எட்டுக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு .. IPL அலசல்

ARV Loshan
18

IPL இன் பாதிக்கட்டம் தாண்டியாகிவிட்டது. இன்னமும் பதினான்கு முதல் சுற்றுப் போட்டிகளே எஞ்சி இருக்கின்றன..

எனினும் இம்முறை கடந்தமுறை போலன்றி அரையிறுதிக்கான அணிகளை இலகுவில் ஊகிக்க முடியாமலுள்ளது.

கடைசி இடத்திலுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தவிர ஏனைய ஏழு அணிகளுமே அரையிறுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.

புள்ளிகளின் பட்டியலில் எந்தவொரு அணியுமே முதலாமிடத்தில் நிரந்தரமாக இருக்க முடியாததன் மூலம் எல்லா அணிகளுக்கிடையில் இருக்கும் நெருக்கமான போட்டியைப் பார்த்தே புரிந்துகொள்ள முடியும்.இப்போதைக்கு கையில் இன்னமும் ஐந்து போட்டிகளை வைத்துள்ள டெல்லி டெயார் டெவில்ஸ் அணி முதலாம் இடத்தை வசதியாக்கி வைத்துள்ளது தெரிகிறது.

எனினும் எனது IPL பற்றிய முன்னைய பதிவுகளில் சொன்னது போல டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டெயார் டெவில்ஸ் ஆகிய அணிகள் பலமானவையாகவே தென்படுகின்றன. 

இவற்றோடு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் போராடக்கூடிய, அரையிறுதி செல்லக்கூடிய அணிகளாக தென்பட்டாலும் வோர்னின் மந்திரத்தால் ராஜஸ்தானும், மும்பாய், பெங்களுர் போன்றவையும் கடைசி நேரப் போராட்டங்களின் மூலம் அரையிறுதியினுள் நுழைந்தாலும் ஆச்சரியமில்லை.

...............................................................................................

கடந்த வருட IPL போலவே இம்முறையும் பல புதிய, இளம் வீரர்களை IPL வெளிக்கொண்டுவந்துள்ளது.

டெக்கானின் சுமன், சென்னையின் ஜகாதி, ராஜஸ்தானின் கம்ரான்கான் மற்றும் அமித்சிங் (இருவருமே சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணியில் சிக்கியிருக்கிறார்கள்.) மற்றும் நாமன் ஓஜா, மும்பாயின் அபிஷேக் நாயர் என்று எதிர்கால இந்திய நட்சத்திரங்களையும், வெளியுலகுக்குத் தெரியாமலிருந்த அவுஸ்திரேலியாவின் நன்னஸ், தென்னாபிரிக்காவின் யூசுப் அப்துல்லா, டூ பிரீஸ், மோர்ன் வான்விக், வான்டேர் மேர்வ் போன்றோரை ஹீரோக்களாகவும் ஆக்கியிருக்கிறது.

அதே போல பல முன்னைய ஹீரோக்களை டப்பாவாக்கி ஒதுக்கியும் தள்ளி இருக்கிறது..

லட்சக் கணக்கான விலை கொடுத்து வாங்கப்பட்ட கெவின் பீட்டர்சன்,அன்றூ பிளின்டோப் தொடக்கம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட மக்கலம் (ஏண்டா கொல்கத்தாவின் தலைமைப் பதவியை ஏற்றோம் என்று இப்போது யோசித்துக் கொண்டிருப்பார் மனுஷர்),ஜெசி ரைடர் (இவர் இப்போது மது போதை கலாட்டா சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்), இந்தியாவின் லக்ஸ்மன் என்று சோபிக்காமல் போன நட்சத்திரங்களும் பலர்.. 

ஒரு சில போட்டிகளில் மட்டும் சிறப்பாக செய்த பலரை நான் இதில் சேர்க்கவில்லை.. 

கடைசியாக இடம்பெற்ற  போட்டியில் சமிந்த வாசை அணியில் டெக்கான் அணி சேர்க்கும் வரை வாஸ், இன்று வரை க்லென் மக்க்ரா, கொல்கத்தா அணிக்காக பெரும் விலையில் வாங்கப்பட்ட பங்களாதேசின் மொர்தாசா, இலங்கையின் சகலதுறை வீரர் மஹ்ரோப், சென்னை அணிக்காக வாங்கப்பட்ட மகாயா ந்டினி போன்றோர் இன்னமும் ஒரு போட்டியிலும் விளையாடாமல் வெட்டியாக இருக்கிறார்கள்..  

ஒரு அணியில் நான்கு வெளிநாட்டவர் விளையாடலாம் என்ற விதியே இவர்களுக்கு விதியாக விளையாடி இருக்கிறது.. 

எனினும் வாஸ், மக்க்ரா போன்றோரை எல்லாம் விட்டு விட்டு பெயர் அறியாத வீரர்களை போட்டு விளையாடுவது எல்லாம் ரொம்பவே ஓவராக இல்லை?

நேற்று முன்தினம் டெக்கானுக்காக வாசின் சகலதுறைத் திறமை நிச்சயமாக டெக்கான் அணியைத் தெரிவு செய்தவர்களுக்கு முகத்தில் விட்ட அறையாக இருக்கும். 

இந்த முறை பலபெரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கிய இருவர் என்று நான் எண்ணுவது சென்னையின் மத்தியு ஹெய்டனும், மும்பையின் லசித் மாலிங்கவும் தான்..

ஓய்வு பெற்ற சிங்கமும், காயத்திலிருந்து மீண்ட இலங்கையின் இளம் சிங்கமும் எதிரணிகளை அச்சுறுத்திய அளவு வேறு யாரும் பயமுறுத்தவில்லை..


அடுத்தபடியாக சுரேஷ் ரைனா, R.P.சிங், கடந்த முறையப் போலவே இம்முறையும் யூசுப் பதான், துடுப்பாட்டத்தில் அசத்துவார் என்று பார்த்தால் பந்து வீச்சில் கலக்கி வரும் ரோஹித் ஷர்மா என்று நட்சத்திரங்களின் வரிசை நீளம் தான்.
  
இருஅப்து ஓவர்கள் போட்டி என்ற காரணத்தால் ஒரு இரண்டு ஓவர்களிலேயே போட்டியின் முடிவைத் தலை கீழாக்கக் கூடிய சுவாரஸ்யம் இந்த Twenty-20 போட்டிகளுக்கு உண்டு. 

இதனால் தான் sudden death சுவாரஸ்யம் இந்த Twenty 20 போட்டிகளுக்கு இருக்கிறது.. ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு பந்திலும் கூர்ந்த கவனத்தை அணித் தலைவரும், வீரரும் செலுத்தாவிட்டால் வெற்றிகள் கை நழுவி விடும். இறுதிவரை கவனம் சிதறாமல் இருப்பதே T 20 வெற்றிக்கான தாரக மந்திரம்.
-------------------------------------------


கொல்கத்தாவின் நேற்றைய தோல்வி அவர்களது அரையிறுதி ஆசைகளுக்குப் பூரண சமாதி கட்டிவிட்டது.

அளவுக்கதிகமான ஆர்ப்பாட்டமும், தீர்மானமற்ற திட்டங்களும், அணித்தெரிவில் விட்ட கோட்டைகள், இந்திய வீரர்களை உதாசீனப்படுத்தியது என்று பல்வேறு அதிகப்பிரசங்கித்தனமான நடவடிக்கைகள் மூலம் நைட் ரைடர்ஸ் தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டது.



டிராவிட் கடந்த வருடம் பெற்றுத் தராத பெறுபேறுகளை 1.5 மில்லியன் டொலர் மனிதர் கெவின் பீட்டர்சன் பெற்றுத்தருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து, இந்தியாவின் எளிமையின் சின்னம் கும்ப்ளேயின் மூலம் ஒன்றுபட்டு, உத்வேக நடை போடுகிறது பெங்களுர் ரோயல் சலென்ஜர்ஸ்.

ஆனால் நேற்று ரோஸ்டெய்லர் போல, முன்பொருநாள் கலிஸ் போல கும்ப்ளேக்கு இன்னொருவர் துணைவராமல் பெங்களுர் அரையிறுதி நுழைவது சிரமமே.


நேற்றைய இரவு தோல்வியையடுத்து பஞ்சாப் அரசர்களுக்கு இனிவரும் மூன்று போட்டிகளையுமே வென்றெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். நட்சத்திரங்கள் பல குவிந்திருந்தும், வெற்றி பெறும்போதெல்லாம் ப்ரீத்தி சிந்தாவின் கட்டிப்பிடி வைத்தியமிருந்தும் வெற்றிகள் கை கூடி வராமல் போய்விடுகிறது.

Twenty – 20 போட்களுக்கு முக்கியமான வேகமும், தொடர்ச்சியான வெற்றிகளும் யுவராஜின் பஞ்சாபுக்கு கூடிவரவில்லை. மகேல, யுவராஜ், யூசுப் அப்துல்லாவின் தனிப்பட்ட ஒரு சில பளீர்கள் மட்டும் போதாது.

இனிக் காத்திருக்கும் மூன்று போட்டிகளுமே கடினமானவை. டெக்கான், டெல்லி, சென்னை இம் மூன்றுமே பஞ்சாபுக்கு தண்ணி காட்டக்கூடியவையே.

மும்பாய் - ஒரு புரியாத புதிர். சச்சின், சனத், ஹர்பஜன், சாகிர்கான், டுமினி, பிராவோ, மாலிங்க என்று வரிசைக்கட்டி பிரபலங்கள் பல இருந்தும் வெற்றியும் தோல்வியும் மாறிமாறியே கிடைக்கின்றன. முழுமையான ஆளுமையை செலுத்த முடியாமலிருக்கும் ஒரு அணி.Finishing touches தான் இவர்களிடம் உள்ள பெரிய பிரச்சினை.

சச்சின் எவ்வளவுக்கெவ்வளவு தலை சிறந்த துடுப்பாட்ட வீரரோ அவ்வளவுக்கவ்வளவு மோசமான ஒரு அணித்தலைவர். அவரது தலைமைத்துவ பலவீனங்களும் முடிவெடுக்கும் தயக்கங்களும் வெளிப்படுத்தப்படும் களமாக இம்முறை IPL அமைந்துள்ளது.

வெற்றி பெற்ற போட்டிகளில் சச்சின் செய்த நகர்வுகளின் திறமைக்கும், தோல்வியுற்ற போட்டிகளில் சச்சினின் சறுக்கிய முடிவுகளுக்குமிடையில் தான் எவ்வளவு பாரிய வித்தியாசம்?

எனினும் நட்சத்திரங்கள் பலரும் (விட்டு விட்டாவது) பிரகாசிப்பதால் மும்பாயின் முன்னேற்றம் அரையிறுதி வரையாவது இருக்கும் என நம்பலாம்.

ஷேன் வோர்னின் மந்திரம் மட்டுமே இம்முறையும் மாங்காய் பறிக்க உதவிடாது போலுள்ளது ராஜஸ்தானுக்கு. யூசுப் பதான் மட்டுமே நின்று பெற்றுக் கொடுத்த வெற்றிகளை விட முக்கியமான போட்டிகளில் சறுக்கிவிட்டு – வோர்னின் மந்திரம் இனி ஏதாவது புதிதாக செய்யுமா என்று பார்த்திருக்கிறது ராஜஸ்தான் அணி.

வோர்னின் புதிய கண்டுபிடிப்புக்கள் அமித்சிங், கம்ரான் கான் இருவரது பந்துவீச்சுப் பாணிகளும் சர்ச்சைக்குள்ளான பிறகு – வெளிநாட்டு நட்சத்திரங்களின் பிரகாசிப்பும் இன்றி அரையிறுதிக் களவுகள் அந்தரத்திலேயே இருக்கின்றன. 

அதுவும் தலைவர் வோர்னின் தசைப்பிடிப்பினால் எஞ்சியுள்ள 3 போட்டிகளிலுமே வோர்ன் விளையாடமாட்டார் என்று சொல்லப்படுவது ராஜஸ்தானுக்கு மரண அடி!

----------------------

பதிவு மிகவும் நீண்டு கொண்டே போவதால் இந்த அலசலின் இரண்டாம் பகுதியை இன்று மாலை தவறாமல் என் தளத்துக்கு வந்து வாசிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்... 

பி.கு - எல்லாம் சரி சீயர் லீடர்ஸ் படங்கள் எங்கே என்று கேட்கும் கிளு கிளு பிரியர்களே, நீங்களும் மாலை வரை காத்திருக்க வேண்டும்.. ஹீ ஹீ


படங்கள் - நன்றி cricinfo & பல தளங்கள்.. (தேடல் தான்)


Post a Comment

18Comments

Please Select Embedded Mode To show the Comment System.*