மனிதர் பிளந்து கட்டுகிறார்.

தேவையான போது கை கொடுக்க மந்ஹாஸ் மற்றும் இன்னும் சில வீரர்கள்.. பின்னர் பந்து வீச்சில் பின்னுவதர்கேன்றே இருக்கிறார்கள் நன்னேசும்,மிஸ்ராவும்,நெஹ்ராவும். இவர்களோடு இளைய வேகப் பந்து வீச்சாளர் சங்வான். 

வேறென்ன வேண்டும்?

இன்று இரவு டெல்லி பெறும் வெற்றி அவர்களின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும். (எனினும் மிக விறுவிறுப்பான போட்டி ஒன்று இன்று இரவு காணக் கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்)

இன்னொரு முக்கியமான விஷயம் இம்முறை IPLஇல் குறைவான விக்கெட்டுக்களை இழந்த அணியும் டெல்லியே.

எல்லா அணிகளிலும் குறைவான களத்தடுப்பு குளறுபடிகளை விட்ட அணி என்ற பெருமையும் டெல்லிக்கே இருக்கிறது.

காயத்திலிருந்து மீண்டு இன்று மீண்டும் சேவாக் அணிக்குத் திரும்புவதோடு டெல்லி இறுதி வரை வீறு நடை போடும் என்று என் மனம் கணக்குப் போடுகிறது. 

பெயருக்கேற்றது போல மற்றைய எல்லா அணிகளுக்கும் இவர்கள் பிசாசுகள் தான்.. 

---------------------------

அரையிறுதிப் போட்டிகளுக்கான அணிகளைத் தெரிவு செய்வதில் இனி புள்ளிகள்,சதவீதங்கள், எனப்படும் நிகர ஓட்ட சராசரிகள் என்று கணக்குப் போடும் நாட்கள் நெருங்கியாச்சு..

ஆனாலும் மனதை நெருடும் சின்னக் குறை.. Twenty 20 போட்டிகளுக்கே உரிய, கடந்த முறை இருந்த பெருமளவு ஓட்டக் குவிப்புக்கள் இம்முறை கொஞ்சம் குறைவே.. 

சிக்சர்கள் பறந்தாலும் சில நேரம் டெஸ்ட் போட்டியோன்றைப் பார்க்கும் உணர்வையும் சில போட்டிகள் தந்துள்ளன.. தென் ஆபிரிக்க ஆடுகளங்கள் அப்படி..

இனி நாட்கள் போகப் போக ஆடுகளங்கள் இன்னும் மென்மையடைந்து ஓட்டங்களின் எண்ணிக்கை குறையலாம் என்று கருதப் படுகிறது.

ஓட்டங்கள் குறைந்தாலும் ஆட்டங்களுக்கு மட்டும் குறைச்சலில்லை.. cheer leadersஐத் தானுங்கோ சொன்னேன்.. 

இதோ உங்களை எங்கள் அன்பு அண்ணன்மார்,தம்பிமார், அங்கிள்மாரை குஷிப்படுத்த சில ஆடும் அழகிகள்..  






ஆட்டமிழப்பு நேரங்களிலும், 4,6 பறக்கும்போதும் வீரர்களைக் காட்டுதோ இல்லையோ கமெராக்கள் நிச்சயம் இந்த கவர்ச்சி அழகிகளைக் காட்டத் தவறா.
எங்களின் அபிமான நட்சத்திர வீரர்கள் சொதப்பும் போதும் கூட இந்த கவர்ச்சிக் கன்னிகள் மட்டும் எப்பவுமே நல்லாத் தான் ஆடுறாங்கப்பா.. 

இன்னும் 17 போட்டிகள் இந்த ஆண்டின் IPLஇல் எஞ்சியிருக்கும் நிலையில் இன்னும் யார் யார் புதிய ஹீரோக்களாக கிளம்புவார்கள்.. என்னென்ன புதிய சாதனைகள் படைக்கப்படும்.. என்னென்ன புதிய சர்ச்சைகள் கிளம்பும் என்று அறிய ரொம்பவே ஆவல்.. 

May 24 வரை எங்களுக்கும் உங்களுக்கும் உலகெங்கும் எல்லோருக்கும் தீனி போட்டபடி IPL தொடர்கிறது..

விரைவில் இன்னொரு பற்றிய பதிவில் சந்திப்போம்..
இப்போ வர்ட்டா?

பி.கு - வாசிச்சாச்சா? படங்கள் பார்த்தீங்களா? ரசித்தீர்களா? அப்பிடியே மறக்காம வோட்டு குத்தீட்டு(தமிழக நண்பர்கள் சாவடிகளில உங்கள் ஜனநாயகக் கடமையை செய்த மாதிரி இங்கேயும் தவறாமல் செய்யுங்க), கமெண்டும் போட்டிட்டு, நேரம் கிடைச்சா என்னுடைய பழைய பதிவுகளையும் பார்த்திட்டு போங்க..



Post a Comment

30Comments

Please Select Embedded Mode To show the Comment System.*