நான் அண்மையில் எனது வலைத்தளத்தில் நடத்திய கருத்துக் கணிப்பை(MSV,இளையராஜா,A.R.ரஹ்மானுக்குப் பிறகு.. ?)
மையமாக வைத்து ஒரு பதிவு போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.வழமையான எனது நான்கு மணி நேர காலை நேர நிகழ்ச்சி விடியலை முடித்ததுக் கொண்டு கொஞ்சம் மின்னஞ்சல்கள் ஏதாவது புதிதாக வந்திருக்கா என்று பார்க்க Gmailஐத் திறந்தால்,ஒரு மின்னஞ்சல்,மயூரன் என்று குறிப்பிட்டு.. நம்ம வந்தியத்தேவனிடம் இருந்து.
வந்தியத்தேவனும் நானும் உயர்தரம் படித்தபோது ஒன்றாக தனியார் வகுப்புக்குப் போயிருக்கிறோம்.அவர் இப்போதெல்லாம் இடையிடையே எனது காலை நேர நிகழ்ச்சிக்கும் சுவாரசியமான பதில்களை அனுப்புவார்.ஆனால் துரதிர்ஷ்டமோ,அதிர்ஷ்டமோ அவரது முகம் எனக்கு ஞாபகம் இல்லை.(பிரெம்நாத் சேரின் வகுப்பில் படித்த பாடங்களும் ஞாபகம் இல்லை;படித்த பல அழகான பெண்களும் ஞாபகம் இல்லை-அப்போதெல்லாம் எங்கள் கணிதப் பிரிவில் வகுப்பை விட உயிரியல் பிரிவில் படித்த பெண்கள் தான் அழகாகத் தெரிவார்கள் -இக்கரைக்கு அக்கரை பச்சையோ? அப்படி இருக்கும்போது எப்படி நண்பா உங்கள் முகம்? கோபிக்க வேண்டாம்.. பொய்யாக முகத்துதிக்காக சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
என்னை இந்தத் தொடருக்கு வந்தியத்தேவன் அழைத்ததன் மூலம் வலைப்பதிவர் உலகில் ஒரு அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறேன்.. (உண்மையில் யாரும் இந்த விளையாட்டுக்கு அழைக்க மாட்டாங்களா என்று நான் எதிர்பார்க்கவே இல்லை..காரணம் பிரபல வலைப்பதிவாளர்கள் எல்லாம் சும்மா புகுந்து விளையாடிட்டாங்க .. நம்முடைய பதிவு அவ்வளவு சுவாரசியமாக இருக்குமா என்கிற சந்தேகம் தான்.) என்னுடைய உண்மையான சினிமா பகிர்வுகளை இங்கே தரப் பார்க்கிறேன்.
நான் ஒரு கலவை சினிமா ரசிகன்.தரமான கலைப் படைப்புகளும் பிடிக்கும்,மசாலாத்தனமான படங்களும் பிடிக்கும்.என்ன கொஞ்சம் மனதுக்குப் பிடித்த மாதிரி இருந்தாப் போதும்.அந்தந்த மன நிலையில் பிடிப்பவற்றைப் பார்ப்பேன்.
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
வயது என்று சரியாக ஞாபகமில்லை. ஆனால் இன்னும் யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஏதோ திரையரங்கொன்றில் ரிஷிமூலம் படம் பார்த்ததும்,அந்தப் படத்தில் வருகின்ற 'ஐம்பதிலும் ஆசை வரும்' என்ற பாடலை நிறைய நாட்கள் நான் (அப்பவே) முணுமுணுத்ததும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.
கிட்டத் தட்ட எனக்கு ஒரு நான்கரை வயது இருக்கும் போது எனக்கு இன்று வரை காட்சிகள் நினைவில் நிற்கும் அளவுக்கு ஞாபகம் இருக்கும் படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே.இன்றும் 'பருவமே புதிய பாடல் பாடு'பாடல் கண்களுக்குள்ளேயே நிற்கிறது.
ஒரு விதமான சந்தோஷமான உணர்வு இருந்தது.அப்பா ஒரு நல்ல சினிமா ரசிகர் என்ற காரணத்தால் அப்பவே நிறைய விஷயங்கள் சொல்லித் தந்தது ஞாபகம் இருக்கிறது.எனவே அந்தச் சின்ன வயதிலேயே சிவாஜி பாடவில்லை ;பாடுவது தான் என்றும்,சுகாசினி பாடவில்லை பாடுவது ஒரு பின்னணிப் பாடகி தான் என்றும் தெரிந்து இருந்தது. எனினும் எடிட்டிங் பற்றித் தெரியாத படியால் பாட்டுக்கு எப்படி இவங்க வாயசைகிறார்கள்,பாடக,பாடகியர்கள் இல்லாமலேயே பாட்டு எப்படி ஒலிக்கிறது என்ற சந்தேகம் மட்டும் இருந்தது.
ஒருவேளை எங்கேயாவது மறைந்து அல்லது ஒளிந்து நின்று பாடுகிறார்களோ என்று யோசித்தேன்.. கொஞ்ச நாளில் அப்பா அதையும் சொல்லித் தந்துவிட்டார்.அதனால் சினிமா பற்றிய எல்லா சுவாரசியமான மர்மங்களும் இல்லாமல் போனது கொஞ்சம் கவலை தான்.
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
ஜெயம்கொண்டான்.. அதைப் பற்றி கூட ஒரு பதிவு இட்டுள்ளேன்.
அதன் பிறகு
சரோஜா .. அலுவலக நேரத்தில்,அலுவலக நண்பர்களுடன்,கொஞ்சம்(!) திருட்டுத் தனமாகப் போய் பார்த்திததேன்.
வெங்கட் பிரபு மேல் வைத்து இருந்த நம்பிக்கை வீணாகவில்லை.
இப்போதெல்லாம் குடும்பப் பொறுப்புக் காரணமாக திரையரங்கு சென்று பார்க்க நேரம் வாய்ப்பதில்லை.
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
DVD,VCD வாங்கி வீட்டில் பார்க்கும் அளவுக்கும் நேரம் வாய்ப்பதில்லை.அவ்வாறு பார்த்த குருவி,குஸ்தி,சிவி,இன்னும் சில படங்கள் பாதியிலேயே கிடக்கின்றன.தொடர்ந்து பார்க்கும் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை.இயக்குநர்களும் என்னைப் பார்க்க வைக்கும் அளவுக்கு படம் எடுக்கவில்லை.. மற்றும்படி தொலைக்காட்சியில் நேரம் வாய்க்கும் போது ஓரிரண்டு படங்கள் பாதி பார்ப்பது உண்டு.
அவ்வாறு பார்த்தவற்றுள் வெள்ளித்திரை.
ஒரு வித்தியாசமான திரைப்படம்.நல்ல கதையோட்டம்.ரசிக்கவைத்த பிரகாஷ் ராஜ்,பிரிதிவி ராஜ்,இயக்குநர் விஜி.மலையாளத் தழுவல் என்று தெரிந்தது.அதுபோல் இறுதிக் கட்டங்களும் நான் முன்பு பார்த்த ஆங்கிலப் படத்தில் வரும் அதே காட்சிகள்.
மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
கமலின் அநேக படங்கள்.. நான் ஒரு ஆத்மார்த்த கமல் ரசிகன்.
நாயகன்,குணா,சலங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து,சத்யா போன்ற படங்களைப் பல தடவை பார்த்து இருக்கிறேன்.
பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது அன்பே சிவம்!அந்த நடிப்பு,வசனங்கள்,மறைமுகமாக சொல்லப் பட்ட பல விஷயங்கள் மனத்தைத் தொட்டன.குறிப்பாக கமல்-மாதவன் உரையாடல்கள்.. God and Dog.. every dog has its own day!
இன்னும் ஒன்று,மனத்தை கொஞ்ச நாளுக்காவது பாதித்த ஒரு படம் AUTOGRAPH!படம் முடிந்த நேரத்திலிருந்து ஒரு சில நாட்கள் மனத்தை ஏதோ செய்தது உண்மை.
வேறொரு விதத்தில் என்னை ரொம்பவே பாதித்த படங்கள் மூன்று இரண்தெழுத்துப் படங்கள்..
பாபா,ஆதி,கேடி
என்னை நொந்து நூலாக வைத்தவை.. ;)
உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
பல..
சிவாஜிக்கு இறுதிவரை தேசிய விருது வழங்கப் படாமை
கமல்-சண்டியர் விவகாரம்.
ஒகனெக்கல் உண்ணாவிரதம்-ரஜினி பேச்சு.. பின் ரஜினியின் மன்னிப்பு.
ரஜினி மீது விமர்சகர்கள் ,பதிவர்கள் எல்லோரும் பாய்ந்தது.
தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிறையவே.. வாராந்த இந்திய சஞ்சிகைகளிலும்,இணையத் தளங்களிலும்,வலைப்பதிவுகளிலும்..
கிசு கிசுப் பக்கங்கள்,புதிய முயற்சிகள் பற்றிய செய்திகள்,நான் பார்த்த படங்களைப் பற்றிய விமர்சனங்கள் மீது ஆர்வம் அதிகம். இப்போதெல்லாம் தமிழக சஞ்சிகைகளில் சினிமா செய்திகள் தானே சதவீதம்.. வேறு எதைத் தான் வாசிப்பது?
தமிழ் சினிமா இசை?
எனது தொழில் சார்ந்த விடயம் என்ற காரணத்தால் ரொம்பவே விரும்புகிறேன்.. இந்திய தமிழ் சினிமா இசை தான் இப்போது தமிழரின் இசை வடிவம் எனும் அளவுக்கு எமது வாழ்வொடு ஒட்டி இருப்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
எனது இசை விருப்பங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. அறுபது,70களின் MSV, பின்னர் 80களிலும்,90களின் ஆரம்ப கால கட்டத்திலும் இளையராஜா.அதன் பின் இப்போது வரை A.R.ரஹ்மான் ஆனால் சிலவேளைகளில் ரஹ்மான் ரொம்பவே என்னை ஏமாற்றி விடுகிறார்.(அவரின் உயர்ந்த ரசனை அளவுக்கு என் ரசனை இல்லாதது காரணமாக இருக்கலாம்.)
தேவாவின் கொஞ்சம்,யுவணின் கொஞ்சம்,ஹாரிஸ் ஜெயராஜின் என்று கலவையாக நான் பாடல்களை ரசித்தாலும்,வித்யாசாகரின் ரசிகன் நான்.அவரது இசை வடிவங்கள் ரொம்பப் பிடித்தவை.
அன்று முதல் தன்னை ரொம்பவே வித்தியாசப்படுத்திக் காட்டி வரும் ஒரு திறமைசாலி.என்னைப் பொருத்தவரை இளையராஜாவுக்கு அடுத்த படியாக இவரைத் தான் சொல்வேன்.அருமையான மெட்டுக்கள்;வரிகளைக் காயப் படுத்தாத இசை.தமிழ் திரையுலகில் Most under rated genius இவர் தான்.
வெகுவிரைவில் இவர் பற்றியும் பதிவொன்று இடுவேன்.
தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறைய..ஆங்கிலம் அதிகம்.. ஹிந்தி,சிங்களம் கொஞ்சம்..திரைப்பட விழாக்கள் நடந்தால் ஆங்கில உப தலைப்புகளின் உதவியுடன் புரியாத மொழிப்படங்களும் பார்ப்பது உண்டு.
சிங்களத் திரைப் படங்களில் புரஹகந்த கழுவற(அமாவாசையில் ஒரு நிலவு)யுத்தத்தின் உண்மையான முகத்தை ஓரளவுக்காவது சிங்கள மக்களுக்கும் உறைக்கின்ற மாதிரி சொன்ன ஒரு திரைப்படம்.
ஆங்கில மொழிமாற்றுப் படமாக அண்மையில் பார்த்த The Bicycle thief. (originally Italian) ஒரு தத்ரூபமான வாழ்க்கைப்படம்.
தமிழில் இப்படியெல்லாம் யதார்த்த்தை தொடவே மாட்டீங்களா?
தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
ஓரளவுக்கு இருக்கிறது.. பல பின்னணிப் பாடக,பாடகியருடன் நெருங்கிய நட்பு உண்டு.sms, email இல் விமர்சனம் அனுப்பி,நான் இந்தியா செல்லும் வேளைகளில் அவர்கள் வீட்டில் உணவு,அவர்கள் இங்கு வந்தால் என் வீட்டில் உணவு என்னும் அளவுக்கு மிக நெருக்கம்.
நடிகர் விவேக்,சில தயாரிப்பாளர்கள்,ஒரு சில நடிகர்களுடணும் பழக்கம் உண்டு.
நேரடி சந்திப்புக்கள்,வானொலிக்கான பேட்டிகள்,பல மேடை நிகழ்ச்சிகள் என்று இன்று வரை செய்த வண்ணமே உள்ளேன்.இன்னும் மெகா serialஇலும்,சினிமாவிலும் தலை காட்டாதது தான் குறை. ;) (அது தான் இன்னும் அந்தத் துறைகள் பூரணத்துவம் பெறவில்லை என்று யாரோ சொல்லக் கேள்வி)
உண்மையைக் சொல்வதானால் தமிழ் சினிமா மேம்படுவதைப் பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை.. இது எப்பிடி இருக்கு.. இந்த அணில் பிள்ளைக்கு ஏனையா பாலம் காட்டுகிற வேலை?
தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பல புதியவர்களின் போக்கு மிக ஆரோக்கியமாக இருக்கிறது. புதிய இயக்குநர்கள்,ஆனால் இதை நடுவே வருகிற பத்தாம் பாசலித் தனமான பழைய சென்டீமெண்ட் ,மசாலாப் படங்களை ரசிகர்கள் முற்றாகப் புறக்கணிததால் தான் சினிமா உறுப்படும்.
பேரரசு,J.K.ரித்தீஸ், ஸ்ரீகாந்த் தேவா போன்றோரை ஓட ஓட விரட்ட வேண்டும்.
கமலுக்கும்,மணி ரத்தினம் போன்றோருக்கும் நீண்ட ஆயுள் வேண்டும்.
அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
பிரச்சினையே இல்லை.. எனது அதிக ஆர்வத்துக்குரிய விஷயமான கிரிக்கெட் பக்கம் போய் விடுவேன்.
ஆனால் என் வேலை தான் மாற வேண்டி இருக்கும்.. ஒரு சில வேலை முழு நேர வலைப்பதிவாளர் ஆகிவிடுவேன்.
மக்கள் தான் பாவம்..
தமிழர்கள் MEGA SERIAL பக்கம் மாறி எந்நேரமும் அழுது வடிவார்கள்.. அரசியல்வாதிகளும்,விளையாட்டு வீரர்களும் heroக்கள் ஆகி விடுவார்கள்.நிறையப் பேருக்கு வேலை போகும்;நிறையப் பேர் பொழுது போகாமல் அவதிப்படுவர்.
இந்த சங்கிலித் தொடர் விளையாட்டுக்கு நான் அன்பாக அழைக்கும் என் நண்பர்கள்/ வலைப்பதிவாளர்கள்
1.சஜீ(சயந்தன்)
2. வதீஸ்வருணன்
3. ஹிஷாம்
4. யாழ்தமிழ்
5. நிமல்
6.இராகலை - கலை