எனது மதமும் மண்ணாங்கட்டியும்.. என்ற பதிவு கிளப்பிய சர்ச்சையும் ஒரு சிலருக்கிடையிலான தனிப்பட்ட கருத்து மோதல்களையும் பார்த்த பிறகே ஒரு விளக்கப் பதிவு போடலாம் என்று எண்ணினேன்..
பின்னூட்டங்களில் மாறி மாறி தங்களுக்குள்ளேயே நண்பர்கள் பதில்களை அளிப்பதால் நான் அதில் என் கருத்துக்களை இடாமல் தனிப்பதிவு தரலாம் என்று எண்ணினேன்.
எனது மனதில் பட்ட கருத்துக்களை நான் எப்போதுமே எங்குமே சொல்லத் தயங்கியதில்லை.. பல நேரங்களில் இது எனக்குப் பலபல கருத்து மோதல்களைத் தந்திருந்தாலும் கூட நான் அது பற்றி கவலைப் படுவதில்லை.. ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே கவனிப்பேன்.. என் வெளிப்படையான கருத்து யாரையாவது புண்படுத்துமா என்று.
சில நண்பர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்தே இப்படியான பதிவுகளை இடுமாறு குறிப்பிட்டிருப்பதைப் போல அப்படி ஒரு சர்ச்சையையும் நான் தொட்டதாக நினைக்கவில்லை.. பொதுப்படையாகவே சொல்லி இருக்கிறேன்..
அந்த smsஇல் என்ன நியாயம் இருக்கிறது என்று அந்த நண்பர்களைக் கேட்கிறேன்..
என் உங்களுக்கு இவ்வளவு சூடாகிறது?
இந்தப்பதிவை எந்தவொரு தனிநபரையோ, சமூகத்தையோ, சமயத்தையோ தாக்குவதற்காக எழுதவில்லை. எழுதவேண்டிய தேவையுமில்லை.
இதை நிரூபித்துக்காட்டவேண்டிய தேவையும் எனக்கில்லை.
நான் ஒரு ஊடகவியலாளனாக பொதுப்படையானவன் & பக்கம் சாராதவன்! எனினும் என் மனதில் பட்டதை என் தளத்திலே சொல்லும் உரிமை எனக்குள்ளது.
இஸ்லாமிய நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த இஸ்லாமிய மதம் பற்றிய sms தகவலைப் பற்றிய கருத்தைப் பதிந்தேனே தவிர – நிறைய பின்னூட்டங்களில் பலர் பொங்கி வெடித்திருப்பதைப் போல இஸ்லாம் மதத்தைப் பற்றி எங்கேயும் தாழ்த்திக் கூறவில்லை.
//இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.//
எல்லா மதமாற்றங்கள் - திணிப்புக்கள் பற்றியும் தெளிவாகவே பொதுவாகவே சொல்லியிருந்தும் சிலபேர் - இஸ்லாமைப் பற்றியே நான் சொன்னதாக பொங்கி வெடித்திருப்பது ஏனோ?
காரணம் மொழிப்பற்று – வெறி என்பது எனக்குள்ளே கொஞ்சமாவது இருந்தாலும் இருக்கும் எனினும் மதவெறி என்ற சாக்கடைக்குள்ளே ஊறியவனல்ல நான்!
பின்னூட்டங்களில் என் பதிவின் பின்னணியில் (என் பதிவில் இல்லாத விடயங்கள்) தத்தம் கருத்துக்களைத் தெரிந்தவர்கள் அதன் பொறுப்பாளிகள்.
காரசாரமான கருத்துக்கள் எதிரெதிராகப் பாய்ந்த போது – மிக மோசமான, துவேஷமான, தூஷனை மிகுந்த சில பின்னூட்டங்களை மட்டும் மட்டுறுத்தி ஏனையவற்றைப் பிரசுரித்துள்ளேன்.
எனினும் என்னைத்திட்டிய பின்னூட்டங்கள் எவையும் நீக்கப்படவில்லை. பிற சமயங்களை, பிறரைப் புண்படுத்தி வந்திருந்த சில அனானி, அசிங்கப் பின்னூட்டங்களை நிராகரித்துள்ளேன.
நண்பர்களே இறை மொழியாக நீங்கள் சொல்லிய
//உங்க மதம் உங்களுக்கு எங்க மதம் எங்களுக்கு//
என்பதே என் கருத்தும். எனினும் என்னை நான் எப்போதும் சமயம் கொண்டு இனம் காட்டியவனல்ல (வானொலியிலும் - வாழ்க்கையிலும் கூட) எனவே துவேஷம், முட்டாள்தனம், அவசரம் போன்ற வார்த்தைகளை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறேன்ளூ
எனக்கு அனுப்பியவாகள் பெற்றுக்கொண்டு அளவிருந்தால் சூடிக்கொள்ளுங்கள்!
அடுத்து Susan என்பவரின் பின்னூட்டம்
//எனக்கு ஒரு sms வந்தது...தயவு செய்து கீழுள்ள செய்தியினை குறைந்தது 10 நண்பர்களிடமாவது SMS or Text மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறநாட்டு நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.Just 41 days,1410 Tamils killed & 4100 wounded,Brothers & Sisters please make your voice heard,Your voice our life.Only you can save us. Eelam Tamilsஆனால் எனக்கு கோபம் வரவில்ல..//
உண்மையில் வேதனை தந்த ஒரு விஷமத்தனமான பின்னூட்டம்.
மனதினுள் எவ்வளவு வன்மம் - குரூரம் இருந்தால் இப்படியொரு ஒப்பிட வந்திருக்கும்.
லாராவின் மதமாற்றமும் - அப்பாவிகளின் மரணங்களும் ஒரே தராசிலா? உங்களை இறைவழி நிற்பவர் - இறை நம்பிக்கையுடையவர் என்று உண்மையிலேயே இஸ்லாம் என்ற சமயத்தைப் பின்பற்றும் யாராவது ஒருவர் ஏற்றுக்கொள்வாரா?
இதற்குத் தான் நான் சற்றுக் காட்டமாகவே சொன்னேன் ..
//கவலைப்படவும், கோபப்படவும் உலகில் எத்தனையோ பல முக்கியமான விடயங்கள் இருக்கும் நேரம் இதெல்லாம் மயிராச்சு..அவரவர் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்....அதைக் கொண்டாடவும் வேண்டாம்.. கொலை வெறியுடன் துரத்தவும் வேண்டாம்!இது 21ம் நூற்றாண்டு.... இன்னமும் மதங்களை வைத்துக்கொண்டு மலிவான விளையாட்டுக்கள் வேண்டாம்!மதமும் மண்ணாங்கட்டியும்..போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..//
நான் அடிப்படை நாத்திகனும் அல்ல..எனினும் மதங்கள் பற்றி எழுந்திருக்கும் வெறி,பைத்தியக்காரத் தனங்கள் கண்டு சற்று அலுத்துப் போய் இருக்கிறேன் என்பதே உண்மை..
என்னுடைய பதிவின் மூலமாக ஏதாவது தெளிவு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் சந்தோசம். மாறாக வீண் விரோதங்கள் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.எனினும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. தவறு செய்தால் தானே.. பின்னூட்டம் போட்ட சிலர் என்னிடம் மன்னிப்புக் கோரினால்
மகிழ்வேன்.
மதங்களை மதியுங்கள்.. நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள்.. வெறியர்கள் ஆகாதீர்கள்.. (இதையும் பொதுப்படையாகவே சொல்கிறேன்.. யாரும் எந்தவொரு மதத்தையும் சொன்னேன் என்று அவசரம்,இனத்துவேஷம் என்று சண்டைக்கு வந்துவிடாதீர்கள்)
இருக்கும் பிறப்பிலேயே மனிதராய் வாழ்வோம்.. இறந்தபின்னர் நடப்பதை நினைத்து மதம் பிடித்து மரங்களாய் வாழாமல்.