இனி யாராவது இலங்கையில் எந்த நடிகருக்காவது ரசிகர் மன்றம் தொடங்கப் போறேன்..இல்லாவிட்டால் facebookஇல் groupஅமைக்கப் போறேன் என்று புறப்பட்டால்,தேடிப் பிடித்து கொலை செய்யும் அளவுக்கு சூடாகும் எனக்கு..
வடிவேலுக்கு வையுங்கள் வருகிறேன்;பாரதிராஜாவுக்கு கோவில் கட்டுங்கள் நிதி தருகிறேன்;விஜய T ராஜேந்தருக்கு மன்றம் வையுங்கள் வருகிறேன்;அல்லது வைரமுத்துவுக்கு வைரவாள் கொடுங்கள் வருகிறேன் அதற்கும்; நேற்று ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்ட பல இயக்குநர்களுக்கு கொடி பிடியுங்கள் தாராளமாக வருவேன்.ஆனால் ஒரு நாள் குறைந்தது ஒரு மணி நேரமாவது எங்களுக்காக குரல் கொடுக்க வராமல் பதுங்கி இருந்த தளபதிகள்,ஸ்டார்கள்,நாயகர்களுக்கு இனி எவனாவது கொடி,குடை,ஆலவட்டம் பிடித்தால் கொலை விழும்.எந்த ஒரு திரைத் தாரகையுமே வரவில்லை.. (கோவில் இலங்கையில் கட்ட புறப்பட்டீர்களா?)
வருவது,வராமல் இருப்பது அவரவர் விருப்பம்;ஆனால் திரையில் பன்ச் வசனங்களை பேசி,பறந்து பறந்து சண்டை போதும் அந்தப் பள பளப்பு நாயகர்களுக்கு விசிறி என்றும்,ரசிக,ரசிகை என்றும் யாராவது வாய் திறந்து சொன்னால் தெரியும் நடக்கிறது..யுத்தத்தினால் தினமும் பாதி செத்து,விலை ஏற்றத்தினால் மீதி சாகின்ற நமக்கு எதுக்குப்பா ரசிகர் மன்றமும் ,கொடியும்?எமக்கு இங்கே இருக்கின்ற சிக்கல் போதாதென்று அஜித்-விஜய் சண்டையும்,யார் பெரிது என்ற போட்டியும்..(அண்மையில் மருதானை சினிசிடி திரையரங்கில்,இலங்கை விஜய் ரசிகர் மன்றம் என்று ஒரு banner இருந்ததும் அதற்கு மாலை போட்டிருந்ததும்,அதில் செயலாளர் என்று ஒரு இஸ்லாமியப் பெண்ணின் பெயர் கண்டு அந்த banner கிழிக்கப்பட்டதும் எத்தனை பேருக்குத் தெரியும்?) எங்கே போகிறது எம் சமூகம்?
பாரதிராஜா சொன்னது போல இலங்கைத் தமிழரதும்,புலம் பெயர் வாழ் இலங்கைத் தமிழரதும் பணத்தில் வாழ்கின்ற நட்சத்திரங்கள் யாரும்(பொதுவாக)வராதது ஏனோ?
விஜய்,அஜித் உட்பட பல உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களைத் தயாரிப்பது ஐரோப்பாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்.(ஐங்கரன் நிறுவன இணை உரிமையாளர்)
விஜய் திருமண வழி இலங்கை உறவிகளைக் கொண்டவர்.
பல நட்சத்திரங்கள் பிறப்பால் இலங்கையர்கள்(ஜேய் ஆகாஷ் போன்றவர்கள் - வெளியே சொல்ல மாட்டார்கள்)
நிறைய இலங்கையிலுள்ள ரசிகர்களுக்கு வாழ்த்து,கையோப்பம் இட்டு அனுப்ப முடிந்த உங்களுக்கு ஒரு கண்டனப் பேரணிக்கு வரமுடியாதா?
திரையரங்க உரிமையாளர்களே ஞாயிறு அன்று பகல் காட்சிகளை ரத்து செய்துவிட்டு இருக்க,அவர்களுக்கு(நட்சத்திரங்கள்) மட்டும் வரமுடியாதோ?
இவ்வாறு உங்கள் நடிக தெய்வங்களைக் கேளுங்கள்..
இலங்கையிலும்,இந்தியாவிலும் தினமும் நக்கல் செய்யப்படும் சிலர் தான் பேரணியில் முன்னின்றவர்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்!
ராமேஸ்வரத்தில் திரையுலகின் தமிழ் இன உணர்வுக் குழு சார்பில் நடக்கும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் – நடிகைகள் யாரும் செல்லவில்லை.
ராமேஸ்வரம் பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகச் செல்லலாம் என்று நடிகர் சங்கம் அறிவித்தாலும், நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றால் போதும் என்ற நினைப்பில் நடிகர் நடிகைகள் யாரும் ராமேஸ்வரம் செல்லவில்லை.
பாக்கியராஜ், ராஜேந்தர், அமீர், பாண்டியராஜன் போன்றோர் நடிகர்களாக மட்டுமல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு சங்கங்களில் இருப்பதால் அவர்கள் மட்டும் இந்த பேரணியில் பங்கேற்கிறார்கள்.
இந்தப் பேரணியில் கலந்து கொள்ள எந்த நடிகையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாரதிராஜா, வராதவர்களைப் பற்றி நாம் பேசுவது வீண் வேலை. நமக்கு நிறைய வேலை இருக்கிறது. தமிழுணர்வில் இங்கு வந்திருக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நன்றி. யார் வந்தார்கள் என்று இனி பார்க்கத் தேவையில்லை. உணர்வைக் காட்டுவதுதான் முக்கியம் என்றார்.- செய்திக் குறிப்பு
-----------------------------------
இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சிங்கள அரசுக்கு எதிராக தமிழ் திரைப்பட துறையினர் நடத்தும் கண்டன ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் திட்டமிட்டபடி ராமேஸ்வரத்தில் நடைபெறும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் அறிவித்துள்ளார்.இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் ராணுவ தாக்குதல்களையும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல்களையும் கண்டித்து தமிழ் திரையுலகம் சார்பில் ராமேஸ்வரத்தில், வரும் 19ம் தேதி திரையுலகம் சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூட்டிங்குகள் 3 நாட்கள் ரத்து:
இதற்காக அக்டோபர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. பட தயாரிப்பு தொடர்பான எந்த வேலைகளும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின் வாங்கும் நடிகர் சங்கம்:
ஆனால் இந்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் போய் கலந்து கொள்வது நடிகர்-நடிகைகளுக்கு சாத்தியமா என நடிகர் சங்க அவசரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் பேசிய சங்கத் தலைவர் சரத் குமார், இந்தப் போராட்டத்தில் ராமேஸ்வரம் போய் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மட்டும் போகலாம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால் நடிகர் நடிகைகள் அனைவரும் ராமேஸ்வரம் போக முடியாது. இருந்தாலும் போராட்டத்துக்கு முழு ஆதரவு உண்டு. சென்னையில் இந்தக் கூட்டம் நடந்தால் அனைவரும் கலந்து கொள்வோம் என்றும் கூறினார். - மற்றொரு செய்திக் குறிப்பு
நாளை தமிழக முதல்வர் அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டத்தை நோக்கிப் பார்ப்போம்.. யார் யார் சென்னையிலாவது வருகிறார்கள் என்று..(ராமேஸ்வரம் தூரம் என்று யாராவது காரணம் சொல்லலாம்)
முதலாம் திகதி நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வதாக கமலும்,ரஜினியும் அறிவித்திருப்பது வேறு கிடைத்த தகவல். பார்ப்போம்,, அங்கே என்ன நடக்குதென்று..
எனது இந்தப் பதிவு நடிக,நடிகையரை கட்டாயம் இந்தப் பேரணியில் இணைந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கல்ல.. ஆனால் நன்றி,தமது இலங்கை ரசிகர் மீது யாருக்கெல்லாம் அக்கறை இல்லை என்பதை அப்பாவி ரசிகர்களுக்கு சுட்டிக் காட்டத் தான்.